Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

இதயத்தில் ஒரு யுத்தம் – 1

அத்தியாயம் – 1

வசந்தம் அடுக்கு மாடி குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் உள்ள மூன்றாவது வீடு பரபரப்பாக இருந்தது. அந்த வீட்டில் குழுமியிருந்தவர்கள் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது. தங்களுக்குள் மிக உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தவர்களின் பார்வை அந்த ஹாலோடு ஒட்டியிருந்த மற்றொரு அறை பக்கம் அடிக்கடி சென்று திரும்பியது.

தனியறையில் எதிரும் புதிருமாக நின்றுக் கொண்டிருந்த கபிலனும் சூர்யாவும் ஒருவரை ஒருவர் பார்வையால் அளந்து கொண்டிருந்தார்கள். சூர்யாவின் அழகில் மயங்கி அவளை விழுங்குவது போல் பார்த்துக் கொண்டிருந்த கபிலனை அருவருப்புடன் ஒரு பார்வை பார்த்தாள் சூர்யா. அதை கவனத்தில் எடுத்துக் கொள்ளாதவனின் மனம் தன் அதிஷ்டத்தை எண்ணி வானில் சிறகடித்துக் கொண்டிருந்தது. ஆனால் அடுத்து சூர்யா பேசிய வார்த்தைகளில் அது ஆகாயத்திலிருந்து கட்டாந்தரையில் விழுந்து உடைந்து சிதறியது.

“ஏய்… என் பேர் என்னன்னு தெரியுமா உனக்கு…?” – அதிகாரமாக கேட்டாள்.

“…………..” அவன் மௌனமாக அவளை பார்த்தான்.

“என்ன முழிக்கிற….? சூர்யா…! சூர்யான்னா என்னன்னு தெரியுமா? தீப்பிழம்பு… எனக்கு பிடிக்காதவங்க என்னை நெருங்கினா பஸ்ப்பமாயிட வேண்டியதுதான். தெரிஞ்சுக்கோ…” – மிரட்டும் தொனியில் பேசினாள்.
இருபத்தெட்டு வயது இளங்காளை கபிலனுக்கு, அவளுடைய மிரட்டல் பேச்சு சிறு குழந்தைக்கு போலீஸ் வேஷம் போட்டது போல் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் அவன் சிறிதும் அலட்டிக்கொள்ளாமல், “என்னையும் பஸ்ப்பமாக்கீடுவியோ…!” என்றான் நக்கலாக.

“சந்தேகமா…? இங்க பாரு… உன்னை எனக்கு பிடிக்கவேல்ல… மரியாதையா என்னை பிடிக்கலன்னு எங்கப்பாகிட்ட போயி சொல்லிட்டு ஓடிடு. இல்ல… அப்புறம் ரொம்…ப வருத்தப்படுவ…”

“பிடிக்கலையா…! ஏன்…? எனக்கு என்ன குறை…?” – சிறு கோபத்துடன் வினவினான்.

“என்னை கல்யாணம் செஞ்சுக்க போறவன் வீரனா இருக்கணும். ஒரு நாளைக்கு நான்கு பேர் பல்லையாவது உடைக்கணும். அவனுக்கு முன் ஆண்கள் யாரும் நிமிர்ந்து நடக்க அஞ்சணும். இதுக்கெல்லாம் மேல நானே ஒரு வீராங்கனை. எதுக்கும் பயப்பட மாட்டேன். நானே யாரை பார்த்து பயப்பட்றேனோ, அவன்தான் என் கணவ…….. ஆ… ஆ… ஐயோ.. ச்சூ… ச்சூ…” சூரியாவின் தலையில் விழுந்த பல்லி தரையில் குதித்து மீண்டும் சுவற்றில் ஏறி ஓடியது.

“ஹி.. ஹி… பல்லியா…! இந்த பல்லியெல்லாம் முதல்ல அடிச்சு கொல்லனும்… ச்சை… முக்கியமான நேரத்துல மனுசன ‘டிஸ்டர்ப்’ பண்ணிக்கிட்டு…” அவள் அசடு வழிந்தாள்.

அவன் சிரிப்பை அடக்க முடியாமல் சத்தமாக சிரித்துவிட்டான். அவனுடைய சிரிப்பு அவளை எரிச்சலாக்கியது… உடனே தன்னுடைய வீராங்கனை போர்வையை போர்த்திக் கொண்டு,

“ஹலோ… என்ன சிரிப்பு… இங்க என்ன காமிடி தர்பாரா நடக்குது…?” என்று கடுமையாக முகத்துடன் மிடுக்காக கேட்டாள்.

“ஓகே… ஓகே… இப்ப என்னதான் சொல்லவர்ற…?” அவன் சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு கேட்டான்.

