Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

இதயத்தில் ஒரு யுத்தம் – 31

அத்தியாயம் – 31

கபிலன் நண்பனை சந்திக்க போவதாக சொல்லிவிட்டு சென்ற பின் பழைய நட்பு வட்டாரத்துடன் கதைத்துக் கொண்டு உணவருந்திய சூர்யா சிறிது நேரத்தில் பலரும் விடைபெற்று கிளம்ப ஆரம்பித்ததும் கபிலன் என்ன ஆனான் என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டாள்.

 

‘இவன் எங்கு போய் தொலைத்தான்…? மீண்டும் ஒரு முறை தீரஜ்பிரசாத்தை சந்திக்கும் நிலை வரும் முன் இங்கிருந்து கிளம்பிவிட்டால் நன்றாக இருக்குமே…’ என்று யோசித்தபடி குறுக்கும் நெடுக்கும் நடப்பதும்… பின் ஒரு நாற்காலியில் அமர்வதும்… அதில் நிலைகொள்ளாமல் மீண்டும் நடப்பதுமாக இருந்தவளை சிசி கேமரா திரையில் பார்த்துவிட்டு கபிலனை விடுவித்தான் தீரஜ்.
நான்கு மணிநேர சிறைபிடிப்புக்கு பின் விடுதலையடைந்து வெளியே வந்த கபிலன் அந்த அறை கதவு முழுவதுமாக மூடி லாக் ஆகிவிடாதபடி லேசாக மூடிவிட்டு வராண்டாவில் நடந்தான். மாடிப்படியை அடைந்ததும் கீழே இறங்காமல் மாடிப்படியை கடந்து சென்று, மறுபுறம் ஒரு தூணுக்கு பின் மறைவாக ஒளிந்துகொண்டான். பிறகு கைபேசியை எடுத்து சூர்யாவை அழைத்தான்.

 

“சூர்யா… நான் என் நண்பனோடு பேசிக் கொண்டிருக்கிறேன். நீ மேலே வா… நாம் இருவரும் சிறிது நேரத்தில் வீட்டிற்கு கிளம்பிவிடலாம்…” என்றான்.

 

“மாடிக்கா…!” வியப்பாக கேட்ட சூர்யா… “இல்லை… நான் இங்கேயே வெயிட் பண்ணுறேன்… நீங்க சீக்கிரம் வாங்க…” என்றாள்.

 

“சூர்யா… சொன்னா கேளு… நீ வரலன்னா என்னால இப்போ இங்கிருந்து கிளம்பவே முடியாது. என் நண்பன் என்னை அறுத்து தள்ளிக் கொண்டிருக்கிறான். நீ வந்தால்… நீ என்னை தேடிக்கொண்டு வந்துவிட்டதாக சொல்லி நான் உன்னோடு வந்துவிடுவேன்… ப்ளீஸ் சூர்யா…” இந்த நேரத்தில் மிரட்டினால் அவள் பணியாமல் போய்விட்டால் என்ன செய்வது என்று நினைத்து அவளிடம் கெஞ்ச ஆரம்பித்துவிட்டான். கெஞ்சினால் அவளிடம் கண்டிப்பாக வேலைக்காகும் என்று அவனுக்கு தெரியும்.

 

“சரி…. இப்படி நீங்க என்கிட்டே பேசுறது உங்க நண்பனுக்கு தெரியாதா… அவர் எங்க…?” அவள் அவனை மடக்கினாள்

 

“அவன் பாத் ரூமில் இருக்கிறான்….”

 

“சரி… நான் வருகிறேன்…” என்று சொல்லியபடி பார்டி ஹாலிலிருந்து வெளியே வந்து மாடிப்படிகளில் ஏறினாள்.

