இதயத்தில் ஒரு யுத்தம் – 12
4313
0
அத்தியாயம் – 12
தீரஜ் சூர்யாவை அழைத்துக் கொண்டு வந்திருந்த இடம் ஒரு நந்தவனம். உள்ளே நுழைந்ததும் பசுமையான பெயர் தெரியாத மரங்களும் விதவிதமான பூக்களும் அவர்களை வரவேற்றன. இயற்கை போலவே அமைக்கப்பட்ட பெரிய செயற்கை நீரூற்று கண்களை கவர்ந்தது. நீருற்றின் அடிவாரத்தில் ஓடை ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. சிலுசிலுப்பான அந்த இடம் சூர்யாவின் மனநிலையை மாற்றிவிட்டது. அதை அறிந்த தீரஜ்பிரசாத் அவளை ரசித்தான். அவள் நந்தவனத்தை ரசித்தாள்.
தூரத்தில் ஒரு நீர் தேக்கம் தெரிந்தது. அது ஒரு குளம்… குளத்தில் தாமரையும் அல்லியும் மலர்ந்திருந்த அழகை ரசித்தவள் அங்கே மேய்ந்து கொண்டிருந்த வாத்து கூட்டத்தை ஆசையாக பார்த்தாள்.
“வாவ்… எவ்வளவு அழகா இருக்கு…!” அவள் அதிசயித்தாள்.
அவள் நல்ல மனநிலையில் இருக்கும் போது தன் மனதை வெளிப்படுத்த நினைத்து… அவள் ரசனையில் குறுக்கிடாமல் ஒதுங்கி நின்று அவள் மனம் அமைதியாவதற்காக காத்திருந்தான். அதற்கு இந்த சூழ்நிலை உதவும் என்று நம்பினான்.
அவன் நம்பியது போலவே அவள் மனம் அமைதியடைந்து நந்தவனத்தின் அழகில் லயித்திருந்தது. ‘இதுதான் சரியான நேரம். ‘இப்போது அவளிடம் காதலை சொன்னால் அவள் சிறுபிள்ளை தனமாக எதுவும் பேசாமல் கொஞ்சம் யோசிப்பாள்….’ அவன் மனதில் நினைத்தபடி தூரத்தில் நிற்கும் சூர்யாவை நோக்கி இரண்டடி எடுத்து வைத்தான்.
அதே நேரம் சூர்யாவும் சிரித்த முகத்துடன் தீரஜ்ஜின் பக்கம் திரும்பி இரண்டடி எடுத்து வைத்தாள். அவள் காலடியில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு வாத்து அவள் பின்னால் வந்தது. அதை கண்டு கொள்ளாமல் மேலே நடந்தாள். இரண்டாவது வாத்து… மூன்றாவது வாத்து… தொடர்ந்து அனைத்து வாத்துகளும் அவளுக்கு பின்னால் வந்தது. அவள் திரும்பி பார்த்தாள். திகைத்தாள். ‘என்ன இது… எல்லா வாத்தும் என்னை துரத்தி வருதே…!’
சூர்யா நடையை வேகப்படுத்தினாள். வாத்துகளும் வேகப்படுத்தின. இன்னும் வேகமாக நடந்தாள். அவளை தொடர்ந்த வாத்துகளும் தங்கள் நடையை ஓட்டமாக மாற்றின. சூர்யா பயந்துவிட்டாள். வேகமாக ஓட்டம் பிடித்தாள். வாத்துக் கூட்டம் அவளை துரத்தியது.
“ஐயையோ… தீரஜ்… தீரஜ்… ” அவள் வேகமாக கத்தியபடி ஓடினாள்.
வாத்து கூட்டம் இன்னும் வேகமாக அவளை துரத்தியது. அலறியபடி ஓடிவரும் சூர்யாவை பார்த்த தீரஜ் அவளை நோக்கி வேகமாக ஓடிவந்தான். இருவரும் முட்டிக் கொண்டார்கள். சூர்யா தீரஜ்ஜை இறுக்கமாக கட்டிக்கொண்டாள். முன்னோக்கி ஓட முடியாமல் இன்னும் இன்னும் நெருக்கமாக அவனுடன் ஒட்டிக் கொண்டாள்.
பட்டுமேனி ஸ்பரிசத்தில் உடல் சிலிர்த்த தீரஜ் மெய்மறந்து சிறகில்லாமல் வானில் பறந்தான். சூர்யாவின் அலறல் குரல் அவனை இந்த உலகிற்கு கொண்டுவந்தது.
“எ… என்ன… என்ன சூர்யா…?” என்று கேட்டு தடுமாறினான்.
“வாத்து… வாத்து… என்ன வாத்து துரத்துது…” என்று அவனோடு இன்னும் ஒட்டிக் கொண்டாள்.
