இதயத்தில் ஒரு யுத்தம் – 24
3706
0
அத்தியாயம் – 24
அன்றுதான் கபிலன் வேலையில் சேர்வதற்காக வந்திருந்தான்…. முதல் நாளே அவனுக்கு முதலாளியை சென்று சந்திக்கும் படி மேலதிகாரியிடமிருந்து உத்தரவு வந்தது.
அவனுக்கு தெரியும்… கிருஷ்ணா கெமிகல்ஸ் முதலாளியை அவ்வளவு சுலபமாக யாரும் நெருங்கிவிட முடியாது. அப்படியிருக்க இவன் மட்டும் எந்த வகையில் உயர்வு…! அவன் குழம்பியபடி MD அறையை நெருங்கினான். அங்கு அவன் முறையாக விசாரிக்கப்பட்டு தீரஜ்பிரசாத்தின் அனுமதியின் பெயரில் பத்து நிமிட காத்திருப்புக்கு பின் உள்ளே அனுமதிக்கப்பட்டான்.
அங்கு முதலாளி இருக்கையில் அமர்ந்திருந்தவனை பார்த்ததும் கபிலனின் கண்களில் ஆச்சர்யம். கிட்டத்தட்ட அவன் வயதேயுடைய ஒருவன் எவ்வளவு சாதித்திருக்கிறான். அவனுக்குள் பொறாமை துளிர்விட்டது…
அதே நேரம் கபிலனை கண்களால் அளந்த தீரஜ்ஜும் அவனை பார்த்து பொறாமை பட்டான். ‘என்னை விட நீ எந்தவிதத்தில் உயர்வு…? என் சூர்யாவை அபகரித்துவிட்டாயே…!’ பார்வையை கூர்மையாக்கி எதிரில் நிற்பவனை அளவெடுத்தான்.
“வணக்கம் சார்…” கபிலன் அதிகப்படியான பணிவை காட்டினான்.
தீரஜ் அவனுக்கு பதில் வணக்கம் சொல்லாமல், சிறு தலையசைவுடன் அவனுக்கு முன்னாள் இருக்கும் இருக்கையை கையசைவில் காட்டினான்.
நுனி இருக்கையில் அமர்ந்த கபிலன் “சார் நான் கபிலன். இன்னிக்குதான் இங்க சீனியர் இஞ்சினியரா ஜாயின் பண்ண வந்திருக்கேன். உங்களை பார்க்க சொல்லி செய்தி வந்தது….” என்றான் பணிவுடன்.
“வெல்… மிஸ்டர் கபிலன்…. இதுக்கு முன்னாடி எங்க வேலை பார்த்திங்க… அங்க உங்களோட பாக்கேஜ் என்ன… எல்லா விபரமும் உங்க பேபெர்ஸ் பார்த்து தெரிஞ்சுகிட்டேன். அங்க நீங்க எப்படி வேணுன்னாலும் இருந்திருக்கலாம். பட் இங்க கடுமையா உழைக்க வேண்டியிருக்கும். நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்ய வேண்டியிருக்கும். உங்களால முடியும் என்றால் இன்னிக்கு ஜாயின் பண்ணிக்கோங்க. இல்லன்னா நீங்க போகலாம்.” கறாராக பேசினான்.
“கண்டிப்பா என்னுடைய கடின உழைப்ப நீங்க எதிர்பார்க்கலாம் சார்… ”
“நிச்சயாமா…?”
“நிச்சயமா சார்…”
“ஓகே… அப்போ இந்த டாக்குமெண்ட நல்லா படிச்சு பார்த்துட்டு ஒரு சைன் பண்ணுங்க…” ஒரு பத்திரத்தை தீரஜ் கபிலனுக்கு முன் தள்ளினான்.
அவன் படித்து பார்த்தான். இன்று இந்த கம்பெனில் அவன் சேர்ந்துவிட்டால் முதல் மூன்று மாதம் சம்பளத்துடன் கூடிய பயிற்சி காலமாக எடுத்துக் கொள்ளப்படும். அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் அந்த நிறுவனத்தின் முன்னேற்றத்தில் அவனுடைய பங்களிப்பு இருக்க வேண்டும். இல்லை என்றல் அவனுடைய ஆறு மாத சம்பளத்திற்கு ஈடான தொகையையும்… முதல் மூன்று மாதம் அவனுக்கு அளிக்கப்பட பயிற்சிக்கான கட்டணத்தையும் செலுத்திவிட்டு வெளியேற வேண்டும். அவனுடைய வேலையில் திருப்தி இல்லையெனில் நிர்வாகம் எந்த நேரத்திலும் அவனை வெளியேற்றலாம்… என்று எழுதப்பட்டிருந்தது.