 

முதல் முறையாக சூர்யா அந்த மாளிகையின் மாடி பகுதிக்கு சென்றாள். அதன் பிரம்மாணடமும் ஆடம்பரமும் அவளை குழப்பியது. எந்த பக்கத்தில் படி ஏறினோம்… இப்போது எந்த பக்கம் சென்று கொண்டிருக்கிறோம் என்பதே அவளுக்கு தெளிவாக புரியவில்லை…
கபிலனுக்கு கைபேசியில் அழைத்து “நான் மாடிலதான் இருக்கேன்… நீங்க எந்த ரூம்ல இருக்கீங்க… இங்க எல்லா ரூமும் ஒரே மாதிரி இருக்கு… நான் எங்க இருக்கேன்னே எனக்கு இப்போ தெரியல…” என்றாள்.

 

அவனுக்கும் முதலில் இங்கு வந்த போது அப்படிதான் இருந்தது. ஆனால் மாடிப்படி முடிவடையும் இடத்திலிருந்து இடது புறமாக சென்று ஐந்தாவது தூண் வந்ததும் வலதுபுறம் வளைந்தால் முதலாவது ரூம் என்று தெளிவாக கணக்கு பண்ணி வைத்திருந்ததால் குழப்பமில்லாமல் சூர்யாவிற்கு வழி சொன்னான்.

 

சூர்யாவும் அவன் சொன்ன வழியை பின்பற்றி அந்த அறையை அடைந்துவிட்டாள்.
“ம்ம்ம்… வந்துட்டேன்… வெளிய வாங்க…” அவள் அவனை கைபேசியில் பேசியபடியே வெளியே அழைத்தாள்.

 

“கதவு சாத்தவில்லை… நீ உள்ளே வா…” என்று சொன்ன கபிலன் கைபேசியை அணைக்கவே இல்லை. அவள் தீரஜ்ஜிடம் என்ன பேசப்போகிறாள் என்று கேட்க ஆவலாக காத்துக் கொண்டிருக்கும் போது சூர்யா கைபேசியை அனைத்து கைபையில் போட்டுவிட்டு கதவை தள்ளிக்கொண்டு உள்ளே சென்றாள்.

 

கபிலனை போல் கதவை லாவகமாக சூர்யா மூடாததால் ‘பட்’ என்ற சத்தத்துடன் கதவு லாக் ஆனது. ‘அங்கு என்ன நிலை சூர்யா தீரஜ்ஜிடம் என்ன பேசுகிறாள்… அதற்கு அவன் என்ன பதில் சொல்லுகிறான்…’ என்று ஒட்டு கேட்க ஓடிவந்த கபிலன் ஏமார்ந்து போனான்.

 

சரி… உள்ளே தான் இல்லை என்றதும் மனைவி உடனே வெளியேரிவிடுவாள் என்று காத்துக் கொண்டிருந்த அவனுடைய எதிர்பார்ப்பும் பொய்த்துப்போனது. கபிலன் மணிக்கணக்கில் காத்திருந்தும் சூர்யா வெளியேறவில்லை.

 

“உள்ளே ஏதோ கசமுசா நடக்கிறது… இல்லையென்றால் ஏன் இவ்வளவு நேரம் அந்த கடங்காரி வெளியே வரவில்லை…. ஐயோ…! ஐயோ…! கட்டிய கணவன் நான் இங்கு இருக்கும் போதே இப்படியா…? பாவி… பாவி… சண்டாளி…!” என்று சிறிது நேரம் கொலைவெறியில் புலம்பிக் கொண்டிருந்தவன் பிறகு யார் கண்ணிலாவது பட்டுவிட்டால் தீர்ந்தோம் என்று நினைத்து தோட்டத்திற்கு வந்து குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். ஆனால் கபிலன் நினைத்தது போல் அந்த அறையில் எதுவும் நடக்கவில்லை.

 

யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொள்வது போல் கபிலன் தானே தன்னுடைய கெட்ட எண்ணங்களால் தன் வாழ்க்கையை அழிவு பாதையில் நகர்த்திக் கொண்டிருந்தான்.

