Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

இதயத்தில் ஒரு யுத்தம் – 6

அத்தியாயம் – 6

“ஹேய்… சூர்யா… என்னடி ஆச்சு உனக்கு? காலையிலேயே வேலை பார்க்க விடாமல் ஃபோன்ல உளறிகிட்டு இருந்த…?” பிரபா கேண்டீனில் காலை பதினோருமணி இடைவேளையில் சூர்யாவிடம் அசட்டையாக வினவினாள்.

“அதை ஏன்டி கேட்குற…?”

“என்ன விஷயம் என்று தெரிஞ்சுகிட்டு கிருஷ்ணா கெமிக்கல்ஸ் நோடீஸ் போர்ட்ல போடலாம் என்றுதான் கேட்குறேன்… சொல்லு என்ன விஷயம்…?” பிரபா நக்கலடித்தாள்.

“நோட்டிஸ் போர்ட்ல போடுற அளவு பிரபலமாக வேண்டிய விஷயம்தான்டி… ஆனா காமெடி ஷோல போடுற அளவு சொதப்பலா முடிஞ்சிருச்சு…” சூர்யா கவலையுடன் சொன்னாள்.

“இன்ட்ரஸ்டிங்… அப்படி என்னடி நடந்தது…?” பிரபா ஆர்வமாக கதை கேட்க ஆரம்பித்துவிட்டாள்.

“ஆமாடி… எனக்கு ஒரு விஷயம் சொதப்பலா முடிஞ்சா உனக்கு இன்ட்ரஸ்டிங்தான்… துரோகி…” என்று தோழிக்கு முதுகில் ஒரு அடியை கொடுத்துவிட்டு வரும் வழியில் நடந்த விஷயங்களை விளக்கினாள் சூர்யா.

“ஹா… ஹா… ஹா…” சூர்யா சொன்னவற்றை கேட்ட பிரபா சத்தமாக சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்.

“ஏன்டி சிரிக்கிற…?” சூர்யா எரிச்சலாக வினவினாள்.

“சிரிக்காம… ஹா… ஹா… சிரிக்காம என்ன செய்றது? அது சரி… நீ அந்த ஆளுக்கு தமிழ் தெரியாதுன்னு நினைத்து பேசும் போது அவரோட முகம் எப்படி மாறியது…? ஹா… ஹா…” பிரபாவின் சிரிப்பு அதிகமானது.

“ரொம்ப முக்கியம்டி… நான்தான் பின் சீட்ல உக்கார்ந்திருந்தேனே… அவர் முகம் எப்படி மாறியதுன்னு… எனக்கு எப்படி தெரியும்?”

“அது சரி… அவருக்கு தமிழ் தெரியும் என்று உனக்கு தெரிந்ததும் உன் முகம் எப்படி மாறியது….? ஒரே ஒரு தடவ எனக்கு அந்த ரியாக்ஷன் கொண்டு வந்து காமியேன். ஹா…ஹா…” என்று பிரபா சூர்யாவை கிண்டலடிக்க, சூர்யா கையை ஓங்கிக் கொண்டு பிரபாவை அடிக்க துரத்தினாள்.
பேச்சு சுவாரசியத்தில் தோழிகள் இருவரும் தாங்கள் இருக்கும் இடத்தை மறந்து விளையாடியதால், தங்களை ரசனையுடன் கவனித்தபடியே தீரஜ்பிரசாத்தின் கார் அலுவலக நுழைவாயிலுக்குள் நுழைவதை அவர்கள் இருவருமே கவனிக்கவில்லை.
காலையில் சூர்யாவுக்கு லிஃப்ட் கொடுத்து அவளை அலுவலக நுழைவாயிலில் இறக்கிவிட்ட பிரசாத்ஜி என்கிற தீரஜ்பிரசாத், அவள் அடித்த கூத்தில் தன்னை சமனப்படுத்திக்கொள்ள தனிமையை தேடி சென்றுவிட்டான். ஒரு மணி நேரத்தில் திரும்பி வந்தவன் உள்ளே நுழையும் பொழுதே சூர்யாவை பார்க்க நேர்ந்தது.

