இதயத்தில் ஒரு யுத்தம் – 17
5324
0
அத்தியாயம் – 17
தீரஜ்பிரசாத்தின் கார் சத்தமிலாமல் பேப்பர் மில்லுக்குள் நுழைந்தது. காரிலிருந்து இறங்கியவன் வேக நடையுடன் மில்லுக்குள் நுழைந்தபடியே, உடன் நடந்து கொண்டிருந்தவனிடம் “எங்கே அந்த பெண்…? சலீம் இங்கே வந்தானா…? நீ ஏதாவது அந்த பெண்ணிடம் விசாரிச்சியா…?” என்று கொத்தாக பல கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தான். அவனுடைய இறுக்கமான முகம் அங்கு இருந்த கைக்கூலிகளுக்கு எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்ய… உடன் வந்த சர்புதீன் பம்மியபடி பதில் சொன்னான்.
“இல்ல ஜி… சலீம்ஜி இங்க வரல… நான் மட்டும்தான் அவளை இங்க கொண்டு வந்தேன். நான் எதுவும் விசாரிக்கல ஜி… இப்போ பின் பக்கம் கடைசி அறைலதான் இருக்கா…”
சூர்யா அடைக்கப்பட்டிருந்த அறையின் கதவை அசால்டாக திறந்தான். அங்கு மிரண்ட விழிகளுடன் கைகளிலும் வாயிலும் கட்டுடன் தரையில் அமர்ந்திருந்தவளை பார்த்தவனின் இறுகியிருந்த முகம் எந்த உணர்ச்சியையும் காட்டவில்லை என்றாலும் அவன் கண்கள் அதிர்ந்ததை அவள் கண்டாள்.
ஒருவேளை பேப்பர் மில்லில் இருப்பது சூர்யாவாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் வந்தவனுக்கு அவனுடைய சந்தேகம் உண்மையாகிவிட்டதில் மனம் வலித்தது… ‘God…!’ என்று நெற்றியில் அறைந்து கொண்டு, நெற்றியில் விழுந்த முடியை கோதி… கண்களை மூடி உள்ளத்தை கசக்கிபிழியும் வலியை சகித்து, “ஷிட்…” என்று எதிரில் இருந்த மரப்பெட்டியை பெட்டியை உதைத்து தள்ளிவிட்டு வேகமாக அவளிடம் நெருங்கினான்.
“சூ….ர்…..யா…. நீ…யா…!” காற்றோடு கலந்து ஒலித்த அவன் குரலில் ஜீவன் இல்லை…
தீரஜ் அவளிடம் நெருங்குவதை கண்ட சூர்யா மிரண்டு அமர்ந்த நிலையிலேயே பின்னால் நகர்ந்தாள். அவளுடைய அந்த பயம் தீரஜ் இதுவரை கண்டிராதது. இதுவரை அவன் பார்த்த துரு துருப்பான சூர்யா காணாமல் போய், வெளுத்த முகமும் நடுங்கும் மேனியுமாக அவனை கண்டு மிரண்டு விலகும் புது சூர்யாவை பார்த்து திகைத்த தீரஜ், அவளை நெருங்காமல் நின்றுவிட்டான்.
“சூ…. சூர்யா… நான் தீரஜ்…” அவன் கோர்வையாக பேச முடியாமல் திணறினான். பின் மெதுவாக அவளை நோக்கி முன்னேற அவள் இன்னும் வேகமாக பின்னால் நகர்ந்து அங்கே இருந்த மர அலமாரியில் மோதியதும் அதில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய காகிதங்கள் ‘சரசர’வென அவள் மீது சரிந்தன.
“ஆ… ஆ…” அவள் அலற முயன்றாள். முடியவில்லை. வாயிலிருந்த கட்டு அவள் அலறலை ஒருவித முனகலாக மாற்றி வெளியிட்டது.
அலமாரி அவள் மீது சாய்ந்துவிடாமல் அதை ஒரே தாவில் தாங்கி பிடித்தவன் மறு கையால் சூர்யாவை பிடித்தான். அவன் கை அவள் மீது பட்டதும் “ங்… ங்… ங்ங்…” என்ற முனகலுடன் ஆவேசமாக அவன் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றாள்.