 

# # #

 

கபிலன் சொன்ன அறைக்குள் நுழைந்த சூர்யா முதலில் அங்கு யாரையும் காணாது திகைத்தாள். சில நொடிகள் தேடலுக்கு பின் அந்த பெரிய அறையில் ஒரு பக்கம் மது கோப்பையுடன் அமர்ந்து வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருக்கும் உருவத்தை கண்டவளின் கண்கள் நிலைகுத்திவிட்டன… அவள் அங்கு தீரஜ்பிரசாத்தை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்பதை அவளுடைய அதிர்ந்த முகம் படம் போட்டு காட்டியது.

 

வெளியே சென்ற கபிலன் கீழே செல்லாமல் தூணுக்கு பின் பதுங்கியதையும் அதன் பிறகு சில நிமிடங்களில் சூர்யா மாடிக்கு வருவதையும் திரையில் கவனித்துக் கொண்டிருந்த தீரஜ், அவள் அவனுடைய அறைக்குள்ளேயே நுழைந்ததும் அவளை நிமிர்ந்து பார்த்தான். அவனுடைய கண்கள் பளபளத்தன.

 

“வெல்கம் மிசஸ் கபிலன்… வெல்கம்…” அவன் முகத்திலும் குரலிலும் இருந்த எள்ளல் அவளை குன்றச் செய்தது.

 

“நீங்களா…?”

 

“என் அறைக்கே வந்து நின்று கொண்டு… என்னை பார்த்தே நீங்களா என்று கேட்கிறாய்….! ஏன்… உன் கணவன் உன்னிடம் எதுவும் சொல்லவில்லையா…..?”

 

‘அவன் என்ன சொன்னான்…? நண்பனை பார்க்க போவதாக சொன்னான்… பிறகு என்னையும் இங்கே வர சொன்னான்… ஆனால் தீரஜ் அறைக்கு ஏன் வர சொன்னான். இப்போ கபிலன் எங்கே போனான்…? என்ன நடக்கிறது இங்கே…!’ அவள் பேந்த விழித்தாள்.

 

“ஹா… ஹா… ஹா…… ஹா… ஹா…” அவள் விழிப்பதை பார்த்துவிட்டு அவன் சிரித்த சிரிப்பில் அந்த அறையே அதிர்ந்தது. சூர்யாவிற்கு சப்தநாடியும் ஒடுங்கிவிட்டது.

 

சிரித்து சிரித்து ஓய்ந்தவன் கையிலிருந்த கோப்பையில் சிறிது மதுவை ஊற்றி அருந்தினான். சூர்யா ஏன் இங்கு வந்தாள்…? கபிலன் ஏன் அறைக்கு வெளியே குட்டி போட்ட பூனை போல் நடந்து கொண்டிருக்கிறான் என்பதை பற்றியெல்லாம் அவன் சிந்திக்கவே இல்லை. அவனுக்கு இப்போது சூர்யா அவனுடைய அறையில் இருக்கிறாள் என்பது மட்டும்தான் மனதில் நின்றது…
நடுங்கியபடி அங்கு நின்று கொண்டிருந்த சூர்யா மெதுவாக நகர்ந்து அவள் உள்ளே நுழைந்து தாள் போட்ட கதவை திறக்க முயன்றாள்… முடியவில்லை… பூட்டப்பட்டிருந்தது… தானியங்கி கதவு… அவள் கதவை திறந்து வேகமாக விட்டதும் தானாக பூட்டிக் கொண்டுவிட்டது.
அவளுக்கு கண்ணீர் முட்டியது… சிரமப்பட்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள்.
தீரஜ் அவளை நிமிர்ந்து பார்க்கவில்லை என்றாலும் அவளுடைய முயற்சி தோற்றதை கவனித்துவிட்டு “ஹா… ஹா…. ஹையோ…. ஹா… ஹா…” என்று சத்தமாக சிரித்தான். அந்த வெறித்தனமான சிரிப்பு சூர்யாவை அச்சுறுத்தியது.

 

கபிலன் ஒருமுறை குடித்துவிட்டு அவளிடம் மிருகத்தனமாக நடந்துகொண்டது நினைவில் வந்தது. அவள் நாவரண்டது. தீரஜ் அந்த அளவு தரமிறங்க மாட்டான் என்று அவள் தனக்குள் சொல்லிக் கொண்டாலும், உள்ளுக்குள் ஒரு பயம் படர்வதை அவளால் தடுக்க முடியவில்லை.

