இதயத்தில் ஒரு யுத்தம் – 11
4462
0
அத்தியாயம் – 11
சூர்யா பிரசாத்ஜியை பற்றி உயர்ந்த எண்ணம் கொண்டிருந்தாள். அடிக்கடி அவரை பற்றி நினைவுகள் மனதில் எழும். ஆனால் தீரஜ்ஜை பார்த்தவுடன் பிரசாத்ஜியின் நினைவு அவளை விட்டு அகன்றுவிடும். முழுவதும் தீரஜ்தான் அவள் மனதை ஆக்கிரமித்திருப்பான். அதனால் பிரசாத்ஜியை பற்றி அவள் தீரஜிடம் பேசியதே இல்லை.
ஆனால் அலுவலகத்திற்குள் நுழைந்து மேனேஜர் நவீனை பார்த்ததும் முதல் நாள் தோழியுடன் பேசி முடிவெடுத்தது நினைவில் வர… நவீனிடம் பிரசாத்ஜியை சந்திக்க வேண்டி பேசினாள்.
தினமும் தீராஜ்பிரசாத் என்கிற பிரசாத்ஜியுடன் பயணம் செய்து கொண்டிருக்கும் ஒரு பெண், அதே பிரசாத்ஜியை சந்திக்க முன் அனுமதி கோரி வந்து நிற்பதை கண்டு குழம்பினான் நவீன்.
தன்னுடைய குழப்பத்தை சூர்யாவிடம் தெரிவிக்காமல் நாசுக்காக பேசி அவளை அனுப்பிவிட்டு, பிரசாத்ஜியின் மேனேஜர் சுஜித்திடம் பேசினான்.
“நமஸ்த்தே ஜி… நான் நவீன் பேசுறேன்…”
“சொல்லு…”
“ஆபீஸ் ஸ்டாஃப் சூர்யா பிரசாத்ஜியை சந்திக்க முன் அனுமதி கேட்குறாங்க…. அவங்க ஜிக்கு ரொம்ப க்ளோஸ்”
“சரி… ஜிகிட்ட பேசிட்டு சொல்றேன்…”
சுஜித் சொன்ன விஷயத்தை கேட்டு தனக்குள் சிரித்துக் கொண்ட தீரஜ்…
“அடுத்த மாதம் நான்காம் தேதி என்னென்ன ப்ரோக்ராம் இருக்கு…?” கேட்டான்.
சுஜித் கையிலிருந்த லாப்டாப்பை தட்டி வரிசையாக அன்றைக்கு தீரஜ்பிரசாத்தின் வேலைகளை பட்டியலிட்டு கூறினான்.
“சரி சுஜித்… அன்றைக்கு காலை 11 மணிக்கு இருக்கும் அப்பாயின்மென்டை கான்செல் பண்ணிவிட்டு சூர்யாவை மீட் பண்ண அந்த டைமை பிக்ஸ் பண்ணிடு…?”
“ஓகே சார்…” சுஜித் பௌயமாக சொல்லிவிட்டு வெளியேறினான்.
தீரஜ்பிரசாத் சூர்யாவை பிரசாத்ஜியாக சந்திக்க சரியாக முப்பது நாள் அவகாசம் எடுத்துக் கொண்டான். அந்த ஒரு மாத காலத்தில் தீரஜ்ஜகவே தன்னுடைய காதலை சூர்யாவிற்கு புரியவைக்க நினைத்தான்.
அதன்படி சூர்யாவுடன் அதிக நேரம் செலவழிக்க முடிவுசெய்து அந்த வார சனிக்கிழமை அவளை ஒரு இடத்திற்கு அழைத்து சென்றான்.
“என்னடா… வெளியே கூட்டிகிட்டு வந்திருக்க?”
“போனவாரம் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்னு சொன்னேனே ஞாபகம் இருக்கா…?”
“ம்ம்ம்…. ஆமாம்… அன்னைக்கு ஏதோ உளறிகிட்டு இருந்த… என்னடா சர்ப்ரைஸ் அது…?”
“உளறினேனா…! கொழுப்புடி உனக்கு… ” என்று கூறி வண்டியை வேகமெடுத்து விரட்டினான்.
நாற்பது நிமிடத்தின் வண்டியின் வேகத்தை குறைத்து நெருக்கமான கட்டிடங்களை கடந்து மரங்கள் அடர்ந்த காட்டுப்பகுதியில் நுழைந்தான். மேலும் இருபது நிமிட பயணத்திற்கு பிறகு ஒரு சிறு மரத்தாலான வீட்டிற்கு முன் காரை நிறுத்திவிட்டு…
“இறங்கு சூர்யா…” என்றான்.
