இதயத்தில் ஒரு யுத்தம் – 28
3785
0
அத்தியாயம் – 28
சூர்யா முடிவெடுத்துவிட்டாள். அவளால் தீரஜ்பிரசாத்தின் முகத்தை பார்த்துக் கொண்டு… அவன் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு… மனதை ஒருநிலைப்படுத்த முடியாது என்று தெரிந்துவிட்டது. அதனால்தான் அந்த முடிவுக்கு வந்தாள். அவளுடைய வேலையை விட்டுவிட்டு தீரஜ்பிரசாத்திடமிருந்து எவ்வளவு விலகியிருக்க முடியுமோ அவ்வளவு விலகியிருக்க வேண்டும் என்று…
தன் முன் கையில் ராஜினாமா கடிதத்துடன் நிற்கும் சூர்யாவை சுட்டெரிப்பது போல் பார்த்தான் தீரஜ். அவள் மீது கட்டுக்கடங்காத கோபம் பீறிட்டது. ஏற்கனவே அவள் மீது கடுங்கோபத்தில் இருக்கிறான். அந்த கோபத்தையெல்லாம் அவளிடம் கொட்டவேண்டும்… ஒரேடியாக கொட்டிவிடாமல் கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி அவளை கதறடிக்க வேண்டும் என்கிற அவன் எண்ணத்தில் மண்ணை போடுவது போல் ராஜினாமா கடிதத்துடன் வந்து நிற்கும் சூர்யாவை கொன்று போட்டால் கூட தகும் என்கிற அளவு வெறி தோன்றியது.
கண்களில் வெறியும் முகத்தில் அருவருப்புமாக தன்னை பார்க்கும் தீரஜ்பிரசாத்தை குழப்பமாக பார்த்து…
“ஏன்… என்ன ஆச்சு…?” என்று கேட்டாள் சூர்யா.
“நீ இவ்வளவு மோசமான பெண் என்று நான் நினைக்கவே இல்லை….” அவன் வெறுப்பாக சொன்னான்.
“ஏன்…? என்… என்ன நான் செய்தேன்…?” அவள் புரியாமல் திக்கி திணறி கேட்டாள்.
“என்ன செய்தியா…? உரிமை இருக்கோ இல்லையோ… அதை பற்றியெல்லாம் உனக்கு கவலையில்லை. ஆனால் நான் உன்னை சுற்றி சுற்றி வரவேண்டும்… அதை பார்த்து நீ மகிழ வேண்டும்… இதுதானே உன் எண்ணம்… இப்படி நினைக்க உனக்கு கேவலமாக இல்லை…?”
“என்னது…!” அவள் அதிர்ந்தாள்.
“ஆமாம்… அப்படிதான் நீ நினைக்கிறாய்… அதனால்தான் என்னை உதறிவிட்டு சென்னை சென்ற நீ, உன் கணவனுடன் திரும்ப மதுராவுக்கே வந்திருக்கிறாய். ஆனால் உன் ஜாலத்தில் மயங்கி உன்னை சுற்றி வர நான் ஒன்றும் பழைய ஏமாளி தீரஜ் இல்லை…”
“கடவுளே… கடவுளே… உனக்கு என்ன ஆச்சு தீரஜ்…? ஏன் இப்படி பேசுற…?”
“ச்சீ… வாயை மூடு… என் பேரை இன்னொருதரம் நீ சொன்ன… வெட்டி பொதச்சுடுவேன்…”
அவன் காட்டிய அலச்சியம் கலந்த வெறுப்பு அவளை நொறுக்கியது. அவள் குன்றிபோனாள். அடுத்த வார்த்தை பேச தெரியாமல் திகைத்தாள்.
‘இவன் தீரஜ்தானா… அவள் எது பேசினாலும் எதை செய்தாலும் கலகலப்பாக சிரிக்கும் அதே தீரஜ்தானா இவன்…!’ அவளுக்கு நெஞ்சே வெடித்துவிடும் போல் ஆனது…
“ஏன்டி… ஒருத்தனோட நல்லா ஊர் சுத்திட்டு, இன்னொருத்தனை கல்யாணம் செய்ததோடு நிற்காமல்… ஏமார்ந்தவன் முன், நீ குடும்பம் நடத்தும் லட்சனத்தை மேடை போட வந்து நிற்ப… அப்போவும் அந்த ஏமாளி உன்னை பார்த்து பல் இளிக்கணும்… என்ன பொண்ணுடி நீ…”
“ப்ளீஸ்… ப்ளீஸ்… ப்ளீஸ்… இதுக்கு மேல எதுவும் பேசாத ப்ளீஸ்… நான் உன்னை நோகடிக்க இந்த மதுராவுக்கு வரல… இன்ஃபாக்ட் உன்னை பார்க்காமல் இருப்பதுதான் எனக்கு நல்லது.
அதனால்தானே நான் இந்த வேலையை ரிசைன் பண்ணுறேன்னு சொல்றேன்… அதுக்கு ஏன் நீ இப்படியெல்லாம் கோவப்படுற தீ…” அவன் பெயரை சொல்லும் துணிவின்றி பேச்சு பாதியிலேயே நின்றது.
