இதயத்தில் ஒரு யுத்தம் – 32
4064
0
அத்தியாயம் – 32
மருத்துவர் சொன்ன செய்தியை உள்வாங்கிய தீரஜ்க்கு கண்கள் இருட்டின… தலை கிறுகிறுத்தது… உலகமே சுற்றியது… அவன் தன்னை நிதானப்படுத்திக் கொள்ள முடியாமல் தளர்ந்தான். அவர் அப்படிப்பட்ட ஒரு குண்டைதான் போட்டுவிட்டு போயிருந்தார்.
“ஜி… இந்த பொண்ணு தாயாக போகுது… அதனாலதான் மயங்கி விழுந்துருச்சு… ஊசி போட்டிருக்கேன். இன்னும் இரண்டு மணி நேரத்துல எந்திரிக்கும். சாப்பிட ஏதாவது கொடுங்க. காலையில சரியாகிவிடும்…” அவர் சொல்லிவிட்டு சென்ற வார்த்தைகள் அவன் செவியில் மீண்டும் மீண்டும் எதிரொலித்துக் கொண்டிருந்தன.
மனதின் ரணம் தாங்காமல் அவன் கண்கள் கலங்கியது… எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும் காதல் என்று வந்துவிட்டால் கோழையாகிவிடுகிறான்…
‘சூர்யா.. சூர்யா… எதுக்காக இப்படி செஞ்ச சூர்யா…? உன்னால என்னை எப்படி மறக்க முடிஞ்சுது…? நீ வாய்விட்டு என்னிடம் உன் காதலை சொல்லவில்லைதான். ஆனால் உன் கண்களில் நான் பார்த்த அந்த காதல் எப்படி பொய்யாகும்…? நீ என்னை ஏமாற்றிவிட்டாய்… உன்னையும் ஏமாற்றிக்கொண்டாய்… எதற்காக…? யாருக்காக…? கடவுளே… எனக்கு எல்லாவற்றியும் கொடுத்து எதுவுமே இல்லாதவனாக்கிவிட்டாயே…! என் சூர்யாவை மற்றொருவனுக்கு விட்டுக் கொடுத்துவிட்டேனே…!’ அவன் மனம் புண்பட்டு தாங்கமுடியாத வேதனையில் ஊமையாக அழுதது…
ஆனால் அவள் துன்பப்படுவதை அவனால் ரசிக்க முடியவில்லை… அவளை துன்புறுத்தி கதரவைக்க வேண்டும் என்று நினைத்தவன் அவளுக்கு ராஜ உபச்சாரம் செய்தான். அவளுக்கு தேவையான வசதிகளை செய்துவிட்டு ஒரு பெண்ணையும் அவளுக்கு துணைக்கு இருக்க ஏற்ப்பாடு செய்துவிட்டு அவன் கிளம்பிவிட்டான்.
போகும் போது ஒரு முடிவோடு சென்றான். ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவளின் முகத்தை ஏக்கமாக பார்த்து,
“இன்றுதான் நான் உன்னை பார்க்கும் கடைசிநாள். இனி இந்த ஜென்மத்தில் நாம் இருவரும் சந்திக்காமல் இருந்தால் நான் புண்ணியம் செய்தவன்…” நெஞ்சில் வலியை சுமந்து கொண்டு அந்த மாளிகையிலிருந்து வெளியேறியவன் சூர்யாவின் வாழ்க்கையிலிருந்தும் வெளியேறிவிடதான் நினைத்தான். ஆனால் விதி விட வேண்டுமே…
# # #
மருத்துவர் சொன்னபடி இரண்டு மணிநேரத்தில் கண்விழித்த சூர்யா அவளுக்கு துணையாக தீரஜ் விட்டு சென்றிருந்த பெண்ணிடம் விபரம் அறிந்து கொண்டாள். அவன் அவளை பற்றி என்ன நினைத்திருப்பான்…? அவனுக்கு இந்த விஷயம் தெரிந்ததும் எப்படி துடித்திருப்பான்… என்றெல்லாம் எண்ணி கலங்கியபடி அங்கிருந்து புறப்பட்டாள்.
