இதயத்தில் ஒரு யுத்தம் – 13
4222
0
அத்தியாயம் – 13
யமுனை ஆற்றின் கரையில் வெண்மை நிற பளிங்கு கற்களால் கட்டப்பட்ட தாஜ்மகாலின் வானளாவிய உயரத்திலும், பளபளக்கும் அழகிலும் மயங்கி நின்றாள் சூர்யா…
“சூர்யா… சூர்யா…” அவள் தோள் தொட்டு உளுக்கினான் தீரஜ்.
கடந்த வாரம் சூர்யாவை நந்தவனத்திற்கு அழைத்து சென்ற தீரஜ் தொழிலில் எப்பொழுதும் போல் அன்றும் திடீரென்று ஒரு சிக்கல் முளைக்க அவசரமாக கிளம்பிவிட்டான். அதனால் இன்று ஒரு முழு நாளை அவளுடன் செலவழிக்க எண்ணி அவளை ஆக்ரா அழைத்து வந்திருந்தான்.
“ம்ம்ம்… என்னடா…”
“என்ன…? அப்படியே நின்னுட்ட? வா…” என்று அவளை அழைத்துக் கொண்டு தாஜ்மகாலின் முன்பக்க பூங்காவில் நுழைந்தான். அந்த பூங்காவின் அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக அங்கே அமைக்கப்பட்டிருந்த செயற்கை குளத்தில் தாஜ்மகாலின் பிம்பம் தெரிந்தது.
“வாவ்… ” அவள் திறந்த வாய் மூட மறந்து பூங்காவில் நின்றபடி தாஜ்மகாலை ரசித்தாள். பின் அந்த அழகிய மாளிகைக்குள் சென்று சுற்றிப் பார்த்தாள். தீரஜ்ஜுடன் சேர்ந்து படங்கள் எடுத்துக் கொண்டாள். தாஜ்மகாலை சுற்றி முடித்தவர்கள் ஆக்ராவின் யமுனா நதிக்கரையோரம் சென்றார்கள்.
தூரத்தில் ஓவியம் போல் தெரியும் தாஜ்மகாலில் ஒரு சோகம் குடிகொண்டிருப்பதை சூர்யா உணர்ந்தாள்.
மாலை மயங்கும் நேரம்… தங்க நிறத்தில் தகதகத்த மாலை நேர சூரியன் யமுனையாற்றில் விழுந்து தண்ணீரை தீபிழம்பென மாற்றியிருந்தது. அக்னிநிற யமுனையாற்று நீரில் மிதந்த…. தாஜ்மகாலின் பிம்பமும், கரையில் ஒற்றையாக நின்று கொண்டிருந்த ஒட்டகத்தின் பிம்பமும்… இறைவன் வரைந்த ஓவியமென தோன்றியது அவளுக்கு. அந்த கட்சியில் இருந்த கனம் அவள் மனதை பிழிய அவளை அறியாமல் கண்களில் நீர் கோர்த்தது. பார்வையை அகற்ற முடியாமல் சிலை போல் நின்றாள். அவளுக்குள் ஏதோ ஒரு மாற்றம்…
கொள்ளை அழகை8 ரசித்தபடி தன்னை மறந்து நின்ற சூர்யாவை அவளறியாமல் ரசித்துக் கொண்டிருந்தான் தீரஜ்…
அந்திம நேரத்து ஊதக்காற்று மனதையும் உடலையும் குளிர்விக்க, தீரஜ் பிரசாத்,
“சூர்யா…” என்றான் கிசுகிசுப்பாக.
தாஜ்மகாலின் அழகில் மயங்கி நின்றவள் சட்டென தீரஜ்ஜை திரும்பிப் பார்த்தாள்.
அவனுடைய குரலிலும் முகத்திலும் இருந்த மாற்றத்தை அவள் கண்டு கொண்டாள்… எதுவும் பேசாமல் அவன் அடுத்து என்ன சொல்ல போகிறான் என்பது போல் அவனை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
காதல் வழியும் அவனுடைய கண்களை… படபடப்பில் விரிந்த அவளுடைய கண்களுடன் கலந்து அவளை நிலைகுலைய செய்துவிட்டு “ஐ ஆம் இன் லவ் வித் யு சூர்யா…. ஐ லைக் டு மேரி யு… ” என்றான்.
