இதயத்தில் ஒரு யுத்தம் – 2
6674
0
அத்தியாயம் – 2
சூர்யாவிற்கு பார்க்கும் வரங்கள் தட்டிக்கழிந்து கொண்டே இருந்ததில் சோர்வடைந்த அவளுடைய பெற்றோர், ஜோசியரிடம் அவள் ஜாதகத்தை காட்டினார்கள். அவர் அவளுக்கு இரண்டு ஆண்டுகள் கழித்து திருமணம் செய்தால் வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும் என்று கணித்து சொன்னார். அந்த நேரத்தில் சூர்யா தந்தையிடம் ஒரு புது செய்தியை சொன்னாள்.
“க்ரிஷ்… எனக்கு ஒரு நல்ல கம்பெனில வேலை கிடைச்சிருக்கு….”
“வேலையா…! என்ன கண்ணு நீ… வேலைக்கு போக உனக்கு என்ன தலையெழுத்து?”
“த…லை…யெழுத்…தா…! க்ரிஷ்… உனக்கு என்ன ஆச்சு…? வேலைக்கு போறத ஏதோ சபிக்கப்பட்ட விஷயம்கிற ரேஞ்சுக்கு ‘பில்ட் அப்’ பண்ற…?”
“அதுக்கு இல்ல கண்ணு… நீ எதுக்கு வேலைக்கு போகணும்… வீட்டுல ஜாலியா இருக்க வேண்டியதுதானே…?”
“வேலைக்கு போறதுதான் எனக்கு ஜாலி க்ரிஷ்… நீ ‘ஓகே’ன்னு ஒரு வார்த்தை மட்டும் சொல்லு ப்ளீஸ்… ப்ளீஸ்…”
“அட… இதுக்கு எதுக்கு கண்ணு ப்ளீஸ் கிளீஸ் எல்லாம் கேட்டுகிட்டு… இப்ப என்ன…? நீ வேலைக்கு போகணும்… அதானே…? சரி போ…” அவர் அனுமதி கொடுத்துவிட்டார்.
“அப்போ நான் கம்பெனில ‘ஜாய்ன்’ பண்ணிடவா…?” அவள் ஆவலாக கேட்டாள்.
“அதான் சரின்னு சொன்னனே கண்ணு…”
“தேங்க் யு க்ரிஷ்… அப்படியே நாளைக்கு மதுராவுக்கு ஒரு டிக்கெட் ட்ரைன்ல புக் பண்ணிடு…”
“என்னது…?! மதுராவா…?” அவர் ஆச்சர்யமாக கேட்டார்.
“ஆமா க்ரிஷ்… ”
“மதுரான்னா… இந்த டெல்லிக்கு பக்கத்துல இருக்கே… அதுவா…!?”
“கரெக்ட்… அது உத்திரப் பிரதேசத்துல இருக்கு. டெல்லியிலேருந்து மதுராவுக்கு 145 கிமீ தூரம். ஆனா எனக்கு வேலை கிடைத்திருப்பது மதுராவுக்கு பக்கத்துல இருக்க கோசிக்காலன்ல. அந்த ஊருக்கு ரயில் வசதி இல்ல. அதுனால மதுராவுல இறங்கி கோசிக்காலனுக்கு பஸ்லையோ இல்ல கார்லையோ போகப்போறேன்.”
“ஐயய்யோ… என்ன கண்ணு நீ… நம்ப சென்னைல இல்லாத வேலையா… அதெல்லாம் நீ எங்கேயும் போக வேண்டாம்…” என்று சிந்தாமணி படபடக்க
“ஆமாம்… ஆமாம்… நீ இங்கதான் இருக்கனும்…” என்று கிருஷ்ணமூர்த்தி தன் முடிவை சொன்னார்.
“க்ரிஷ்…… கோசிகாலன்லதான் கெமிகல் தொழில்துறைல இந்தியாவிலேயே சிறந்த நிறுவனம் இருக்கு. அங்கதான் எனக்கு வேலை கிடைச்சிருக்கு. இதை நான் மிஸ் பண்ணவே முடியாது…”
“…………………..” பெற்றோர் இருவரும் மகளின் பேச்சை கேட்டு என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தார்கள்.
“நீயாவது சொல்லு சிந்தா…” என்று தாய் சிந்தாமணியிடம் சிபாரிசுக்கு வந்தாள்.
“அதுக்கு இல்ல கண்ணு…” தாய் தயங்கினார்.
“இங்க பாருங்க… ஒழுங்கா டிக்கெட் எடுத்து குடுத்தா ட்ரைன்ல போவேன். இல்லன்னா கிடைக்கிற லாரில ஏறி போக வேண்டியதுதான்.” என்று சூர்யா பிடிவாதமாக சொல்ல… இறுதியில் மகளின் பிடிவாதம்தான் பெற்றவர்களிடம் வென்றது. அடுத்த நாள் சூர்யா ரயிலில் மதுரா நோக்கி பயணம் செய்தாள்.
Comments are closed here.