“மேடம்… ஜி நீங்கள் எழுந்ததும் உங்களை உங்க வீட்டில் விட்டுவிட சொன்னார்… கார் ரெடியா இருக்கு… இதில் உங்க மருந்துகள் இருக்கு….” என்று ஒரு சிறு பையை எடுத்துக் கொண்டு உடனிருந்த பெண்ணும் வெளியே வந்தாள்.
சூர்யா மறுத்தும் கேட்காமல் அவளை அவளுடைய வீட்டில் சேர்ப்பித்துவிட்டுதான் அந்த பெண் தன்னிடத்திற்கு திரும்பினாள்.
சூர்யாவிற்கு பல குழப்பங்கள்… ‘இந்த குழந்தை வேண்டுமா.. வேண்டாமா… நான் இனியும் கபிலனுடன் வாழவேண்டுமா… நம்மை வேவு பார்க்க தீரஜ்ஜின் அறைக்கு அனுப்பிவைத்த அவன் எவ்வளவு பெரிய கயவன்… அவன் குழந்தையை என் வயிற்றில் சுமக்க வேண்டுமா…’ என்றெல்லாம் எண்ணி குழம்பினாள்.
அவள் வயிற்றில் உதித்திருக்கும் குழந்தை அவனுக்கு மட்டும் குழந்தை இல்லையே… அது அவளுக்கும் குழந்தைதானே…! அதோடு தகப்பன் செய்யும் தவறுக்கு அவனுடைய குழந்தை எப்படி பொறுப்பாகும்… அந்த குழந்தையை அழிப்பது எந்த விதத்தில் ஞாயம்…
அவள் பலவிதமாக யோசித்து குழம்பி… சோர்ந்து… கடைசியாக குழந்தையை அழிக்க வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டாள்.
சூர்யா வீட்டிற்கு வரும் போது இரவு பதினொரு மணியாகிவிட்டது. அதன் பிறகு வீட்டிற்கு வந்த கபிலன் அவளை வருத்தெடுத்தான். தீரஜ்ஜுக்கும் அவளுக்கும் தவறான உறவு இருப்பதாக சொன்னான். அவள் அவனை ஏமாற்றிவிட்டதாக சொன்னான். இன்னும் ஏதேதோ மோசமாக பேசினான்…
அவன் பேசியதை கேட்ட சூர்யாவிற்கு ரோஷம் தாங்க முடியவில்லை… அவள் வெறுப்புடன் முகத்தை சுழித்து,
“ச்சீ…” என்றாள் சீற்றத்துடன்.
“என்னடி ச்சீ… ” அவன் அவளை முறைத்தான்.
“உன்ன மாதிரி கேவலமா நான் நடக்க மாட்டேன்…”
“அப்படின்னா… என்னடி அர்த்தம்…?” அவன் கொலைவெறியுடன் அவளை பார்த்தான்.
“எனக்கும் தீரஜ்கும் தப்பா எந்த உறவும் இல்லைன்னு அர்த்தம்…” அவள் அழுத்தமாக சொன்னள்.
“இத என்ன நம்ப சொல்றியா…? இவ்வளவு நேரம் அவனோடு இருந்துவிட்டு தப்பா இல்லைன்னு சொன்னா அதை நம்ப நான் என்ன கேனையனா…?” அவனிடம் பேசினால் இன்னும் தரமிறங்கி பேசுவான் என்று நினைத்த சூர்யா பதில் பேசுவதை தவிர்த்து அங்கிருந்து நகர்ந்தாள்.
அவளை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் இரண்டடி எடுத்து வைக்கும் முன் பாய்ந்து அவளுடைய முடியை கொத்தாக பிடித்துவிட்டான். மிருகத்தனமாக அவளை தாக்கினான். அவள் சமாளித்துக் அவனிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அவளுடைய அறையில் சென்று தாள் போட்டுக் கொண்டாள்.
