இதயத்தில் ஒரு யுத்தம் – 20
4472
0
அத்தியாயம் – 20
பிரபா மருத்துவமனையில் இருந்த பதினைந்து நாட்களும் சூர்யாவும் கிருஷ்ணமூர்த்தியும் பிரபாவின் தந்தை கேசவனுக்கு உதவியாக இருப்பதற்காக டெல்லியிலேயே தங்கியிருந்தார்கள். அடிக்கடி மருத்துவமனைக்கு வந்து பிரபாவை பார்த்துக் கொண்டார்கள். அந்த நாட்களில் தீரஜ்பிரசாத்தும் டெல்லியிலேயேதான் இருந்தான். பதினைந்து நாட்களுக்கு பிறகு பிரபாவின் உடல் நிலை ஓரளவு முன்னேறியிருந்தது. தீரஜ்பிரசாத்தின் உதவியுடன் அவள் சென்னைக்கு தனி விமானத்தில் கொண்டு செல்லப்பட்டாள்.
சூர்யாவும் கிருஷ்ணமூர்த்தியும் கோசிகாலன் வந்து சேர்ந்தார்கள். அவளுக்கு தன்னுடைய வேலையை தொடர விருப்பம் இல்லாததால் கிருஷ்ணமூர்த்தியுடன் சென்னைக்கு புறப்பட தயாரானாள்.
“அப்பா… இன்னைக்கு ஒரு நாள் மட்டும் நான் ஆஃபீஸ் போய்ட்டு என்னுடைய சர்டிஃபிகட்ஸ் எல்லாம் வாங்கிட்டு வந்துடறேன். அப்புறம் நம்ம ரெண்டு பேருமே சேர்ந்து சென்னைக்கு போய்விடலாம்.”
“சரி கண்ணு… பத்திரமா போய்ட்டு வந்துடு… நான் நமக்கு ட்ரைன் டிக்கெட் வாங்கி வைக்கிறேன்…”
“இல்லப்பா… ஃபிளைட் டிக்கெட் புக் பண்ணிவிடு… நான் சீக்கிரமா சென்னை போய் சேரனும்…” அவள் தீரஜ்பிரசாதத்தோடு சேர்த்து மதுராவையும் வெறுத்தாள்.
“சரி கண்ணு…” அவள் விருப்பத்திற்கு இசைந்தார் கிருஷ்ணமூர்த்தி.
அலுவலகத்திற்குள் நுழைந்த சூர்யா, தன் இருக்கைக்கு செல்லாமல் நேராக தன்னுடைய நேரடி மேலாளர் நவீனிடம் சென்று, தன்னை வேலையிலிருந்து விடுவித்து தன்னுடைய சான்றிதழ்களை திருப்பி தருமாறு கேட்டாள்.
“என்னம்மா… திடீர்ன்னு வேலையிலேருந்து விலகுறேன்னு சொல்றீங்க…! ஜிகிட்ட பேசினீங்களா…?” அவர் தீரஜ்பிரசாத்தும் சூர்யாவும் நட்புடன் பழகுவதை அறிந்திருந்ததால் என்ன முடிவெடுப்பது என்பது புரியாமல் தீரஜ்பிரசாத்தின் மனநிலை என்ன என்பதை அறிய முயன்றார்.
“இல்ல… அவங்ககிட்ட நான் பேசல… ஆனா நான் வேலையிலேருந்து விலக விரும்புறேன்…”
“சரிம்மா… நான் ஏற்பாடு செய்றேன்….” மேலாளர் சூர்யாவிற்கு சாதகமான பதிலை சொன்னார்.
“நன்றி சார்…” அவள் மகிழ்ச்சியாக அவளுடைய இருக்கைக்கு திரும்பினாள்.
சூர்யா அவளிடத்திற்கு திரும்பியதும், முதல் வேலையாக நவீன் தீரஜ்பிரசாத்தின் உதவியாளர் சுஜித்திற்கு விஷயத்தை தெரியப்படுத்தினான். இரண்டே நிமிடத்தில் தீரஜ்பிரசாத் நவீனை தொடர்பு கொண்டான்.
“ஹலோ…”
“நமஸ்த்தே ஜி…” தீரஜ்பிரசாத்தின் குரலை அடையாளம் கண்டுவிட்டு மரியாதையுடன் பேசினான் நவீன்.
“என்ன விஷயம்…?” தீரஜ் சுருக்கமாக கேட்டான்.
