இதயத்தில் ஒரு யுத்தம் – 35
4113
0
அத்தியாயம் – 35
கபிலனால் தாக்கப்பட்ட சூர்யா இரண்டு நாட்களாக கோசிகாலனிலேயே சிறந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள். கிருஷ்ணாமூர்த்தி தம்பதியருக்கும் விபரம் தெரிவிக்கப்பட்டு அவர்கள் நேற்றே வந்துவிட்டார்கள். மூச்சுவிட கூட முடியாதபடி பயமும் துக்கமும் தொண்டையை அழுத்த சிந்தாமணி கண்ணீருடனும் கிருஷ்ணாமூர்த்தி இறுக்கமான முகத்துடனும் ஒரு மூலையில் ஒதுங்கிவிட்ட… அவர்களுக்கு எந்த சமாதானமும் சொல்ல முடியாமல் கபிலனின் பெற்றோர் குற்ற உணர்வுடன் மறு மூலையில் ஒதுங்கிவிட்டார்கள். அவளுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரியும்வரை தீரஜ் பித்தனை போல் மருத்துவமனையை விட்டு அசையாமல் ஒரே இடத்திலேயே தவம் கிடந்தான். அங்கு ஒரு இறுக்கமான சூழ்நிலை நிலவியது.
இரண்டு நாட்களுக்கு பிறகு இன்றுதான் சூர்யாவிற்கு எந்த ஆபத்தும் இல்லையென்றும் குழந்தைக்கு உயிராபத்து இல்லை… ஆனால் வேறு ஏதாவது பாதிப்பு இருக்கிறதா என்பது குழந்தை வயிற்றில் வளர வளரத்தான் தெரியும் என்றும் தெரியவந்தது.
இரண்டு உயிருக்கும் ஆபத்து இல்லை என்று தெரிந்த பின்பு அவன் மனம் கொஞ்சம் சமாதானம் ஆனது. அதன்பிறகு அங்கு இருந்த இறுக்கமான சூழ்நிலை கொஞ்சம் தளர்ந்தது… சூர்யாவின் பெற்றோர் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்ற தீரஜ் “பார்த்துக்கோங்க… கொஞ்ச நேரத்துல வந்துட்றேன்…” என்று சொல்லிவிட்டு வேக நடையுடன் வெளியேறினான்.
# # #
தலையில் விழுந்த பலமான அடியில் நினைவிழந்த கபிலன் மீண்டும் கண்விழித்த போது தலையில் ஒரு கட்டுடன் குப்பை கூளங்கள் நிறைந்திருந்த ஒரு அறையில் தரையில் கிடப்பதை உணர்ந்தான்.
சிரமப்பட்டு எழுந்து அமர்ந்தான். யாரையும் காணவில்லை. அரைமணி நேரம் கழித்து ஒருவன் வந்தான். கொச்சை இந்தியில் ஏதோ பேசினான். பின் ஒரு பொட்டலத்தையும் தண்ணீர் பாக்கெட்டையும் அவனிடம் வீசிவிட்டு சென்றுவிட்டான்.
கையிலெடுத்து பிரித்து பார்த்தான் கபிலன். இரண்டு ரொட்டி துண்டுகள் இருந்தன. அதை உண்டு தண்ணீரை குடித்து வயிறை நிறைத்துக் கொண்டான். மேலும் ஒரு மணி நேரம் கழித்து ஒருவர் வந்தார். அவர் மருத்துவராக இருக்க வேண்டும். அவனை பரிசோதித்து ஊசி போட்டார். அவனிடம் எதுவும் பேசாமலே சென்றுவிட்டார்.
இதே போல் கபிலனுக்கு இரண்டு நாட்கள் உபச்சாரம் நடந்தது. மூன்றாம் நாள்தான் அந்த காட்சியை பார்த்தான். முன்பு ஒரு நாள் சூர்யா பார்த்தது போலவே கோரமான காட்சி… அவன் ரத்தமே உறைந்துவிட்டது…
‘இரண்டு நாட்களாக நமக்கு நடந்த உபச்சாரம் பலியாட்டுக்கு நடக்கும் உபச்சாரம் தானோ…! இந்த மாதிரி கொடுமையை தாங்குவதற்குதான் நம்மை தயார் செய்திருக்கிறார்களோ…!’ அவன் கலங்கினான். இது போல் பத்தில் ஒரு பங்கு என்ன… நூற்றில் ஒரு பங்கு சித்ரவதையை கூட அவனால் தாங்க முடியாது என்று நினைத்து நடுங்கினான்…
நாள் முழுக்க நடுங்கிக் கொண்டிருந்தவனின் நடுக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அன்று மாலை வந்தான் தீரஜ்…
தீரஜ்பிரசாத்தின் கார் பேப்பர் மில்லிர்க்குள் நுழைந்த நேரம், கபிலன் அவன் அடைபட்டிருந்த அறையிலிருந்து மரத்தடிக்கு இழுத்து வரப்பட்டு குத்துக் காலிட்டு அமர வைக்கப்பட்டிருந்தான்.
