இதயத்தில் ஒரு யுத்தம் – 36
4324
0
அத்தியாயம் – 36
வீட்டில் அமைதி குடிகொண்டிருந்தது. பெரியவர்கள் அனைவரும் வெளியே தோட்டத்தில் இருக்க, உணர்ச்சிகளை தொலைத்துவிட்ட முகத்துடன் அமர்ந்திருக்கும் தீரஜ்பிரசாத்திற்கு முன் சங்கடமான முகத்துடன் சூர்யா அமர்ந்திருந்தாள்.
சூர்யா வீட்டிற்கு அழைத்துவரப்பட்டு ஒரு மாதம் முடிந்துவிட்டது. அவள் அடிபட்ட நாளிலிருந்து இன்றுவரை ஒரு நாள் கூட தீரஜ் அவளிடம் ஒரு வார்த்தை பேசியதில்லை. தினமும் கிருஷ்ணமூர்த்திக்கு கை பேசியில் அழைத்து அவளுடைய நலம் விசாரிப்பவன்… எப்போதாவது அந்த வீட்டிற்கு வந்தாலும் அவளை பார்க்காமல் பெரியவர்களை மட்டும் பார்த்து பேசிவிட்டு செல்வான்.
இந்த சூழ்நிலையில்தான் சூர்யா தானாக அவனை தொடர்பு கொண்டு வீட்டிற்கு வர சொல்லியிருந்தாள்.
சூழ்ந்திருந்த மௌனத்தை கலைத்து தீரஜ்பிரசாத்தான் பேச்சை ஆரம்பித்தான்.
“எதுக்காக வர சொன்ன…?”
‘எப்படி இருக்கன்னு ஒரு வார்த்தை கேட்கவில்லை…’ அவள் மனம் சுணங்கியது. அதை வெளிப்படுத்தாமல்…
“கபிலன் எங்க…?” என்றாள் மெல்லிய குரலில்.
இந்த கேள்வி அவளாக கேட்கவில்லை… கபிலனின் தாய் அழுது புலம்பி கெஞ்சி சூர்யாவை கரைத்து தீரஜ்ஜிடம் பேச சொல்லியிருந்தது அவனுக்கு தெரியாது.
“என் இடத்தில் தான் இருக்கான்…” உணர்ச்சிகளற்ற முகத்துடன் பதில் சொன்னான்.
‘அதற்கு மேல் என்ன கேட்பது…?’ சூர்யாவிற்கு புரியவில்லை.
அவன் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“அவரை அவங்க அம்மா அப்பாகிட்ட ஒப்படச்சிடுங்க…” அவள் அவனிடம் வேண்டவும் இல்லை… அவனுக்கு கட்டளையிடவும் இல்லை… இயந்திரதனமாக சொல்ல வேண்டியதை சொல்லி முடித்தாள்.
“சரி…” அவனும் எதிர் பேச்சின்றி அவள் சொல்வதை ஏற்றுக் கொண்டான்.
மீண்டும் அங்கே கனத்த மௌனம்…
“வேற என்ன…?” தீரஜ் மீண்டும் மௌனத்தை கலைத்தான்.
“இல்ல… வேற எதுவும் இல்ல…”அவன் எதுவும் பேசாமல் எழுந்துவிட்டான்.
அடுத்த அரைமணி நேரத்தில், தீரஜ்பிரசாத்தின் கைவண்ணத்தில் நாற்பத்தைந்து நாட்களாக நடந்த மேள தாளத்துடன் கூடிய தடபுடலான பூஜையின் காரணமாக, கிழிந்த நாராய் கபிலன் அவனுடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான். மகன் உயிரோடு கிடைத்ததே பெரும் பாக்கியம் என்று நினைத்து அவனை சென்னைக்கு கொண்டு போய்விட்டார்கள் அவனை பெற்றவர்கள்.
