இதயத்தில் ஒரு யுத்தம் – 33
3979
0
அத்தியாயம் – 33
கபிலன் சூர்யாவின் வயிற்றில் இருக்கும் குழந்தை தீரஜ்பிரசாத்தின் குழந்தைதான் என்று முற்றிலும் நம்பினான். அதனால் அந்த குழந்தையை அழிப்பதில் குறியாக இருந்தான். எத்தனையோ முறை சூர்யாவை அவன் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றான். முடியவில்லை… அதனால் மருத்துவரை வீட்டிற்கே வரவழைத்தான்.
சூர்யா அவளுடைய அறையில் படுத்திருக்கும் போது உள்ளே ஒரு பெண் நுழைந்தாள்.
“யார் நீங்க…?”
“டாக்டர் உமாதேவி… உங்களை கொஞ்சம் ச்செக் பண்ணனும்…”
“நீங்க எதுக்கு வந்திருக்கீங்கன்னு எனக்கு தெரியும். எனக்கு என் குழந்தையை அழிக்க விருப்பமில்லை. என்னை மீறி ஏதாவது நடந்தால் நீங்கள் பிரசாத்ஜிக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்.” அவள் தீரஜ்பிரசாத்தின் பெயரை துணைக்கு அழைத்துக் கொண்டாள். அந்த பெயரை சொல்வதே பெரும் பலம் போல் தோன்றியது அவளுக்கு.
“என்ன…?” அந்த மருத்துவர் அதிர்ந்தார்.
“ஆமாம்… இந்த குழந்தைக்கு ஏதாவது ஆச்சுன்னா பிரசாத்ஜி உங்களை கேள்வி கேட்பார்…” அவள் மீண்டும் சொன்னாள்.
அதற்கு மேலும் அங்கே நின்று பேசிக்கொண்டிருக்க அந்த மருத்துவருக்கு பைத்தியமா என்ன…! அந்த பெண் வந்த தடம் தெரியாமல் திரும்பி சென்றுவிட்டாள்.
“ஏய்… என்னடி நெனச்சுகிட்டு இருக்க நீ… மரியாதையா சொன்னா கேட்க மாட்டியா..? என்னடி சொன்ன அந்த டாக்டர்கிட்ட…? எதுக்குடி அவங்க இப்படி ஓடுறாங்க?” அவன் ஹாலில் இருந்ததால் உள் அறையில் நடந்த பேச்சு வார்த்தை என்னவென்று தெரியாமல் அவளிடம் எரிந்து விழுந்தான்.
“உண்மையை சொன்னேன்…”
“என்னடி உண்மை…?”
“என்னோட குழந்தைக்கு ஏதாவது ஆச்சுன்னா தீரஜ் கேள்வி கேட்பான்னு சொன்னேன்…”
“தெரியும்டி… அவன் எப்படி கேட்காமல் இருப்பான்… இது அவன் குழந்தையாச்சே…! கேட்கத்தான் செய்வான்… ”
“வாய மூடு…”
“நா எதுக்குடி மூடனும்… உன்ன கொன்னு போட்டா எல்லாம் சரியாகிவிடும்டி…” அவன் ஆவேசமாக பேசிக்கொண்டு அவள் மீது பாய்ந்தான். அந்த நேரம் வெளியில் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து கபிலனின் பெற்றோர் இறங்கினார்கள்.
“இவங்க எதுக்குடி இங்க வர்றாங்க…?”
“நான்தான் வர சொன்னேன்…”
“என்னது…! என்னன்னுடி சொன்ன…?” அவன் அதிர்ச்சியடந்தவனாக கேட்டான். எங்கே அவன் வண்டவாளத்தை எல்லாம் தண்டவாளம் ஏற்றியிருப்பாளோ என்று பயந்துவிட்டான்.
அதற்குள் காரிலிருந்து இறங்கியவர்கள் உள்ளே வந்துவிட்டார்கள். சூர்யாவும் கபிலனும் நின்று கொண்டிருந்த கோலம் அங்கு என்ன நடந்திருக்கும் என்பதை அவர்களுக்கு தெளிவாக காட்டியது.
