இதயத்தில் ஒரு யுத்தம் – 30
4331
0
அத்தியாயம் – 30
சூர்யாவின் கையை விடாபிடியாக பிடித்திருந்த கபிலனின் கைபேசி அலறியதும் வேறு வழியின்றி அவள் கையை விட்டுவிட்டு கைபேசியை எடுத்து பேசினான்.
“ஹலோ…”
“ஹலோ யாருங்க பேசுறது…?”
“தீரஜ்பிரசாத்…”
அவனுக்குள் ஒரு இன்ப படபடப்பு தோன்றியது. ‘யாரும் நெருங்கவே முடியாத தீரஜ் நம்மை தனிப்பட்ட முறையில் கைபேசியில் அழைக்கிறானே…! ஆஹா… நீ பொழச்சுக்குவடா கபிலா….’ அவன் மகிழ்சியாக பேசினான்…
“சார்… வணக்கம் சார்… சொல்லுங்க சார்… நான் பார்ட்டிக்கு வந்திருக்கேன் சார்… இங்கதான் சார்… தோட்டத்துல இருக்கேன்… நீங்க என்னை கவனிக்கல போலிருக்கு சார்…” தீரஜ் எதற்காக அவனுக்கு கைபேசியில் அழைத்தான் என்பதே தெரியாமல் படபடப்பில் உளறினான்.
“ம்ம்ம்… கபிலன்… இங்கதான் இருக்கிங்களா… ஓகே… அப்படியே உள்ள வந்து மாடிப்படியில ஏறி மேல வாங்க… உடனே…”
“ஓகே சார்…” அவன் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்காமல் உடனே தோட்டத்திலிருந்து உள்ளே செல்ல எத்தனித்தான்.
சூர்யா அவனை கேள்விக்குறியாக பார்த்தாள்.
“மாடில என்னோட ஃபிரண்டு என்னக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கானாம்… போயி அவனை பார்த்துட்டு வந்திடறேன்…” எந்த காரணமும் இல்லாமலே இயல்பாக கபிலன் தீரஜ்பிரசாத்தின் பெயரை சொல்லாமல் மறைத்து பேசினான்.
“மாடிலையா…! பார்ட்டி ஹால் கீழதானே… மாடிக்கு எம்ப்லாயீஸ் போறதுக்கு பர்மிஷன் கொடுக்க மாட்டாங்களே…! உங்க ஃபிரண்டு எப்படி மாடில வெயிட் பண்ணுறார்…? யார் உங்க பிரண்டு…?” அவள் குழப்பமாக வினவினாள்.
“சும்மா… நை… நைன்னு கேள்வி கேட்டு கொல்லாத… போசாம கொஞ்ச நேரம் இங்கேயே வெயிட் பண்ணு…” அவன் பதில் சொல்வதை தவிர்த்துவிட்டு வேகமாக உள்ளே சென்று அகண்ட… பட்டு கம்பளம் விரிக்கப்பட்ட மடிப்படிகளில் ஏறினான்.
தீரஜ் மீண்டும் கபிலனுக்கு அழைத்து அவன் எந்த அறைக்கு வரவேண்டும் என்கிற விபரத்தை சொல்லி அவனை அங்கு வரவழைத்தான். அவனும் சரியாக தீரஜ்பிரசாத்தின் அறையை அடைந்து கதவை தட்டினான்.
“உள்ளே வா…” என்ற இறுகிய குரல் அவனை வரவேற்றது.
தீரஜ்பிரசாத்தின் அறை இப்படிதான் இருக்கும் என்கிற கபிலனின் கற்பனையையும் மீறி பிரம்மாண்டமாக இருந்த அந்த அறையின் ஒரு பக்கத்தில் தீரஜ் அமர்ந்திருந்தான். அவனுக்கு முன் டீப்பாயில் மது பாட்டில்களும் கோப்பைகளும் மேலும் சில உணவு பொருட்களும் அடுக்கியிருந்தன.
கபிலன் தயங்கியபடி உள்ளே வந்தான். நிதானமாக மது அருந்திக்கொண்டிருந்த தீரஜ், அவனை ஒரு மூலையில் போடப்பட்டிருந்த ஒற்றை நாற்காலியை காட்டி அதில் அமரச்சொன்னான்.
அவன் அமர்ந்திருக்கும் இடத்திற்கும் தன்னை அமரசொன்ன இடத்திற்கும் ஏகப்பட்ட இடைவெளி இருப்பதை கவனித்தபடி குழப்பத்துடன் முதலாளி சொன்னதை செய்தான் கபிலன்.