“என்னை பார்ப்பதை நீ தவிர்க்கிரியா…? ஹா.. குட் ஜோக்… நீ என்னை தவிர்க்க நினைத்திருந்தால் இந்த மதுராவுக்கே வந்திருக்க கூடாது… இங்கு வந்ததோடு மட்டும் அல்லாமல் என் கம்பனியிலேயே வேலைக்கு சேர்ந்து என் முன் நடமாடிக்கொண்டு இருந்து என்னை மயக்கப் பார்த்தாய். உன்னை மாதிரி பிறவியை சந்தித்ததே பாவம் என்று நான் விலகிருந்ததால்… உன் அடுத்த அஸ்த்திரத்தை பிரயோகிக்க பார்க்கிறாய்….”
அவன் மனசாட்சிக்கு தெரியும்… இந்த கம்பனியை அவன் ஏன் வாங்கினான்… எப்போது வாங்கினான் என்று… ஆனால் சூர்யாவை எதையாவது சொல்லி நோகடிக்க வேண்டுமே… அதனால் அவனுடைய கம்பெனி என்று தெரிந்துதான் அவள் அங்கு வேலைக்கு வந்தாள் என்று கூசாமல் பொய் சொன்னான்.
‘சூர்யாவும் அதை நம்பினாள். ஒருவேளை அவன் இந்த கம்பனியை வாங்கிய பிறகுதான் நாம் இங்கு வேலைக்கு வந்திருப்போமோ…! ஆனால் அது என்ன அஸ்த்திரம்…?’
“அஸ்த்திரமா…!” அப்படியென்றால் என்னவென்றே புரியாத சூர்யா குழப்பமாக அவனை பார்த்தாள்.
“என்னடி ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி பார்க்குற…? நீ இங்கிருந்து போனால் அடுத்து நீ வேலைக்கு போகும் இடத்திற்கும் நான் வருவேன் என்று எதிர் பார்க்கிறாய்… அப்படிதானே…”
“ஐயையோ… இல்லவே இல்லை… நீ என்னை தப்பா புரிஞ்சுகிட்ட…” அவள் கண்கள் கலங்கிவிட்டது.
“பின்ன ஏன் இங்கிருந்து போக நினைக்கிற…? நாம் இருவரும் பழகினோம்தான்… ஒத்துவரவில்லை பிரிந்துவிட்டோம்… உன்வழி தனி என்வழி தனி என்று ஆகிவிட்டது. நான் என் வேலையை பார்க்கிறேன். உன்னை எந்தவிதத்திலும் தொந்தரவு செய்யவில்லை… அதே போல் நீயும் உன் வேலையை பார்க்க வேண்டியது தானே… எதற்காக என் கம்பெனியில் வேலைக்கு வந்து… என் முன் விதவிதமாக அலங்கரித்துக் கொண்டு நடமாட வேண்டும்… இப்போது வேலையை விட போகிறேன் என்று நாடகமாட வேண்டும்…”
‘உன் கம்பெனியில் வேலைக்கு வந்தேனா…! விதவிதமாக அலங்கரித்துக் கொண்டேனா…! நாடகமாடுகிறேனா…! இந்த வார்த்தைகள் சொல்லும் பொருள் என்ன…? அவளை ஒரு மோசமான பெண் என்று சொல்லிவிட்டான்….’
‘தீரஜ்… அவளுடைய தீரஜ்… வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும் அவள் ஆழ் மனதிற்கு தெரியும் அவன் அவளுடைய தீரஜ் என்று… அப்படி ஆழ் மனதில் அவள் பூஜிக்கும் அவளுடைய தீரஜ் அவளை பார்த்து எப்படிப்பட்ட வார்த்தையை சொல்லிவிட்டான்…’
முள் கம்பியால் இறுக்கி கட்டப்பட்டது போல் வலித்தது அவள் இதயம். கபிலனும் இதே வார்த்தையைதான் தினமும் சொல்லி அவளை ஏசுகிறான். ஆனால் அப்போது ஏற்படாத பயங்கர வலி இப்போது அவளை துடிக்க வைத்தது.
‘அவன் அவளை கேள்வி கேட்டால் கூட பரவாயில்லை… திட்டினால் கூட பரவாயில்லை…’ என்று அவன் மௌனத்தையும் விலகலையும் தாங்க முடியாத சூர்யா முன்பு நினைத்தாள். ஆனால் அந்த சூழ்நிலை நடைமுறையில் வந்தபோது அவனுடைய வார்த்தையடியை தாங்க முடியாமல் துவண்டாள்.
கையில் கொண்டுவந்த ராஜினாமா கடிதத்தை அவனிடம் கொடுக்காமலே கசக்கியபடி அவனுடைய அறையிலிருந்து வெளியேறினாள்.