பெற்றோரை பார்த்ததும் கபிலன் கொஞ்சம் அடக்கி வாசித்தான். சூர்யாவை பற்றி சொன்னால், அவளை தீரஜ்பிரசாத்தின் அறைக்கு அனுப்பியது கபிலன்தான் என்பதையும் சொல்ல வேண்டிவரும். பெற்றவர்கள் முன் அவனுடைய முகத்திரை கிழிவதை அவன் விரும்பவில்லை. அந்த நேரம் சூர்யாவும் அவனை காட்டிக் கொடுக்கவில்லை.
குழந்தை இப்போதைக்கு வேண்டாம் என்று கபிலன் நினைக்கிறான். சூர்யா வேண்டும் என்று நினைக்கிறாள். இதுதான் பிரச்சனை என்று வந்தவர்கள் புரிந்து கொண்டார்கள். அவர்கள் முழுமையாக மருமகளுக்குத்தான் ஆதரவு கொடுத்தார்கள். வயிற்றில் இருப்பது அவர்கள் குடும்ப வாரிசாயிற்றே…
# # #
கபிலன் தன் பெற்றோரின் வருகையை அடுத்து கொஞ்சம் அடங்கி இருந்தான். அதனால் சூர்யா வந்திருந்தவர்களிடம் உடனே பிரச்னையை பற்றி பேசி அவர்களை கலவரப்படுத்தாமல் இரண்டு நாட்களுக்கு பிறகு கபிலனையும் அவன் பெற்றோரையும் ஒன்றாக அமர வைத்து ஆரம்பத்திலிருந்து நடந்த அனைத்தையும் மறைக்காமல் சொல்லி முடித்தாள். கூடவே தான் கபிலனிடமிருந்து பிரிந்து செல்ல விரும்புவதையும் சொன்னாள். அத்தனையையும் கேட்ட பெரியவர்கள் அதிர்ச்சியுடன் மகனை பார்த்தார்கள்… மருமகள் மீது தவறில்லை என்றார்கள். மகனை குற்றம் சொன்னார்கள்… திட்டினார்கள்… பழித்தார்கள்… கபிலனும் பதிலுக்கு சூர்யாவை குற்றம் சொன்னான்…பெற்றோரிடம் கத்தினான்… சண்டை போட்டான். ஆனால் அது எதுவும் எடுபடவில்லை. அவன் ஆத்திரத்துடன் வெளியே சென்றுவிட்டான்.
அவன் வெளியேறியதும் கபிலனின் தந்தை சூர்யாவிடம் மகனுக்காக மன்னிப்பு கேட்டார். இனி கபிலனால் அவளுக்கு எந்த பாதிப்பும் வராதபடி பார்த்துக் கொள்வதாக வாக்குக் கொடுத்தார். அவள் அவளுடைய பெற்றோருடன் இருப்பது போல் நினைத்துக் கொண்டு தங்களுடன் இருக்கும்படி சொன்னார். சூர்யா அதை ஏற்க மறுத்த போது…
தங்களுடைய குடும்ப வாரிசை தங்களிடமிருந்து பிரித்துவிட வேண்டாம் என்று அவனுடைய தாய் கண்ணீருடன் கெஞ்சினார். பெரியவரும் கண்கலங்கினார். அவள் இப்போது தாய் வீட்டிற்கு போய்விட்டால் பிறகு அவள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் அவர்களுக்கும் தொடர்பு இல்லாமல் போய்விடுமோ என்று பயந்தார். குறைந்த பட்சம் குழந்தை பிறக்கும் வரையாவது தங்களுடன் இருக்கும்படி இருவரும் மன்றாடினார்கள்.
அவர்களை பார்த்தால் சூர்யாவிற்கு பாவமாக இருந்தது. வயதில் முதியவர்கள் இவ்வளவுதூரம் சொல்லும் பொழுது அவர்களுடைய பேச்சிற்கு கொஞ்சமாவது மதிப்பு கொடுக்க வேண்டும் என்று நினைத்து குழந்தை பிறக்கும் வரை அந்த வீட்டில் தங்குவதற்கு சம்மதித்தாள்.
