இதயத்தில் ஒரு யுத்தம் – 15
5010
0
அத்தியாயம் – 15
காலை எட்டு மணியிலிருந்தே சூர்யாவை சந்திக்க தீரஜ்பிரசாத் தயாராக இருந்தான். அவனுக்குள் ‘தன்னால் தீரஜாகவே சூர்யாவின் மனதை வெல்ல முடியவில்லையே’ என்ற ஏமாற்றம் இருந்தது. அதனால் முகத்தில் கலகலப்பில்லாமல் அவனுடைய அறையிலேயே அடைந்து கிடந்தான்.
‘நம்மை பார்த்ததும் சூர்யா என்ன செய்வா…? ரொம்ப சந்தோசப்படுவாளா….? இல்ல இத்தனை நாள் நம்மை பற்றி சொல்லாததற்காக கோபப்படுவாளா…? இல்லை வருத்தப்படுவாளா…? எப்படியோ… அவள் எதிர்பார்த்தபடி ஒரு காதலன் அவளுக்கு கிடைக்க போகிறான். ஆனால் எனக்குதான், என்னை எனக்காகவே காதலிக்கும் காதலி கிடைக்கப் போவதில்லை…. என்னுடைய அடையாளங்களை மட்டுமே காதலிக்கும் ஒருத்திதான் என் காதலி…’ அவன் பெருமூச்சு விட்டான்.
“எக்ஸ்கியூஸ் மீ ஜி…” சுஜித் தீரஜ்பிரசாத்தின் அறைக்கு வெளியே இருந்து குரல் கொடுத்தான்.
“உள்ள வா…” தீரஜ் அனுமதி கொடுத்தான்.
“ஜி… ஒன்பது மணியாச்சு… இது நீங்க கிருஷ்ணா கெமிக்கல்ஸ்க்கு புறப்படற நேரம்…”
“இன்னிக்கு தேவை இல்ல… சூர்யா வந்தாச்சா…?”
“இல்லை ஜி… பதினொரு மணிக்குதான் அவங்களை வர சொல்லியிருகீங்க” அவன் தயக்கத்துடன் நின்றான்.
“ஓகே… வேற என்ன…?”
“கல்யாண் ரெண்டு பெண்களை அனுப்பி ஏதோ பிரச்சனை செய்ய முயற்சி செஞ்சிருக்கான். ஒரு பெண்ணை பவன் தாக்கிவிட்டான். அவளை மருத்துவமனையில் சேர்த்திருக்கோம். இன்னொரு பெண்ணை பேப்பர் மில்லில் அடச்சு வச்சிருக்கோம்.”
“பாவனா…! அவன் அவசரக்காரனாச்சே… நல்லா விசாரிச்சாச்சா…?”
“விசாரிச்சாச்சு ஜி… நமக்கு தகவல் சொன்னது சலீம்ஜி…”
“சலீம் விசாரிச்சுட்டானா… சரி… சூர்யாவை பார்த்ததுக்கு பிறகு நான் பேப்பர் மில்லுக்கு வர்றேன்னு சொல்லிடு. அதுவரை யாரும் அந்த பெண்ணுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டாம்…”
“ஓகே ஜி…” அவன் மரியாதையுடன் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றான்.
தீரஜ்பிரசாத் சூர்யாவின் வருகைகாக பதினொருமணிவரை காத்திருந்தான். அவள் வரவில்லை. சுஜித்தை அழைத்துக் கேட்டான்.
“சூர்யா வந்தாச்சா?”
“இல்லை ஜி…” என்று பதில் கிடைத்தது.
மேலும் அரை மணிநேரம் காத்திருந்தும் அவள் வரவில்லை. அதற்கு மேல் அவனால் பொறுக்க முடியவில்லை. சூர்யாவின் கைபேசிக்கு தொடர்புகொள்ள முயன்றான். அது தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாக தகவல் சொன்னது. அவன் குழம்பினான்.