தேன்தடவி குழைந்த அவன் குரல் அவளை என்னவோ செய்தது… அவள் தடுமாறிப் போனாள்.
“எ… என்ன…!?” குரல் எழும்பாமல் காற்றாக வெளிப்பட்ட வார்த்தைகளை புரிந்து கொண்டவன்,
“ஐ… லவ்… யு…” என்றான் மீண்டும் தெளிவாக.
“எ… என்ன திடீர்ன்னு…?” அவள் திக்கி திணறினாள்.
“திடீர்ன்னு இல்ல… ரொம்ப நாளாவே மனசுல இருப்பதுதான்… இன்னைக்குதான் சொல்ல முடிந்தது…” லேசான சிரிப்புடன் சொன்னான்.
“………………..” அவள் பதிலின்றி தலைகுனிந்து கொண்டாள்.
“உனக்கு என்னை பிடிக்கலையா சூர்யா…?” ஏக்கமாக வெளிப்பட்ட அவனுடைய குரலில் சட்டென நிமிர்ந்தவள்,
“இல்ல… இல்ல… அப்படியெல்லாம் எதுவும் இல்லை… கொஞ்சம் பிடிச்சிருக்…குதா…ன்…” என்றாள்.
அவன் வருந்துவது பிடிக்கமால் சட்டென அவள் சமாதானமாக பதில் சொன்ன விதம் அவனுக்கு பிடித்திருந்தது… அவளிடம் ரொமாண்டிக் லுக்விட்டபடி “கொஞ்சம்தானா…?” என்று குறும்புடன் கேட்டான்.
“இல்ல… கொஞ்சம்… நிறையத்தான் பிடிச்சிருக்கு… ஆனா…” அவள் இழுத்தாள்.
“என்ன ஆனா…?”
“ஆனா… என்னோட குறிக்கோள் வேறயாச்சே…” அவள் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள்.
அவளுடைய முகபாவம் அவனுக்கு சிரிப்பை ஏற்படுத்தியது. லேசாக சிரித்துக் கொண்டே, “என்னடி உன்னோட குறிக்கோள்…?” என்றான்.
“ஒரு மாவீரனைதான் கல்யாணம் செய்யனும்கிறதுதான்…” அவள் கவலையுடன் சொன்னாள்.
“என்னை பார்த்தா வீரனா தெரியலையா உனக்கு…?”
“ஹா… ஹா… வீரனா…? நீயா…? சும்மா ஜோக் அடிக்காதடா…” அவள் சுதாரித்து சகஜமாகிவிட்டாள்
“சரி… ஜோக் அடிக்கல… வீரன்னா… என்ன மாதிரி வீரத்தை நீ எதிர்பார்க்கற…? உங்க அப்பா போலீஸ்காரர் என்பதால் அவரமாதிரியே லத்திய வச்சுகிட்டு நாலுபேர போட்டுதாக்குற போலீஸ்காரனைதான் கல்யாணம் செய்யணும்ன்னு ஏதாவது முடிவு செஞ்சு வச்சிருக்கியா…?”
“ஐயையோ…! எங்க அப்பா மாதிரி ஒரு போலீசா…! அதல்லாம் இல்ல… கிருஷ் மாதிரி ஒரு தொடைநடுங்கிய நீ பார்த்திருக்கவே முடியாது… அவரெல்லாம் என்னோட ட்ரீம் பாய் முன்னாடி நிக்ககூட முடியாது…”
அவள் பேசுவதை கேட்ட தீரஜ்க்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை…
“ஏன்டி… உன்னோட ட்ரீம் பாய் எப்படிதான் இருப்பன்…? அதையாவது சொல்லி தொலை…”
அவளுடைய கனவு நாயகனை மனக்கண்ணில் கொண்டுவர முயன்று கண்மூடி நின்ற சூர்யா குழப்பமானாள்.
