இதயத்தில் ஒரு யுத்தம் – 26
4971
0
அத்தியாயம் – 26
கபிலனின் மிருகத்தனத்தில் அரண்டுவிட்ட சூர்யா அவனைவிட்டு பிரிந்து பெற்றோரிடம் செல்ல முடிவெடுத்து அதை பற்றி கபிலனிடம் பேசினாள். அவள் பிரிவை சொன்னதும் அடுத்த நொடி பாய்ந்து வந்த கபிலன் கட்டிலில் அமர்ந்திருந்தவளின் காலை பிடித்துக் கொண்டான்.
“சூர்யா… என்ன வார்த்தை சொல்லிட்ட சூர்யா… என்னை விட்டுட்டு போய்ட போறியா…? நான் ரொம்ப தப்பு பண்ணிட்டேன் சூர்யா… நேத்து ஒரு மிருகம் மாதிரி நான் நடந்துகிட்டது எனக்கே வெறுப்பா இருக்கு. அதனாலதான் காலையிலிருந்து உன் முகத்தை கூட பார்க்க சங்கடப்பட்டுகிட்டு இருந்தேன்… மன்னிச்சுடு சூர்யா… தயவு செய்து என்னை மன்னிச்சுடு…” அவன் காலில் விழுந்து அழ இவள் பதறிவிட்டாள்.
“ஹேய்… என்ன இது… ஐயோ… காலை விடுங்க…. ப்ளீஸ்… எந்திரிங்க…”
“இல்ல சூர்யா… நான் மடத்தனமா நடந்துகிட்டேன்… போதைல என்ன செய்றோம்ன்னு தெரியாம செஞ்சுட்டேன்… நீ என்னை ஏமாத்திட்டங்கற கோபத்துல செஞ்சுட்டேன்… சூர்யா… நீ என்னை மன்னிச்சுட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லு அப்போதான் நான் விடுவேன்… ப்ளீஸ் சொல்லு…” அவன் கெஞ்சினான்.
என்ன இருந்தாலும் ஒரு மனிதன் செய்த தவறுக்காக காலில் விழுந்து கெஞ்சுகிறான். அதோடு இவளும் தவறு செய்யாமல் இல்லையே… ! அவள் மனம் இளகியது…
அவனை மனதார இன்னும் கணவனாக ஏற்க முடியவில்லை என்றாலும் அவன் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து… பெற்றோர் செய்துவைத்த திருமணத்திற்கு மதிப்பு கொடுத்து…
“சரி… நீங்க முதல்ல எந்திரிங்க…” என்றாள்.
“இல்ல நீ மன்னிச்சுட்டேன்னு சொல்லு… அப்போதான் எந்திரிப்பேன்…” அவன் பிடிவாதமாக பேசினான்.
“சரி… நேற்றுவரை நடந்த பழசை எல்லாம் மறந்திடுவோம்… நீங்க எந்திரிங்க…” அவள் வாய்தான் சொன்னதே ஒழிய அவள் மனம் அவளை குற்றம் சாட்டியது. ‘நீ கபிலனை ஏமாற்றுகிறாய்… உன்னால் தீரஜ்பிரசாத்தை மறக்க முடியாது…’
மனசாட்சியின் குற்றச்சாட்டிற்கு பதில் சொல்ல முடியாதவளின் கண்களில் கண்ணீர் கரகரவென வழிந்தது…
# # #
அன்று இரவு கபிலன் மீண்டும் தன் உண்மை முகத்தை சூர்யாவிடம் காட்டினான். இன்றும் குடித்துவிட்டு வியர்த்த முகமும்… சிவந்த விழிகளுமாக வந்து நின்றவன் அவளை நடுங்க செய்தான்.
“நேற்று மாதிரி இன்றும் நடந்துகொள்வானோ…!” அவள் உடல் சில்லிட்டது.
“எ… என்ன… இன்னிக்கும்….?” அவள் தயங்கி தயங்கி என்ன கேட்பது என்று புரியாமல் தடுமாறினாள்.
“என்னடி… என்ன…? உன் நடிப்பெல்லாம் என்கிட்டேயேவா…?”
“……………………..”
“எப்படி… எப்படி….! அந்த தீரஜ்பிரசாத் உன்னை லவ் பண்ணினான்… நீ அவனை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்துட்ட…. ஹா…. ஹா… குட் ஜோக்…”
“……………………..”
“கேட்குறவன் கேனையா இருந்தா கேப்பையில நெய் வடியிதுன்னு சொல்லலாம்… ஆனா நான் கேனையன் இல்ல…”
“……………………..”
“ஏன்டி… அந்த தீரஜ் பேரை சொன்னா… நான் உன்னை பற்றி ஆராய்ச்சி செய்றதை விட்டுடுவேன்னு நெனச்சியா…?”