 

“நான் போகணும் தீரஜ்… ப்ளீஸ்… கதவை திற…” அவள் பயத்தை மறைத்துக் கொண்டு அவனிடம் சாதாரணமாக கேட்டாள்.

 

“நான் உன்னை இங்கு வர சொல்லவில்லையே… கதவையும் நான் பூட்டவில்லையே…!” அவன் அலட்சியமாக சொன்னான்.

 

“தீரஜ் ப்ளீஸ்… நான் போகணும்…”

 

“சரி போ… ஆனால் ஏன் இங்கு என்னை தேடி வந்த… அதை சொல்லிவிட்டு போ…”

 

“நான் உன்னை தேடி வரவில்லை தீரஜ்…” அவள் தயக்கத்துடன் சொன்னாள்.

 

சட்டென்று குடிப்பதை நிறுத்திவிட்டு அவளை நிமிர்ந்து பார்த்தான். அவனுடைய முகமும் கண்களும் போட்டி போட்டுக் கொண்டு சிவந்திருந்தன. சூர்யாவிற்கு வயிற்றில் புளியை கரைத்தது…
“அப்போ… வேறு யாரை தேடிவந்த…? அந்த கபிலனையா….?” அவன் நிதானமாக கேட்டான்.

 

அவ்வளவு குடித்திருந்தாலும் அவனிடம் சிறு தடுமாற்றம் கூட இல்லை.
“…………………..” அவள் பதில் சொல்லாமல் தலைகுனிந்தாள்.

 

கபிலன் அவளுடைய கணவன். அவனை அவள் தேடிவருவதில் என்ன தவறு… அதை இந்த தீரஜ்பிரசாத்திடம் ஏன் அவளால் நிமிர்ந்து சொல்ல முடியவில்லை…?
யாருக்கும் தெரியாமல் அவள் மனதின் ஆழத்தில் புதைத்து வைத்திருக்கும் ஒரு முகம் நேரில் வந்து கேள்வி கேட்கும் போது அவளால் எப்படி பதில் சொல்ல முடியும்… அவள் சிலை போல் நின்றாள்.

 

சூர்யாவை இழந்துவிட்ட துக்கமும், அவள் இனி தனக்கு கிடைக்கவே மாட்டாள் என்கிற தவிப்பும்… அதனால் ஏற்ப்பட்ட மன அழுத்தமும்… அதை குறைக்க அவன் எடுத்துக் கொண்ட மதுவும்… அவனை தூண்ட, அவன் அவளிடம் நேரடியாக கேட்டுவிட்டான்…

 

“ஏன்டி இப்படி பண்ணின…? என்னை ஏமாத்திட்டு எதுக்குடி அவன்கிட்ட போன… என்கிட்டே இல்லாதது அப்படி என்னடி அவன்கிட்ட இருக்கு…?” கண்கள் கனலை கக்க…. கர்ஜித்தான்….

 

“தீரஜ்… இது பழசை பற்றி பேசும் நேரம் இல்ல… அதோடு உன்னை நான் காதலிப்பதாக சொல்லி ஏமாற்றவும் இல்லை… பிறகு நான் யாரை கல்யாணம் செய்துகொண்டால் உனக்கென்ன… ஏன் இப்படி செய்ற…?” அவள் படபடப்பாக பேசிக் கொண்டிருக்கும் போதே மின்னல் வேகத்தில் தான் அமர்ந்திருந்த சோபாவிலிருந்து எழுந்தவன் எதிரில் இருந்த டீப்பாயை காலால் எட்டி உதைத்தான். அது “தட்..டட்…டட்” என்ற சத்தத்துடன் கீழே உருண்டது. அதன் மீது அடுக்கப்பட்டிருந்த பாட்டில்கள் கலகலவென உடைந்து சிதறின. அந்த சத்தத்தின் ஊடே
“பொய் சொல்லாதடி… பொய் சொன்னே… உன்ன கொலையே செஞ்சுடுவேன்…” என்று கையை ஓங்கிக் கொண்டு அவளிடம் பாய்ந்தான். பின் முயன்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவன் அவளை தொடாமல் கையில் இருந்த மது கோப்பையை தூக்கி சுவற்றில் அடித்தான். அவனுடைய வெறித்தனமான செயலில் செய்வதறியாது திகைத்த சூர்யா மிரண்டு விழித்தாள்.