மேலோட்டமாக பார்த்தால் இந்த ஒப்பந்தம் சாதரணமாக தோன்றும். அனேகமாக நிறுவனங்களில் இது போல் ஒப்பந்தம் போடுவது வழக்கம்தான். ஆனால் கிருஷ்ணா கெமிக்கல்சில் போடப்படும் ஒப்பந்தம் இவ்வளவு கடுமையாக இருக்காது. வேலையிலிருந்து விலக வேண்டுமானால் ஒரு மாதத்திற்கு முன் தெரியப்படுத்திவிட்டால் போதும். இந்த ஒப்பந்தம் தனக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டது என்பதை அறியாத கபிலன் ஆழமாக யோசிக்காமல் கிரிஷ்ணா கெமிக்கல்சில் வேலை கிடைத்ததே பெரிய விஷயம் என்று எண்ணி உடனடியாக பேனாவை எடுத்து கையெப்பமிட்டான்.
அன்றிலிருந்து அவனுக்கு சோதனை காலம் ஆரம்பமானது. தீரஜ் அவனை வேலையில் சக்கையாக பிழிந்து எடுத்தான். ட்ரைனிங் என்கிற பெயரில் வேலை நேரம் தவிர மேலும் பல மணிநேரம் அவன் அலுவலகத்திலேயே இருக்கும்படி பார்த்துக் கொண்டான்.
காலை ஆறுமணிக்கு அலுவலகம் வரும் கபிலன் இரவு பனிரெண்டு மணிக்குதான் வீடு திரும்புவான். மீண்டும் அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும். உண்மையில் அவன் கடுமையாக உழைத்தான். அவன் உழைப்புக்கு ஏற்ற சம்பளத்தை விட இரண்டுமடங்கு அதிகமான சம்பளம் அவனுக்கு வழங்கப்பட்டது. போக்குவரத்து வசதி தனியாக செய்து தரப்பட்டது. பல சமயங்களில் தீரஜ் அவனை நேரில் அழைத்து பாராட்டவேறு செய்வான். இவையெல்லாம் உற்ச்சாகமூட்ட அவன் ஆர்வமுடன் வேலை செய்தான். வேலை… வேலை… வேலை… பணம்… பணம்… பணம்… இது தவிர அவன் மனதில் எதற்கும் இடம் இல்லாமல் போய்விட்டது.
‘எப்படி பணம் சேர்ப்பது….? எப்படி தீரஜ் போல பணத்தில் புரல்வது? அவனளவு இல்லாவிட்டாலும் அவனை போல் பத்தில் ஒரு பங்காவது வளர வேண்டும்…’ என்பதை பற்றி மட்டும்தான் அவன் சிந்தனை ஓடிக்கொண்டிருக்கும்.
அதே சிந்தனையில் இருந்தவன் சூர்யாவை வேலைக்கு செல்லும்படி கட்டாயப்படுத்தினான்.
“ஏய்… எங்க கம்பனில ஒரு வேகன்சி இருக்கு… நீ அப்லை பண்ணு…”
“எதுக்கு…?”
“ம்ம்ம்… இப்படியே எத்தனை நான் வீட்டுல உக்காந்து காலம் கடத்தலாம் என்று பிளான் போட்டுருக்க…?”
“……………..”
“நாளைக்கு விண்ணப்பம் கொண்டுவந்து தர்றேன். ஒழுங்கா அப்ளை பண்ணு…” அவன் அதிகாரமாக சொல்லிவிட்டு படுக்கைக்கு சென்றான்.
மறுநாள் சொன்னது போலவே வேலைக்கான விண்ணப்பத்துடன் வீட்டிற்கு வந்தான். அவள் அந்த வேலைக்கு விண்ணப்பிக்க மறுத்துவிட்டாள். அன்றிலிருந்து கபிலன் தன் சுயரூபத்தை சூர்யாவிடம் காட்ட ஆரம்பித்தான்.
எத்தனை மணிக்கு வீட்டிற்கு வந்தாலும் அவளை ஒரு பாடு படுத்தாமல் ஓயமாட்டான்.
“மூணு நேரமும் மூக்கபிடிக்க சாப்பிட தெரியுது… இந்த சின்ன வீட்டை சுத்தமா வச்சுக்க முடியலையா…?” என்று சொல்லி எரிந்து விழுவான்.
“சாம்பார்ல ஏன் காரம் அதிகமா போட்டுருக்க…? தண்ட சோறு… தண்ட சோறு…” சாப்பாட்டை வீடு முழுக்க விசிறியடித்துவிட்டு படுக்க சென்றுவிடுவான்.
