இதயத்தில் ஒரு யுத்தம் – 25
4979
0
அத்தியாயம் – 25
கபிலனின் பணத்தில் ஜீவிப்பது பிடிக்காமல் சூர்யா வேலை தேடிக்கொண்டாள். ஒரு சிறிய கம்பெனியில் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்தாள்.
விபரம் அறிந்த கபிலன் சூர்யாவிடம் பாய்ந்தான்.
“ஏய்… வேலைக்கு போறதுன்னு முடிவு பண்ணிட்ட… அப்புறம் ஏன்டி ஒரு உருப்படாத கம்பெனிக்கு போற…? கிருஷ்ணா கெமிக்கல்சுக்கு வர்றதுக்கு என்ன…?”
“எனக்கு பிடிக்கல…”
“எனக்கும்தான் உன்னை பிடிக்கல… நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு வாழலையா… சும்மா வீம்பு பிடித்து என்னோட கோபத்தை கிளராத சொல்லிட்டேன்…” அவன் கடுப்படித்தான்.
“என்னால கே.சி க்கு வர முடியாது. கொஞ்ச நாள் பொறுத்துக்கோங்க… வேற நல்ல கம்பெனில நல்ல சம்மலத்துல வேலை தேடிக்கிறேன்…” அவள் அமைதியாக அவனுக்கு எடுத்து சொன்னாள்
“ஏன் வர முடியாது…? முன்னாடி இங்கதானே நீ வேலை பார்த்த… இப்போ மட்டும் என்ன…?”
“………………” அவள் மௌனமாகிவிட்டாள். அவளால் பேச முடியவில்லை. தீரஜ்ஜின் நினைவு அவள் மனதை அழுத்தியது.
“சொல்லுடி… சொல்லு… ” அவன் கத்திக் கொண்டிருந்தான்.
“ப்…ளீ…ஸ்…. ப்ளீஸ்… என்னை எதுவும் கேட்காதிங்க… என்னால எதுவும் சொல்ல முடியாது…” அவள் அவளுடைய கட்டுப்பாட்டை இழந்து கொண்டிருந்தாள்.
கபிலனின் தலைக்குள் மணியடித்தது.
‘இவள் ஏதோ ஒரு பெரிய விஷயத்தை மறைக்கிறாள்…!’ இங்குதான் அவனுடைய சந்தேக கண் விழித்தது.
அதன் பிறகு இருவருமே எதுவும் பேசாமல் அவரவர் அலுவலுக்கு சென்றுவிட்டார்கள்.
அன்று இரவு வேலை முடித்து வரும் போது கபிலன் கண்மண் தெரியாமல் குடித்துவிட்டு வந்தான். அவனுடைய சிவந்த விழிகளும் கோணல் சிரிப்பும் அவளை அச்சுறுத்தின. கோசிகாலன் மக்கள் அனைவரும் அமைதியாக உறங்கும் நேரத்தில் சூர்யா மட்டும் உறக்கத்தை தொலைத்துவிட்டு கபிலனின் பிடியில் சிக்கி தவித்தாள்.
“சாப்பாடு எடுத்து வைக்கவா…?” அவள் பயந்து கொண்டே அவனிடம் கேட்க,
“யாருடி அவன்…?” அவன் அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் மற்றொரு கேள்வியை கேட்டான்.
அவனுடைய கேள்வியில் அதிர்ந்த சூர்யா “யாரு…?” என்றாள் நடுக்கத்துடன்.
“அவன்தாண்டி உன்னோட முன்னாள் காதலன்… தப்பு… தப்பு… இந்நாள் கள்ள காதலன்… ஹி… ஹி…” அவன் கேட்ட கேள்வியில் அவள் உடல் பதற… அவன் இளித்த இளிப்பில் நெஞ்சாங்கூடு சில்லிட்டது.
“ஏ… ஏன் இப்படி பேசுறீங்க…? அப்படியெல்லாம் யா..யாரும் இல்ல…” அவள் திணறினாள்.
“அடிச்சு மூஞ்சி முகறையெல்லாம் பேத்துடுவேன்…. உன் லச்சனத்தைதான் நான் காலையிலேயே பார்த்துட்டேனே… KC -ல யாருடி அவன்… அவனுக்கு பயந்து தானே நீ அங்க வேலைக்கு வரமாட்டேன்கிற…?”
“………………….”
“உன்ன உன் அப்பன் வலிய வந்து என் தலையில கட்டும்போதே நான் சுதாரிச்சிருக்கனும்டி… ஏமாந்துட்டேன்…”
“……………………….”
“அது சரி… எவ்வளவு தூரம் உங்க பழக்கம் போச்சு… சொல்லு… எல்லாம் முடிஞ்சிருச்சா…? அதுதான் கழட்டிவிட்டுடானா…?”
“…………………..” அவள் உதட்டை அழுந்த கடித்து தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள்.
“சொல்லுடி… கேட்குறேன்ல… சொல்லு…” அவள் தோளை பிடித்து உலுக்கினான்.
அவள் வெடித்து அழுதாள். அவனுக்கிருந்த போதை மயக்கத்தில் அவள் அழுவதெல்லாம் அவனுக்கு பொருட்டாகவே இல்லை. அவன் மிருகமாக மாறி ஆணின் பலத்தை காட்டினான்.