 

“என்னடி முட்ட கண்ண வச்சுகிட்டு முழிக்குற…? இப்படி முழிச்சே ஆளை காலி பண்ணிடுவடி நீ… இன்னிக்கு முழுக்க நீ எனக்கு அடிமை… நீ இங்கிருந்து ஒரு அடி கூட நகர முடியாது…”

 

“…………………”

 

“நான் இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன்டி… பார்த்திருப்பியே… ‘கிரா….ன்ட் பார்ட்டி…’ எதுக்குன்னு நினைக்கிற… எல்லாம் உன்னை இங்கு கொண்டு வரத்தான்…”

 

“…………………”

 

“என்ன பார்க்குற… என்னை தவிக்க விட்டுவிட்டு நீ மட்டும் சந்தோஷமா குடும்பம் நடத்துவ… நான் இங்கு வெந்து சாகனுமா…? இன்னியோட உன்னோட நிம்மதி சந்தோஷமெல்லாம் குழி தோண்டி புதைக்கபோறேண்டி…” அவனுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அழுத்தம் திருத்தமாக வந்தது.

 

“…………………….” அவள் பதில் எதுவும் பேசவில்லை. அவளை பொறுத்தவரை அவளது நிம்மதி என்றோ தொலைந்துவிட்டது. இல்லாத நிம்மதியை இவன் எங்கிருந்து புதைக்க போகிறான்….

 

“உன்னை ஏன்டி அந்த கபிலன் இங்கு வர சொன்னான்…? எதற்காக நீ இங்கு வந்த… முதலில் அதை சொல்…”

 

“……………………..”

 

“பதில் சொல்லுடி… இல்லை… உன்னை நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது… சொல்லுடி…” அவன் அவளை அதட்டினான்.

 

“உன்னால என் நிம்மதி… சந்தோஷம்… எல்லாம் போச்சுடி… இப்போ எதுக்காக இங்க வந்திருக்க…? நான் எப்படி வேதனைபட்டு சாகறேன்னு பார்த்து ரசிக்க வந்தியா…? துரோகி… துரோகி… நம்பிக்க துரோகி… சிரிச்சு சிரிச்சு ஏமாத்திட்டியேடி…”

 

“இல்லை… இல்லை…”

 

“என்னடி இல்லை…? நீ என்னை காதலிக்கவே இல்லை…? உன் மனசாட்சியை தொட்டு சொல்லு… நீ என்னை நினைக்கவே இல்லை….?”

 

“……………………….”

 

“உன்னால பதில் சொல்ல முடியாதுடி… எப்படி முடியும்…? நீ என்னை ஏமாத்தலடி… உன்னையே ஏமாத்திக்கிட்ட…”

 

“…………………………”

 

“பொண்ணுங்க மனசு மட்டும்தான் பூ மாதிரியா….? காதல்ன்னு வந்துட்டா ஆண்கள் மனசுதான்டி பூ மாதிரி… ”

 

“…………………………”

 

“என்னை நினைத்த உன் மனசுல இன்னொருவனை சுமந்துட்டு உன்னால் குடும்பம் நடத்த முடியுது…. ஆனால் என்னால முடியாதுடி… உன்னை நினைத்த என் மனசு வேறு யாரையும் நினைக்காதுடி…”

 

“உன்னால நான் என் பலத்தை கொஞ்சம் கொஞ்சமா இழந்து கொண்டிருக்கேன்டி… அழிந்து கொண்டிருக்கேன்… பாரு… இந்த மதுராவிலேயே இருந்து என்னோட அழிவ பாரு… உன்னை நினைத்ததற்கு நீ எனக்கு கொடுத்திருக்கும் மிகப்பெரிய பரிசை பார்த்து ரசி…”

 

“…………………………” அவள் இப்போதும் எதுவும் பேசவில்லை. ஆனால் இதுவரை அடக்கி வைத்திருந்த அவளுடைய கண்ணீர் இப்போது அடங்க மறுத்து மடை திறந்தது.