நாளுக்கு நாள் கபிலனின் மிருகத்தனம் அதிகமானது. அவனுடைய கொடுமைகளுக்கு ஒரு மாதம் தாக்குபிடித்த சூர்யாவால் அதற்கு மேல் முடியவில்லை. இனி அவனுடன் வாழ்வது வீண் என்று முடிவு செய்துவிட்டாள். ஆனால் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்காமல் பெரியவர்களிடம் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும் என்று நினைத்து மாமியார் வீட்டிற்கு தொடர்பு கொண்டாள்.
“ஹலோ… அத்த நா சூர்யா பேசுறேன்…”
“சொல்லும்மா நல்லா இருக்கியா…?”
“இருக்கேன் அத்த… நீங்க எப்படி இருக்கீங்க…? மாமா எப்படி இருக்கார்…?”
“நாங்க நல்லா இருக்கோம்மா…? கபிலன் எப்படி இருக்கான்?
“அத்த… இங்க கொஞ்சம் நிலைமை சரியில்ல… நீங்க உடனே கிளம்பி வாங்க.. என்னோட அம்மா அப்பாவுக்கு எதுவும் தெரிய வேண்டாம்… ரெண்டு பெரும் வயசானவங்க… பயந்துடுவாங்க…”
“என்னம்மா…? என்ன ஆச்சு…?”
“அதெல்லாம் இப்போ விளக்க முடியாதுத்த… நீங்க உடனே இங்க கிளம்பி வாங்க. அப்படி வரலன்ன உங்க குடும்ப வாரிசு உங்களுக்கு கிடைக்காமல் போய்விடும்…”
சூர்யா ஒரு குண்டை தூக்கி போட்டாலும், அவள் சொன்ன குழந்தை விஷயம் கபிலனின் பெற்றோருக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை கொடுக்க அவர்கள் மகனை அழைத்து வாழ்த்து சொல்லியதோடு புத்திமதியையும் சேர்த்து சொல்லிவிட்டு மதுராவிற்கு கிளம்பினார்கள்.
கபிலன் தன் பெற்றோர் மூலம் தெரிந்துகொண்ட செய்தியில் வானத்திற்கும் பூமிக்கும் குதித்தான்.
“ஏய்… என்னடி நெனச்சுகிட்டு இருக்க… கிளம்புடி டாக்டர்கிட்ட… ”
“எதுக்கு…?”
“எதுக்கா… உனக்கு தெரியாது…? துரோகி…”
“நான் வரமாட்டேன்… ”
“வரமாட்டியா… அப்போ குழந்தை விஷயம் உண்மைதானா…?”
“ஆமாம்…”
“என்ன அழுத்தம்டி உனக்கு…?”
“அழுத்தம்தான்… அதற்கு என்ன இப்போ… எனக்கு இனி இந்த குழந்தைதான் எல்லாம்… இதற்கு ஒரு ஆபத்து வர நான் விடமாட்டேன்…”
“யார் குழந்தைடி இது…?”
அவள் வேதனையுடன் கண்களை மூடி திறந்தாள். அவன் பேசிய வார்த்தைகளை ஜீரணிக்க அவள் அந்த சிறு அவகாசத்தை எடுத்துக் கொண்டாள். பின் நிதானமாக “என்னோட குழந்தை…” என்று அழுத்தமாக சொன்னாள்.
“ஏய்… அது தெரியாமலா கேட்குறேன்… அந்த குழந்தைக்கு அப்பன் யாருடி…? ”
அவனுடைய பேச்சில் பாதிக்கப்படாதவள் போல் தன்னை காட்டிக் கொண்டு “உன்னோட பேச்சு இனி என்கிட்ட எடுபடாது… இந்த குழந்தையை நான் பெத்துக்கதான் போறேன்…” என்று சொல்லிவிட்டு அந்த இடத்திலிருந்து நகர்ந்தாள். அடுத்த நொடியே அவன் பிடியில் சிக்கி சித்ரவதை பட்டாள்.
Comments are closed here.