இதயத்தில் ஒரு யுத்தம் – 37
5218
0
அத்தியாயம் – 37
சூர்யாவின் திடீர் முடிவில் தீரஜ் ஆடிப் போய்விட்டான்.
“என்ன… ஏன் இந்த திடீர் முடிவு…?” அவன் தன் பதட்டத்தை வெளிக்காட்டாமல் அமைதியாக கேட்டான்.
“எத்தனை நாளைக்கு இங்கேயே இருக்க முடியும்… சென்னைக்கு போனால் அடுத்து என்ன செய்றதுன்னு முடிவு பண்ண முடியும்.” சூர்யாவும் அமைதியாகவே பதில் சொன்னாள்.
“அங்க போயி எடுக்குற முடிவ இங்க இருந்து எடுக்க முடியாதா…? அப்படி எதை பற்றி நீ முடிவெடுக்கணும்?”
‘புதிதாக என்ன முடிவு… எல்லாம் ஏற்கனவே முடிவு செய்ததுதானே… குழந்தையை நல்லபடியாக வளர்க்க அவளுக்கு பணம் வேண்டும். அதற்கு அவள் வேலைக்கு போகவேண்டும். இதை இவனிடம் சொன்னால் ‘என் கம்பெனியிலேயே வேலை பார்…’ என்று சொல்வான். இவனை பார்த்துக் கொண்டு இவன் அருகிலேயே இருந்தால் அது யாருக்குமே நல்லது அல்ல… இதை இவனிடம் எப்படி சொல்லி புரிய வைப்பது…’ இயலாமையில் அவளுக்கு எரிச்சல் வந்தது.
“நான் எதை பற்றி முடிவு செய்தாலும் உனக்கு என்ன தீரஜ்…? எத்தனை நாள் நான் உன் பாதுகாப்பில் இங்கு இருப்பது. எனக்கென்று என்னை பெற்றவர்களும் என் பிள்ளையும் இருக்கிறாள். நான் அவர்களோடு என் வாழ்க்கையை பார்த்துக் கொள்கிறேன். நீ என்னை தொல்லை செய்யாமல் இருந்தால் போதும்…” படபடவென்று பொரிந்தாள்.
“நான் உன்னை தொல்லை செய்கிறேனா…! எப்போது எந்த விதத்தில் உன்னை தொல்லை செய்தேன்…?”
“இதோ… இப்போது செய்றியே… இதற்கு பேர் என்ன…? தொல்லை இல்லையா…? நான் சென்னைக்கு போனால் உனக்கென்ன… நீ எதற்கு என்னை தடுக்குற?”
“நான் உன்னை தடுக்கல சூர்யா… நீ தாராளமா சென்னைக்கு போ… ஆனா கீர்த்தியை நான் விட மாட்டேன்…”
“கீர்த்தியையா…!” சூர்யா அதிர்ச்சியடந்தவளாக கேட்டாள்.
“ஆமாம் கீர்த்தியைதான்… அவளுக்கு நல்ல சிகிச்சை அளித்து மற்ற குழந்தைகளை போல் அவள் மாறும்வரை அவளை நான் யாரிடமும் கொடுக்கமாட்டேன். எங்கேயும் அனுப்ப மாட்டேன்.” அவன் அழுத்தம் திருத்தமாக சொன்னான்.
“தீரஜ்…” அவள் கத்திவிட்டாள்.
“…………………..” அவன் நீ என்ன கத்தினால் எனக்கென்ன என்று நின்று கொண்டிருந்தான்.
“கீர்த்தி என் மகள். அவளை என்னிடம் கொடுப்பதற்கும் பறிப்பதற்கும் நீ யார்…? நான் அவளை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்வேன்… நீ எப்படி தடுக்க முடியும்… உனக்கென்ன உரிமை இருக்கிறது…?” அவள் முகம் சிவக்க உடல் கோவத்தில் நடுங்க சத்தமாக பேசினாள்.
அதையெல்லாம் தூசி போல் ஊதிவிட்டு
“என் உரிமை என்னவென்று என்னை தவிர வேறு யாரும் நிர்ணயிக்க முடியாது. இதை நான் உனக்கு ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்” என்றான் அழுத்தமாக.