அவளுடைய இந்த செயலில் பலமாக அடிவாங்கிய தீரஜ்பிரசாத் தன் வலியை வெளிக்காட்டாமல், பிடியை அழுத்தமாக்கி குரலை கடினமாக்கி “சூர்யா… சூர்யா…” என்று அவளை உலுக்கினான்.
அவளோ அவன் அழைப்பிற்கு செவிமடுக்கும் நிலையில் இல்லை. கண்களை இருக்க மூடியபடி திமிரியவள் “சூ…ர்ர்ர்ர்யா…” என்ற அவனது கடுமையான அதட்டலில் திமிரலை நிறுத்திவிட்டு மெல்ல கண்களை திறந்து அவன் முகம் பார்த்தாள்.
கள்ளமில்லா அந்த கண்களில்தான் எத்தனை கலக்கம்…! இந்த கலக்கத்திற்கு காரணமானவன் நான்தானே…! தீரஜ் உருகிவிட்டான். அவன் முகத்தில் மென்மை படர்ந்தது…
“என்…னடா…?” தீரஜ் இன்னமும் தன் கையனைப்பிலேயே இருக்கும் சூர்யாவின் கண்களை பார்த்துக் உருக்கமாக கேட்டான். அவன் மனதிலிருந்த வேதனை அந்த ஒற்றை வார்த்தையில் வெளிப்பட்டது…
“……………………….” அவளிடமிருந்து பதில் இல்லை… ஆனால் இமைக்காமல் அவன் கண்களை நோக்கியவளின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
தீரஜ்ஜின் மூளைக்கு அப்போதுதான் அது உரைத்தது. சூர்யாவின் கட்டுகள் இன்னும் அவிழ்க்கப்படவில்லை…
அவளை தன்னிடமிருந்து சிறிது விளக்கி நிறுத்தி “ஒன்னும் இல்ல சூர்யா… நான்தான் வந்துட்டேன்ல்ல… இனி உனக்கும் எந்த பிரச்சனையும் வர விடமாட்டேன்… பயப்பட கூடாது…” என்று சொல்லியபடி அவசரமாக அவள் கட்டுகளை அவிழ்த்தெறிந்தான்.
வாயில் கட்டப்பட்டிருந்த துணி அழுந்தி இரண்டு கன்னங்களிலும் ரத்தம் போல் சிவந்த இரு கோடுகளும், கையில் கட்டப்பட்டிருந்த கயிறு அழுந்தி கன்றி சிவந்திருந்த மணிகட்டும், உடலிலும் முகத்திலும் அக்காங்கே இருந்த சிறு சிராய்ப்புகளும் தீரஜ்ஜின் கண்ணில் படத் தவறவில்லை.
“சர்…பு…தீன்…” அவன் போட்ட சத்தத்தில் அந்த கட்டிடமே கிடுகிடுத்தது…
“ஜி…” அடுத்த நொடி அடித்துபிடித்து கொண்டு உள்ளே ஓடுவந்த சர்புதீன், தன் கன்னத்தில் இறங்கிய இடியை உணர்வதற்கு முன் அங்கே மூலையில் கிடந்த தகர சாமான்களுக்குள் ‘தட தட’ வென்ற சத்தத்துடன் விழுந்தான்.
“முட்டாள்… யார் மேல கை வச்சிருக்க தெரியுமா…?”
“…………….”
“உன்ன உயிரோட எரிச்சு சாம்பலாக்கிடுவேன்டா…. மடையா….”
“…………….”
“யாருடா… சூர்யாவை கல்யாண் அனுப்பின பொண்ணுன்னு சொன்னது….?”
“…………”
“எங்கடா போனான் அந்த சலீம்….?” அவன் இடி இடிப்பது போல் முழங்கிக் கொண்டிருக்க கீழே விழுந்தவனோ பதில் ஏதும் சொல்லாமல் தீரஜ்ஜை பார்த்து மலங்க விழித்தான்.
அவன் எப்படி பதில் சொல்வான்….! தீரஜ் என்ன கேட்கிறான் என்பது காதில் விழுந்தால்தானே அவன் பதில் சொல்ல… அவன் காதில் விழுவதெல்லாம் “ஞொய்……” என்கிற சத்தம் மட்டும்தான்.