சூர்யா துள்ளி குதித்து, தன் தோழியை துரத்தி விளையாடியதை பார்த்தக் கொண்டே அலுவலக வளாகத்திற்குள் வந்தவன், தனக்கென்று அமைக்கப்பட்டிருந்த பிரத்தியேக வழியில் நுழைந்து அவனுடைய அறையை அடைந்து முதலாளி இருக்கையில் அமர்ந்தான்.
பள்ளி, கல்லூரி, நட்சத்திர ஹோட்டல், கணினி உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் என்று பல தொழில்களை நடத்தும் தீரஜ்பிரசாத்திற்கு ‘கிருஷ்ணா கெமிக்கல்ஸ்’ ஒரு முக்கியமான தொழில் என்றாலும், தடை செய்யப்பட்ட பொருட்களை இந்தியாவிற்கு கடத்துவது… கட்டப்பஞ்சாயத்து… அரசியல் கொலைகள்… ஆகிய குற்றங்களை ஹல்வா சாப்பிடுவது போல் அப்பாவி மக்களுக்கு சேதாரம் இல்லாமல் செய்வனே செய்து முடிப்பதில் கில்லாடி. அந்த வேலைகளுக்கெல்லாம் அவனுடைய வலது கையாக செயல்படுவது சலீம் மற்றும் சரோஜ்…

அது தவிர தவறான மேல்மட்டவாசிகளிடம் அடித்து பிடுங்கும் பணத்தை கீழ்மட்ட மக்களுக்கு தாராளமாக செலவு செய்வதில் கொடைவள்ளல். மதுரா மாவட்டத்தில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் இன்றைய ரட்சகன். யாருக்கு எந்த குண்டர் குழுவிலிருந்து அச்சுறுத்தல் வந்தாலும், வாடகை அதிகம் கேட்டு வீட்டுச் சொந்தக்காரன் தொந்திரவு செய்தாலும் தமது ஆட்களை வைத்து அவர்களை அப்புறப்படுத்தி பாதிக்கப்பட்டவரின் விசுவாசத்திற்கு பாத்திரமாவான். திருமணச் செலவுக்கு, மேல் படிப்பிற்கு என்று பல ஏழைகளுக்கு உதவிக் கொண்டிருக்கிறான். அந்த மாவட்ட மக்கள் போலீஸைவிட பிரசாத்ஜியைதான் அதிகம் நம்புகிறார்கள்.
அப்படிப்பட்ட தீரஜ்பிரசாத் மாதம் ஒருமுறை கிருஷ்ணா கெமிக்கல்ஸுக்கு வரும் வழக்கப்படி இன்றும் வந்தான். வரும் வழியில் ஒரு மாதத்திற்கு முன் சென்னையில் அவன் கண்ணில்பட்டு இன்று வரை அவ்வப்போது அவன் கனவில் வரும் அந்த முகத்தை மீண்டும் பார்த்தான். ஆம்.. அந்த முகம்… அதே முகம்… சென்னையில் நீர் திவளைகளுடன் பேருந்து நிறுத்தத்தில் காரின் ‘ஹெட் லைட்’ வெளிச்சத்தில் பார்த்த அதே முகம், மீண்டும் கோசிகாலனில்… அதே நீர் திவளைகளுடன்……

அந்த நொடி முதல் அவன் அவனாக இல்லை. இப்போது கூட குழந்தையாக மாறி அவன் கண் முன் ஓடியாடும் அவள் முகம் அவனை இம்சிக்கிறது.