அவள் வாயடைத்துப் போனவளாக நின்றாள்.
“நான் எதை செய்ய வேண்டும் எதை செய்யக் கூடாது என்று நான்தான் முடிவு செய்வேன். கீர்த்தியை மதுராவை விட்டு அனுப்புவதில்லை என்று நான் முடிவு செய்துவிட்டேன்” அவன் தீர்மானமாக சொன்னான்.
“நீ அநியாயம் செய்ற தீரஜ்…” சூர்யா அவனை எச்சரிப்பது போல் சொன்னாள்.
“நீ சொல்ற ஞாய அநியாயம்… சட்ட திட்டம் எல்லாம் என்னை எதுவும் செய்ய முடியாது சூர்யா…”
அவள் அவனை கோபமாக முறைத்தாள். அவனும் அவளை முறைத்தான். அவள் வெடுக்கென்று முகத்தை திருப்பிக் கொண்டு உள்ளே சென்றுவிட்டாள் அவனும் தோளை குலுக்கியபடி வெளியேறினான்.
தோட்டத்திலிருந்து வீட்டிற்குள் வந்து கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்திக்கு இவர்களின் உரையாடல் முழுவதும் கேட்டுவிட்டது. அவர் அவசரமாக தீரஜ்ஜை பின் தொடர்ந்து சென்று அவன் காரில் ஏறும் பொழுது, “ஒரு நிமிஷம்… கொஞ்சம் பேசணும்…” என்றபடி அவன் அருகில் சென்றார்.
அவனும் காரில் ஏறாமல் கார் கதவை மூடிவிட்டு அவரை நோக்கி வந்தான். அவர் அவனை தோட்டத்திற்கு தள்ளிக் கொண்டு போனார்.
“தப்பா எடுத்துக்காதிங்க… நீங்களும் சூர்யாவும் பேசிக் கொண்டது என் காதில் விழுந்தது…”
“……………….”
“நீங்க நினச்சா என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நான் இல்லன்னு சொல்லல… ஆனா சூர்யாவ நீங்க கஷ்ட்டப் படுத்துரீங்கன்னு என்னால நம்ப முடியல…”
“……………….”
“ஏன்… எதுக்காக என் மகளை ஆளாளுக்கு இப்படி படுத்துறீங்க…?”
“கீர்திக்காக… அவளுக்கு நல்ல சிகிச்சை கொடுப்பதற்காக…” அவன் இறுகிய குரலில் பதில் சொன்னான்.
“அதை நாங்கள் சென்னையில் இருக்கும் போது உங்களால செய்ய முடியாதா…? அங்கு இல்லாத மருத்துவமனையா… மருத்துவரா…! என் மகள் சென்னைக்கு போக விரும்பினால் எங்களை அனுப்பிவிட வேண்டியதுதானே… எதற்கு பிடிவாதம் பிடிக்கிறீங்க…?” அவர் அவனை மடக்கினார்.
“அது… அது… வந்து…” அவன் தயங்கினான்.
“சொல்லுங்க…”
“கீர்த்திய பிரிஞ்சு என்னால இருக்க முடியாது…” ஒருவிதத்தில் அவன் உண்மையைதான் சொன்னான். அந்த பிஞ்சு குழந்தை அந்தளவு அவன் மனதில் இடம் பிடித்துவிட்டது.
“சரி… அப்படின்னா ஒன்னு செய்யலாம்… நீங்க கீர்த்திய தத்தெடுத்துக்கோங்க… நான் சூர்யாவை சமாதானம் செஞ்சு சென்னைக்கு கூட்டிட்டு போறேன்.” அவர் சாவதானமாக சொல்ல அவன் முகம் வெளிறினான்.
‘இந்த கிழம் செஞ்சாலும் செய்யும்… ஏற்கனவே ஒரு முறை சூர்யாவை ‘கார்னர்’ பண்ணி ஒரு புதை சேற்றில் தள்ளிய சாகசகாரனாச்சே…! இந்த ஆளை நம்பவே முடியாது…’ தீரஜ் கிருஷ்ணமூர்த்தியை மனதிற்குள் மெச்சிக்கொண்டான்.
