Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 15

அத்தியாயம் – 15

மோனிகா அவருக்காக எதை வேண்டுமானாலும் செய்வாள். தண்டவாளத்தில் படுக்கச் சொன்னாலும் படுப்பாள்… விஷத்தைக் குடிக்கச் சொன்னாலும் குடிப்பாள். அவர் மீது அப்படி ஒரு பைத்தியம். அதனால்தான், தான் மிகவும் நேசித்த தொழிலை தியாகம் செய்தாள். ஆண்டுகால உழைப்பின் பலனை துறந்தாள். பெற்றோரின் எதிர்ப்பையும், நண்பர்களின் அனுதாபத்தையும், எதிரிகளின் ஏளனத்தையும் சம்பாதித்தாள். ஊடகங்களின் நேரடி கேள்விகளையும் மறைமுக கிசுகிசுப்புகளையும் புன்னகையுடன் சகித்துக் கொண்டாள். பல சோதனைகளைக் கடந்து விடாமல் அவரை பின்தொடர்ந்துக் கொண்டே இருந்தாள். ஏதாவது ஒரு விதத்தில் அவரோடு இருக்க வேண்டும். அதற்கு எந்த உறவும் வேண்டாம்… பெயரும் வேண்டாம்… அவர் மட்டும்… இல்லையில்லை… அவருடைய நிழல் மட்டும் போதும் என்றிருந்தது அவளுக்கு.

 

சிவமாறன் அவளுக்காக சிறி துரும்பைக் கூட அசைக்கவில்லை. அவருடைய நிலையிலிருந்து அவர் சிறிதும் இறங்கவில்லை. அவருடைய குடும்பத்திற்கும் குழந்தைகளுக்கும் மட்டுமே முன்னுரிமைக் கொடுத்தவர், அவளை பற்றி அதிகம் யோசிப்பதை தவிர்த்து வந்தார். நண்பர்கள் என்னும் எல்லையை தாண்டிவிடக் கூடாது என்பதில் கவனமாகவும் கட்டுப்பாடாகவும் இருந்தார். அவள் நடிப்பது பிடிக்கவில்லை என்றாலும், அவராக அவளிடம் எதையும் சொல்லவில்லையே! அவளேதான் விரும்பி அந்த தொழிலை விட்டாள். தனக்கும் அதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று தனக்குத் தானே அடிக்கடி சொல்லிக் கொண்டார். ஆனால் உள்ளே இருக்கும் மனசாட்சிக்கு தெரியும் அல்லவா! அதை யாராலும் ஏமாற்ற முடியாதே!

 

அவள் தனக்காகத்தான் இத்தனை பெரிய காரியத்தை செய்தாள் என்பது அவருடைய உள்மனதிற்கு நன்றாகத்தெரியும். ஆனால் அதை அவர் சிறிதும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. சிறு பார்வையில்… புன்னகையில் கூட அவளுடைய செயலுக்கான அங்கீகாரத்தை அவர் வழங்கவில்லை. எப்பொழுதும் போல் வெகு இயல்பாக இருந்தார். அதை கூட அவள் கவனிக்கவில்லை. ஏனென்றால் அவளிடம் சிறிதளவு கூட எதிர்பார்ப்பில்லை. எப்பொழுதும் போல் அவருக்கு போன் செய்து பேசுவதும் அலுவலகத்தில் வந்து பார்ப்பதுமாக மகிழ்ச்சியாகவே இருந்தாள். சில நாட்களுக்குப் பிறகு, அவரோடு கழிக்கும் சில மணிநேரங்களைத் தவிர மற்ற நேரமெல்லாம், பெரும் சுமையாக தோன்றியது. எனவேதான் ஆடை வடிவமைப்பாளராக அவதாரம் எடுத்தாள். இயற்கையாகவே ஆடை அலங்காரத்தில் ஈடுபாடு அதிகம் என்பதால், அந்த கலையும் அவளுக்கு கைகொடுத்தது.

 

ஆரம்பத்தில் சிவமாறனின் படங்களுக்கு மட்டும் வடிவமைத்துக் கொண்டிருந்தாள். பிறகு அவரே பலரிடம் அவளுக்காக பேசி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். அவள் செய்த மலையளவு தியாகத்திற்கு, கடுகளவு பிராயச்சித்தம். அதுவே அவளுக்கு பெரிதாக தெரிந்தது. அனைவரிடமும், ஆஹா ஓஹோ – வென்று புகழ்ந்தது தள்ளினாள். அந்த உற்சாகமே அவளை பெரிய இக்கட்டில் கொண்டு சென்று நிறுத்தியது.