 

எரிமலையாக வெடித்து சிதறிக் கொண்டிருந்தவனின் பேச்சு அவளுடைய கண்ணீரை பார்த்ததும் அடங்கியது…. அவன் எதிர்பார்த்தது நடக்கிறது… அவளை காயப்படுத்தி கதரவைக்க வேண்டும் என்கிற அவனது எண்ணம் நிறைவேறிக் கொண்டிருக்கிறது… ஆனால் அது அவனுடைய காயப்பட்ட மனதிற்கு நிம்மதியை தந்ததா…? இல்லையே…! அது ஏன் என்றும் அவனுக்கு புரியவில்லை…

 

அவள் குலுங்கி அழுவதை சகிக்க முடியாதவன் மறுபுறம் திரும்பி நின்று ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்து ஆழமாக இழுத்து புகையை வெளியேவிட்டான்.

 

திரும்பி நின்றபடியே அவள் முகம் பார்க்காமல் “எதுக்குடி அழற…? அழவேண்டியவன் நான்தான்… உன்னை போல் ஒரு பெண் பின்னால் பித்தனாக அலைந்த பாவத்திற்கு நான் இந்த ஜென்மம் முழுக்க அழ வேண்டும்…” அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே பின்னால் ஏதோ ‘ட…ம்’ என்று சத்தம் கேட்க திரும்பிப் பார்த்தவன் திகைத்தான்…

 

வேரறுந்த மரம் போல் சூர்யா தரையில் விழுந்தாள். ஒரே எட்டில் அவளை அடைந்தவன் கன்னத்தை தட்டிப் பார்த்தான். அசைவே இல்லை…

 

“சூர்யா… சூர்யா… ஏய்… எந்திரி சூர்யா… என்ன ஆச்சு…? எந்திரி…” அவன் உண்மையிலேயே பதறினான். அவளுக்கு என்ன ஆயிற்றோ என்று தவித்தான். அவளுக்கு ஏதாவது ஒன்றென்றால் அவனுக்கு தாங்கவில்லை. பிறகு எப்படி இவன் அவளை பழிவாங்க போகிறான்…!?
சூர்யா மயங்கி விழுந்ததும் தன்னுடைய கோபம் வெறுப்பு எல்லாம் காற்றில் கரைந்த கற்பூரமாக மறைந்ததை தீரஜ் உணரக் கூட இல்லை. அவன் அவசரமாக அவளை தூக்கி படுக்கையில் படுக்க வைத்துவிட்டு மீண்டும் அவளை தட்டி எழுப்பி பார்த்தான். அவளிடம் அசைவில்லாதது கண்டு பயந்துவிட்டான்.

 

‘இவள் தற்கொலை கிர்க்கொலை என்று பைத்தியக்கார தனமாக ஏதும் முடிவெடுத்து எதையாவது சாப்பிட்டுவிட்டுதான் இங்கு வந்தாளோ…!’ இந்த எண்ணம் வந்ததும் அவன் உடல் விரைத்தது… உலகமே ஸ்தம்பித்தது போல் ஆனது. இந்த நொடி சூர்யா இல்லை என்று முடிவாகிவிட்டால் அவனும் இல்லை என்பது உறுதி….

 

கடவுளை வேண்டியபடி மருத்துவருக்கு தொடர்பு கொண்டு வர சொன்னான். அடுத்த சில நிமிடங்களில் அங்கு ஆஜரான மருத்துவர் அவளை பரிசோதித்துவிட்டு அவன் தலையில் அடுத்த இடியை இறக்கினார்….

 




Comments are closed here.

You cannot copy content of this page