“நான் என்ன சொல்றேன்னு இன்னுமா புரியல…? உன்ன மாதிரி சப்பை பீசெல்லாம் எனக்கு ஒத்துவராது… என்னோட ரேஞ்சே தனி… உனக்கு புரியிற மாதிரி சுருக்கமா சொல்லன்னுன்னா ஒரு நல்ல மில்டரி மேன்… இல்ல ஒரு நல்ல போலீஸ்காரன்… அதுவும் இல்லன்னா ஒரு ரௌடி… இவங்கள்ல யாராவதுதான் என்னோட கணவனா வர முடியும்… புரியுதா…?” அவன் அவளை பார்த்து சிரித்துவிட்டான் என்கிற எரிச்சலில் பொரிந்தாள்.

அவன் அவளை “நீ என்ன லூசாப்பா…?” என்கிற ரேஞ்சுக்கு பார்த்தான்.

“என்ன அப்படி பார்க்குற?”

“இல்ல… நீ நல்ல மனநிலைலதான் இருக்கியான்னு ஒரு சந்தேகம்…!” என்றான் நக்கலாக.

“ஏய்… ன்னா… நக்கலா…? மூஞ்சப்பாரு… நல்லா ஊறவச்ச உளுந்து வட மாதிரி… நீ என்ன ஓட்றியா…? மவனே…” அவள் லோக்கலாக இறங்கிவிட்டாள்.
அவள் அவ்வளவு தரமிறங்கி பேசியதில் அதிர்ந்து ஒரு கணம் திகைத்தவனுடைய முகம் கோபத்தில் சிவந்துவிட்டது. “ரொம்ப அதிகமா பேசுற… சின்ன பொண்ணாச்சேன்னு பார்க்குறேன்…” அவன் எச்சரித்தான்.

“இல்லன்னா என்ன செஞ்சுடுவ… தலைய சீவிடுவியா…?” அவள் மேலும் எகிறினாள்
அவளிடம் பதிலுக்கு பதில் அவன் பேசவில்லை. ஆனால் அவன் மனதில் பயங்கரமான கோபம் மூண்டிருந்தது. “இந்த பேச்சுக்கு நீ நிச்சயம் அனுபவிப்ப….” என்று அமைதியாகவும் அழுத்தமாகவும் சொல்லிவிட்டு வேகமாக அந்த அறையிலிருந்து வெளியேறினான்.

“என்ன தம்பி… ஆச தீர பேசிட்டீங்களா? எங்க பொண்ணு ஆண் பிள்ளைகளுகிட்ட பேச கொஞ்சம் கூச்சப்படும்… அதனால உங்ககிட்ட சரியா பேசியிருக்காது. அதெல்லாம் தப்பா எடுத்துக்காதீங்க….” என்றார் ஒய்வு பெற்ற கான்ஸ்டபிலான சூர்யாவின் தந்தை கிருஷ்ணமூர்த்தி.
கபிலனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. ஏற்கனவே சூர்யாவின் பேச்சில் கடுப்பாகியிருந்தவன், இப்போது கிருஷ்ணமூர்த்தியின் பேச்சில் இன்னும் வெறியாகிப் போனான். பல்லைக் கடித்துக் கொண்டு தந்தைக்கு கண்களால் குறிப்பு காட்டினான்.

“இன்னும் ரெண்டு நாள்ல உங்களுக்கு தகவல் சொல்றோம்… நாங்க வர்றோம்.” என்று மகனின் முகத்தை பார்த்தே ஒரு முடிவை சொல்லிவிட்டு, தன் குடும்பத்துடன் பெண் வீட்டிலிருந்து விடைபெற்று சென்றார் கபிலனின் தந்தை.

கபிலன் சூர்யாவின் வீட்டிலிருந்து வெளியேறி விட்டான். ஆனால் அவன் மனதிலிருந்து அவள் பேசிய வார்த்தைகளை வெளியேற்றாமல் பாதுகாத்து வைத்துக் கொண்டான்.
அடுத்தடுத்து சூர்யாவிற்கு திருமண ஏற்பாடுகளை செய்த அவளுடைய பெற்றோர் சோர்வடையும் வரை மறைமுகமாக எதையாவது செய்து அவளது திருமணத்தை கலைத்துவிடுவதன் மூலம் அவளை பழி தீர்த்துக் கொண்டிருந்தான்.

# # #

கார்மேகம் சூழ்ந்து அடைமழை கொட்டிக் கொண்டிருந்தது. மாலை ஐந்து மணிக்கெல்லாம் இருட்டிவிட்டது. இருசக்கர வாகனங்களில் செல்வோர்கள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு மழைக்கு ஒதுங்கி நின்றார்கள். சூர்யாவும் சுதாவும் தங்களுடைய ஸ்கூட்டியை சாலையோரம் நிறுத்திவிட்டு பேருந்து நிறுத்தத்தில் ஒதுங்கி நின்றார்கள். அவர்களால் முழுவதுமாக மழையிடமிருந்து தப்பித்துவிட முடியவில்லை. லேசாக தூவானம் அவர்களை நனைத்துக் கொண்டிருந்தது. குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த தோழிகள் இருவரும் துப்பட்டாவை இழுத்து போர்த்திக் கொண்டு நின்றார்கள்.