“ஹேய்… என்ன இடம்டா இது…?”
“பிடிச்சிருக்கா…?”
“ரொம்ப…”
அவன் அவளை உள்ளே அழைத்து சென்றான். வீட்டில் யாரும் இல்லை. பிரிட்ஜிலிருந்து ஜூஸ் எடுத்துவந்து கொடுத்தான். அவள் சிறுது நேரம் இளைப்பாறிய பிறகு அந்த வீட்டின் பின்பக்கம் அழைத்து சென்றான். அங்கே யமுனாவின் கிளை ஆறு பெரிய வாய்க்காலாக ஓடிக் கொண்டிருந்தது.
“வாவ்… என்னடா இது மேஜிக்… வீட்டுக்கு பின்னாடியே ஆறு இருக்கு…!” துள்ளி குதித்தபடி கேட்டாள்.
“சவுத் இந்தியால நிறைய இதுமாதிரி லொக்கேஷன் இருக்குமே… நீ பார்த்ததே இல்லையா சூர்யா…?”
“ம்ஹும்… இல்ல…” என்று மறுப்பாக தலையசைத்தாள்.
அவன் அவளை ஆச்சர்யமாக பார்த்தான்.
“சரி வா…” என்றபடி மரத்தில் கட்டியிருந்த கையிற்றை அவிழ்த்துவிட்டு தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த படகில் ஏறிக்கொண்டு சூர்யாவிற்கு கை கொடுத்து அவளையும் ஏற்றிவிட்டான்.
சூர்யா அந்த படகு பயணத்தை மிகவும் ரசித்தாள். தீரஜ் படகை இயக்கினான். சிறிது நேரத்தில் அந்த கிளை ஆறு யமுனாவோடு சேர்ந்தது. அதன் பிறகு அவர்களுடைய பயணம் யமுனாவில் தொடர்ந்தது…
நான்கு பக்கமும் தண்ணீர்… ஆள் ஆரவாரம் சிறிதும் இல்லாத இடத்தில் காற்றின் ஓசை காதில் மோதியது. மிரட்டும் அழகுடன் இருந்த அந்த சூழ்நிலையை சூர்யா ரசித்தாள்.
“பிடிச்சிருக்கா சூர்யா…?”
“இவ்வளவு அழகை யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா…?” யமுனாவின் அழகை ரசித்தபடி பதில் சொன்னாள்.
“லைஃப்ல அடுத்த கட்டத்துக்கு எப்ப போகப்போற…?”
“அடுத்த கட்டம்ன்னா…?”
“எப்போ கல்யாணம் செஞ்சுக்க போற?” தீரஜ் நேரடியாக கேட்டான்.
“பிரசாத்ஜி மாதிரி ஒரு நல்ல வீரனை சந்தித்த பிறகு…” அவள் தன்னை அறியாமல் சொல்லிவிட்டாள்.
அவன் திகைத்துபோய் அவளையே பார்த்தான்.
“எ… என்ன… சொல்ற நீ…? பிரசாத்ஜியா…?”
“என்னடா இப்படி முழிக்கிற…? நீ இந்த ஊர்தானே… பிரசாத்ஜியை தெரியாது…! மதுராஸ் கிங்…”
“ம்ம்ம்… ம்ம்ம்… அவருக்கென்ன… அவரோடு உன் கல்யாணத்தை எதுக்கு சம்பந்தப்படுத்தற…?”
மணந்தால் ஒரு வீரனை மட்டுமே மணக்கவேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கும் தன்னுடைய லட்சியத்தை அவனிடம் விளக்கினாள்.
“என்னடி சொல்ல வர்ற…? அந்த பிரசாத்ஜியைதான் நீ கல்யாணம் செஞ்சுக்கறதா முடிவு பண்ணியிருக்கியா…?”
“ச்ச… ச்ச… பிரசாத்ஜியை எனக்கு பிடிக்கும்தான்… அதுக்காக கிழவனை கல்யாணம் செஞ்சுக்க முடியுமா…?”
“கிழவனா…!”
“ஆமா… பிரசாத்ஜி வயசானவர்தானே… என்ன… ஒரு ஐம்பது ஐம்பத்தஞ்சு வயசு இருக்குமா…? ம்ம்ம்…”
“……………………” அவன் அவளுடைய கற்பனை திறனை எண்ணி வியந்துபோய் அமர்ந்திருந்தான்.