 

சிவமாறன், அவளுக்காக வாய்ப்பு கேட்டு நண்பர்களின் கதவைத் தட்டுகிறார் என்கிற செய்தி மிகைப்படுத்தப்பட்டு, திரைத்துறை வட்டாரத்தில் பரவியது. விஷயத்தை கேள்விப்பட்ட இராஜேஸ்வரி பத்ரகாளியானாள். அவர் எவ்வளவோ சமாதானங்களை சொல்லிப் பார்த்தார். தெரிந்த பெண்… தோழி… அதை தவிர வேறு எதுவுமே இல்லை என்று சத்தியம் செய்தார். ஆனால் அவள் சமாதானமாகவில்லை. பயம் அவளை உலுக்கியது. தன்னுடைய வாழ்க்கை கைநழுவிவிடுமோ… குடும்பம் சிதறிவிடுமோ என்று பரிதவித்தாள். அவளுடைய தொடர்பே வேண்டாம் விட்டுவிடுங்கள் என்று கெஞ்சினாள். குடும்பத்தையே சிதைக்கக் கூடிய நட்பென்றால், அதன் அவசியம் என்பதே அவளுடைய கேள்வி. நியாயம்தான். அவருக்கும் புரியாத்தான் செய்தது. ஆனால் அவ்வளவு சுலபமாக இந்த சூழலிலிருந்து வெளியேறிவிட முடியுமா! சிறிதும் நம்பிக்கையில்லை. ஆனாலும், மனைவியை சமாதானம் செய்ய வேண்டுமே என்பதற்காக, மனசாட்சிக்கு விரோதமாக, அவளுடைய தொடர்பை முற்றிலும் முறித்துக்கொவதாக சத்தியம் செய்தார்.

 

நள்ளிரவு பன்னிரண்டு மணியிருக்கும். அவர் வீட்டில் உறங்கி கொண்டிருந்தார். கூடத்திலிருக்கும் தொலைபேசி ஒலித்தது. அப்போதெல்லாம் கைபேசியின் பயன்பாடு அதிகம் இல்லை. இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்கிற சிந்தனையோடு மனைவியை திரும்பிப் பார்த்தார். அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். எழுந்துச் சென்று அழைப்பை ஏற்றார். பிரபல நட்சத்திர ஹோட்டலிலிருந்து அழைப்பு வந்திருந்தது. அழைத்தவர் ஹீட்டால் மேனேஜர். அவர் சொன்ன விஷயத்தை கேட்டதும் சிவமாறன் பதட்டமானார். உடனடியாக சட்டையை மாட்டிக் கொண்டு, கார் சாவியை எடுத்துக் கொண்டு அவசரமாக வெளியே வந்தார்.

 

“இந்த நேரத்துல எங்க கிளம்பறீங்க?” – பின்னாலிருந்து குரல் கொடுத்தால் இராஜேஸ்வரி. சட்டென்று நின்றவர், “கொஞ்சம்… எமர்ஜென்சி… வந்து சொல்றேன்” என்று கூறிவிட்டு, அவளுடைய பதிலுக்காகக் காத்திருக்காமல் கிளம்பிவிட்டார்.

 

இவரை கண்டதும் ஹோட்டல் மேனேஜர் அறையின் எண்ணை கூறினான். மின்தூக்கியின் மூலம் அடுத்த சில நொடிகளில் அந்த அறையின் வாசலில் நின்று அழைப்புமணியை அழுத்தினார். பதில் இல்லை. கதவைத் தட்டினார். அப்போதும் பதில் இல்லை… “மாறன் வந்திருக்கேன்” என்று குரல் கொடுத்தார். மறுகணமே வேகமாக திறக்கப்பட்டது கதவு. உள்ளே அவள் நின்றுக் கொண்டிருந்தாள். கதலைமுடி அலங்கோலமாய் கலந்திருந்தது. கண்கள் சிவந்திருந்தன. இதழ்கடையோராம் இரத்தக் கசிவு தெரிந்தது. ஓரிரு நொடிகள்தான்… அடுத்து என்ன என்று யோசிக்கக் கூட நேரமில்லை. இவரைப் பார்த்ததும் பாய்ந்து வந்து கட்டிக்கொண்டாள். மேலும் மேலும் ஒட்டிக்கொண்டாள்.