“எங்க… எங்க துரத்துது… திரும்பி பாரு…” அவன் அவளை தன்னிடமிருந்து விளக்கி திருப்பி நிறுத்தி வாத்தை பார்க்கும்படி செய்தான். அது அவள் காலுக்கு கீழே “பாக் பாக்..” என்று கத்தியபடி மேய்ந்து கொண்டிருந்தது.
“என்ன இது… இப்போத்தானே என்னை துரத்தினுச்சு… இப்போ சாதாரணமா நிக்குது…” அவள் வியப்பு குறையாமல் கேட்டாள்.
“வாத்துக்கு பயந்தா ஓடி வந்த…?”
“ம்ம்ம்….” அவள் மனமில்லாமல் அரைகுறையாக ஒத்துக் கொண்டாள்.
அவன் சத்தமாக மனம்விட்டு சிரித்தான். அவன் எப்போதெல்லாம் சூர்யாவுடன் இருக்கிறானோ அப்போதெல்லாம் அவனால் இப்படி சிரிக்க முடிகிறது. அவள் கோமாளியாக மாறினாலும் அவனை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தாள்.
“ஏன்டா இப்படி சிரிக்கிற.. சொல்லிட்டு சிரியேன்…”
“இல்ல… நீதான் பெரிய வீராங்கனையாச்சே… இத்துனூண்டு வாத்துக்கு பயந்து தலைதெறிக்க ஓடி வந்தியே… அதை நினச்சேன்… ஹா… ஹா…” மீண்டும் சிரித்தான்.
“ரொம்ப சிரிக்காத… மூச்சு நின்னுட போகுது… ஹும்…” என்று கழுத்தை நொடித்துக் கொண்டவள்,
“இந்த வாத்துக் கூடவெல்லாம் எப்படிடா சண்டை போட முடியும்…? இதுங்களுக்கெல்லாம் ஃபைட் பற்றி என்ன தெரியும். கண்டபடி மேல பாஞ்சு கொத்தி வச்சிருச்சுன்னா என்ன செய்றது…?” மிக தீவிரமான முகபாவனையுடன் அவள் கேட்டதும் அவனால் சிரிப்பை கட்டுப்படுத்தவே முடியவில்லை.
“ஹா… ஹா… ஹா… நீங்கல்லாம் கொரிலா ஃபைட்தான் செய்விங்களோ…! ஹா… ஹா…” அவன் ஆச்சர்யம்காட்டி சிரித்துக் கொண்டே கேட்டான். இந்த முறை அவனுடைய கேலியை அவள் புரிந்து கொண்டுவிட்டாள்.
“ஏய்… என்னடா நக்கல் பண்றியா… அடிங்க…” அவள் அவனிடம் பாய்ந்தாள்.
அவளை லாவகமாக தடுத்தவன் அவளுடைய இரண்டு கைகளையும் தன்னுடைய இரண்டு கைகளால் பிடித்துக் கொண்டு அவளுடைய கண்களை நேருக்கு நேர் பார்த்து கேட்டான்…
“வாத்து மடச்சின்னு கேள்விப்பட்டிருக்கியாடி…?”
“வாத்து மடையன்னுதான்டா கேள்விப் பட்டிருக்கேன்…”
“இந்த சூழ்நிலைக்கு வாத்து மடச்சிதான்டி சரியா இருக்கும்…”
அவள் இமைக்காமல் அவனை பார்த்தாள். பிடித்திருந்த கைகளை விட்டுவிட்டு அவளை தோளோடு அனைத்துக் கொண்டு சொன்னான்.
“முதல் வாத்து என்ன செய்யுதோ அதையேதான் அடுத்த வாத்தும் செய்யும்… நீ நடக்க ஆரம்பித்தவுடன் உனக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்த வாத்தும் உன்னை தொடர்ந்து வந்திருக்கும். நீ ஓடியதும் அதுவும் ஓடியிருக்கும். அதை தொடர்ந்து அனைத்து வாத்துகளும் ஓடியிருக்கும். நீ நின்றதும் வாத்துக் கூட்டமும் நின்றுவிட்டது…” அவன் சிரிப்பினுடே அவளுக்கு விளக்கினான்.
“வாத்துகிட்ட இவ்வளவு ரகசியம் இருக்கா…” அவள் அதிசியமாக கேட்டாள்.
“ரகசியம் வாத்துகிட்ட மட்டும் இல்ல… ”
அவன் பூடகமாக பேசினான். அதை சூர்யா புரிந்து கொள்வதற்குள் தீரஜ் பிரசாத்தின் கைபேசி அலறியது. எடுத்து பேசியவனின் முகம் இறுகியது.
“கிளம்பு…. உன்னை விடுதியில் விட்டுவிடுகிறேன்… எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு…” என்று சொல்லிவிட்டு அவசரமாக அங்கிருந்து கிளம்பினான். அன்றும் அவனுடைய காதலை அவளிடம் சொல்ல முடியாமல் தடை முளைத்துவிட்டது.
Comments are closed here.