நவீன், சூர்யா தன்னிடம் பேசிய விஷயத்தை தெளிவாக விளக்கி சொன்னான். அனைத்தையும் அமைதியாக கேட்ட தீரஜ், “சரி… சூர்யாவை ரிலீவ் பண்ணிவிடு… ஆனா இன்னிக்கு வேண்டாம்… நாளைக்கு ஆஃபீஸ் வரட்டும். நாளைக்கு கணக்கை முடித்து அனுப்பிவிடு…” அவனுடைய குரலில் சிறிதும் கலக்கம் இல்லை.
“சரி ஜி…” நவீன் தொலைபேசியையே தீரஜ்பிரசாத்தாக பாவித்து மிக பௌயமாக ரிசீவரை தாங்கியில் பொருத்தினான்.
பதினைந்து நாட்கள் மருத்துவமனையில் சிரமப்பட்டுவிட்டு உடனே அலுவலகத்திற்கும் வந்துவிட்டதால் ஏற்கனவே சோர்வடைந்திருந்த சூர்யா, நவீன் நாளை மீண்டும் அலுவலகத்திற்கு வந்து சான்றிதழ்களை பெற்றுச் செல்லுமாறு சொன்னதும் மிகவும் சோர்ந்து விட்டாள்.
‘எப்போதடா இந்த பாவப்பட்ட பூமியிலிருந்து சென்னை சென்று சேர்வோம்’ என்று நினைத்தபடி களைப்பாக வெளியே வந்தவளுக்கு, ஷேர் ஆட்டோவில் ஏறி நசுங்கி கிருஷ்ணமூர்த்தி தங்கியிருக்கும் ஓட்டலுக்கு சென்று சேர்வதற்கு மலைப்பாக இருந்தது.
கால் டாக்ஸியில் ஏறி சொகுசாக பயணிக்கலாம் என்று நினைத்து கைபேசியிலிருந்து அழைப்புவிடுத்தாள். இரண்டே நிமிடத்தில் ‘கால் டாக்ஸி’ வந்துவிட நிம்மதியாக அதில் ஏறி அமர்ந்தவள், செல்லவேண்டிய இடத்தை ஓட்டுனரிடம் சொல்லிவிட்டு சிறிது நேரத்தில் அசதியில் கண்களை மூடிவிட்டாள்.
கார் நிறுத்தப்படுவதை உணர்ந்து கண்விழித்த சூர்யா, அந்த பிரம்மாண்டமான மாளிகையை கண்டு அதிர்ந்து பரபரப்பாகி, “ஏய்… என்ன இது…? உன்னை நான் எங்க போக சொன்னேன்… நீ எங்க வந்திருக்க…?” என்று ஓட்டுனரிடம் ஆத்திரமாக கத்தினாள்.
அவன் பதில் சொலும் முன் “மேடம்… உள்ள வாங்க…” ஒரு ஆஜானுபாகுவான மனிதன் சூர்யாவை நெருங்கி மரியாதையுடன் சொன்னான்.
அவன் என்னதான் மரியாதை கொடுத்து பேசினாலும் அவனுடைய உருவம் அவனுக்குள் இருக்கும் மிருகத்தை அவளுக்கு தெளிவாக காட்டிவிட, உதரலெடுத்த உடலை சிரமப்பட்டு கட்டுக்குள் கொண்டுவந்து… மறுபேச்சின்றி அவன் பின்னால் நடந்தாள்.
# # #
குளிரூட்டப்பட்ட அறையிலும் சூர்யாவிற்கு வியர்த்தது. அந்த அறையில் நிறைந்திருந்த பணக்காரத்தனம் அவளை மிரட்டியது. தீரஜ்பிரசாத்தின் உண்மை முகத்தை அறிந்துகொண்ட திகைப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்து கொண்டிருக்கும் நேரத்தில் அவனுடைய இந்த தாக்குதல் அவளை நிலைகுலைய செய்தது. ‘எப்படி இங்கிருந்து வெளியேறுவது…?’ என்று யோசித்தபடி சோபாவில் பதட்டமாக அமர்ந்திருந்தாள்.
தன்னுடைய பதட்டத்தை சற்றே குறைக்க எண்ணி தன் முன் கண்ணாடி கோப்பையில் வைக்கப்பட்டிருந்த பழரசத்தை சிறிது பருகினாள். பின் அதன் சுவையில் தன்னிலை மறந்து முழுவதையும் பருகினாள். இப்போது அவளுடைய பதட்டம் சிறிது குறைந்திருந்தது.
தீரஜ்பிரசாத்தின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தவள், அவனிடம் என்ன பேச வேண்டும்…. எப்படி பேசவேண்டும்…..? என்று யோசித்து தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்தாள்.
