இதயத்தில் ஒரு யுத்தம் – 23
4731
0
அத்தியாயம் – 23
அமைதியை தேடி எங்கெங்கோ அலைந்து கொண்டிருந்த தீரஜ்பிரசாத் முப்பது நாட்கள் கழித்து தாயகம் திரும்பியிருந்தான். அவன் மதுராவில் கால் பதிக்கும் போது அவனுக்குள் கொஞ்சமே கொஞ்சம் ஒட்டிகொண்டிருந்த மென்மையான உணர்வுகளை தூக்கியெரிந்துவிட்டு ஒரு முழுமையான இரும்பு மனிதனாக திரும்பியிருந்தான்.
இப்போது அவன் மன்னிப்பு என்ற வார்த்தையே அறியாதவன் போல நடந்துகொண்டான். அவன் விதித்திருந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு பகிரங்கமாக தண்டனை கொடுத்து நிறைவேற்றினான். கையாட்களிடம் கடுமையாக நடந்துகொண்டான். அவனிடம் நெருங்கி பேசுவதற்கே அஞ்சும் அளவிற்கு அவன் முகம் நெருப்பு தணலாகவே இருந்தது… அதிகாரத்தில் இருப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் தீரஜ்பிரசாத்தின் உதவி தேவைப்பட்டதால் அவனை தட்டிகேட்கும் துணிவின்றி அதிகார வர்க்கம் மௌனித்துவிட அவனுடைய கெடுபிடிகள் அதிகமானது. அதனால் அவனுடன் இருப்பவர்கள் மட்டும் அல்லாது மதுரா மக்களே ஒருவித பயத்துடனே வாழ்க்கையை ஒட்டிக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில்தான் சூர்யா மீண்டும் மதுராவிற்கு பிரவேசித்தாள்….
# # #
மாலை நேரம்… சூரியன் செவ்வானத்தில் புதைந்து கொண்டிருப்பதை வெறித்து பார்த்தபடி மொட்டை மடியில் கையில் காய்ந்த துணிகளுடன் நின்று கொண்டிருந்தாள் சூர்யா.
“என்ன சூர்யா… இங்க நின்னு யாரை பற்றி கனவு கண்டுட்டு இருக்க…? உன்னோட கனவு நாயகனை பற்றியா…? ஹா… ஹா… உன் கனவு கனவாவே போச்சு… கடைசி வரைக்கும் நீ விரும்பின… சாரி… சாரி… விரும்புற மாதிரி ஒரு ஆ…ண் மகனை பார்க்கவே இல்ல பாவம்… ஒருவேள அப்படி யாரும் உன் கண்ணுல சிக்கியிருந்தா விட்டுருக்கவே மாட்ட இல்ல… எப்படியும் வளச்சு பிடிச்சிருப்ப…” அவனுடைய வார்த்தைகளில் இருந்த அம்பு சூர்யாவை குத்தத்தான் செய்தது.
அவளே தீரஜ்ஜை மறக்க முயன்றாலும், இவன் ‘தான் என்ன செய்கிறோம்…’ என்று புரியாமலே அவள் மனதில் புதைத்து வைத்திருக்கும் விஷயங்களை கிளறிக் கொண்டிருந்தான். அவன் கொஞ்சம் அனுசரணையாக நடந்து கொண்டிருந்தாலும், ஜடம் போல் உணர்ச்சிகளை துடைதெரிந்துவிட்டு நடமாடிக்கொண்டிருக்கும் சூர்யா நாளடைவில் ஓரளவேனும் அவனை அனுசரிக்க முயன்றிருக்கலாம்… ஆனால் அவன் அதற்கான வாய்ப்பை அவளுக்கு கொடுக்கவே இல்லை.
அவனுடைய வார்த்தையடிக்கு எப்போதும் போல் இன்றும் சூர்யாவிடமிருந்து பதில் வரவில்லை.
“உன்னோட துணிமணிகளை பெட்டியில் எடுத்து வைத்துகொள். இன்று இரவு பத்து மணிக்கு ட்ரைன்…” அவன் அவளிடம் தான் சொல்ல வந்ததை சொல்லிவிட்டு அவளுடைய பதிலை எதிர்பார்க்காமல் கையில் சிகரெட்டை எடுத்துக்கொண்டு மொட்டை மாடியின் மறுகோடிக்கு சென்றுவிட்டான்.
இந்த நிமிடம் வரை மதுரா பயணத்தை பற்றி எதுவும் அறிந்திடாத சூர்யா அவன் சொல்லிவிட்டு சென்ற செய்தியில் உடலும் மனமும் பதற அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள்.
