இதயத்தில் ஒரு யுத்தம் – 19
4026
0
அத்தியாயம் – 19
கேசவன் கூச்சலிட்டதும் மருத்துவர் தன்னுடைய கைபேசியுடன் வெளியே சென்றார். நோயாளியின் நிலை பற்றியும் அவளுடைய தந்தையின் மனநிலை பற்றியும் தீரஜ்பிரசாத்திற்கு தொடர்பு கொண்டு ஒப்பித்தார்.
“என்ன செலவானாலும் நான் பார்த்துக்கொள்கிறேன். அந்த பெண்ணை குணமாக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள்….” அவன் மருத்துவருக்கு உத்தரவிட்டான்.
மருத்துவர் மகிழ்ச்சியாகிவிட்டார். வேகமாக உள்ளே வந்தவர்
“உங்களுக்கு ஒரு சந்தோசமான விஷயம்… பிரசாத்ஜி உங்க பெண்ணின் மருத்துவ செலவை தானே ஏற்றுக்கொள்வதாக சொல்லிவிட்டார். அதனால் இன்றே பிரபாவை டெல்லி மருத்துவமனைக்கு மாற்றிவிடலாம்” என்று உற்சாகமாக சொன்னார்.
“அவன் யார் என் பெண்ணுக்கு செலவு செய்ய…? அவனால்தான் என் மகள் இன்று இந்த நிலையில் இருக்கிறாள்… அவன் பணம் ஒரு பைசா கூட எங்களுக்கு வேண்டாம்…” கேசவன் உணர்ச்சிவசத்தில் கத்தினார்.
அவருடைய கத்தலையும் கூச்சலையும் யாரும் பொருட்படுத்தவில்லை. அடுத்த ஒரு மணிநேரத்தில் பிரபா டெல்லி மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்சில் இருந்தாள். தீரஜ்பிரசாத்தை எதிர்த்து அவர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் நேரடியாக அவன் வீட்டு குப்பை தொட்டியில் விழுந்தது.
தெரிந்தவர்களை வைத்து ஒரு மத்திய மந்திரியிடம் சென்று முறையிட்டால், “நான் என்ன கட்டப் பஞ்சாயத்தா நடத்துகிறேன்… போங்கையா… போயி காவல் நிலையத்தில் புகார் கொடுங்க…” என்று அந்த மந்திரி முறையிட சென்றவர்களை விரட்டியடித்துவிட்டு தீரஜ்பிரசாத்துக்கும் தகவல் சொல்லிவிட்டார்.
கேசவனின் மனநிலையை தீரஜ்பிரசாத் உணர்ந்தாலும் அவரிடம் இறங்கி பேச அவனால் முடியவில்லை. அவனுடைய குண இயல்பு அதற்கு இடம் கொடுக்கவில்லை.
தன் மகளை மரணப்படுக்கையில் தள்ளியவனை எதிர்த்து எதுவும் செய்ய முடியா தன் கையாளாக தனத்தை நினைத்து அவர் தனக்குள் வெந்து கொண்டிருந்தார். சூர்யாவும் தீரஜ்ஜின் முரட்டுத்தனமான அனுகுமுறையில் மேலும் கலவரமானாள்.
# # #
பிரபாவை டெல்லிக்கு கொண்டு சென்று இன்றோடு இரண்டு நாட்கள் முடிந்துவிட்டது. இந்த இரண்டு நாட்களும் மருத்துவர்கள் அவளுடைய உடல்நிலையை நடக்கவிருக்கும் பெரிய அறுவை சிகிச்சையை தாங்குவதற்கு தயார் செய்து கொண்டிருந்தார்கள். இன்று இரவு ஏழு மணிக்கு பிரபாவிற்கு அறுவை சிகிச்சை நடக்கவிருக்கிறது. சரியாக ஆறு முப்பதுக்கு தீரஜ்பிரசாத் மருத்துவமனைக்குள் நுழைந்தான்.
பிரபாவிற்கு அறுவை சிகிச்சை செய்யவிருக்கும் அந்த பெரிய மருத்துவரும், அந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும் கார் நிறுத்தத்திற்கு வந்து அவனை வரவேற்று உள்ளே அழைத்து சென்றார்கள். அவர்களிடம் நோயாளியின் உடல்நிலையை பற்றி விசாரித்தபடியே அவளை பார்க்க சென்றான். அவனுடைய ஆட்கள் யாரும் அவனுடன் வரவில்லை என்றாலும், அந்த மருத்துவமனையில் முக்கிய பதவியிலிருக்கும் பலரும் அவனுடைய வரவு தெரிந்து அவன் பின்னால் வந்துவிட்டார்கள்.
பத்து பேர் கொண்ட ஒரு சிறு படையுடன் அவசரசிகிச்சை பிரிவை நோக்கி சற்று தூரத்தில் வந்து கொண்டிருக்கும் தீரஜ்பிரசாத்தை, அங்கே போடப்பட்டிருந்த நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்திருந்த சூர்யா கவனித்துவிட்டாள்.
அவளை அறியாமல் எழுந்து நின்றவளின் உடல் நடுங்கியது. கால்கள் நகர்த்த முடியாமல் வேரோடிவிட்டன. அதுவரை கிருஷ்ணமூர்த்தியும், கேசவனும் அவனை கவனிக்கவில்லை. சூர்யா எழுந்து நின்றதும் அவளை நிமிர்ந்து பார்த்த கிருஷணமூர்த்தி அவள் உடல் நடுங்குவதை உணர்ந்து அவளுடைய பார்வை சென்ற திசையை நோக்கினார்.