அழுதழுது ஓய்ந்த சூர்யா காலை எட்டு மணிக்குதான் எழுந்தாள். அப்போதும் கபிலன் உறங்கிக் கொண்டிருந்தான். புயலில் அடிபட்ட அவள் உடல் துவண்டது. முயன்று எழுந்து குளித்துமுடித்தவள்… அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லிவிட்டு சமயலறைக்கு சென்று வேலைகளை கவனித்தாள். அவன் எழுந்ததும் அவனிடம் என்ன பேசவேண்டும் என்று மனம் கணக்கிட்டுக் கொண்டிருந்தது.
படுக்கையிலிருந்து எழுந்து வந்தவனுக்கு என்ன தோன்றியதோ… சூர்யாவின் முகத்தை பார்க்காமல் குளியலறைக்குள் புகுந்து கொண்டான். சூர்யா சமையல் வேலைகளை முடித்துவிட்டு காத்துக் கொண்டிருக்கும் போது அவன் குளியலறையிலிருந்து வெளியே வந்தான்.
சூர்யா அவனை நேராக பார்த்தாள். அவன் அவள் முகத்தை பார்க்காமல் வெளிப்பக்கம் போனான்.
“ஒரு நிமிஷம்… நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்…” மெலிந்த குரல்தான் என்றாலும் உறுதியாக பிசிறடிக்காமல் வந்தது.
அப்போதும் அவன் அவள் முகத்தை திரும்பி பார்க்காமல் அவளுக்கு முதுகு காட்டியபடியே நின்றான்.
“நேற்று இரவு என்ன நடந்ததுன்னு நினைவு இருக்கா..?”
“…………………..” அவன் எதுவும் பேசவில்லை. நின்ற நிலையிலிருந்து அசையவும் இல்லை.
“நீங்க நேற்று கேட்ட கேள்விக்கு இன்று பதில் சொல்கிறேன். திருமணத்திற்கு முன்பே உங்களிடம் சொல்லியிருக்க வேண்டும்… சொல்லாமல் விட்டது என் தவறுதான்… பெரிய தவறு…”
“…………………..”
“நான் KC -இல் ஒருவரை காதலித்தது உண்மைதான்…..”
இதுவரை தீரஜ்ஜிடம் கூட சொல்லியிராத ஒரு விஷயத்தை இன்று கபிலனிடம் சொன்னாள்.
அவன் சட்டென திரும்பி அவளை பார்த்தான். என்னதான் பணத்தாசை பிடித்த சின்ன புத்திகாரனாக இருந்தாலும் அவன் மனைவி மற்றொருவனை காதலித்துவிட்டு இவனை திருமணம் செய்திருக்கிறாள் என்கிற செய்தி அவனுக்கு உவப்பானதாக இருக்க முடியாதே. அவனுக்கும் வலித்திருக்குமோ…!
“ஆனால் நீங்கள் சொன்னபடி காரியம் முடிந்ததும் அவன் என்னை உதறிவிடவில்லை. அவன் காதலை என்னிடம் சொன்னான். எனக்கும் அவனை பிடித்திருந்தது. என் காதலை அவனிடம் சொல்ல நினைக்கும் போது அவன் நல்லவன் இல்லை என்கிற உண்மை எனக்கு தெரியவந்தது. அதனால் நான்தான் அவனை உதறிவிட்டு உங்களை திருமணம் செய்து கொண்டேன்.” இதை சொல்லும் போது அவள் மனம் வலித்தது. முன்பு தீரஜ் கொடூரமானவன் என்று நினைத்த சூர்யாவால் ஏனோ இப்போது அப்படி நினைக்க முடியவில்லை. ‘அவன் பக்கம் ஏதாவது ஞாயம் இருந்திருக்குமோ…!’ என்ற எண்ணம்தான் தோன்றியது.
“யார் அவன்…?” முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் கேட்டான்.
“………………”
“சொல்லு சூர்யா… யார் அவன்…?”
“தீரஜ்பிரசாத்…”
“எ…ன்…ன…து…?!” அவன் அதிர்ச்சியின் உச்சகட்டத்தில் இருந்தான். அவனை போல் அந்த கம்பெனியில் வேலை செய்யும் யாரையாவது சொல்லுவாள் என்று நினைத்து கேட்டவனுக்கு “தீரஜ்பிரசாத்” என்ற பெயரை கேட்டதும் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. அவன் அதிர்ந்த முகத்துடன் அவளை பார்த்தான்.
“ஆமாம்… உங்கள் முதலாளி தீரஜ்பிரசாத்தான்…” அவள் மீண்டும் ஒரு முறை தெளிவாக சொன்னாள்.
சிலகணம் அவள் முகத்தை ஆராய்ச்சியுடன் பார்த்தவனின் கண்களில் ஒரு ஏளனம் வந்து மறைந்தது. அதை கவனிக்காத சூர்யா தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தாள்.
“நம்முடைய திருமணம் என்னுடைய சம்மதம் இல்லாமல்தான் நடந்தது… இதையெல்லாம் நான் உங்களிடம் விளக்கி சொல்லியிருக்க வேண்டும். சொல்லாதது என் தவறுதான். ஆனால் அதற்காக நேற்று நீங்கள் என்னிடம் நடந்துகொண்ட முறை கொஞ்சமும் சரியில்லை…”
“………………………….”
“நான் போகிறேன்… என் அப்பாவிடம் போகிறேன்… நீங்கள் உங்கள் வழியை பார்த்துக் கொள்ளுங்கள்… நான் என் வழியை பார்த்துக் கொள்கிறேன்…” அவள் தெளிவாக சொன்னாள். அடுத்த நொடி கபிலன் அவள் கொஞ்சமும் எதிர்பார்க்காத செயலை செய்து அவளை திகைக்க வைத்தான்.
Comments are closed here.