அவள் வாழ்க்கை இருண்டதுபோல் வானமும் இருட்டிக்கொண்டு வந்தது… வருங்காலத்தில் அவள் சந்திக்கவிருக்கும் சோதனைகளை அறிந்த இயற்கை மழைத்துளியை கண்ணீராக வடித்தது….
மழையில் நனைகிறோம் என்ற உணர்வே இல்லாமல் நின்று கொண்டிருந்த சூர்யாவை கபிலன் உலுக்கினான்…
“அறிவுகெட்ட மண்டே… நீதான் எருமைமாடு மாதிரி மழையில நிக்கிறேன்னா… எதுக்கு காஞ்ச துணிய திரும்ப ஈரமாக்கிகிட்டு நிக்கிற…? கீழ இறங்கி வந்து தொல….” சூர்யாவிடமிருந்து எந்த எதிர்பும் வராததால் நாளுக்கு நாள் வார்த்தைகளில் அனலை ஏற்றிக் கொண்டிருந்தான் கபிலன்.
அவன் பேசிய வார்த்தைகள் சூர்யாவிற்கு வலிக்கத்தான் செய்தது. ஆனால் அவளுக்கு ஏனோ அவனை திருப்பி அடிக்க தோன்றவில்லை. ஒரு வகையில் அவனுக்கு அவள் தீங்கிழைத்திருக்கிறாள்… அவன் கட்டிய தாலியை கழுத்தில் சுமப்பவள் அவனை மனதில் சுமக்கவில்லை. அவனுடைய கட்டாயத்தின் பெயரில்தான் அவள் அவனுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறாள் என்றாலும், அவளுடைய கடந்த கால வாழ்க்கையில் நடந்த சில அசம்பாவிதங்களை அவள் அவனிடம் விளக்கியிருக்க வேண்டும். அதை அவள் செய்யவில்லை. அந்த குற்றத்திற்காக அவனுடைய கடும் மொழியை சகித்துக் கொண்டாள்.
அன்று இரவு பத்து மணிக்கு நெஞ்சம் நிறைய திகிலுடன் சூர்யா கபிலனுடன் மதுராவிற்கு ரயில் ஏறினாள்.
முதல் முறை மதுரா செல்ல ரயில் ஏறியது அவள் நினைவில் வந்தது… அன்று இன்று போல் சூர்யாவின் மனதில் ‘மதுரா சென்றவுடன் என்ன நடக்குமோ…’ என்ற திகில் இல்லை. ‘மதுரா எப்படி இருக்கும்…? அங்கு உள்ள மக்கள் எப்படி பழகுவார்கள்…? அவர்களில் கலாச்சாரம் என்னவாக இருக்கும்…?’ இப்படி பல கேள்விகள் மனதில் எழ மிகுந்த ஆர்வத்துடன் தன்னந்தனியாக மதுராவிற்கு பயணம் செய்தாள்… அந்த பயணம் ஒரு இனிமையான பயணம்… ஆனால் அதே ஊருக்கு அவளுடைய இன்றைய பயணம் கொடுமையானது… மிகக் கொடுமையானது…
விடியற்காலை நான்கு மணிக்கு ரயில் மதுரா சந்திப்பில் நின்றது. களைத்த முகத்துடன் மக்கள் கூட்டம் கூட்டமாக தங்களது உடைமைகளை சுமந்து கொண்டு ரயில் பெட்டிகளிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களுள் ஒருவனாக கபிலனும் முண்டியடித்துக் கொண்டு இறங்கினான்.
கிழே இறங்கியவன் தன்னை தொடர்ந்து தன் மனைவியும் இறங்கியிருப்பாள் என்ற நம்பிக்கையில் திரும்பிப் பார்த்தான் அவள் பெட்டியிலிருந்து இறங்க காத்திருப்பவர்கள் அனைவருக்கும் பின்னால் நின்று கொண்டிருந்தாள்.
‘கூட்டம் கொஞ்சம் இறங்கட்டும்… அதன் பிறகு நாம் இறங்கலாம்…’ என்று அவள் மனதில் நினைப்பது அவனுக்கு கேட்க வாய்ப்பில்லைதான். ஆனால் மனைவியின் குணத்தை புரிந்து கொண்டிருந்தால், அவள் நினைப்பதை அவன் ஊகித்திருக்க முடியும். அது முடியாததால் முகம் கடுத்தான்…
‘சோம்பேறி… சோம்பேறி… ஒண்ணுத்துக்கும் லாயக்கு இல்லாத மண்டு… ‘ அவன் மனதிற்குள் வசை பாடினான்.