தன் முன் நிழலாடுவதை உணர்ந்து சிந்தனை களைந்து நிமிர்ந்து பார்த்தாள். தீரஜ்பிரசாத் எதிர் சோபாவில் அமர்ந்தான்.
அதுவரை குறைந்திருந்த படபடப்பு நொடியில் எகிறியது… அவள் இதயம் ‘டம்… டம்…’ என்று அடித்துக்கொள்ளும் சத்தத்தை அவளால் கேட்க முடிந்தது. முகம் சூடாகி சிவந்தது. கால்கள் தானாக எழுந்து நின்றன.
“உட்க்கார்…” ஆளுமை நிறைந்த குரல். அவள் இதுநாள் வரை கேட்ட தீரஜ்ஜின் சாதுவான குரல் அல்ல அது… அவள் மறுப்பை காட்டாமல் அமர்ந்தாள்.
“வேலையிலிருந்து ரிலீவாகறதா சொன்னியாம்… ஏன்…? என்ன ஆச்சு…?” உள்ளடக்கிய கோபத்துடன் கேட்டான்.
“நா… நான் ஊ…ருக்கு போக…ணும்…” பதட்டம் நிறைந்த குரலில் சொன்னாள்.
“அதான் ஏன்னு கேட்டேன்…?” அவன் அதட்டினான்.
மிரட்சியுடன் உளறினாள்… “ஹாங்… அது… இ…இங்க… இந்த ஊர் பிடிக்கல…”
“ஏன்…? இவ்வளவு நாளும் பிடிச்சுதானே இருந்தது… இப்ப மட்டும் என்ன வந்தது….?” கடுமையான குரல் அவளை கலவரப்படுத்த உடல் வெடவெடத்தது… அவளுடைய நடுக்கம் அவனை இளக்கியது.
“என்கிட்ட என்னடி பயம் உனக்கு…?” அவளுடைய தீரஜ்ஜின் குரல் இது… நொடியில் பிரசாத்ஜி மறந்து போய் முழுமையாக அவள் மனதை ஆக்கிரமித்தான் தீரஜ். பழைய நினைவுகள் மனதில் முட்டி மோத அவள் கண்களில் நீர் கோர்த்தது.
“உன்னோட மனசு எனக்கு புரியுது சூர்யா. அன்று மில்லில் நடந்ததை பார்த்து நீ பயந்துட்ட… அவனுங்க தப்பு பண்ணினவனுங்க… தண்டனையை அனுபவிச்சுதான் ஆகணும்….” அவன் விளக்கம் சொன்னான்.
“பிரபா என்ன தப்பு பண்ணினா…? நான் என்ன தப்பு பண்ணினேன்… எங்களுக்கு எதுக்கு இந்த தண்டனை…” அழுகையினூடே கேட்டுவிட்டாள்.
அவனுக்கு பதில் பேச முடியவில்லை. சிறிது நேர அமைதிக்கு பிறகு அவன் பேசினான்.
“அந்த சம்பவத்துக்காக நான் உன்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் சூர்யா…”
“தெரியாமல் செய்த தவறை மன்னிக்கலாம்… ஆனால் தினம் தினம் தெரிந்தே செய்யும் அராஜகத்தை எப்படி ஏற்பது…? எப்படி மன்னிப்பது…?” அவனுடைய இலக்கமான குரலில் சிறிது துணிச்சல் பெற்றவள் தெளிவாக கேட்டாள்.
“அராஜகமா…!” அவன் நெற்றி சுருக்கங்களுடன் கேட்டான்.
அவள் ஆம் என்பது போல் தலையசைத்தாள்.
“தப்பு செய்றவங்களை தட்டி கேட்பது அராஜகமா…?”
“தட்டி கேட்பதற்கும் தண்டிப்பதற்கும் நிறைய வித்யாசம் உள்ளது… அதோடு மற்றவங்களை தட்டி கேட்கவும் தண்டிக்கவும் பிரசாத்ஜிக்கு என்ன உரிமை இருக்கு…?” அவளுடைய குரலில் அழுத்தம் கூடியிருந்தது.
அந்த காட்டமான கேள்வி அவனை உசுப்பியதோடு… அவள் அவனை தள்ளி நிறுத்தி யாரோ மூன்றாம் மனிதனிடம் பேசுவது போல் பேசியதுவேறு அவனுடைய பொறுமைக்கு சவால்விட்டது.
“எனக்கு எவனும் உரிமை கொடுக்க முடியாது. எல்லா உரிமையையும் நானேதான் எடுத்துக் கொண்டேன். இந்த மதுராவில் நான் வைத்ததுதான் சட்டம்… அதற்கு இப்போ என்ன பன்னனுன்ற…?” அவன் கடுப்படித்தான்.