“……………………..”
“ஆமா… உண்மையிலேயே அவன் யாருடி… அந்த நவீன்தானே….? அவன்தான் உன்னை பற்றி என்கிட்ட அன்னைக்கு விசாரிச்சான்…. சொல்லுடி அவன்தானே…”
இது போலவே விடிய விடிய சூர்யாவை தூங்கவிடாமல் பேசிபேசியே கழுத்தை அறுத்தான். அவளை துன்பப்படுத்த வேண்டும் என்பதற்காகவே போதையில் மயங்கி விழுந்துவிடாதபடி அளவோடு குடித்துவிட்டு வந்து அலம்பல் செய்து கொண்டிருந்தவனுக்கு தூக்கம் வரவில்லை. ஆனால் அவள் அசதியில் நின்ற நிலையிலேயே கண்களை லேசாக மூடினாலும் குரலை உயர்தி அவளை அதிர வைப்பான். நேற்று மாதிரி இன்று நடந்துவிட்டால் அவளால் தாங்க இயலாது… அதனால் அவன் கொடும் மொழிகளை கண்ணீருடன் சகித்துக் கொண்டு நின்றாள் சூர்யா.
முதலில் நின்று கொண்டு பேசியவன் பிறகு வசதியாக அமர்ந்து கொண்டு பேசினான். பிறகு படுத்து கொண்டே பேசினான். பேசி பேசி ஓய்ந்து அவன் நன்றாக உறங்கிய பிறகுதான் சூர்யா அவள் நின்ற இடத்திலிருந்து அசைந்தாள். அதே நேரம் விடியற்காலை ஐந்து மணிக்கு பால்போடும் பையனின் சைக்கிள் பெல் சத்தமும் கேட்டது.
படுக்கைக்கு செல்லாமல் நேரடியாக குளியலறைக்கு சென்று குளித்துவிட்டு சமையலை கவனிக்க ஆரம்பித்தாள். தினமும் வேலைக்கு விடுப்பு சொல்ல முடியாதே…!
குடிபோதையில் சூர்யாவை தினமும் வார்த்தைகளால் குதறுவது… அவளுடைய உரிமைகளை மறுப்பது… அடித்து காயப்படுத்துவது என்று வித விதமாக சித்ரவதை செய்யும் கபிலன் போதை கலைந்ததும் ‘இவன்தானா அவன்…!’ என்கிற ரேஞ்சுக்கு மான ரோஷம் பார்க்காமல் அவள் காலில் விழுந்து கெஞ்சுவான்…
“என்ன மனிதன் இவன்…! ஒரு நிலையாக இருக்காமல் மாற்றி மாற்றி நடந்து கொள்கிறானே…!” சூர்யா குழம்பிவிடுவாள். சூர்யாவின் மேல் இருக்கும் கோபத்தை போதை என்னும் திரைக்கு பின் ஒளிந்துகொண்டு வெளிப்படுத்தும் கோழைதான் கபிலன் என்பதை புரிந்துகொள்ளவும் முடியாமல்… அவனுடைய இரட்டை வேடத்தை சமாளிக்கவும் முடியாமல் அந்த குழந்தை பெண் அல்லாடினாலும் ஒரு விஷயத்தில் மட்டும் தெளிவாக இருந்தாள்.
அவள் நினைத்தால் ஒரு நொடியில் அவனை தூக்கியெரிந்துவிட்டு சென்னைக்கு ரயில் ஏறிவிடலாம். அவன் முதல் முறை மிருகமாக மாறிய போது கூட முதற்கட்ட அதிர்ச்சியின் காரணமாக அப்படித்தான் நினைத்தாள். ஆனால் இப்போது அவள் வேறு விதமாக யோசித்தாள்.
முன்பு தீரஜ்ஜின் அராஜகத்தை மட்டும் பார்த்துவிட்டு அவசரப்பட்டு அவனை தூக்கி எரிந்ததுவிட்டு சென்னைக்கு ஓடியது இன்று தவறாக தோன்றுகிறது. மீண்டும் அதே போல் ஒரு தவறை செய்யக் கூடாது என்று நினைத்தாள். கபிலன் நேரத்திற்கு தகுந்தது போல் வெவ்வேறு முகங்களை காட்டும் அந்நியனாக நடந்துகொள்கிறான். சில நேரங்களில் அவன் போடும் நல்லவன் வேஷத்தில் கொஞ்சமாவது உண்மை இருந்தால் அவனை திருத்திவிடலாம் என்று நம்பினாள்.