கூட்டம் குறைந்த பின் கீழே இறங்கியவள் ரயில் நிலையத்தை கண்களால் அலைந்தால். அன்று போலவே இன்றும் அதே அழகுடன் இருந்தது அந்த ரயில் நிலையம். அன்று அந்த அழகை ஆர்வத்துடன் இரசித்தவளை இன்று அதே அழகு அச்சுறுத்தியது… இந்த அழகுக்கு யார் காரணம் என்கிற கேள்வி எழுந்து அதற்கான பதிலும் மனதில் உதையமானது…. ‘தீரஜ்பிரசாத்….’ மின்னல் பாய்ந்தது போல் மனதிற்குள் ‘சுரீர்’ என்று ஒரு வலி தோன்றியது…
‘இறைவா… அவனை மட்டும் என் கண்ணில் காட்டிவிடாதே… அவன் என்னை பார்க்கும் சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்திவிடாதே… என்மேல் உனக்கு ஒரு துளியேனும் கருணையிருந்தால் இந்த வேண்டுதலை மட்டும் நிறைவேற்றிவிடு ஆண்டவா…’ அவள் மானசீகமாக இறைவனிடம் வேண்டினாள். ஆனால் இறைவன் அவள் வேண்டுதலுக்கு செவிசாய்க மறுத்துவிட்டான்.
சூர்யா ரயிலிலிருந்து இறங்கிய அடுத்த நொடி தீரஜ்பிரசாத்திற்கு ‘சூர்யா ஒரு ஆணுடன் மதுராவிற்கு வந்திருக்கிறாள் ‘ என்கிற செய்தி சென்று சேர்ந்துவிட்டது. அடுத்த சில மணிநேரங்களில் சூர்யாவை பற்றிய முழுவிபரமும் அவன் கையில் இருந்தது.
கபிலனின் கண்களில் அந்த ஊரின் அழகோ… சுத்தமோ… எதுவும் படவில்லை. அவன் கடிவாளம் கட்டிய குதிரை போல் தன்னுடைய அலுவலகத்தையும் தங்கப் போகும் வீட்டையும் பற்றி யோசனை செய்தபடி வாடகை காரில் பயணம் செய்து கொண்டிருந்தான்.
அவன் அருகில் அமர்ந்திருந்த சூர்யாவோ பழைய நினைவுகளில் கணம் தாங்காமல் கண்களை மூடி கார் கதவில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தாள். கார் கோசிகாலனுக்குள் நுழைந்த போது
“எந்த பக்கம் சார் போகணும்…” என்று கேட்டு டிரைவர் மௌனத்தை கலைத்தான். அவனுடைய இந்தி புரியாமல் விழித்த கபிலன் சூர்யாவை பார்த்தான். அவள் கிருஷ்ணா கெமிக்கல்ஸ் ஊழியர்களுக்கான காலனிக்கு செல்ல வழி சொன்னாள். சுமார் முன்னூறு வீடுகளை கொண்ட அந்த காலனிக்குள் கார் சென்று நின்றது.
காலனி பொறுப்பாளரிடம் விபரத்தை தெரிவித்தார்கள். “காலனியில் உங்களுக்கு ஒரு வீடு ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றாலும் நீங்கள் வேலையில் சேர்ந்த பிறகுதான் நான் சாவி கொடுக்க முடியும். ஆனால் நீங்கள் நீண்ட தொலைவிலிருந்து வந்திருப்பதால் இப்போதே உங்களுக்கு சாவியை கொடுக்கிறேன். டாகுமென்ட்ஸ் எல்லாம் உங்களுடைய வேலையை உறுதி செய்த பிறகு தயார் செய்துகொள்ளலாம்…” என்று சொல்லி வீட்டின் சாவியை கொடுத்தார் அந்த பெரியவர்.
வீடு அழகாக இருந்தது. ஒற்றை படுக்கையறையை கொண்ட அந்த வீட்டில் இரண்டு பேர் தாராளமாக தங்கலாம். சூர்யா குளித்துவிட்டு பூஜை விளக்கேற்றி சமையலை ஆரம்பித்துவிட்டாள். கபிலனும் அலுவலகத்திற்கு தயாராகிவிட்டான். அன்றைய தினம் கரைச்சல் இல்லாமல் சென்றுவிட்டது.
# # #
விடியற்காலை நான்கு மணி பதினைந்து நிமிடம். இந்தியாவிலேயே முதன்மையான கெமிக்கல் நிறுவனமான கிருஷ்ணா கெமிக்கல்ஸ்சில் ஏதோ முக்கிய அலுவல் நடந்து கொண்டிருக்க வேண்டும். அதனால்தான் அந்த கம்பெனி முதலாளியின் கார் அந்த நேரத்தில் கம்பெனி வளாகத்திலிருந்து வெளியே வந்தது.