தன்னை தவிர அந்த அறையில் மற்றொருவன் இருக்கிறான் என்பதையே மறந்துவிட்டவன் போல ஒரு மணிநேரம் நிதானமாக மது அருந்திய பிறகு வீடியோ கேம் விளையாட ஆரம்பித்தான் தீரஜ்பிரசாத். அவன் வீடியோ கேம் விளையாடிய திரையை கபிலனால் பார்க்க முடியாததால்… தீரஜ் கேம் விளையாடுவதோடு கீழே பார்ட்டியில் என்ன நடக்கிறது என்பதையும் அவ்வப்போது திரையில் கொண்டுவந்து பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதும் தெரியாமல் போனது…
கபிலனுக்கு தீரஜ்பிரசாத்தின் விசித்திர நடவடிக்கை குழப்பத்தையும் எரிச்சலையும் ஒருங்கே ஏற்படுத்தியது. பள்ளி மாணவனை ஆசிரியர் சத்தம் போடாமல் அமைதியாக ஒரு மூலையில் அமரும்படி உத்தரவிட்டு அமரவைத்திருப்பது போல் தன்னை தீரஜ் அமரவைத்திருப்பதாக உணர்ந்தான். என்ன ஒன்று அவன் இவனை கைகட்டி வாயில் விரல் வைக்க சொல்லவில்லை அவ்வளவுதான்…
அவன் மேலும் ஒருமணிநேரம் வீடியோ கேம் விளையாடும் வரை பொறுத்திருந்த கபிலன் பொறுமையிழந்து எழுந்து… “சார்… என்னை ஏன் வர சொன்னிங்க…?” என்று தயக்கமாகவே கேட்டான்.
“அந்த சேர்ல உக்க்க்க்காருன்னு சொன்னேன்….” என்று உரத்த குரலில் அதட்டினான் தீரஜ். இப்படி அராஜகம் செய்தால் அவன் வேலையை விட்டு ஓடிவிடுவானே…! ஊரை விட்டு ஓடிவிடுவானே…! என்றெல்லாம் சிந்திக்கும் நிலையில் அவன் இல்லை… அடிபட்ட புலி போல் உறுமினான் அந்த தோற்று போன காதலன்.
தீரஜ்ஜின் குரலில் இருந்த அதட்டலும் அவன் கபிலனை அமர சொன்ன தோரணையும் அவனை உறையவைத்தது. அதன் பிறகு அவன் வாயை திறக்கவே இல்லை. ஆனால் அவனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது.
‘தீரஜ் சூர்யாவின் மீது ஆசைப் பட்டிருக்கிறான். ஏதோ காரணத்தால் அவனுடைய ஆசை நிறைவேறாமல் அவள் சென்னைக்கு வந்து என்னையும் திருமணம் செய்துகொண்டாள். இப்போதும் அவனுக்கு அவள் மீது இருக்கும் மோகம் குறையவில்லை. அதனால்தான் நான் அவளுடன் நெருக்கமாக இருந்தது பிடிக்காமல் என்னை இங்கு கொண்டுவந்து உட்க்கார வைத்துவிட்டான்…. மற்றபடி அந்த ஏமாற்றுகாரி அடித்துவிட்ட காதல் கீதல் எல்லாம் பொய்… இவனுக்காவது சூர்யா மாதிரி ஒரு சாதாரண பெண் மீது காதல் வருவதாவது… அப்படியே வந்தாலும் அதை அந்த வாயாடி நிராகரிப்பதாவது… எல்லாம் கதை…. கட்டுக்கதை….’
இப்போதும் அவனுடைய கோபம் மனைவி மீதுதான் திரும்பியது…
‘அடிபாவி… உன் கழுத்துல தாலிகட்டின பாவத்துக்கு இவன் என்னை அடிமை மாதிரி இங்கு உட்கார வைத்துவிட்டான். இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறானோ… எல்லாத்துக்கும் நீதாண்டி காரணம்…’ அவன் கருவினான்.
மேலும் இரண்டுமணி நேரம் கபிலனை இருந்த இடத்திலிருந்து அசையவிடாத தீரஜ்.. கேழே பார்ட்டி முடிந்து அநேகமானவர்கள் சென்றுவிட்ட பிறகு ஒருசிலர் மட்டுமே எஞ்சியிருக்கையில் சூர்யா நீண்ட நேரமாக தனித்து நின்று கொண்டிருந்ததால், “சரி நீ கிளம்பு… ” என்றான் மனமிறங்கி.
எந்த விஷயமும் இல்லாமல் ஒரே இடத்தில் கிட்டத்தட்ட நான்கு மணிநேரம் தன்னை பிடித்து அமரவைத்து கேலிப் பொருளாக்கிவிட்டான் தீரஜ்பிரசாத் என்கிற நினைவில் கடுகடுத்த முகத்துடன் அந்த அறையிலிருந்து வெளியே வந்தான் கபிலன்.
தீரஜ்பிரசாத்துடன் கழித்த அந்த சில மணிநேரம்தான் தன்னுடைய வாழ்க்கையில் மிக மோசமான நேரம் என்று நினைத்த போதும், அவனுக்கும் சூர்யாவுக்கும் எந்த அளவு நெருக்கம் என்பதை தெரிந்துகொள்ள நினைத்து அசட்டுத்தனமாக ஒரு காரியம் செய்தான் கபிலன். அந்த காரியத்தால் அவனுடைய நிம்மதியே பரிபோகப்போவதை அறியாமல்.
Comments are closed here.