Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

இதயத்தில் ஒரு யுத்தம் – 9

அத்தியாயம் – 9

அன்று சனிக்கிழமை. சூர்யாவிற்கு விடுமுறை நாள். காலை பன்னிரண்டு மணிவரை வார இறுதியில் செய்ய வேண்டும் என்று ஒதுக்கி வைத்திருந்த வேலைகளை முடித்தவள், சரியாக ஒரு மணிக்கு மத்திய உணவை முடித்தாள். ஒரு மணிக்கு மேல் அவள் மூளை பிரசாத்ஜியை பற்றி கேள்விகளை கேட்டு துளைத்தது. அந்த கேள்விகளை அவள் பிரபாவிடம் கேட்டுக் கொண்டிருந்தாள். பிரபா தனக்கு தெரிந்த விபரங்களை தோழிக்கு சொல்லிக் கொண்டிருந்தாள்.

 

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே அந்த மகளிர் விடுதியில் வேலை செய்யும் ஒரு பெண் வந்து,
“சூர்யா மேடம்… உங்களை பார்க்க ‘விசிட்டர்’ வந்திருக்காங்க…” என்றாள்.

 

“என்னை பார்க்கவா…?” சூர்யா சந்தேகமாக கேட்டாள்.

 

“ஆமாம்…”

 

“சரி… நீ போயி யாருன்னு பாரு. நான் போயி மாடில துணி காஞ்சிட்டான்னு பார்த்து எடுத்துட்டு வர்றேன். அப்புறம் நம்ம ரெண்டு பேரும் கோவிலுக்கு போயிட்டு வரலாம்…” என்று சொல்லிவிட்டு பிரபா மொட்டை மாடிக்கு சென்றுவிட, சூர்யா தன்னை பார்க்க வந்த பார்வையாளரை தேடி சென்றாள்.

 

வெளியே தீரஜ்பிரசாத் தன்னுடைய காரின் மீது சாய்ந்தபடி நிற்பதை பார்த்த சூர்யா உற்ச்சாகமாகிவிட்டாள்.

 

“ஹேய்… தீரஜ்… வெல்கம்… வெல்கம்… என்னடா திடீர்ன்னு வந்து நிக்கிற…?” அவள் சத்தமாக கேட்டுக் கொண்டே அவனருகில் ஓடி வந்தாள்.

 

பிரசாத்ஜியை அடையாளம் தெரிந்த பொது மக்கள் அவனுடன் பேச முயற்சி செய்யலாம் என்பதால், சில அடி தூரத்திலிருந்தே அவனுடைய ஆட்கள், அவர்கள் இருப்பதே தெரியாமல் ஆங்காங்கு நின்றபடி, அவனுக்கு அருகில் யாரையும் நெருங்கவிடாமல் பார்த்துக் கொண்டார்கள்.
அதை அறியாத சூர்யா தீரஜ்பிரசாத்தை ஏகவசனத்தில் சத்தமாக பேசிக்கொண்டு ஓடிவர, அங்கு நின்றபடி அதை கவனித்த அவனுடைய தமிழ் தெரிந்த ஆட்கள் சிலர் மின்சாரம் தாக்கியதை போல் உறைந்து போனார்கள்.

 

சில நாட்களாக தலைவனுடைய முகத்தில் தெரியும் மென்மைக்கும் சிரிப்பிற்கும் விடை கிடைத்துவிட்ட தெளிவு அவர்கள் முகத்தில் வந்தாலும், சூர்யாவின் துடுக்குத்தனமான பேச்சு கொடுத்த அதிர்ச்சியிலிருந்து அவர்களால் மீள முடியவில்லை.

 

தலை குளித்து தோள்வரை வெட்டப்பட்டு விரித்துவிடபட்ட கூந்தலுடன் ஒப்பனைகள் இல்லாமல் சாதாரண ஸ்கர்ட் மற்றும் டாப்ஸ்சில் தேவதை போல் அவள் துள்ளி குதித்து ஓடிவரும் காட்சி தீரஜ்பிரசாத்தின் உயிரை தொட்டது.

 

“வண்டில ஏறு….” அவன் தன்னுடைய குட்டு வெளிப்பட்டுவிடாமல் இருப்பதற்காக முகத்தை கொஞ்சம் இறுக்கமாக வைத்துக்கொள்ள முயன்றான்.

 

“எங்க…?”

 

“சொல்றேன் ஏறு…”

 

“கொஞ்சம் வெயிட் பண்ணு… பிரபாகிட்ட சொல்லிட்டு வந்துடறேன்…”

 

“அதெல்லாம் வந்து சொல்லிக்கலாம்… இப்போ வண்டில ஏறு…” பிடிவாதமாக சொல்லியபடி அவள் கையை பிடித்து இழுத்து காருக்குள் தள்ளிவிட்டு, அவனும் மறுபக்க கதவை திறந்து ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தான்.

 

அவனுடைய இரும்பு பிடியில் அவளுடைய மெல்லிய பூங்கரம் கன்றிவிட்டது.

 

“ஹேய்… மெதுவாடா… ஏன்டா இந்த இழு இழுக்குற… ஆ… அம்மா…” என்று கத்திக் கொண்டே காருக்குள் நுழைந்தவள்… அவன் பிடியிலிருந்து விடுபட்ட கையை தேய்த்துவிட்டுக் கொண்டே “என்னையெல்லாம் காருக்குள்ள தள்ள இவ்வளவு பவர் யூஸ் பண்ண வேண்டியதில்லடா… யாருக்கு எவ்வளவு பவர் யூஸ் பண்ணனும்ன்னு தெரிஞ்சு செயல்படனும்… புரியுதா…? ஐயோ…ம்மா…” என்று அந்த நேரத்திலும் தவறாமல் அவனுக்கு புத்தி சொன்னாள்.

 

அவளுடைய முகபாவத்தில் சிரித்துவிட்டவன், “சரியான சொத்தடி நீ… நல்லா பேசமட்டும் கத்து வச்சிருக்க…” என்றபடி காரை ஸ்டார்ட் செய்தான்.

 

“ஆமா இவரு பெரிய பயில்வான் பக்கிரிசாமி…. என்னை சொல்ல வந்துட்டாரு… ஆளையும் மூஞ்சியும் பாரு…” நொடித்தாள்.

 

“ஏன்டி எம் மூஞ்சிக்கு என்ன குறைச்சல்…?”

 

“எல்லாம் நல்லாத்தான் இருக்கு… ஆனா மூஞ்சி மட்டும் நல்லா இருந்தா பத்தாது… மூளையும் வேலை செய்யணும். அத கொஞ்சம் டெவலப் பண்ணிக்க பாரு…”

 

“உன்கிட்ட வேணுன்னா டியூஷன் எடுத்துக்கவா…?”

 

“அதுக்கெல்லாம் எனக்கு டைம் இல்ல கண்ணு…”

 

“ஓஹோ… பிஸி…?” நக்கலாக கேட்டான். அவனுடைய நக்கல் அவளுக்கு புரியவில்லை. அவள் பெருமையுடன் பதில் சொன்னாள்.

 

“ரொம்ப பிஸி… சரி… இப்போ எங்க போறோம்?”

 

“இன்னும் பத்து நிமிஷத்துல தெரிஞ்சிடும்…” என்று அவளை அமைதிகாக்க சொன்னவன் சரியாக எட்டு நிமிடத்தில் அந்த இடத்தில் காரை நிறுத்தினான்.

 




Comments are closed here.

You cannot copy content of this page