“என்னடா… என் கண்ணு முன்னால நீ நின்னுகிட்டு… ட்ரீம் பாய் எப்படி இருப்பான்னு கேட்டா… நான் என்ன சொல்றது…? கண்ண மூடி பார்த்தா உன்னோட மூஞ்சிதான் தெரியுது…”
சூர்யாவின் பேச்சில் தீரஜ் மனம் குளிர்ந்தான்…
“உடனே நீதான் என்னோட ட்ரீம் பாய்ன்னு நெனச்சுடாத… அவன் ரேஞ்சே தனி…” பந்தாவாக பேசினாள்.
‘போடி லூசு… உன்னோட மனசு உனக்கே தெரியல… அதை தெருஞ்சுக்க நீ இன்னும் கொஞ்சம் வளரனும்…’ அவன் மானசீகமாக அவளை கொஞ்சினான்.
“சரி… என்னை கல்யாணம் செஞ்சுக்க உனக்கு விருப்பமா… இல்லையா…?” அவன் கண்களில் சிரிப்புடன் கேட்டான்.
“உன்னை எனக்கு பிடிக்குது. ஆனா கல்யாணம் பண்ணிக்க பிடிக்குதான்னு தெரியலையே…” அவள் குழப்பமாக சொன்னாள்.
“சரி… உனக்கு எப்போ உன்னோட மனசு தெளிவாகுதோ அப்போ எனக்கு சொல்லு போதும். அதுவரை நான் உன்னை தொல்லை செய்ய மாட்டேன்.” என்று உத்திரவாதம் கொடுத்தான்.
கொடுத்த வாக்கை காப்பாற்ற எண்ணி தீரஜ் சூர்யாவிடமிருந்து முழுவதும் விலகியிருந்தான். அவளை சந்திப்பதையும் கைபேசியில் பேசுவதையும் முழுவதுமாக தவிர்த்துவிட்டான். அவள் நினைவுகள் அவனை தொல்லை செய்யும் போது அவளுக்கு தெரியாமல் தூரத்திலிருந்து அவளை பார்ப்பன். அவளுடன் பேச தோன்றும்போது தன்னுடைய கைபேசியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் அவளுடைய குரலை கேட்டுக்கொள்வான்.
ஒரு வாரம் கடந்துவிட்டது… சூர்யாவிற்கு தீரஜ் பிரசாத்தின் விலகல், அவன் எந்தளவு அவளுக்குள் கலந்திருக்கிறான் என்பதை தெளிவுபடுத்தியது. அவளுடைய அனைத்து செயல்களிலும் ஏதாவது ஒரு விதத்தில் அவன் இருப்பான். ஒரு நிமிடம் கூட அவனுடைய நினைவை துறந்து அவளால் இருக்க முடியவில்லை.
அவள் மனம் பரபரக்க ஆரம்பித்தது. ‘இப்போது தீரஜ்ஜை பார்த்தே தீர வேண்டும்….’ என்று பல சமயங்களில் தோன்றும். அந்த சமயங்களில் அவனை பார்க்காமல் இருப்பது அவள் மனதை பிழியும்… சாப்பிடவிடாமல் உறங்கவிடாமல் அவன் நினைவு அவளை துரத்தும்… இது என்ன மாதிரியான உணர்வு… அம்மா அப்பாவை பிரிந்து வந்த போது கூட இதுபோல் இவள் துன்பப்படவில்லையே… ஒருவேளை இதுதான் காதலோ…! ஆம் இது காதலேதான்…!
அவனை தவிர வேறு நினைவே இல்லாத போது அவனை மறந்துவிட்டு வேறு ஒருவனுடன் எப்படி வாழ்வது…? மாவீரனாவது மண்ணாவது… தீரஜ் ஒருவனை தவிர வேறு யாரையுமே அவளுக்கு நினைவில்லை…
தீரஜ் இல்லாமல் அவளுக்கு மகிழ்ச்சி என்பது இல்லை என்பதை புரிந்து கொண்டாள். அவன்தான் தன்னுடைய வாழ்க்கை என்று நினைத்தவள் தன்னுடைய காதலை அவனிடம் ஒத்துக்கொள்ள முடிவு செய்துவிட்டாள்.