 

அவ்வளவு நெருக்கமாக… அவளோடு… இதுதான் முதல் முறை. அவரும் பதட்டத்தில் இருந்தார். மனம் நெகிழ்ந்திருந்தது. அனைத்தையும் மீறி அவளை வேற்று மனுஷியாக அவர் உணரவே இல்லை. தன்னில் ஒரு அங்கமாகவே உணர்ந்தார். இயல்பாய் அவருடைய கைகள் அவளை வலைத்தன. அவள் உடல் நடுங்கி கொண்டிருந்தது. அவருடைய விரல்கள் ஆறுதலாய் வருடின. அவள் தேம்பினாள். அவர் தட்டிக் கொடுத்தார். எவ்வளவு நேரம் அப்படியே நின்று கொண்டிருந்தார்கள் என்று தெரியவில்லை. ஏதோ ஒரு மணித்துளியில் இருவரும் இயல்பாய் விலகினார்கள். அவள் முதலில் உள்ளே சென்றாள், அவளைத் தொடர்ந்து அவரும் வந்தார்.

 

அவளை கையைப் பிடித்து கட்டிலில் அமரவைத்தார். ஜக்கில் இருந்த தண்ணீரை கண்ணாடி டம்ளரில் ஊற்றி அவளிடம் கொடுத்து அருந்தச் சொன்னார். அவள் சற்று இலகுவான பிறகு, “என்ன ஆச்சு?” என்றார்.

 

“வீட்ல பெரிய பிரச்சனை” என்றாள்.

 

“என்னாலையா?” – அவருடைய கேள்விக்கு அவள் பதில் சொல்லவில்லை. அமைதியாக தலை குனிந்து அமர்ந்திருந்தவள் சற்று நேரத்திற்குப் பிறகு, “என்னை… கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்க… பெரிய தொழிலதிபராம்! தொடர்ந்து… ஃபாலோ பண்ணறான். வீட்லேயும் பிரஷர்… இன்னிக்கு கொஞ்சம் பெருசாயிடிச்சு” – தயங்கித்தயங்கிக் கூறினாள். அவருடைய முகம் பாறை போல் இறுகியது. அதுவரை அவரிடமிருந்த நெகிழ்ச்சியின் சாயல்கூட இப்போதில்லை.

 

அவள் சங்கடத்துடன் அவரை பார்த்தாள். அவருடைய முகமாற்றம் அவளை வேதனைப் படுத்தியது. “என்னால உங்க குடும்பத்துல எந்த பிரச்சனையும் வராது மாறன். உங்களை தொந்தரவு பண்ணறதுக்காக… இல்லன்னா உங்களை எமோஷனல் பிளாக்மெயில் பண்ணறதுக்காக நான் வீட்டைவிட்டு வரல. என்னால அங்க இருக்க முடியல” என்றாள் பரிதாபமாக.

 

அவருடைய முகத்தில் அப்போதும் இலக்கம் தெரியவில்லை. “நா ஒரு அழகான உலகத்துல வாழ்ந்துகிட்டு இருக்கேன் மாறன். அங்க நா… என்கூட நீங்க… நம்ம குழந்தைங்க… நாம மட்டும்தான் இருக்கோம். அங்க உங்களுக்கும் எனக்கும் இடையில யாருமே இல்ல… நா ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அந்த சந்தோஷத்தை கெடுக்க பார்க்கறாங்க. எனக்கு அந்த சந்தோஷத்தை மட்டும் காப்பாத்திக்க கொடுங்க. நீங்க கூட வேண்டாம்… நீங்க போங்க… உங்க மனைவி குழந்தைங்களோட சந்தோஷமா இருங்க… எனக்கு என்னோட மாறன் இங்க இருக்காரு” என்று இதயத்தை தொட்டு காட்டினாள்.

 

“உங்களுக்கு ஒண்ணு தெரியுமா… என்னோட மாறனுக்கு எப்பவுமே வயசாகாது… உடம்பு சரியில்லாம போகாது… என்னோட குழந்தைங்க எப்பவும் குழந்தைங்களாவே இருப்பாங்க… நா கூட இப்படியே… இளமையா… அழகா… என் மாறன் கூட சந்தோஷமா இருப்பேன்” – அவள் கண்கள் கனவில் மிதந்தன. அவர் அவளை ஆச்சர்யமாகப் பார்த்தார்.