“என்னடா அப்படியே ஸ்ட்டன்னாய்ட்ட…?”
“எப்படிடி இவ்வளவு விபரமா இருக்க…!”
“எல்லா விஷயத்தையும் டீப்பா அனலைஸ் பண்ணினா நீ கூட விபரமா இருக்கலாம்டா…” அவள் அக்கறையுடன் அட்வைஸ் பண்ண அவன் கப்பென்று வாயை மூடிக் கொண்டான்.
# # #
அன்று பங்குனி மாதம் கடைசி பௌர்ணமி இரவு… ஹோலிகா தகனத்தை முன்னிட்டு மதுரா மக்கள் உறக்கத்தை மறந்துவிட்டு உற்சாக கூத்தாடினார்கள்.
அரக்கர்களின் அரசனான ஹிரண்யகசிபுவின் சகோதரி அரக்கி ஹோலிகா கடவுள் விஷ்ணுவின் மீது விடாப்பிடியான பக்தி கொண்ட இளம் பிரஹலாதனை நெருப்பில் போட முயன்ற போது அதிலிருந்து வியக்கத்தக்க வகையில் அவர் தப்பித்ததோடு ஹோலிகா அதே நெருப்பில் தகனமானதை குறிப்பால் உணர்த்துவதற்காக வீதியோரங்களில்… மக்கள் கூடுமிடங்களிலெல்லாம் பெரிதாக நெருப்பை மூட்டி கொண்டாடினார்கள். சில இடங்களில் ஹோரி எனப்படும் நாட்டுப்புற பாடல்களை பாடி இசையுடனும் நடனத்துடனும் கொண்டாடினார்கள்.
விடிந்ததும் துலேந்தி… ஹோலியின் முக்கிய திருநாள். சூர்யா தங்கியிருந்த விடுதியிலும் அன்று சிறப்பு உணவு மற்றும் பூஜையோடு கொண்டாட்டமும் களைகட்டியது. விடுதியில் தங்கியிருந்தவர்கள் மற்றும் வேலை செய்பவர்கள் அனைவரும் மகிழ்ச்சியும் குதூகலமாக ஒருவர் மீதொருவர் வண்ணப் பொடிகளையோ அல்லது வண்ணம் கலந்த நீரையோ வீசிக் கொண்டாடினார்கள்.
பகவான் கிருஷ்ணர் தனது தாயாரிடம் தான் கரிய நிறத்திலும் ராதை அழகான தோல் நிறத்துடனும் இருப்பது தொடர்பாகக் குறை கூறியதால் கிருஷ்ணரின் தாயார் ராதையின் முகத்தில் நிறத்தைப் பூச முடிவு செய்ததாகவும்… கிருஷ்ண பகவான் கோபியர்களுடன் குறும்புத்தனமாக விளையாடியதாலும் கொண்டாடப்படும் பண்டிகை என்று நம்பப்படுகின்றது.
வசந்தத்தை வரவேற்கும் ஹோலி திருநாளை கோசிகாலன் மக்களோடு சேர்ந்து சிரிப்பும் விளையாட்டும் களிப்புமாக கழித்த சூர்யா மறுநாள் ஓய்வெடுக்க நினைத்தாள் ஆனால் தீரஜ் அவளை விடாமல் வெளியே அழைத்து வந்திருந்தான். காரில் கனத்த அமைதி நிலவியது. அவன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.
‘உனக்கு இவ்வளவு அமைதியாக கூட இருக்க தெரியுமா சூர்யா…?’ என்று மானசீகமாக கேட்டான்.
அவளுடைய அமைதிக்கு காரணம் தீரஜ் சூர்யாவை கட்டாயப்படுத்தி வெளியே அழைத்துக் கொண்டு வந்திருந்தான். அவள் அவன் மீது கோபமாக இருந்தாள்.
“என்ன சூர்யா எதுவும் பேசாம அமைதியா இருக்க…?”
“பேசினா மட்டும் என்ன ஆக போகுது… நீ வண்டிய ஒழுங்கா பார்த்து ஓட்டு…” அவள் பட்டென்று பதில் சொன்னாள்.
“எதுக்குடி இப்படி மூஞ்சிய திருப்பிக்கிற…? அப்படி என்ன நான் செஞ்சுட்டேன்…?”