அதோடு எடுத்தோம் கவிழ்த்தோம் என்று நடந்துகொள்ள கூடாது… எல்லோருக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கை அமைவது இல்லை… முடிந்த அளவு தனக்கு அமைந்துவிட்ட வாழ்க்கையை சரி செய்துகொண்டு வாழ முயற்சி செய்ய வேண்டும் என்று நினைத்தாள். அனுபவங்களே சிறந்த ஆசான்… சூர்யாவிற்கும் அவளுடைய அனுபவங்களே ஆசானாக மாறி நிதானத்தையும் பக்குவத்தையும் கற்றுக் கொடுத்தது…
# # #
தீரஜ்பிரசாத்தின் உடலெல்லாம் மிளகாய் அரைத்து பூசியது போல் எரிந்தது. அவனால் சூர்யா மற்றொருவனுக்கு சொந்தமாகிவிட்டாள் என்பதை ஜீரணிக்கவே முடியவில்லை. அதிலும் அவள் இதே ஊரில் வேறொருவன் வீட்டில்… அவனுக்கு மனைவியாக…. “ஐயோ… !” அவனால் அதற்கு மேல் நினைக் கூட முடியவில்லை.
அவனுக்கு சூர்யா மேல் கடுமையான கோபம் இருந்தாலும் மற்றொருவனுடைய குடும்ப வாழ்க்கையை அழித்து தன்னுடைய வாழ்க்கையை செழிக்க வைக்க அவனுக்கு விருப்பம் இல்லை.
அவனுடைய கோபம்… வன்மம்… எல்லாம் சூர்யா மேல் மட்டும்தான். கபிலன் மீது பொறாமையாகத்தான் இருக்கிறது… அவனை பார்த்தால் உடம்பெல்லாம் எறிவது போலதான் இருக்கிறது… அவனை பார்க்கவே பிடிக்கவில்லைதான்… ஆனால் இதற்கெல்லாம் முழு முதற்காரணம் சூர்யா மட்டும்தானே…
சூர்யாவை வதைக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்ட தீரஜ் கபிலனை கருவியாக பயன்படுத்தி அவளை வீட்டை விட்டு வெளியேற்றி கிருஷ்ணா கெமிக்கல்சுக்கு கொண்டுவர முயன்றான்.
கபிலனின் பணத்தாசையை கண்டுகொண்டவன் அவனுக்கு பணத்தை சம்பளமாக அள்ளியள்ளி வழங்கியதோடு அவனை சூர்யாவிடம் நெருங்காமலும் பார்த்துக் கொண்டான்.
ஆனால் இந்த ஒரு வாரமாக கபிலனின் நடவடிக்கை தீரஜ்பிரசாத்தை கலக்கியது. அவன் அடிக்கடி லீவ் போடுகிறான். காலை கம்பனிக்கு குறிப்பிட்ட நேரத்தில் வருவதில்லை… மாலையும் விரைவாகவே சென்றுவிடுகிறான்… அவனுடைய நேரடி மேலதிகாரியின் மூலம் அவனை எச்சரித்தும் பெரிதாக எந்த பலனும் இல்லை… இதற்கு மேல் கெடுபிடி செய்தால் கொஞ்சம் பெரிய தொகை என்றாலும் கம்பெனிக்கு கட்ட வேண்டிய பணத்தை கட்டிவிட்டு வேலையிலிருந்து விலகிவிடுவானோ என்கிற சந்தேகமும் எழுந்தது. கூடவே… வேலையை துறந்துவிட்ட பிறகு கபிலன் பழையபடி சென்னைக்கே சென்றுவிட்டால் சூர்யாவையும் உடன் அழைத்துக் கொண்டு சென்றுவிடுவானே என்கிற பயமும் வந்தது… தீரஜ் எதுவும் செய்ய முடியாமல் தவித்தான்.
கபிலனை பற்றி நினைக்கும் போதெல்லாம் தீரஜ்பிரசாத்திற்கு பற்றிக்கொண்டு வரும். அந்தமாதிரி நேரங்களில் அவனிடம் சிக்குவோர் சின்னாபின்னம்தான்… ஆனால் அவனுக்கு ஒரு நல்ல செய்தியும் கிடைத்திருந்தது… சூர்யா வேலைக்கு செல்கிறாளாம்… KC -க்குதான் அவள் வேலைக்கு வரவேண்டும் என்பது அவனுடைய விருப்பம். ஆனால் அவள் வேறு ஏதோ ஒரு கம்பனிக்கு வேலைக்கு செல்கிறாள். அதனால் என்ன…? அவள் வேலை செய்யும் கம்பனியை அவனுடைய கம்பனியாக மாற்றுவதில் அவனுக்கு சிரமம் எதுவும் இல்லை. அந்த வாரமே கம்பெனி கைமாறியது… சூர்யாவும் தீரஜ்பிரசாத்தை சந்திக்கும் நேரம் வந்தது.
Comments are closed here.