# # #
சூர்யா கருத்தரித்து நான்கு மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில்தான் அவர்களுக்கு அந்த விஷயம் தெரியவந்தது. அவள் வயிற்றில் தாக்கப்பட்டதால் குழந்தை பாதிக்கப் பட்டிருந்தது. பிறக்கபோகும் குழந்தை மூளை வளர்ச்சி குன்றிய குழந்தையாக பிறக்கும் என்பதை தெரிந்துகொண்ட சூர்யா அதிர்ந்தாள். மருத்துவரும் அவளுடைய பெற்றோரும் அவளுக்கு சொன்ன அறிவுரை…
“இந்த குழந்தை பிறந்தால் அது மிகவும் சிரமப்படும். இந்த உலகத்தில் அந்த பிள்ளைக்கு போராடி வாழும் வலு இருக்காது… பேசாமல் இந்த குழந்தையை கலைத்துவிடு…”
அடுக்கடுக்காக சோதனைகளை சந்தித்துக் கொண்டே இருந்தாலும் அவள் மனம் மரத்துப் போகாமல் வலித்துக் கொண்டுதான் இருந்தது. அன்று கபிலன் சொன்ன வார்த்தையை இன்று மருத்துவரும் அவளுடைய பெற்றோரும் சொல்கிறார்கள். காரணம் வேறாக இருந்தாலும் அவர்கள் சொல்வது அவளுடைய குழந்தையை கொல்ல வேண்டும் என்பதுதான்… நான்கு மாதமே ஆனாலும் அவளுடைய வயிற்றில் உதித்து… அவளோடு உறவாடி… அவளுக்குள் இருக்கும்… அவளுடைய குழந்தையை அழிக்க ஒரு தாயாக அவளுக்கு மனம் வரவில்லை…
அழுதாள்… தொடர்ந்து அழுதாள்… தீரஜ் அவளை வந்து பார்த்து பேசும் வரை அழுதுகொண்டே இருந்தாள்.
குழந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக சூர்யா நொறுங்கிப் போயிருக்கிறாள் என்பது தீரஜ்பிரசாத்திற்கு தெரியவந்த போது அவளாக சமாதானம் அடைந்துவிடுவாள் என்று இரண்டு நாட்கள் பொறுத்துப் பார்த்தான். அவள் தெளிவதாக தெரியாததால் நேரடியாக பார்த்து பேச முடிவு செய்து வீட்டிற்கு வந்தான்.
அழுது வீங்கிய முகத்துடன் தன் முன் நிற்கும் சூர்யாவை வெற்றுப்பார்வை பார்த்தபடி,
“என்ன சொல்றாங்க?” என்றான்.
“அழிக்கனுமாம்…”
“நீ என்ன முடிவு செஞ்சிருக்க…?”
கண்கள் கலங்க “என்னால முடியாது…” என்றாள்.
“பின்ன ஏன் அழற…?”
“என் குழந்தை என்ன பாவம் செஞ்சுச்சு…? இந்த உலகத்துல அது என்னவெல்லாம் கஷ்ட்டப்பட போகுதோ…” அவள் தேம்பினாள்.
“நான் விடமாட்டேன்…” அவன் அழுத்தமாக சொன்னான். அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“இந்த குழந்தை எந்த கஷ்ட்டமும் பட நான் விடமாட்டேன்…” அவன் மீண்டும் ஒரு முறை தெளிவாக சொன்னான்.
சட்டென அவளுடைய எல்லா துன்பங்களும் நீங்கிவிட்டது போல் உணர்ந்தாள். ‘தீரஜ்பிரசாத்தின் ஒரு வார்த்தைக்கு இத்தனை சக்தியா…!’ அவளுக்கு வியப்பாக இருந்தது.
அன்று சூர்யாவிடம் உறுதி கொடுத்துவிட்டு போனவன்தான். அதன் பிறகு அவளை நேரில் பார்க்கவில்லை. ஆனால் அடிக்கடி அவள் நலனை கிருஷ்ணமூர்த்தி மூலம் தெரிந்துகொள்வான்.
நாட்கள் வேகமாக நகர்ந்தன. சூர்யாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. ‘இந்த குழந்தையா மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை…!’ என்று சந்தேகிக்கும்படி, தாயின் மறுபதிப்பாகவே இருந்தது அந்த குழந்தை…
குழந்தையை பார்த்த தீரஜ்பிரசாத்திற்கு அது கபிலனின் குழந்தை என்கிற நினைவே எழவில்லை. குழந்தையின் பூ முகம் அவனை ‘சூர்யா சிறு வயதில் இப்படிதான் இருந்திருப்பாள்…’ என்று நினைக்க வைத்தது. குழந்தையை விட்டு பிரிந்து அவனுடைய வேலைகளை பார்க்க செல்லவே மனம் இல்லாமல் போனது அவனுக்கு.