அவன் காரிலிருந்து இறங்கி வரும் வேகநடையும், அவனுடைய சிவந்து இறுகிய முகமும் கபிலனை அச்சுறுத்த அவன் கண்களில் கண்ணீர் கரகரவென வழிந்தது.
வேகமாக கபிலனை நெருங்கிய தீரஜ் அவன் மார்பில் எட்டி உதைக்க அவன் சுருண்டான். கிழே விழுந்துகிடந்தவனின் முகத்தை வெறியுடன் பார்த்தபடி தனக்கு வலதுபுறம் நின்று கொண்டிருந்த சகாவிடம் நீட்டிய தீரஜ்பிரசாத்தின் கையில் உடனடியாக ஒரு ஹாக்கி பேட் முளைத்தது.
அவன் மட்டும்தான் கபிலனை அடித்தான். மிஞ்சி போனால் பத்து அடி கூட அடித்திருக்க மாட்டான். ஆனால் நூறு பேர் சேர்ந்து தாக்கியது போல நைந்து போனான் கபிலன்.
ஏன்டா இந்த பிறப்பெடுத்தோம் என்று நினைத்தவனுக்கு… இப்போவே செத்துவிடக் கூடாதா என்கிற அளவு ஒவ்வொரு அணுவும் வலித்தது.
சற்று முன் ஒருவனை நான்கு பேர் அடித்து அவன் தோலை உரித்தது கூட பரவாயில்லை என்று தோன்றியது கபிலனுக்கு. ஏனென்றால் அங்கே அடிபட்டவன் நினைவிழந்த நிலையில்தான் அடிபட்டுக் கொண்டிருந்தான். ஆனால் இவனுக்கோ முழு சுரணையும் இருந்தது. அழவும் கத்தவும் முடிந்தது… ஆனால் எழுந்து ஓடவோ கை காலை அசைக்கவோ முடியவில்லை…
உடம்பில் அடிவிழுவது நின்றுவிட்ட பிறகும் “என்னை கொன்னுடு… என்னை கொன்னுடு…” என்று கத்திக் கொண்டிருந்த கபிலன் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு கத்தி கத்தியே சோர்வடைந்து மயக்கமானான்.
மறு நாள் மயக்கத்திலிருந்து விழித்தவனுக்கு மீண்டும் பழயபடி உபச்சாரம் நடந்தது…!!!
இப்போது நடக்கும் உபச்சாரம் பிறகு அவன் அனுபவிக்க போகும் சித்ரவதையை நினைவுபடுத்த அவன் பீதியில் கதிகலங்கி போனாலும் ஒரு உண்மையை தெளிவாக உணர்ந்து கொண்டான்.
‘சூர்யா சொன்னது நிஜம்தான்… இவன் அவளை காதலித்திருக்கிறான். அதனால்தான் அவள் அடிபட்டது இவனுக்கு வலிக்கிறது… அந்த வலியும் அதனால் ஏற்பட்ட வெறியும் அவன் கண்ணில் தெரிந்ததே…! இனி நம்மை ஒரு வழி பண்ணாமல் இங்கிருந்து அனுப்பமாட்டான்… ஐயோ கடவுளே… இந்த சூர்யாவை நான் ஏன்தான் திருமணம் செய்தேனோ…! ஆண்டவா… என்னை காப்பாத்துப்பா…’ அவன் மனம் புலம்பியது…
# # #
சூர்யா கண்விழித்ததிலிருந்து அவளுடைய பெற்றோரும் கபிலனின் பெற்றோரும் அவளுக்கு அருகில்தான் இருக்கிறார்கள். அவளிடம் தெளிவே இல்லை.
ஒரு வாரமாக மருத்துவமனைக்கு வந்து போய் கொண்டிருக்கும் தீரஜ்பிரசாத்தோ அவளை ஒரு முறை கூட வந்து பார்க்கவே இல்லை. ஏதோ ஒரு உணர்வு அவனை அவளிடம் நெருங்கவிடாமல் தடுத்தது.