சூர்யாவின் கசங்கிய முகமும் தளர்ந்த நடையும் தீரஜ்பிரசாத்தை மகிழ்விக்கவில்லை…. மகிழ்வென்ன சின்ன அமைதியை கூட தரவில்லை… மாறாக மேலும் அவன் மன காயத்தை அதிகரிக்கத்தான் செய்தது…
‘ஏன்டி… நீ ஏன்டி இப்படி இருக்கிற…? நான் பேசும் போது என்னை எதிர்த்து சண்டை போடுவதற்கென்ன… முன்பெல்லாம் நான் ஒரு வார்த்தை பேசுவதற்குள் பத்து வார்த்தை பேசும் என் சூர்யாவா நீ…!’
‘உன்னை காயப்படுத்தவும் முடியவில்லை… உன்னிடம் அன்பாக இருக்கவும் முடிவில்லை… உன்னை விட்டு விலகவும் முடியவில்லை… உன்னிடம் நெருங்கவும் முடியவில்லை… என்னை வதைக்கவென்றே பிறந்தவளா நீ…!’ அவன் மானசீகமாக அவளிடம் பேசினான்.
# # #
தீரஜ் கொடுத்த அடியில் பலமாக காயப்பட்ட சூர்யா மறு நாள் வேலைக்கு செல்லவில்லை. தினமும் அலுவலகத்திற்கு வரும் தீரஜ் சூர்யாவிற்கு தெரியாமல் அவள் முகத்தை பார்த்து ஆறுதலடைவான். ஆனால் இன்று அவளை காணாமல் தவித்தான்.
முதலில் சூர்யா சென்னைக்கு சென்ற போது எப்படி அவனால் அவனை கட்டுப்படுத்திக்கொள்ள முடிந்தது என்று அவனுக்கே தெரியவில்லை. இத்தனைக்கும் அப்போது அவள் அவனுடைய சூர்யாவாக இருந்தாள். ஆனால் இப்போது அவள் இன்னொருவனின் மனைவி… என்றாலும் அவனுடைய மனம் அவனுக்கு அடங்க மறுத்தது. கைவிட்டு போன பொக்கிஷத்தின் அருமை அவனுக்கு தாமதமாகத்தான் புரிந்ததோ என்னவோ… அவனால் அவள் முகத்தை பார்க்காமல் இருக்க முடியவில்லை.
தலை வலித்தது… யாரும் அவனை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவனுடைய அறையில் தனியாக இருந்தான். நேரம் கடந்துகொண்டே இருந்தது. அவள் வரவே இல்லை… அவனுடைய அறை ஜன்னலிலிருந்து பார்த்தால் கம்பெனி வளாகத்தின் நுழைவாயில் தெரியும். அவளுக்காக கண்களை விரித்து வைத்துக் கொண்டு காத்திருப்பவனின் கண்களிலிருந்து தப்பி அவள் உள்ளே வந்திருக்க முடியாது…
இருந்தாலும் ஒரு சந்தேகம்… ‘கொஞ்ச நேரத்திற்கு முன் கண்ணை இமைதோமே… அப்போது உள்ளே வந்திருப்பளோ…’ அதற்கு சாத்தியமே இல்லை என்று அவன் அறிவு சொன்னாலும் மனம் கேட்கவில்லை. உடனே ரௌண்ட்ஸ் புறப்பட்டான்.
அவள் வரவில்லை என்பது உறுதியானது…
அவனுடைய தலைவலி அதிகமானது… தலையே வெடித்துவிடும் போல வலித்தது… பைத்தியம் பிடிப்பதுபோல் ஆனது… மத்தியம்வரை காத்திருந்தவன் இனி அவள் வரமாட்டாள் என்று தெரிந்து கொண்டு காரை விரட்டிக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினான்.
மத்தியம் அவனுடைய அறைக்குள் நுழைந்தவன் மாலைவரை மது அருந்தினான். தொடர்ந்து அருந்தினான். தன்னை மறக்கும்வரை மது அருந்தினான். அப்படியே உறங்கிப்போனான். விடிந்து வெகு நேரம் கழித்து எழுந்தவன் அன்று அலுவலகம் செல்ல பயந்தான். ‘இன்றும் அவள் வரவில்லை என்றால்… அவளுக்காக காத்திருந்து காத்திருந்து நோவதைவிட இன்று அங்கு போகாமலே இருந்துவிடலாம்… ‘
மாலை அலுவலகத்திற்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு ‘யார் யார் இன்று விடுப்பு…’ என்பதை பொதுவாக கேட்டான். அவன் நினைத்தது சரிதான்… இன்றும் சூர்யா வரவில்லை… மேலும் இரண்டு நாள் அந்த அலுவலகம் பக்கம் செல்லாமலே அவன் தெரிந்து கொண்ட விஷயம் சூர்யா இரண்டு நாட்களாக அலுவலகத்திற்கு வரவில்லை…
இதற்கு மேல் அவன் அவளை பார்க்கவில்லை என்றால் தாடிவைத்த தேவதாசாக தெருவில் அலையும் நிலை வந்தாலும் வியப்பதற்கில்லை என்று அவனுக்கு தோன்றியது… அதனால் சூர்யாவை தன்னிடத்திற்கு வரவைப்பது எப்படி என்று சிந்தித்தான். அடுத்த இரண்டாவது நாள் அவள் தீரஜ்பிரசாத்தை அவனுடைய இடத்திலேயே சந்தித்தாள்.
Comments are closed here.