 

“அவங்க எல்லாரும் என்னைய பைத்தியம்னு சொல்றாங்க மாறன்… என்கிட்டே சண்டை போடறாங்க. என்னோட அப்பா… இதோ… என்னைய அடிச்சுட்டாரு பாருங்க” – கைத்தடம் பதிந்த கன்னத்தைக் காட்டினாள். அவருடைய நெஞ்சுக்குள் ஏதோ பிசைந்தது. மனம் வலித்தது. அவளுடைய குழந்தை முகமும், அப்பாவித்தனமும் அவரை என்னவோ செய்தது. சட்டென்று அவளை இழுத்து அனைத்துக் கொண்டார். பெரிய கேவலுடன் அவளும் அவரோடு அடங்கிப் போனாள். அதுவரை அவர் இழுத்துப் பிடித்து வைத்திருந்த கட்டுப்பாடுகளெல்லாம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போவது போல் உணர்ச்சிப் போராட்டத்தில் காணாமல் போய்விட்டன.

 

இனி எந்த முகமூடியை போட்டு அவர் தன் மனதை மறைப்பார்! எப்படி அவளை மறுப்பார்! தன்னுடைய இயலாமையை எண்ணி அவர் மனம் துவண்டது. அவளுடைய தலையை கோதியபடியே, அவளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார். ஏதோ பெரிய தவறு செய்வது போல் மனம் பாறையாக கனத்தது.

 

“ஐம் சாரி…” என்று முணுமுணுத்தார்.

 

அவள் அவரை நிமிர்ந்து பார்த்து “ஏன்?” என்றாள்.

 

“எதுக்கும் இல்ல…” – தலையயை குறுக்காக ஆட்டினார்.

 

அவள் மீண்டும் அவர் மார்பில் சாய்ந்துக் கொண்டு, “தேங்க்ஸ்” என்றாள். இப்போது அவர், ஏனென்று கேட்டார். அவள் பதில் சொல்லாமல் தலையை மறுப்பாக ஆட்டி, “எதுக்கும் இல்ல..” என்றாள். அவருடைய அணைப்பு இறுகியது. அவளுடைய குழந்தைத் தனத்தை எண்ணி மனம் கசிந்தது.

 

“நீ ஏன் இவ்வளவு லேட்டா பிறந்த? ஏன் இவ்வளவு லேட்டா என்னை சந்திச்ச?” என்றவரின் உள்ளம் அழுதது. அவளுக்கு பதில் சொல்ல தெரியவில்லை. அவருடைய அணைப்பிலிருந்து விலக மனமில்லாமல் அசையாமல் இருந்தாள்.

 

“இதெல்லாம் நான் எப்படி சரி பண்ணப் போறேன்! என்னோட வாழ்க்கையில உனக்கு நான் எந்த இடத்தைக் கொடுக்கப் போறேன்!” என்று புலம்பினார். உண்மையில் அவருக்கு வேதனையாக இருந்தது. ஒரு சிறு பெண்ணின் மனதை கலைத்துவிட்டோமே… அவளுடைய வாழ்க்கையில் விளையாடிவிட்டோமே என்று மிகவும் வருந்தினார்.

 

“எனக்கு எந்த இடமும் வேண்டாம். நா இப்படியே இருந்துடுவேன். நீங்க வருத்தப்படாதீங்க” – சட்டென்று நிமிர்ந்து அவருடைய முகத்தைப் பார்த்து ஆறுதல் சொன்னாள். அவருடைய வருத்தம் அவளை வேதனைப்படுத்தியது.

 

அவர் விரக்தியாக புன்னகைத்தார். அவள் என்னவென்று கேட்டாள். அவர் பதில் சொல்லாமல் அவளை மீண்டும் தன்னுடைய அணைப்பில் கொண்டுவந்தார்.

 

“எவ்வளவு நாள் இப்படியே இருக்க முடியும்? உனக்கும் ஒரு வாழ்க்கை வேணும்ல” என்றார்.

 

“நான்தான் ஏற்கனவே வாழ்ந்துகிட்டு இருக்கேனே!”

 

“எவ்வளவு நாளைக்கு இந்த வாழ்க்கை?”