ஒரு வாரம் கழித்து சூர்யாவை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்று மருத்துவர் சொல்லிவிட்டார். கூடவே அதிக தூரம் அவள் பயணம் செய்யக் கூடாது என்றும் சேர்த்து சொல்லிவிட்டார்.
தீரஜ், கபிலன் மற்றும் சூர்யாவின் பெற்றோரை அழைத்தான்.
“என்ன முடிவு பண்ணியிருக்கீங்க…?” சாதாரணமாக கேட்டான்.
“இதுல என்ன முடிவு செய்றதுக்கு இருக்கு….? நான் என் பெண்ணை அழைத்துக்கொண்டு என் வீட்டிற்கு போகிறேன்… இனி இவங்க பையனுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை…” கிருஷ்ணமூர்த்தி கபிலனின் தந்தையை முறைத்துக் கொண்டே தீரஜ்பிரசாத்தின் கேள்விக்கு பதில் சொன்னார்.
“அதை முடிசெய்ய நீங்கள் யார்…? சூர்யாவின் வாழ்க்கையை பற்றி முடிவு செய்ய உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கு…?” தீரஜ் கிருஷ்ணமூர்த்தியை எரிப்பது போல் பார்த்தபடி எதிர் கேள்வி கேட்டதில் அவர் திணறினார்.
“எ.. என்.. என்ன சொல்றீங்க நீங்க…? இனி இந்த பயலோட என் பொண்ணு எப்படி வாழ முடியும்…?”
“அதை அவளை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து வைப்பதற்கு முன்பே யோசித்திருக்க வேண்டும்…” அவன் அவரிடம் காட்டமாக பேச அவர் அவனை குழப்பமாக பார்த்தார்.
“எனக்கு தெரியும்… சூர்யாவின் முழு சம்மதத்தோடு இந்த திருமணம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று எனக்கு முன்பே சந்தேகம்தான். இப்போது உங்களுடைய அதிர்ந்த முகம் என்னுடைய சந்தேகம் உண்மைதான் என்பதை தெளிவுபடுத்திவிட்டது…”
சிந்தாமணி முந்தானையால் வாயை மூடி கண்ணீர்விட்ட… கிருஷ்ணமூர்த்தி குற்ற உணர்வுடன் தலை குனிந்துவிட்டார்.
தீரஜ்பிரசாத்தின் கடினமான முகம் சற்றும் இளகவில்லை. “நீங்க என்ன முடிவு பண்ணியிருக்கீங்க…” இப்போது கபிலனின் பெற்றோரை பார்த்து கேட்டான்.
“முடிவு எடுக்கும் தகுதி எங்களுக்கு இல்லாமல் போய்விட்டது. சூர்யாவும் அவள் பெற்றோரும் என்ன சொல்கிறார்களோ அதற்கு கட்டுப்படுகிறோம்…” கபிலனின் தந்தை தன் வார்த்தையை முடித்துக் கொண்டார்.
“சரி… சூர்யா அதிகம் பயணம் செய்யக் கூடாது. அதனால் இந்த மருத்துவமனைக்கு அருகிலேயே ஒரு வீடு ஏற்பாடு செய்திருக்கேன். சூர்யாவும் நீங்களும் அந்த வீட்டிலேயே தாங்கிக்கொள்ளுங்கள். அவளுக்கு குழந்தை பிறக்கும் வரை சென்னையை மறந்துவிடுங்கள். வீட்டிற்கு சென்ற பின் சூர்யா என்ன முடிவெடுத்திருக்கிறாள் என்று கேட்டுவிடுங்கள்” கிருஷ்ணமூர்த்தியிடம் உத்தரவிடுவது போல் சொன்னவன், கபிலனின் பெற்றோரிடம் திரும்பி,
“நீங்கள் சூர்யா விரும்பினால் அவளுடன் தங்கலாம்… இல்லையென்றால் சென்னைக்கு இன்றே புறப்பட தயாராகுங்கள்.” என்றதும் கபிலனின் தாய் ‘ஓ’ வென்று சத்தமாக அழ ஆரம்பித்துவிட்டார்.
அந்த அழுகைக்கு பின் மகனை பற்றிய பயமும் கலக்கமும் நிறைந்திருந்தது. தாயின் மனம் பதறுவது அனைவருக்குமே புரிந்தது. ஆனால் அதைப்பற்றி யாரும் வெளிப்படையாக பேசவில்லை. தீரஜ்ஜும் அந்த அம்மாவிற்கு எந்த சமாதானமும் சொல்லாமல் ஒரு இயந்திரம் போல் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டான்.
Comments are closed here.