“ஒன்னும் பண்ண வேண்டாம்… என்னை இங்கிருந்து அனுப்பினால் போதும்… நான் ஊருக்கு போகணும்…”
“ஊ….ருக்கு போறதா…? ஆறு மாதமா என்னோடு ஊர் சுற்றிவிட்டு இப்போது ஊரைவிட்டு போகிறேனென்றால்… உன்னை அனுப்பிவைத்துவிட்டு நான் விரல்சப்பிக் கொண்டிருப்பேன்னு நெனச்சியா…? தொலைச்சுடுவேன்…” வார்த்தைகளை கடித்து துப்பியபடி சுட்டுவிரல் நீட்டி எச்சரித்தான்.
சிறிது நேரம் அவளிடம் தீரஜ்ஜாக காட்சியளித்தவன் இப்போது பிரசாத்ஜியாக விஷவரூபமெடுத்து நின்றான். அவள் நடுநடுங்கி போனாள்.
மீண்டும் அவள் கண்களில் திரண்ட நீர் கன்னங்களில் வடிந்தது. மிரண்ட விழிகளும்… கசிந்த கண்ணீரும் அவன் கோபத்தை இன்னும் கிளறிவிட… “சூர்யா… அழுகையை நிறுத்து முதல்ல… நிறுத்து… நிறுத்துடி…” அவன் எரிச்சலுடன் அதட்ட… அவள் மூக்கை உறிஞ்சியபடி வேகவேகமாக கண்களை துடைத்துக் கொண்டாள்.
“இங்கபாரு சூர்யா… இப்படி பயந்து அழுதுட்டு இருக்கறதுல எந்த பிரயோஜனமும் இல்ல… நான் உன்ன லவ் பண்றேன்… நீயும் என்னை லவ் பண்றேன்னு எனக்கு தெரியும். மனசுல இருக்கத ஒத்துக்க… உங்கப்பாட்ட பேசி நம்ம கல்யாணத்த முறையா நடத்த ஏற்பாடு செய்றேன்…” அவன் பேசிக் கொண்டே போக அவள் அதிர்ந்து நிமிர்ந்தாள்.
“என்ன…? எதுக்கு அப்படி பார்க்குற? ‘உன்னை பிடிக்கல… உன்னை நான் விரும்பலன்னு சொல்ல போறியா…?’ சொல்லிபாரு…” அவன் மிரட்டலில் அவள் வாயடைத்து போனாள்.
சட்டென இலக்கமாக பேசினான்…
“நல்லா யோசி… உன்னை பற்றி… என்னை பற்றி… மற்ற எல்லா விஷயத்தையும் மறந்துட்டு நம்மை பற்றி… தனியா அமைதியா உட்கார்ந்து உன் மனச கேட்டு பார் சூர்யா… உனக்குள்ள நான் இருப்பது உனக்கு நிச்சயம் புரியும்…” அவன் இறங்கி வந்து பேசி தன்மையாக அவளுக்கு எடுத்து சொன்னான்.
“……………………..” அவள் பதில் பேசாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.
அவள் ஏதாவது பேசுவாள் என்று எதிர்பார்த்து சிறிது நேரம் நின்றவன் அவள் எதுவும் சொல்லவில்லை என்றதும்… “ஒரு மணிநேரம் கழித்து நான் திரும்ப வர்றேன்… உன்னோட முடிவு என்னன்னு சொல்லு…” என்று சொல்லி அவளை அந்த அறையிலேயே விட்டுவிட்டு வெளியேறினான்.
அந்த நிமிடம் தீரஜ்பிரசாத்தின் மூளை பிரஃபஷ்னல் தாதாவின் மூளையாக வேலை செய்யாமல் ஒரு எமோஷனல் காதலனின் மூளையாக மட்டும் வேலை செய்து தொலைத்ததால் அவன் சூர்யா இங்கிருந்து தப்பிக்க முயலக்கூடும் என்கிற எண்ணமே தோன்றாமல் நிற்சிந்தையாக அங்கிருந்து அகன்றான்.
தீரஜ் கொடுத்த தனிமையை பயன்படுத்தி சூர்யா யோசித்தாள். ஆனால் அவன் சொன்ன விதத்தில் யோசிக்காமல் அந்த மாளிகையிலிருந்து எப்படி தப்பிப்பது என்பதை பற்றி யோசித்தாள். அதனால் அவள் வாழ்க்கையே தடம் புரண்டுபோனது…
Comments are closed here.