“இந்த மெத்தை விரிப்பை துவைத்து எத்தனை நாள் ஆகுது… உங்க அப்பன் மாதிரி என்னை அழுக்கன்னு நினைத்தியா…?” என்று படுக்கை விரிப்பை உருவி அவள் முகத்தில் அடிப்பான்.
அவளுடைய கைபேசியை கைபற்றிவிட்டவன் அவளை அவள் பெற்றோருடன் பேசவே அனுமதிக்கவில்லை. அவர்கள் அழைக்கும் போது எப்போதாவது இவன் வீட்டில் இருந்தால் ஓரிரு வார்த்தை பேச அனுமதிப்பான்.
அவளிடம் எந்த சேமிப்பும் இல்லாதபடி செய்து… அவளுடைய எல்லா தேவைகளுக்கும் அவள் அவனிடம் வந்து நிற்கும்படி செய்துவிட்டான்.
சூர்யா வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை என்பதால் அவள் தீரஜ்பிரசாத்தை சந்திக்கவில்லை. ஆனாலும் அவனுடைய ஊரில் அவனுக்கு சொந்தமான இடத்தில் அவன் நிழலில் இருப்பது சூர்யாவிற்கு முள் மேல் நிர்ப்பது போல் இருந்தது. அதோடு கபிலனின் நடவடிக்கைகள்வேறு அவளுக்கு மேலும் நெருக்கடியை கொடுத்தன. இப்படியே ஒரு மாதம் ஓடிவிட்டது.
இதுவரை சூர்யா கபிலனிடம் ‘எனக்கு இது வேண்டும்…’ என்று எதையும் கேட்டதில்லை. அவள் அவளுடைய தேவைகளை மிகவும் குறுக்கிக் கொண்டாள். அன்று கபிலன் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு வந்தான். அதை பிரித்து பார்த்த சூர்யா அதிர்ந்தாள். அதில் வீட்டிற்கு என்று எதுவுமே இல்லை. எல்லாம் அவனுடைய தேவைகளுக்காக மட்டும்தான் இருந்தது.
அவளுக்கு தேவையானதை அவள் அவனிடம் கேட்க வேண்டும் என்று அவன் நினைக்கிறானோ…! ஆனால் சூர்யாவால் கேட்க முடியவில்லை.
அன்று கபிலன் அலுவலகத்திற்கு சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு வரும்போது குளிர்சாதன பெட்டி நிரம்பியிருந்தது. எப்போதும் போல் மாத மளிகை சாமான் முதல் வீட்டிற்கும் அவளுக்கும் தேவையான பொருட்கள் வரை அனைத்தும் வாங்கி வைக்கப்பட்டிருந்தது. அவன் கொதித்தான்.
“ஏய்… உன்கிட்டதான் காசு இல்லையே… எப்படிடி இதெல்லாம் வாங்கின…?”
அவள் அவளுடைய கையை உறர்த்தி காண்பித்தாள். அங்கு இருந்த மோதிரம் ஒன்று இப்போது காணாமல் போயிருந்தது.
அடுத்த நொடி அவன் அவள் கன்னத்தில் பட்டென்று ஒன்று கொடுத்தான்.
“யாரை கேட்டுடி மோதிரத்தை விற்றாய்…?” சீறினான்.
“அது என் மோதிரம்… நான் யாரை கேட்க வேண்டும்…?”
“உன் கழுத்தில் நான் தாலி கட்டியபோதே உன்னோடு சேர்த்து உன் கையில் இருந்த மோதிரமும் எனக்கு சொந்தமாகிவிட்டது… என்னை கேட்காமல் நீ மூச்சு கூட விடக்கூடாது. அப்படி இருக்கும் போது மோதிரத்தை விற்க உனக்கு என்ன துணிச்சல் இருக்க வேண்டும்…”
அவனுடைய பேச்சில் சூர்யா விக்கித்தாள்.
“உனக்கு தேவையானதை நீ என்னிடம்தான் கேட்க வேண்டும். என்னை என்ன உன்னை போல் வேலை இல்லாதவன் என்று நினைத்தாயா…? தண்ட சோறு… தண்ட சோறு…”
அவன் பேசியதை கேட்ட சூர்யாவிற்கு இவன் உழைப்பில் உக்கார்ந்து உண்பதைவிட கேவலமான தொழில் வேறு எதுவும் இருக்க முடியாது என்று தோன்றியது. கையேடு கொண்டுவந்திருந்த டூப்ளிகேட் சான்றிதழை வைத்து அவள் மறுநாளே வேலைக்கு விண்ணப்பித்தாள்.
Comments are closed here.