அங்கே வருபவனை பார்த்து தன் மகள் நடுங்குவதை புரிந்துகொண்டவர் அவளுடைய கையை ஆதரவாக பற்றினார். தன் தந்தை அருகில் இருப்பதை அப்போதுதான் உணர்ந்தவளாக அவருக்கு பின்னால் பதுங்கினாள் சூர்யா.
அதற்குள் அவர்களை நெருங்கிவிட்ட தீரஜ்பிரசாத் சூர்யாவின் செயலில் உடல் விறைத்து இறுக தன்னிலை மறந்து ஒரு நொடி அவளை பார்த்து தயங்கி நின்றுவிட்டான். பிறகு தன்னை சுதாரித்துக் கொண்டு பிரபாவின் அறைக்குள் மருத்துவருடன் நுழைந்தான். அதுவரை தலையை கையில் தாங்கியபடி ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்த கேசவன் மகளின் அறையில் யாரோ நுழைவதை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தார். தீரஜ்பிரசாத்தின் முதுகு பகுதி அவர் கண்ணில் பட்டது.
அவனுடைய தோரணை அவன்தான் தீரஜ்பிரசாத் என்பதை அவருக்கு உணர்த்திவிட்டது. அவருக்கும் கிட்டத்தட்ட சூர்யாவின் நிலைதான். அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து எழுந்து, நகரமுடியாமல் கால்கள் வேரோடி போனவராக சமைந்து நின்றவர் தீரஜ் மீண்டும் பிரபாவின் அறையிலிருந்து வெளியே வரும் வரை அதே நிலையிலேயே இருந்தார்.
வெளியே வந்த தீரஜ் நேரடியாக கேசவனுக்கு முன் வந்து நின்றான். அவர் தீரஜ்பிரசாத்தின் வருகையை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை விரும்பவும் இல்லை. ஆனால் அவரால் அவனிடம் நேரடியாக வாய் திறந்து பேசமுடியவில்லை. அவரை எது தடுத்தது….? அவனுடைய கம்பீரமான உருவமா… நிமிர்ந்த நடையா… நேர் பார்வையா… தெளிவான முகமா…? எது…? எது அவரை கட்டிப்போட்டது….? அவருக்கே தெரியவில்லை. அவன் முதுகுக்கு பின் அவனை ஏசி தீர்த்தவர் அவன் முகத்துக்கு முன் வாயடைத்து நின்றார்.
“வணக்கம்… நான் தீரஜ்பிரசாத். உங்ககளுக்கு தெரிந்திருக்கும்….”
“………….” அவர் சிந்தனையில் கூட ஏதும் தோன்றவில்லை. சிந்திக்கும் திறனையும் இழந்தவராக அசையாமல் நின்றார்.
“உங்களோட மகளின் நிலைமைக்கு தெரிந்தோ தெரியாமலோ நான் காரமாகிவிட்டேன். அதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்…. என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் மகளை மீண்டும் பழையபடி குணமாக்கி தருவது என் பொறுப்பு….”
“………….” அவர் அப்போதும் எதுவும் பேசவில்லை. அவனை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் அவரிடம் அசைவை எதிர்பார்த்து நின்றவன் அவரிடம் எந்த அசைவும் இல்லாததை கண்டு அங்கிருந்து நகர்ந்தான். வந்த வழியே திரும்பும் போது அவன் விழிகள் சூர்யாவை தேடின. அவள் கிருஷ்ணமூர்த்திக்கு பின்னால் தலை குனிந்தபடி நின்றாள். அவன் வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்றான்.
தீரஜ்பிரசாத் அன்று அந்த மருத்துவமனையிலேயே விஐபி அறையில் தங்கியிருந்தான். பிரபாவிற்கு இரவு பன்னிரெண்டு மணிக்கு அறுவை சிகிச்சை முடித்துவிட்டு மருத்துவர் ஆப்பரேஷன் தியேட்டரிலிருந்து வெளியே வந்தார்.
அனைவரும் பரபரப்புடன் அவர் என்ன சொல்லப்போகிறார் என்று கவலையுடன் நின்று கொண்டிருக்கும் போது, அவர் நேராக தீரஜ்பிரசாத்தை தேடி சென்றார். அவனும் மருத்துவர் வெளியே வரும் நேரத்தை கணக்கிட்டு அந்த நேரத்திற்கு ஆப்பரேஷன் தியேட்டருக்கு வெளியே வந்து காத்துக் கொண்டிருந்தான்.
“ஜி… ஆப்பரேஷன் நல்லபடியாக முடிந்துவிட்டது. இனி பயப்பட எதுவும் இல்லை. பதினைந்து நாள் மருத்துவமனையில் அப்செர்வேஷன்ல இருந்துவிட்டு, அதன் பிறகு நோயாளியின் உடல்நிலையை பார்த்துக் கொண்டு வீட்டிற்கு அழைத்து செல்லலாம்.”
“ரொம்ப நன்றி டாக்டர்… ” தீரஜ் மனதார நன்றி சொன்னான்.
மருத்துவரை தொடர்ந்து வந்து அவர்கள் பேசிக்கொண்டிருப்பதை ஒருவித படபடப்புடன் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தியும் கேசவனும் . மருத்துவருடைய இந்தி பேச்சு புரியாமல் விழித்தார்கள்.
தீரஜ் அவர்களுக்கு நிலைமையை தமிழில் விளக்கினான். சூர்யா அருகில் வரவில்லை என்றாலும் அவனுடைய முகபாவத்திலிருந்து அவன் என்ன சொல்கிறான் என்பதை தூரத்திலிருந்தே அனுமானித்துவிட்டாள். அவளிடமிருந்து ஒரு நிம்மதி பெருமூச்சு வெளிப்பட்டது.
Comments are closed here.