‘என்ன இவ… பிரசாத்ஜின்னு சொன்னா தலை கீழ நடப்பா… இப்போ அவரைப் பார்க்க வாய்ப்பு கிடைத்தும் வராமல் இருக்காளே…!’
தீரஜ் மீண்டும் சுஜித்தை அழைத்து விசாரித்தான்.
“சூர்யா இங்க வரவே இல்லையா….? ”
“நிச்சயமா இல்லை ஜி…..”
“ஹாஸ்ட்டலிளிருந்து புறப்பட்டுவிட்டாளா என்று விசாரிக்க சொல்….”
“ஓகே ஜி…”
“நில்லு… சூர்யாவை ஏற்கனவே பார்த்திருபவனை அனுப்பி நேரில் சென்று விசாரிக்க சொல்.”
“ஓகே ஜி…” அவன் அவசரமாக அந்த இடத்திலிருந்து அகன்றான்.
சுஜித், சூர்யா தங்கியிருக்கும் மகளிர் விடுதிக்கு அருகில் சுற்றிக் கொண்டிருக்கும் ஆட்களுக்கு தொடர்பு கொண்டு சூர்யாவை பற்றி விசாரிக்க சொன்னான்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் சூர்யா பிரசாத்ஜியை சந்திக்க தன் தோழி பிரபாவுடன் காலை எட்டு மணிக்கே புறப்பட்டுவிட்டதாக செய்தி கிடைத்தது.
“என்னடா…? சூர்யாவுக்கு என்ன ஆச்சு? அவ ஏன் இன்னும் இங்க வந்து சேரல…?” தீரஜ் ஒருவித படபடப்புடன் கேட்டான்.
“ஒருவேள அந்த கல்யாண் ஏதாவது செஞ்சு அவங்களை இங்க வரவிடாமல் செய்திருப்பானோ…! அவன் அனுப்பிய இரண்டு பெண்கள் நம்மகிட்ட மாட்டியிருக்காளுங்க… அவளுங்களை விசாரிச்சா விஷயம் தெரியும் ஜி….”
தீரஜ்பிரசாத்தின் மூளை வேறுவிதமாக கணக்கு போட்டது… ‘ஒருவேளை அந்த இரண்டு பெண்களும் சூர்யாவும் அவள் தோழியாகவுமே இருந்தால்…!’
அதற்கு மேல் அவனால் ஒரு நொடி கூட தாமதிக்க முடியவில்லை. உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தான்.
அடுத்த சில நிமிடங்களில் மருத்துவமனையையை அடைந்த தீரஜ், பிரபா அனுமதிக்கப் பட்டிருந்த அவசர சிகிச்சை பிரிவை நோக்கி விரைந்தான். அங்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு நைந்து கிடக்கும் பெண் சூர்யா இல்லை என்றதும் அவன் மனதில் நிம்மதி படர்ந்தது. அந்த பெண்ணின் முகத்தை சிறிது நேரம் ஆழ்ந்து பார்த்தான். அவளுடைய முகம் அவனுக்கு பரிச்சயமானதாக இல்லை என்றாலும் அந்த முகத்தோடு எந்த கள்ளத்தனமும் பொருந்தும் என்று அவனுக்கு தோன்றவில்லை.
மருத்துவர்களிடம் விசாரித்ததற்கு, அதிக இரத்தம் வீனாகியிருந்ததால் அவள் சுயநினைவில்லாமல் இருக்கிறாள் என்றும்… இருபத்தி நான்கு மணிநேரம் கழித்த பிறகுதான் உள்ள நிலமையையை சொல்ல முடியம் என்றும் சொல்லிவிட்டார்கள்.
‘எங்கேயோ தப்பு நடந்திருக்கு…’ என்று நினைத்தவன் உடனடியாக பேப்பர் மில் நோக்கி விரைந்தான்.
Comments are closed here.