“என்ன… நான் சொல்றது சரிதானே… கீர்த்தியை நீங்களே வச்சுக்கோங்க… சூர்யாவை நாங்க கூட்டிட்டு போறோம்…” அவர் திரும்பவும் சொன்னதையே சொல்லவும் அவன் பேச வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறினான்.
“அ.. அது… சூர்யா… சூர்யா எப்படி குழந்தையை விட்டுட்டு…”
“அதை பற்றி உங்களுக்கென்ன.. உங்களுக்கு தேவை குழந்தைதானே… அதை சூர்யாவின் சம்மதத்தோடு உங்களிடம் வாங்கிக் கொடுக்க வேண்டியது என் பொறுப்பு… ஆனால் அதன் பிறகு சூர்யாவும் நாங்களும் சென்னை போகலாம்தானே… நீங்க எந்த வம்புக்கும் வர மாட்டிங்களே…!”
“இல்ல… அது… அது எப்படி கீர்த்தி… அவ அம்மாவை விட்டுட்டு இருப்பா…?”
“அது சின்ன குழந்தைதானே… ஆறு மாதம் கூட ஆகாத குழந்தைக்கு அம்மா இருப்பது தெரியுமா… இல்லாதது தெரியுமா… அதெல்லாம் எதுவும் தெரியாது. பாலை குடுத்தா அதுபாட்டுக்கு குடிச்சுட்டு அழுவாம இருக்கும்…” அவர் தீரஜ்பிரசாத்தை சமாதானம் செய்தார்.
“இல்ல… வந்து…” தொடர்ச்சியாக பேச முடியாமல் தயங்கினான். அவன் இந்த அளவு ஒரு விஷயத்தை பற்றி பேச தயங்குவான் என்று அவனுக்கே இன்றுதான் தெரிந்தது.
“என்னதாங்க உங்க தயக்கம்….. ஒடச்சு பேசிடுங்க…” அவர் அவனை ஊக்கினார்.
“இல்ல… சூர்யாவ பார்க்காம… என்னால… இனி… முடியாது…” அவன் சொல்லிவிட்டான். ஒரு வழியாக அவன் மனதை திறந்துவிட்டான்.
“ம்ம்ம்… அப்போ சூர்யாவுக்காகதான் குழந்தைய இறுக்கி பிடிச்சுகிட்டீங்களா..?”
“இல்ல.. இல்ல… குழந்தையும் எனக்கு வேணும்…”
“அப்படின்னா… சூர்யாவும் வேணும்… அப்படிதானே…?” அவர் போலிஸ்காரராக மாறி கேள்வி கேட்க, யாருக்கும் அடங்காத தீரஜ் இப்போது கிருஷ்ணமூர்த்திக்கு அடக்கமாக பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.
“என்னை தப்பா நினைக்காதிங்க… சூர்யாவிற்கு என்னை பிடிக்கவில்லை என்று தெரிந்த பின் நான் ஒதுங்கிதான் இருந்தேன். அவளுக்கு திருமணமாகிவிட்ட விஷயம் தெரிந்ததும் அதிர்ச்சியில் சூர்யாவை திட்டி காயப்படுத்தியது உண்மைதான். ஆனால் அவளுக்கு அமைந்துவிட்ட குடும்பத்தை சிதைத்து என்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள நான் ஒருநாளும் நினைத்ததில்லை…”
“அன்று சூர்யாவிற்கும் கபிலனுக்கும் பிரச்சனை நடந்த போது கூட நான் எதேர்ச்சையாக வேறு ஒரு விஷயமாகதான் KC காலனிக்கு வந்தேன். அப்போதுதான் அங்கு பிரச்சனை நடந்தது தெரியவந்து உள்ளே நுழைந்தேன். அன்று அந்த இடத்தில் சூர்யா இல்லாமல் வேறு எந்த பெண் இருந்திருந்தாலும், நான் அப்படிதான் நடந்து கொண்டிருந்திருப்பேன்.”