 

“எவ்வளவு நாள் நான் இருக்கேனா அவ்வளவு நாளைக்கு” – பட்டென்று பதில் சொன்னாள். அவர் எதுவும் பேசவில்லை. சற்று நேரம் அமைதியாக இருந்தார். பிறகு, “உன்னோட கனவுல நமக்கு கல்யாணம் ஆயிடுச்சா?” என்றார்.

 

“ம்ம்ம்… ஆயிடிச்சு” – அவள் குரல் துள்ளியது.

 

“நிஜத்துல அது நடக்காது” – மனதை கல்லாக்கிக் கொண்டு கூறினார். அப்போதாவது விலகிவிட மாட்டாளா… அவளுடைய வழியில் சென்று தனக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள மாட்டாளா என்று யோசித்தார். அந்த யோசனையே அவரை வெகுவாய் புண்படுத்தியது என்பது வேறு விஷயம்.

 

“நடக்க வேண்டாம்…” – சாதாரணமாக சொன்னாள். சந்தோஷம், துக்கம், குற்றவுணர்வு என்று பலவிதமான உணர்வுகளின் கலவை அவரை ஆக்கிரமித்தது. பேச முடியாமல் தொண்டை கரகரத்தது. சற்றுநேரம் மெளனமாக இருந்தார். பிறகு, “குழந்தைங்க?” என்று மீண்டும் கேள்வியைத் தொடர்ந்தார்.

 

“ரெண்டு…” – சந்தோஷமாகக் கூறினாள்.

 

“இந்த வாழ்க்கையில… நாம… நமக்கு… குழந்தைங்க… எப்படி…” – அவர் தடுமாறினார்.

 

“நா கேட்கலையே!” – சிறு தயக்கம் கூட இல்லாமல் பட்டென்று கூறினாள். அவர் திகைத்தார். என்ன மாதிரியான காதல் இது!

 

“கல்யாணம்… குழந்தைங்க எதுவுமே வேண்டாமா?” என்றார் மீண்டும் ஒருமுறை. அவரால் நம்ப முடியவில்லை. அடிப்படையே வேண்டாம் என்கிறாளே!

 

“ம்ஹும்… வேண்டாம்…” – தயங்காமல் கூறினாள்.

 

“வேற என்ன வேணும்?”

 

“நீங்க…”

 

“எங்கிட்ட என்ன வேணும்?” – புரியாமல் கேட்டார்.

 

“நீங்கதான் வேணும்” அழுத்தமாக பதில் சொன்னாள். அவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இப்படி ஒரு காதலை அவர் சினிமாவில் கூட பார்த்ததில்லை. சற்றுநேரம் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு பிறகு கேட்டார்.

 

“அப்படி என்ன இருக்கு என்கிட்ட!” – அவருக்கே விளங்கவில்லை.

 

“நீங்கதான்…” – கண்சிமிட்டி அழகாக புன்னகைத்தாள். அவர் மலைத்து போய் அமர்ந்துவிட்டார். மனம் பூரித்தது. தலையில் பெரிய கிரீடத்தை தூக்கி வைத்தது போல் கர்வமாக இருந்தது. காதல்! – எவ்வளவு ஆழமானது! எவ்வளவு மர்மமானது!




2 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    உண்மைதான் காதல் எவ்வளவு மர்மமானது ஆழமானாது,,அதுவும் தன்குடும்பத்திற்கு துரோகம் செய்து அனுபவிக்கும் நபர்களுக்கு கர்வம் தற்பெருமை கூட வரும்,இன்று தேவ் மாதிரி மகனோ மகளோ உதாசீனப்படுத்தும்போது மரணவலி வருகின்றதல்லவா,அதையும் சேர்த்து அனுபவிக்க தயாராயிருக்கணும்,இப்படிப்பட்ட ஆண்கள் தங்களுக்கு சாதகமாகவே எல்லாவற்றையும் எண்ணுவார்கள் .

    நன்றி


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      தவறு சிறிதோ பெரிதோ… மனசாட்சிக்கு சொல்லிக்கொள்ளும் சில நொண்டி சாக்குகள்… அவர்களுடைய பார்வையில் நியாயமாக தோன்றும். அதை அடுத்தவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்கிற கோபம் கூட சிலநேரங்களில் வரும்… இந்த குணம் பொதுவானதுதான் என்று தோன்றுகிறது தாட்சாயணி…

You cannot copy content of this page