அவர்களுக்கு அருகே புதியவன் ஒருவனும் தன்னுடைய பஜாஜ் டிஸ்கவரை ஓரமாக நிறுத்திவிட்டு வந்து நின்றான். அவனையும் குளிர் விட்டுவிடவில்லை. குளிருக்கு இதமாக ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்து புகையை இழுத்து விட்டான். அந்த புகையின் நெடி தோழிகள் இருவரையும் தாக்கி புரையேரச் செய்தது. அதில் எரிச்சலான சூர்யா, “ஹலோ.. பொது இடத்துல புகை பிடிக்கக் கூடாதுன்னு தெரியாதா..? ” என்று வழக்கம் போல் தன் குரலை உயர்த்தினாள்.

இருட்டில் நின்றுகொண்டிருந்த இரண்டு உருவங்களை அதுவரை சரியாக கவனிக்காத அந்த புதியவன் திரும்பிப் பார்த்தான்.

“உங்களதான் சார்… மரியாதையா சொன்னா புரியாதா…? ஒழுங்கா அந்த சிகரெட்டை கீழ போடுங்க… நீங்க புகை பிடித்தால் உங்களுக்கு அருகில் பத்தடி தூரத்துல இருக்க எங்களுக்கும் சேர்த்து பாதிப்பு வந்து சேருது. இதெல்லாம் எத்தனதடவ ‘ஃபேஸ்புக்ல’, ‘ஈமெயில’, ‘டிவி நியூஸ்ல’, பத்திரிக்கைல பார்த்தாலும் உங்களுக்கெல்லாம் புத்தியே வராதா?”

“இல்ல… நான்… குளிருக்கு…. சாரி…” என்று கோர்வையாக பேச முடியாமல் கையில் இருந்த சிகரெட்டை கீழே போட்டுவிட்டு தடுமாறினான் அந்த புதியவன்.

அப்போது அந்த பக்கம் வந்து கொண்டிருந்த ஒரு காரின் ஹெட் லைட் வெளிச்சம் அவர்கள் மீது பட்டு, அரைகுறையாக நனைந்த ஆடையுடன் முகத்திலும் கைகளிலும் நீர் திவளைகளுடன், மழையில் நனைந்த பளிங்கு சிலை போல் இருந்த சூர்யாவின் அழகை எடுத்துக் காட்டியது. அவர்களை நெருங்கி வந்த கார் ஒரு நொடி தயங்கி நின்று பின் விரைந்து அவர்களை கடந்து சென்றது.

கார் சென்ற அடுத்த நொடியே அங்கு நின்று கொண்டிருந்த புதியவனும் சூர்யாவின் பேச்சிலிருந்து தப்பிக்க எண்ணி, தன் வண்டியை கிளப்பிக் கொண்டு சென்றுவிட்டான்.

“ஏன்டி நீ சும்மாவே இருக்க மாட்டியா…? நாமலே தனியா மழைக்கு ஒதுங்கி நிக்கிறோம். அவனுகிட்ட உனக்கு ஏன்டி வம்பு?”

“இப்படியே எல்லோரும் பயந்து ஒதுங்கி போறதாலதான் சுதா இந்த மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் ரொம்ப துளிர் விடுது. என்ன மாதிரிதான் எல்லோரும் தைரியமா இருக்கனும். அப்பதான் நம்மள பார்த்து மத்தவங்களுக்கு பயம் வரும். நீயே பார்த்தல்ல… நான் திட்டின உடனே அவன் சிகரெட்டை கீழே போட்டுட்டு வண்டிய எடுத்துக்கிட்டு ஓடிட்டான். அதான்டி சூர்யா…” அவள் பெருமை அடித்துக் கொண்டாள்.

“நீ சொல்றதும் சரிதான்டி… நீ வரும் போது மட்டும்தான் அந்த ‘ராம் நகர்’ பசங்க எங்ககிட்ட வாலாட்ட மாட்டேங்கிரானுங்க….”

தோழியின் பேச்சில் உச்சி குளிர்ந்த சூர்யா மழையின் வேகம் குறைந்துவிட்டதால் வண்டியை கிளப்பினாள்.

சினிமாவில் கூட ஆக்ஷன் கதாநாயகனை ரசிக்கும் சூர்யாவிற்கு நிஜ வாழ்க்கையிலும் துணிச்சலான மனிதர்களை மிகவும் பிடிக்கும். இயல்பில் அவள் தைரியமான பெண் இல்லை என்றாலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன்னை ஒரு வீர மங்கையாக காட்டிக் கொள்வாள். காரணம் அவளே தன்னுடைய மாய பிம்பத்தை ரசித்தாள்.




Comments are closed here.

You cannot copy content of this page