“ஆனால்… ” அவன் தயங்கினான்.
“ஆனால்…?” அவர் எடுத்துக் கொடுத்தார்.
“ஆனால்… கீர்த்தியின் விஷயம் வேறு…”
“அப்படின்னா…?”
“வேறு ஒரு பெண்ணின் குழந்தையை என்னால் என்னுடைய குழந்தையாக ஏற்றுக் கொண்டிருந்திருக்க முடியாது… இப்போது கீர்த்தி என் மனதில் என்னுடைய குழந்தையாகத்தான் இருக்கிறாள். அவளை எப்படி நான் விட்டுக் கொடுப்பேன்…?”
அவர் மனம் நெகிழ்ந்தார். ‘இப்படி ஒருவனையா வேண்டாம் என்று சொல்லிவிட்டு சூர்யாவை ஒரு கயவனுக்கு திருமணம் முடித்து கொடுத்தோம்…!’ அவன் மனம் வருந்தினார். இந்த மனிதனோடு எப்படியாவது மகளை சேர்த்து வைத்துவிட வேண்டும் என்று நினைத்தார்.
நினைத்ததை தீரஜ்ஜிடம் கேட்டும்விட்டார்.
“நீங்கள் ஏன் சூர்யாவை திருமணம் செய்துகொள்ள கூடாது…?”
“அது முடியாது…” அவன் யோசிக்காமல் பதில் கொடுத்தான்.
“ஏன்…? அவளை திருமணம் செய்யாமல் அவளுடைய குழந்தைக்கு மட்டும் எப்படி நீங்கள் தகப்பனாக முடியும்?”
“…………………” அவன் பதில் பேசவில்லை.
“சூர்யா வேறு ஒருவனக்கு ஏற்கனவே மனைவியாகி விவாகாரத்தானவள் என்று நினைத்து அவளை ஒதுக்குகிறீர்களா…?”
அவரது கேள்வியில் அதிர்ந்தவன் “ச்ச… ச்ச… இன்னொரு முறை அப்படி சொல்லாதிங்க…”
“பின்ன உங்களுக்கு என்னதான் பிரச்சனை…?”
“அது… அவளுக்குதான் என்னை பிடிக்கவில்லையே…” அவன் குனிந்தபடி மெதுவாக சொன்னான். அவன் முகம் சிவந்துவிட்டிருந்தது. அவமானமோ…!
“அவள் அப்படி சொன்னாளா…?”
“நேரடியா சொல்லலைதான்… என்னை ஒரு கொடுமைக்காரனை பார்ப்பது போல் பார்த்து… ஒளிந்து மறைந்து என்னிடமிருந்து தப்பி சென்னைக்கு ஓடினாளே… இதெல்லாம் பிடித்தவள் செய்யும் வேலையா…?”
“அது தவறு என்று இப்போது புரிந்து கொண்டிருக்கலாமே…!”
அவன் பதில் பேசவில்லை… இரண்டு கைகளின் கட்டைவிரலை மட்டும் ஜீன்ஸ் பக்கெட்டில் விட்டு… கால்களை அகட்டி வைத்து நின்றபடி வானத்தில் ஓடிக் கொண்டிருக்கும் மேகக் கூடங்களை வெறித்துக் கொண்டிருந்தான். மனதில் பல்வேறுவிதமான எண்ணங்கள் ஓட குழம்பி போய் நின்று கொண்டிருந்தான்..
“யோசிங்க… நல்லா யோசிச்சு நல்ல முடிவா எடுங்க…” அவர் அவனை தனிமையில் விட்டுவிட்டு நகர்ந்துவிட்டார்.
சிறிது நேரம் வானத்தை வெறித்துக் கொண்டிருந்தவன் பிறகு குழப்பத்தை சுமந்தபடியே காரை நோக்கி சென்றான். அன்றொரு நாள் அவன் இதயத்தில் ஆரம்பித்து முடிவு தெரியாமல் பாதியிலேயே நின்றுவிட்ட யுத்தம் இன்று மீண்டும் துவங்கியது…
Comments are closed here.