காருக்குள் இருந்த அமைதியை குலைக்கும்படி தீரஜ்பிரசாத்தின் கைபேசி அலறியது. அந்த கைபேசி எண் மிக முக்கியமானவர்களுக்கு மட்டுமே தெரிந்த எண். நேரடியாக அவனை தொடர்புகொள்ளும் அதிகாரம் உடைய மிக சிலரில் யார் இப்போது அழைப்பது…?
தீரஜ் கைபேசியை எடுத்துப் பார்த்தான். சலீம்தான் பேசினான். அவன் சொன்ன செய்தியை கேட்ட தீரஜ் சட்டென கார் பிரேக்கை அழுத்தினான்.
ஆம்… சலீம் சூர்யாவை பற்றிய செய்தியைதான் சொன்னான். அவனுக்கு ரயில் நிலையத்திலிருந்து செய்தி வந்ததாம்… உடனே தீரஜ்பிரசாத்திற்கு தெரியப்படுத்திவிட்டான்.
சூர்யாவை பற்றிய செய்தியை கேட்டதும் தன்னிச்சையாக மனம் பரபரப்பதை அவனால் தடுக்க முடியவில்லை. அவளை சுத்தமாக மனதிலிருந்து தூக்கியெறிந்து விட்டோம் என்று அவன் நினைத்துக் கொண்டிருந்தது பொய்யாகிப் போனதை அந்த கணம் அவன் உணர்ந்தான்.
இவ்வளவு நாளும் அவளைப் பற்றி சிந்திக்காமல் அவனுடை கட்டுப்பாட்டில் அவனுக்கு அடிமையாக இருந்த மனம், இன்று அவள் மீண்டும் மதுராவிற்கு வந்துவிட்டாள் என்ற செய்தியை அறிந்ததும்… அவளை பற்றி மேலும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் அவனுடைய கட்டுப்பாட்டை மீறி அவனை அடிமையாக்கி அதிகாரம் செய்ய ஆரம்பித்துவிட்டது.
மனதின் கட்டளையை மீர முடியாமல், அவனுக்கு சூர்யாவை பற்றி தகவல் சொன்ன ஆசாமியை அழைத்து அவளை பற்றி மேலும் விபரங்கள் வேண்டும் என்றான். அவள் கிருஷ்ணா கெமிக்கல்ஸ் காலனிக்குள் நுழைந்ததும் அவளை பற்றிய விபரங்களை சுலபமாக சேகரித்த அந்த ஆசாமி அதை தன் முதலாளிக்கு தெரியப்படுத்தினான்.
‘என்ன துணிச்சல் இருந்திருந்தால் திருமணம் முடித்து மற்றொருவனின் மனைவியாக மதுராவிற்குள் காலடி வைத்திருப்பாள்….! அதுவும் அவள் கணவனுக்கு கிருஷ்ணா கெமிக்கல்ஸ்சில் வேலையாம்…!’
அவன் ரெத்தம் கொதித்தது… ரௌத்திரம் ஆனான்… கொலையே செய்யும் அளவிற்கு அவள் மேல் வன்மம் ஏற்பட்டது. ஆனால் அவளை கொலை செய்வதால் அவனுடைய மனம் அமைதியடைந்துவிடும் என்று அவனுக்கு தோன்றவில்லை. அவள் இருக்க வேண்டும்…. உயிரோடு இருக்க வேண்டும்…. ஆனால் அமைதியிழந்து… நிம்மதியிழந்து… தவிக்க வேண்டும். அவன் தவிப்பது போல… ‘ஏன்டா தீரஜ்பிரசாத்தை உதறினோம்…’ என்று வெந்து சாக வேண்டும்…
“விடமாட்டேண்டி… உன்ன அவ்வளவு சுலபமா விட்டுவிட மாட்டேண்டி… யார்கிட்ட விளையாட்டு காட்டுற…? என்னையே சீண்டி பார்க்குறியா…? இனி ஒவ்வொரு நாளும் உனக்கு நரகம்தான்டி….” அவன் அவளை என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டான். அவள் உயிரை வைத்து ஊனை எடுக்க முடிவெடுத்துவிட்டான். அவனுடைய முதல் எதிரியாக சூர்யாவை நினைத்து அவளை ஒழித்துக்கட்ட முடிவெடுத்துவிட்டான்.
Comments are closed here.