மீண்டும் மீண்டும் அவள் முகம் காண கண்கள் துடிக்கிறது. குழந்தை தனமான அவள் பேச்சை கேட்க செவிகள் ஏங்குகிறது. மனதில் ஏதோ ஒரு மெல்லிசை எப்பொழுதும் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

இதுவரை அவன் அனுபவித்தறியாத புதுவித மயக்கம் இது. சுகமான இந்த மயக்கம் இன்னும் வேண்டும் வேண்டும் என்று உள்ளம் கூக்குரலிடுகிறது. இது என்ன உணர்வென்று அவனுக்கு புலப்படவில்லை. இந்த போதையிலிருந்து எப்படி வெளி வருவதென்பதும் புரியவில்லை.

# # #

காலை அவளுக்கு லிஃப்ட் கொடுத்த அந்த புதியவனின் முகத்தை மாலை வரை சூர்யாவிற்கு மறக்க முடியவில்லை. அன்று அலுவலகம் முடிந்து விடுதிக்கு செல்லும் போது, சிறுத்தை கொடிகட்டிய குவாலிஸ் கார் ஒன்றை சூர்யா வழியில் கண்டாள். உடனே காலை பார்த்த புதியவனின் முகம் மறந்து போய், பிரசாத்ஜியின் கற்பனை உருவம் மனதில் வந்து அமர்ந்து கொண்டது.

பிரசாத்ஜியை பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் ஷேர் ஆட்டோவில் தனக்கு அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தாள்.

“உங்க சொந்த ஊர் இதுதானா? ” ஆங்கிலத்தில் சூர்யா கேட்க

“ஆமாம்… நீங்க…?” என்று அந்த புதிய பெண் சிரித்த முகத்துடன் சிநேகமாக பதில் கேள்வி கேட்டாள்.

“நான் வெளியூர்… இங்க வேலைக்கு வந்திருக்கேன். இந்த ஊர் பாதுகாப்பானதா…?

“பிரசாத்ஜி ஊர்ல இருந்துகிட்டு பாதுகாப்பை பற்றி கவலையே பட வேண்டாம்மா…” அந்த பெண் சூர்யாவின் எதிர்பார்ப்புபடி பிரசாத்ஜியை பற்றி பேச்சை ஆரம்பித்தாள்.

“யார் பிரசாத்ஜி…?” சூர்யா தெரியாதவள் போல் கேட்டாள்.

“மதுராவோட காவல் தெய்வம். அவருக்கு தெரியாம மதுரால ஒரு துரும்பு கூட அசையாது.”

“நீங்க அவர பார்த்திருகீங்களா?”

“ஓ… பார்த்திருக்கேனே… என்ன அழகு…! என்ன கம்பீரம்…! அவர் மாதிரி ஒரு ஆண் சிங்கத்தை நான் இதுவரை பார்த்ததே இல்லை. இனியும் பார்க்கப் போவது இல்லை.”
அந்த பெண் பேசுவதை கேட்ட சூர்யாவுக்கு எரிச்சல் வந்துவிட்டது. ‘என்ன இந்த அம்மா… இந்த வயசுல இப்படி வழியுது…’ என்று உள்ளுக்குள் பொருமினாலும் வெளியில் சிரித்துக் கொண்டு,

“அவர் எங்க இருப்பார்…?” என்று கேட்டாள்.

“அதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனா அவர் வீடு கோசிகாலன்லதான் இருக்கு…” அந்த பெண் சூர்யாவின் மனதில் மத்தாப்பை கொளுத்தி போட்டாள்.
பிரசாத்ஜியின் வீடும் அவள் தங்கியிருக்கும் ஊரான கோசிகாலனில்தான் இருக்கிறது என்ற செய்தி சூர்யாவிற்கு மட்டற்ற மகிழ்ச்சியை தந்தது.

‘எப்படியும் ஒரு நாள் அந்த பிரசாத்ஜியை பார்த்தே ஆகவேண்டும்.’ என்று நினைத்துக் கொண்டாள்.

 




Comments are closed here.

You cannot copy content of this page