“என்னடா நான் கேட்டுகிட்டே இருக்கேன்…. நீ பச்சபுள்ள மாதிரி முழிக்கிற…?” என்று அவன் நெஞ்சில் எட்டி உதைந்தான்.
தீரஜ் ஏனோ கடுங்கோவத்தில் இருக்கிறான் என்பதும் அதற்கு காரணம் இந்த பெண்ணை இங்கு கொண்டுவந்ததுதான் என்பதும் சர்புதீன் அறிவுக்கு எட்டிவிட, அவன் இதுவரை என்ன கேட்டான் என்பதை பற்றி கவலைப்படாமல் “ஜி…… நான் எதுவும் பண்ணல ஜி…. சலீம்ஜிதான் இந்த பெண்ணை இங்கு கொண்டுவர சொன்னார். இந்த பவன் பயல்தான் இந்த பொண்ணுகிட்ட தகராறு பண்ணினான்….” என்று சொல்லிவிட்டு தன்னை விட்டால் போதும் என்று நினைத்து, அடுத்து அவன் என்ன சொல்லப் போகிறான் என்பதை தெரிந்துகொள்ள அவன் உதட்டசைவை கூர்மையாக பார்த்தபடியே எழுந்தான்.
“அவனுங்க ரெண்டு பேரையும் என்னை வந்து பார்க்க சொல்லு… அவனுங்களோடு நீயும் வா….” என்று தீரஜ் சொல்ல அதை அவன் உதட்டசைவில் ஓரளவு புரிந்து கொண்டவன் ‘அடுத்து என்ன நடக்குமோ….’ என்ற பீதியுடன் அந்த இடத்தை காளிசெய்தான்.
சர்புதீன் வெளியே சென்று மறையும் வரை அவனுடைய முதுகை வெறித்தவன் பின் சூர்யாவின் பக்கம் திரும்பினான்.
கட்டுகள் அவிழ்கப்பட்டதும் தீரஜ்ஜின் பிடியில் மீண்டும் சிக்கும் முன், அந்த அறையின் மறு கோடிக்கு ஓடி சுவற்றுடன் ஒட்டிக் கொண்டு நின்றவளின் விழிகளில் அதே மிரட்சி…
தீரஜ்பிரசாத்தின் நெற்றி சுருங்கியது. அவன் குழப்பமாக கேட்டான்…
“என்கிட்டே என்னடி பயம் உனக்கு…? ”
“………………….” அவள் பேசவில்லை. வறண்டிருந்த கண்கள் மீண்டும் கலங்கின.
“சூர்யா…. பசங்க உன் மேல தெரியாமல் கை வச்சிட்டானுங்க… நீ யாருன்னு தெரிஞ்சிருந்தா இது நடந்திருக்காது… இனி பயப்பட எதுவும் இல்ல சூர்யா…”
இப்போது அவள் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வடிந்தது. ஆனாலும் அவள் வாய் திறக்கவில்லை.
“சூர்யா… ஏதாவது பேசு சூர்யா… என்மேல கோவம்ன்னா என்னை திட்டிடு… இல்ல ரெண்டு அடி வேண்ணாலும் அடிச்சுக்கோ… இப்படி பேசாமல் இருந்தால் என்ன அர்த்தம்…?” அவன் அவளை சமாதானம் செய்ய முயன்றான்.
“…………………”
“நான்தான் பிரசாத் என்று உன்னிடம் சொல்லாதது தப்புதான்… ஆனால் நான் ஊருக்குதான் பிரசாத்ஜி… உனக்கு எப்பவுமே தீரஜ்தான் சூர்யா… என்னை புரியலையா உனக்கு…?”
‘உண்மையாயிடுச்சா…! என்னோட சந்தேகம் உண்மையாயிடுச்சா…! அடப்பாவி… அந்த கொடுமைக்கார பிரசாத்ஜி நீதானா…? இரக்கமே இல்லாத ரத்த வெறி பிடித்த மிருகம் நீதானா…?’ அவள் மனம் கொதித்தது.