காலம் பெரியவர்களின் மனக் காயத்தை ஆற்றியிருந்தது. சூர்யாவிற்கு பிரசவம் முடிந்து இரண்டு வாரம் கழித்து கபிலனின் பெற்றோர் குழந்தையை பார்க்க வந்திருந்தார்கள். கிருஷ்ணமூர்த்தி தம்பதியர் அவர்களிடம் முகம் திருப்பவில்லை. அன்று தீரஜ்ஜும் குழந்தையை பார்க்க வந்திருந்தான். புதிதாக வந்திருந்தவர்களை பார்த்ததும் அவனுக்கு ‘பகீர்’ என்றது… சூர்யா மீண்டும் தவறான முடிவு எடுத்துவிடுவாளோ என்று பயந்தான். அவள் மனதில் கபிலனின் இடம் என்ன என்று தெரிந்துகொள்ள அவன் மனம் அடித்துக் கொண்டது. மீண்டும் ஒரு புதை குழியில் அவள் சிக்கிவிடக் கூடாது என்று மனம் பதைத்தது.
‘யாராவது இதை ஒரு முடிவுக்கு கொண்டுவர மாட்டார்களா…’ என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கும் போது கபிலனின் தாய் சூர்யாவிடம் பேச்சை ஆரம்பித்தார்.
“என்னம்மா… முடிவு பண்ணியிருக்க…? குழந்தையும் பிறந்துடுச்சு… இனியும் அமைதியா இருந்தது என்ன செய்றது…?”
சூர்யா கமலாவை குழப்பமாக பார்த்து “எதை பற்றி…?” என்றாள்.
“கபிலனை பற்றிதான்…”
“இனி எனக்கும் உங்கள் மகனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. வேண்டுமானால் சட்டரீதியான பிரிவிற்கு ஏற்ப்பாடு செய்யுங்கள்…” அவள் கண்டிப்புடன் சொன்னாள்.
சூர்யாதான் கபிலனால் பாதிக்கப்பட்டவள் என்பதால் பெரியவர்கள் யாருக்கும் அவளுடைய முடிவை எதிர்த்து பேசும் துணிவும் விருப்பமும் இல்லை. அவர்களுக்கு அவளுடைய முடிவை ஏற்பதுதான் சரியென்று பட்டது…. ஏற்றுக் கொண்டார்கள். இரு தரப்பிலும் எதிர்ப்பு இல்லாததால் இரண்டு மாதத்தில் கபிலனிடமிருந்து சூர்யாவிற்கு விடுதலை கிடைத்துவிட்டது. அன்றோடு கபிலன் என்னும் அத்யாயம் சூர்யாவின் வாழ்க்கையில் முடிவடைந்தது… இதில் எதிலும் தீரஜ் சம்மந்தப்படவில்லை…
###
இப்போதெல்லாம் சூர்யாவிற்கு அவளுடைய குழந்தைதான் உலகம். தீரஜ்பிரசாத் எதை மறந்தாலும் காலையும் மாலையும் கீர்த்தியை பார்த்து அவளோடு ஒரு மணிநேரம் செலவிடுவதை மறக்க மாட்டான். ‘கீர்த்தி…’ சூர்யா தன் செல்ல கண்ணம்மாவிற்கு கீர்த்தனா என்று பெயரிட்டிருந்தாள்.
“எந்தன் வாழ்கையின் அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த
மகளே என் மகளே…!
நான் வாழ்ந்தது கொஞ்சம் அந்த
வாசத்தில் வந்து உதித்து உயிரில்
கலந்தாய் என் உயிரே…!
