இதயத்தில் ஒரு யுத்தம் – 27
3853
0
அத்தியாயம் – 27
அன்று சூர்யா வேலை செய்யும் அலுவலகம் பரபரப்பாக இருந்தது. புது முதலாளி வந்திருக்கிறார். அவர் மேல்மட்டத்தில் வேலை செய்பவர்கள் அனைவரையும் தனித்தனியாக அழைத்து பேசிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொருவரும் தங்களை எப்போது அழைப்பாரோ என்கிற பரபரப்பில் தங்கள் வேலைகளை சரிவர செய்து கொண்டிருந்தார்கள்.
வேலையில் சேர்ந்து ஒரு வாரம்தான் முடிந்திருக்கிறது என்பதால் சூர்யாவிற்கு முடிக்க வேண்டிய வேலைகள் அதிகம் இல்லை… அதனால் அவள் முதலாளியின் அழைப்பிற்காக காத்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் அழைப்பும் வந்தது.
முதலாளியின் அறைக்கதவை ஒற்றை விரலால் தட்டி அனுமதிக் கேட்டுக் கொண்டு கதவை திறந்தவள் நிச்சயம் தீரஜ்பிரசாத்தை அங்கு எதிர்பார்க்கவில்லை. அவள் மலங்க விழித்துக் கொண்டு நிற்கும் போதே,
“கம் இன்….” அவன் அவளை உள்ளே வர சொன்னான். எப்படிதான் அவனுடைய கண்களில் அப்படி ஒரு அந்நியத்தன்மையை கொண்டுவந்தானோ… அது அந்த கடவுளுக்குதான் வெளிச்சம்…
இவளுடைய திகைத்த விழிகளை பார்த்து ‘ஏன் இந்த பெண் இப்படி பார்க்கிறாள்…?’ என்பது போல் பதில் பார்வை பார்த்து மட்டும் அல்லாமல் அவளை இதற்கு முன் பார்த்ததே இல்லை என்பது போல ஒரு பார்வை பார்த்து வைத்தான்.
சூர்யாவிற்கு ஒரு நொடி சந்தேகமே வந்துவிட்டது…
‘இவன் தீரஜ்தானா…! அல்லது… அவனோடு ஒட்டி பிறந்த இரட்டை பிறவி சகோதரன் யாரேனும் உண்டோ…! இல்லையே… தீரஜ் தன்னை பெற்றோருக்கு ஒரே பிள்ளை என்றுதானே சொன்னான்…’ அவள் பயங்கரமாக குழம்பிவிட்டாள்.
குழப்பமெல்லாம் மேஜை மீதிருந்த பெயர் பலகை அவள் கண்ணில் படும் வரைதான். அதில் பொறிக்கப்பட்டிருந்த பெயர் அவன் தீரஜ்தான் என்பதை தெளிவாக சொல்ல அவள் மனம் வெகுவாக புண்பட்டது.
‘இவன் என்னை மறந்தேவிட்டானா…! எப்படி இவனால் முடிந்தது…? என்னால் முடியவில்லையே…’ ஒரு நொடி தன்னிலை மறந்து சூர்யாவின் மனம் தீரஜ்பிரசாத்திடம் உரிமையை எதிர்பார்த்தது.
பிறகு தன்னுடைய நிலையை எண்ணி ‘ச்ச… என்ன நான் இப்படியெல்லாம் நினைக்கிறேன்…! எனக்கு திருமணம் முடிந்துவிட்டது… கபிலன்தான் என் கணவன். அவனுக்கு நான் உண்மையாக இருக்க வேண்டும்…’ அவள் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள்.
சூர்யாவின் எண்ண ஓட்டத்தையும் தடுமாற்றத்தையும் அவள் முக பாவத்திலிருந்து கண்டு கொண்ட தீரஜ்பிரசாத்தின் முகத்தில் கசப்பான புன்னகை வந்து மறைந்தது.
“உக்காருங்க…” என்று சொல்லி அவள் கையில் இருந்த கோப்பை வேண்டி கை நீட்டினான்.
சூர்யா அதை அவனிடம் நீட்டினாள். அதை வாங்கி புரட்டியபடியே “உங்க பேர்…?” அவளிடம் கேள்வி கேட்டான்.
“சூ… க்க்ம்… சூர்யா…” பதில் பேசவிடாமல் அடைத்த தொண்டையை செருமி சரிசெய்து கொண்டு அவனுக்கு பதில் சொன்னாள்.
“எவ்வளவு நாளா இங்க வேலை பார்க்குறீங்க…?”
“ஒரு வாரமா…”
“இதுக்கு முன்னாடி என்ன செய்துகிட்டு இருந்திங்க…?”
“கிருஷ்ணா கெமிக்கல்ஸ்ல வேலை செய்து கொண்டிருந்தேன்… ”
“கிருஷ்ணா கெமிக்கல்ஸ்…!” அவன் குரலில் பெரிய ஆச்சர்யத்தை கொண்டு வந்து அவளை கேள்வியாக பார்த்தான்.
அவனுடைய இந்த பாவம் அவளை மிகவும் வருத்தியது. ‘தூக்கியெரிந்தேவிட்டானே…!’
“ஆமாம்… கிருஷ்ணா கெமிக்கல்ஸ்தான்…” அவள் மெலிந்த குரலில் பதில் சொன்னாள்.
“அது பெரிய கம்பெனியாச்சே…! அந்த வேலையை விட்டுட்டு இங்க ஏன் ஜாயின் பண்ணியிருக்கீங்க…?”