தீரஜ்ஜிடம் பேச நினைத்து அவள் கைபேசியை எடுத்தபோது, என்றைக்கும் இல்லாத ஒரு புது நடுக்கம் உடலில் பரவியது. உள்ளுக்குள் உருண்ட ஏதோ ஒன்று தொண்டையை அடைத்து பேசவிடாமல் தடுப்பது போல் ஒரு உணர்வு… அவள் கைபேசியை அனைத்துவிட்டாள்.
நாளை நேரில் அவனை பார்க்கும்போது தன் காதலை வெளிப்படுத்தலாம் என்று அவள் முடிவு செய்த நேரம்… ஒரு புது தொலைபேசி எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. எடுத்து பேசியவள் தன்னை நினைத்து வியந்தாள்.
முழு நேரமும் தீரஜ் மட்டுமே சூர்யாவின் நினைவை ஆக்கிரமித்து இருந்ததால் அவள் பிரசாத்ஜியை சந்திக்க வேண்டிய தேதியை மறந்துவிட்டாள். அவருடைய மேனேஜர் சுஜித் அவளுக்கு கைபேசியில் அழைத்து பிரசாத்ஜியுடனான அவளுடைய சந்திப்பை உறுதி செய்யும் போதுதான் நாளை நான்காம் தேதி என்பதை நினைவுகூர்ந்தாள்.
# # #
அன்று காலை எட்டு மணிக்கெல்லாம் சூர்யா பிரசாத்ஜியை சந்திக்க தயாராகிவிட்டாள்.
“பிரபா… பதினொரு மணிக்கு நாம பிரசத்ஜியை பார்க்க போறோம்டி… இப்போ இங்கிருந்து கிளம்பினா சரியா இருக்கும்…”
புது ஆடை உடுத்தி, பொருத்தமான அணிமணிகளை தேர்ந்தெடுத்து அணிந்து கொண்டு தயாராகிவிட்ட பிரபா “எனக்கு கொஞ்சம் மயக்கம் வர்ற மாதிரி இருக்கு சூர்யா… நா வரல… நீ மட்டும் போயிட்டு வாயேன்…” என்றாள்.
“மயக்கம் வந்து நீ கீழ விழுந்தாலும் பரவால்ல… இன்னிக்கு நீ என்னோட வந்துதான் ஆகணும்.”
“ஒரு முடிவோடதான் இருக்க… ஏன்டி உனக்கு பயமே இருக்காதா….? ஊரே பார்த்து நடுங்குற ஒருத்தர பார்க்க அப்பாய்ன்மென்ட் வாங்கிவச்சு சந்திக்க போறியே…! நீ சொந்த காசுலகூட சூன்யம் வச்சுக்கலடி… கடன் வாங்கி சூன்யம் வச்சுக்கற… இதல்லாம் எங்க போயி முடியப்போகுதோ…!”
“ஏன்டி புலம்புற…? முதல்ல கேட்டப்ப பிரசாத்ஜியை சந்திக்க ஆசையா இருக்குன்னுதானே சொன்ன…? இப்ப என்னடி வந்தது உனக்கு…?”
“அது அப்போ…”
“அப்போ… இப்போ…?”
“பயமாருக்குடி…”
“மேக்கப் எல்லாம் போட்டு ரெடியா வாசல் வரைக்கும் வந்துட்டு… இப்ப என்னடி பயம்…? மரியாதையா நடையகட்டு…” என்று மிரட்டி சூர்யா பிரபாவை பிரசாத்ஜியை சந்திக்க அழைத்து சென்றாள். ஆனால் பிரபாவின் உள்ளுணர்வு செய்த எச்சரிக்கை மெய்யாகியது. தோழிகள் இருவரும் அடுத்த ஒரு மணி நேரத்தில் திசைக்கு ஒருவராக சிதறடிக்கப் பட்டார்கள்.
Comments are closed here.