அவர்களும் கொடுத்த வாக்கை காப்பாற்றுவது போல் கபிலனை சூர்யாவிடம் நெருங்க விடாமல் அரணாக நின்று அவளை பாதுகாத்தார்கள். அப்படியும் அவர்களை மீறி சில அசம்பாவிதங்கள் நடந்துவிட்டன.
ஒருநாள் கபிலனின் தாய் சமயலறையில் காலை உணவு தயார் செய்து கொண்டிருந்தாள். கபிலன் டிவி பார்த்தபடி காபி குடித்துக் கொண்டிருந்தான். சூர்யா அவளுடைய அறையிலிருந்து வெளியே வந்து,
“அத்த… இன்னிக்கு செக்-அப் இருக்கு… நாம ரெண்டு பேரும் போய்ட்டு வந்துவிடலாம்…” என்றாள்
“அதுக்கென்னம்மா… போயிட்டு வந்துட்டா போச்சு… உனக்கு ஒரு கப் காபி கொடுக்கவா…?” கரிசனமாக கேட்டார் மாமியார்.
“வேண்டாம் அத்த…”
மனைவியின் பேச்சை கேட்ட கபிலனுக்கு கோபம் கண்மண் தெரியாமல் வந்தது… ‘என்னுடைய பேச்சிற்கு இந்த வீட்டில் என்ன மதிப்பு…?’ அவன் கடுப்பானான்.
“அம்மா.. அவ பேச்ச கேட்டுகிட்டு ஆடாத… உன் பிள்ளை ஒழுங்கா வாழணுன்ன மரியாதையா அந்த குழந்தையை கலைக்க சொல்லி உன் மருமகளுக்கு புத்தி சொல்லு…”
“அத்த… நீங்க இல்ல… அந்த கடவுளே வந்து சொன்னாலும் நான் கேட்க மாட்டேன்…”
அவள் பேச்சு அவனை மூர்க்கனாக்க கையில் இருந்த சூடான காபி டம்ளரை தூக்கி அவள் மீது வீசினான். அது சரியாக அவளது நெற்றியை பிளந்தது.
“அட பாவி மகனே..!. புள்ளதாச்சி பொண்ண இப்படி போட்டு அடிக்கிரியேடா… இந்த பாவத்த எங்கடா கொண்டு போயி தொலைப்ப…?” கபிலனின் அன்னை சூர்யாவை மடியில் தாங்கியபடி மகனை திட்டினாள்.
அவனுடைய தந்தை ஒரு படி மேலே போய் மகனிடம் பாய்ந்தார். தங்களுடைய பாதுகாப்பில் இருக்கும் பெண்… அதுவும் கர்பவதியை எப்படி அவன் அடிக்கலாம் என்கிற ஆத்திரத்தில் மகனை கன்னத்தில் அறைந்தார். அதற்கெல்லாம் அவன் அலட்டிக் கொள்ளவில்லை… தூசி போல் தட்டிவிட்டுவிட்டு வெளியேறினான்.
மற்றொரு நாள் கபிலன் யாரிடமோ கைபேசியில் பேசிக்கொண்டிருந்தான். சூர்யா குழந்தையை பற்றி ஏதோ மாமியாரிடம் பேசினாள். அடுத்த நொடி அவன் கையிலிருந்த கைபேசி அவளை நோக்கி பறந்தது. அவளுடைய நாசி உடைந்து ரத்தம் கொடகொடவென கொட்டியது. அதை பார்த்த பெரியவர்கள் இருவரும் திகைத்தார்கள். தங்கள் மகன் இப்படி ஒரு ராட்சசனா என்று நினைத்து மருகினார்கள். இனி கபிலனுடன் சூர்யா சேர்ந்து வாழ முடியாது என்று அன்றே முடிவு செய்தார்கள்…
Comments are closed here.