“அவள் உதட்டை அழுந்த கடித்துக் கொண்டாள்.”
“மிஸ். சூர்யா… ம்ம்ம்… மிஸ் தானே…!”
அவன்தான் பெரிய தவறு செய்துவிட்டவன் போல் முறுக்கிக்கொண்டு சென்னைக்கு ஓடிய சூர்யா… இன்று தன்னை ஒரு கொலை குற்றவாளி போல் உணர்ந்து குறுகினாள்.
“ஓகே… அது என்னவா வேண்டுமானாலும் இருக்கட்டும்… ஏன் KC-ல பார்த்த வேலையை விட்டுட்டு இங்க வந்து ஜாயின் பண்ணியிருக்கீங்க…? பதில் சொல்லுங்க…”
“சில சொந்த பிரச்சனைகளால் அந்த வேலையை விடவேண்டியதா போச்சு… இப்போ இந்த கம்பெனில வேலை கிடைத்தது… ஜாயின் பண்ணிவிட்டேன்…” சுரத்தில்லாமல் சொன்னாள்.
அந்த குரல் தீரஜ்பிரசாத்தை பாதித்ததோ…! அதற்கு மேல் அவளிடம் பழைய விஷயத்தை கிளரும்படி வேறு எதையும் கேட்காமல் வேலை சம்மந்தமாக சில கேள்விகளை கேட்டுவிட்டு அவளை அனுப்பினான்.
மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டிருந்தவளுக்கு அந்த அறையிலிருந்து வெளியேறியதும்தான் இயல்பாக மூச்சுவிட முடிந்தது.
வெளியே வந்து ஆசுவாசப்படுத்திக் கொண்ட பிறகு நிதானமாக யோசித்த சூர்யாவிற்கு பல விஷயங்கள் விளங்கவில்லை….
‘எனக்கு திருமணம் முடிந்துவிட்ட விஷயம் இவனுக்கு தெரியுமா…?’
‘பிறகு ஏன் என்னிடம் சண்டை போடவில்லை… ‘
‘நான் இங்கு வேலை பார்ப்பது அவனுக்கு தெரியுமா…? தெரிந்துதான் இந்த கம்பனியை வாங்கினானா…?’
‘அப்படியானால் என்னை தெரிந்தமாதிரியே ஏன் காட்டிக்கொள்ளவில்லை….?’
‘ஒருவேளை அவன் நம்மை உண்மையிலேயே மறந்துவிட்டானா…! அது எப்படி முடியும்… மறக்க வேண்டும் என்று நினைத்தவுடன் ஒரு மனிதனால் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை நினைவிலிருந்து அழித்துவிட முடியுமா…!’
அவளுக்கு ‘ஐயோ…’ என்றிருந்தது… தலையை பிடித்துக் கொண்டாள். தீரஜ் அவளை திட்டியிருந்தாலோ கேள்வி கேட்டிருந்தாலோ அவளால் தாங்கியிருக்க முடியும்… ஆனால் இந்த விலகல் அவளை வெகுவாக பாதித்தது. இந்த மன வலியைதானே அவன் குறிவைத்தான்… அவன் குறி தப்பவில்லை…
அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்த சூர்யா எந்த வேலையையும் பார்க்கும் சிந்தனை இல்லாமல் விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தாள்.
தீரஜ் இருக்கும் இடத்தில் சூர்யாவால் இருக்க முடியவில்லை. அவளால் கபிலனின் கொடுமைகளை கூட சகித்துவிட முடிந்தது ஆனால் தீரஜ் அவளை தள்ளி நிருத்திரியிருப்பதை சகிக்க முடியவில்லை. அவள் அவனிடம் என்ன எதிர்பார்க்கிறாள்…. அவளுக்கே புரியவில்லை.
அவள்தான் அவனுடைய நட்பையும் காதலையும் தூக்கி எரிந்தாள். இப்போது அவன் அவளை தூக்கி எறிந்துவிட்டான் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறாள்.
அதே நேரம் கபிலனும் அவளுடைய மனக்கண் முன் வந்து ‘நான்தான் உன் கணவன்… நீ மாற்றானை நினைக்கிறாயே… துரோகி…’ என்று கூக்குரலிட்டான்.
‘இல்லை… இல்லை… மாற்றானை நினைக்கவில்லை… நான் அவனுடைய காதலை எதிர்பார்க்கவில்லை… அந்த தகுதி எனக்கில்லை….. ஆனால் அவனுடைய நட்பு… அதுவும் கிடைக்காதோ…! அந்த தகுதியையும் இழந்துவிட்டேனோ…! சரி நட்பு வேண்டாம்… என்னை விரோதியாகவேனும் பார்க்கலாமே… அதையும் தவிர்த்து இப்படி தூர தூர விளக்கி தள்ளிவிட்டானே…!’ அவள் மனம் புலம்பியது.
‘ஆமாம்… இழந்துவிட்டாய்தான்… நீயாகத்தானே அந்த பொக்கிஷத்தை தூக்கியெரிந்தாய்…’ இன்னொருமனம் கேள்விகேட்டது…
‘ஆனால் அவனும் தவறு செய்தானே… அப்பாவிகளை வதைத்தானே… இன்னமும் அப்படிதானே இருக்கிறான்…’
‘பிறகு ஏன் நீ அவனுக்காக ஏங்குகிறாய்…?’
“ஐயோ… கடவுளே…! தெரியவில்லையே…! எனக்கு தெரியவில்லையே…!” அவள் வாய்விட்டு புலம்பியபடி குலுங்கி அழுதாள்.
Comments are closed here.