உண் பூவிழி குறுநகை
அதில் ஆயிரம் கவிதையே… “
பெரியவர்கள் பாடும் தாலாட்டு பாடல் தெரியாத சூர்யா, சினிமாவில் வரும் சில பாடல்களை பாடி குழந்தையை தூங்க வைப்பது வழக்கம். அன்றும் அதே போல்தான் அந்த பாடலை பாடிக் கொண்டிருந்தாள். அவள் குரலில் அத்தனை சோகம்… தீரஜையும் அவளுடைய குழந்தையின் நிலையையும் மாற்றி மாற்றி சிந்தித்துக் கொண்டிருந்தவளின் வாய் குழந்தைக்கு தாலாட்டுப் பாடிக்கொண்டிருந்தது என்பதுதான் சோகத்தின் காரணம்… குழந்தையை பார்க்க வந்த தீரஜ் அவள் குரலில் நெகிழ்ந்து அசையாமல் நின்றுவிட்டான்.
“வானம் தாலாட்ட மேகம் நீராட்ட
வளரும் வெள்ளி நிலவே…
வாழ்வில் நீ காணும் சுகங்கள் நூறாக
வேண்டும் தங்க சிலையே…
காண கிடைக்காத பிள்ளை வரமே
கண்ணில் ஜொலிகின்ற வைரமே…
கோடி கொடுத்தாலும் உன்னை போல
செல்வம் கிடைக்காது வாழ்விலே…
புள்ளி மானே… தூங்கும் மயிலே…
எனை மறந்தேன் நானம்மா… “
குழந்தையின் அறைக்குள் யாரோ வரும் அரவரம் கேட்டு பாடலை நிறுத்திவிட்ட சூர்யா அங்கே தீரஜ்பிரசாத்தை பார்த்ததும் எழுந்து நின்றாள்.
அவன் தொட்டிலுக்கு அருகில் சென்று குழந்தையை அள்ளி மார்போடு அனைத்துக் கொண்டான். அவனுக்கு பாடல் பாடவெல்லாம் தெரியாது. ஆனால் சூர்யாவின் இந்த தாலாட்டை அவன் அவ்வப்போது கேட்டதால் அந்த பாடல் அவன் மனதில் பதிந்துவிட்டது. மீதி பாடலை அவன் மனதிற்குள் பாடினான்.
“எந்தன் வாழ்கையின் அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த
மகளே என் மகளே…!
கனவில் நினைவாக நினைவில் கனவாக
கலந்தாய் காதல் தேவி…!
உறவின் பலனாக கடலின் அமுதாக
பிறந்தாய் நீயும் கனியே…!
தாயின் மடி சேரும் கன்று போல
நாளும் வளர்வாய் என் மார்பிலே…!
சேய் உன் முகம் பார்க்க துன்பம் தீரும்
காலம் கனியாகும் தேவியே…!
சிறு கிளி போல் பேசும் பேச்சில்
எனை மறந்தேன் நானம்மா….”
தீரஜ் தன்னை அறியாமலே மனதளவில் அந்த குழந்தைக்கு தந்தையாகிவிட்டான். இதை அவனுடைய நடவடிக்கையிலிருந்து புரிந்து கொண்ட சூர்யா அவனுடைய எதிர்காலத்தை நினைத்து கலங்கினாள்.
குழந்தைக்கு விபரம் தெரியும் முன் இந்த குழந்தையிடமிருந்து அவனை பிரித்தால்தான் குழந்தைக்கு பாதிப்பு இருக்காது. அதோடு இவன், சூர்யாவிற்கும் குழந்தைக்குமே சேவகம் செய்து கொண்டிருந்தால் அவனுக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளமாட்டான்.
தூங்கும் குழந்தையை மார்போடு அணைத்தபடி வெளியேறும் தீரஜ்பிரசாத்தை கனிவாக பார்த்தாள் சூர்யா… ‘இவனுக்கு எதற்கு இத்தனை பாசம் இந்த குழந்தை மேல்…!’ அவளுக்கு புரிந்தது… அந்த பாசம் சூர்யாவின் மீதான அவனுடைய காதலின் வெளிப்பாடு. ‘ஆனால் அந்த காதலுக்கு அவள் தகுதியானவள்தானா…?’
‘இல்லை… இல்லை…’ என்று அலறியது அவள் மனம். அதனால்தான் அந்த முடிவை எடுத்தாள்.
Comments are closed here.