“நான் வேலை இருக்குன்னு சொன்ன பிறகும் என்னை கட்டாயபடுத்தி கார்ல அள்ளி போட்டுக்கிட்டு வந்திருக்கியே… உன்கிட்ட மூஞ்சிய திருப்பாம சிரிச்சு பேசணுமா..?”
“நான் கூப்பிட்டப்பவே நீ வந்திருந்தா நான் எதுக்கு உன்னை கட்டாயப்படுத்த போறேன்…?”
“நீ கூப்பிட்ட உடனே நான் உன் பின்னாடி ஓடி வந்துடனுமா…? நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?” அவள் கடுப்புடன் கேட்டாள்.
“அப்பாடக்கர்…? என்ன அப்பாடக்கர்…?” அவன் புரியாமல் விழித்தான்.
“அது எங்க ஊரு தலதளபதி சந்தானத்தோட டிக்ஷ்னரி வோர்ட்…”
“யார் அது தலதளபதி…?”
“இதுகூட தெரியல… உன்கூடவெல்லாம் ட்ராவல் பண்ண வேண்டியிருக்கே… எல்லாம் என் நேரம்…” அவள் எரிச்சலுடன் பேசினாள்.
“சரி வர வேண்டாம் இறங்கி போ…” அவன் நடு வழியில் காரை நிறுத்தினான்.
அவன் காரை நிறுத்தியிருந்த இடம் கோசியிலிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும். அந்த இடத்தில் வாகன போக்குவரத்து அதிகமாக இல்லை. மனிதர்களும் அதிகமாக கண்ணில் படவில்லை. நீண்டு அகன்ற கரும்சாலையின் இருபுறமும் செம்மண் வெட்டியெடுக்கப்பட்ட பெரிய பள்ளங்கள்தான் கண்ணில் பட்டன. அந்த இடத்தில் தனியாக மாட்டிக்கொள்ள சூர்யாவிற்கு விருப்பம் இல்லை. அதனால் காரில் அமர்ந்தபடியே தீரஜ்பிரசாத்தை முறைத்தாள்.
“என்ன பார்க்கற…? இறங்கி போயேன்…” அவன் கண்களில் குறும்புடன் கூறினான்.
சூர்யாவிற்கு எரிச்சல் வந்தது. அவள் அவனை அடித்தாள். அவன் கையை மடக்கி அவளுடைய அடிகளை முழங்கையால் தடுத்தான். அவனை அடித்ததில் சூர்யாவிற்குதான் கை வலித்தது. அவன் ஏதோ அவள் தன்னை பாராட்டுவதற்காக தட்டிக் கொடுக்கிறாள் என்பது போல் சத்தமாக சிரித்தான்.
அவனை அடிக்க முடியவில்லையே என்கிற கோபத்தோடு அவனுடைய சிரிப்பு அவளை இன்னும் எரிச்சல் படுத்தியது. காரில் கிடந்த ஆங்கில மாத பத்திரிக்கையை கையிலெடுத்து,
“ஏய்… சிரிக்கிறியா…? இங்கபாரு… இதுதான்டா நீ… உன்னை இப்படிதான்டா கிழிப்பேன்…” என்று சொல்லி புத்தகத்தை இரண்டு பாதியாக கிழித்தாள்.
“உன்னை இப்படிதான்டா கசக்குவேன்…” என்று சொல்லி அந்த புத்தகத்தை கையில் சுருட்டி கசக்கினாள்.
பின் அதை காலுக்கு கிழே போட்டு “நல்ல பார்த்துக்கோ… நீதான் இது… உன்னை இப்படிதான் மிதிப்பேன்….” என்று சொல்லி அந்த புத்தகத்தை மிதி மிதி என்று மிதித்தாள். அவளுடைய கோபம் முழுவதையும் அந்த புத்தகத்திடம் காட்டினாள்.
அவளுடைய செய்கையில் முதலில் திகைத்தவன் பின் சத்தமாக சிரித்துவிட்டான். அவன் சிரித்த பிறகுதான் அவள் தான் என்ன செய்கிறோம் என்பதையே உணர்ந்து புத்தகத்தை மிதிப்பதை நிறுத்தினாள்.
பிறகு அமைதியாக அவனை பார்த்தாள். அப்பாவி குழந்தை போல் மலங்க விழித்தாள்… ‘இவளிடம் எப்படி நம் காதலை புரியவைக்க போகிறோம்…’ அவன் குழம்பினாலும் அவளுடைய அப்பாவித்தனத்தை ரசித்தான்.
Comments are closed here.