“என்ன சூர்யா அப்படி பார்க்குற…? உன்னை வேணுன்னு நான் ஏமாற்றல… உன் இயல்புதான் என்னை பற்றி உன்னிடம் சொல்லவிடாமல் தடுத்தது சூர்யா… என்னை தீரஜ்ஜாக மட்டுமே நீ புரிந்து கொண்ட பிறகு எல்லாவற்றையும் சொல்ல நினைத்தேன்…”
“……………………”
“நான் செய்தது தவறுதான்… அதற்காக உன்னிடம் மன்னிப்பு வேண்டுமானால் கேட்டுக்கொள்கிறேன்… என்னை மன்னித்துவிடு…”
அவள் பேசவும் இல்லை அவள் கண்ணீரும் நிற்கவில்லை. ஊரை அடக்கியாளும் தீரஜ்பிரசாத்திற்கு சூர்யாவின் கண்ணீரை பார்க்கும் சக்தி இல்லை… இயலாமையில் அவன் முகம் இறுகியது. “அழுகையை நிறுத்துடி முதல்ல… என்ன வேணும் உனக்கு…? எதுக்கு இப்படி அழுது தொலைக்கிற…?” கோபமாக அதட்டினான்.
அவனுடைய அதட்டலில் மிரண்டவள், அழுகையை கட்டுப்படுத்த முயன்று தன்னுடைய இரண்டு கைகளாலும் வாயை மூடி அழுகையை அடக்க முயன்று முடியாமல் தேம்பலும், கண்ணீருமாக நின்றாள். அவளுடைய அந்த கோலம் அவன் மனதை பிசைந்தது… நொந்து போனவன், இப்போதைக்கு தன்னால் அவளை சமாதானம் செய்ய முடியாது என்பதை உணர்ந்து,
“சரி கிளம்பு…” என்றான்.
புரியாமல் பார்த்தவளிடம் “பிரபாவை பார்க்க வேண்டாமா..?” என்றான். அதுவரை இருண்டுகிடந்த அவள் முகத்தில் வெளிச்சம் வந்தது. அவன் வேகமாக வெளியேற அவனை தொடர்ந்து அவளும் வெளியேறினாள்.
# # #
கண்ணாடி கதவு வழியாக பிரபாவை பார்த்துக் கொண்டிருந்த சூர்யா மெல்ல முனுமுனுத்தாள்.
“பிரபா… பிரபா… மன்னிச்சிடு பிரபா… என்னை மன்னிச்சிடு பிரபா… என்னாலதான்… எல்லாமே என்னாலதான்… வா பிரபா… எழுந்து வா…” அவள் முனுமுனுப்பு விம்மலாக மாறியது. கைகளில் முகம் புதைத்து தேம்பி அழுதாள்.
அவளுடைய அழுகை தீரஜ்பிரசாத்தை உலுக்க…. பொறுக்க முடியாமல்,
“சரி கிளம்பு… உன்னை ஹாஸ்ட்டல்ல கொண்டுவந்து விடுறேன்..” என்றான்.
சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தவள் மருண்ட விழிகளுடன் “வேண்டாம்… வேண்டாம்…. நா… நா… நான் இங்கேயே…” என்றபடி சொல்ல வந்ததை முடிக்க முடியாமல் தடுமாறி அமர்ந்திருந்த சேரை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.
சூர்யாவின் தன்னை பார்த்து அஞ்சுகிறாள் என்பதை உணர்ந்து அவளுடைய பயத்திற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்று யோசித்த தீரஜ்பிரசாத், பேப்பர் மில்லில் இன்று நடந்த விஷயங்களை அவள் பார்த்திருக்க வேண்டும் என்று ஊகித்தான். அதற்கான காரணங்களை அவளிடம் விளக்கி சொல்லி அவளை தெளிவுபடுத்த நினைத்தான். ஆனால் அவன் சொல்வதை புரிந்துகொள்ளும் நிலையில் அவளுடைய இப்போதைய மனநிலை இல்லை என்பதால் கொஞ்சம் விட்டு பிடிக்க எண்ணினான்.
சிறிது நேரம் பொறுத்துப் பார்த்தவன் அவளை இங்கே விட்டுவைத்தால் அழுதே மடிந்துவிடுவாள் என்று நினைத்து, வலுக்கட்டாயமாக விடுதியில் கொண்டு சென்று விட்டுவிட்டு, விடுதி பொறுப்பாளரிடம் அவளை கவனித்துக் கொள்ளும் படி சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
Comments are closed here.