இதயத்தில் ஒரு யுத்தம் – 39
6598
0
அத்தியாயம் – 39
தீரஜ் தான் சூர்யாவை திருமணம் செய்துகொள்ள விரும்புவதை அவளிடம் வெளிப்படுத்தியதில் அதிர்ச்சியடைந்த சூர்யா
“தீரஜ்…” என்று அவனை சத்தமாக அதட்டினாள்.
அவள் அதட்டலெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பது போல மிக சுலபமாக அவளை அடக்கினான் தீரஜ்.
“ஷ்… குழந்தை தூங்குறது தெரியல… ஏன் இப்படி கத்தி பேசுற…?” அவளை கடிந்து கொண்டவன், தோட்டத்து பக்கம் வந்த வேலைக்கார பெண்ணை அழைத்து குழந்தையை உள்ளே கொண்டு போக சொன்னான். பிறகு சூர்யாவிடம் திரும்பி,
“நான் நிஜமாதான் சொல்றேன் சூர்யா… என்னால உன்னையும் குழந்தையையும் இனி தனியா விட முடியாது. நான் உன்னை கல்யாணம் செய்துகொள்ள விரும்புறேன்…” அவன் சொல்லி முடிப்பதற்குள் அவள் எதையோ பேச துவங்க அவளை கையமர்த்தி தடுத்தவன்…
“நான் பேசி முடிக்கிற வரைக்கும் அமைதியா கேட்டுட்டு அப்புறம் பேசு…” என்று அவளை அடக்கிவிட்டு தன் பேச்சை தொடர்ந்தான்.
“உனக்கு என்னோட சில நடவடிக்கைகளும் கொள்கைகளும் பிடிக்காதுன்னு எனக்குதெரியும்… அதையெல்லாம் விட்டுட முடிவு செய்துவிட்டுதான் உன்கிட்ட பேச வந்திருக்கேன்.”
“…………………..”
“என்னுடைய பெயர்… புகழ்… பணம்… மதுராவின் மீதான எனது ஆதிக்கம்…. எல்லாவற்றையும் இங்கேயே விட்டுவிட்டு உன் பின்னால் உனக்கு கணவனாகவும் கீர்த்திக்கு தகப்பனாகவும் வர தயாராகிவிட்டுதான் இங்கு வந்திருக்கிறேன். சொல்லு… என்கிட்டே உனக்கு இன்னும் என்ன பிடிக்கலன்னு சொல்லு விட்டுடறேன்… ஆனா முன்பு சொன்ன மாதிரி என்னை பிடிக்கல… என் முகத்தை பிடிக்கலன்னு கதை அளக்காத…”
“உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருச்சிருச்சா…? ஏன் இப்படி உளர்ற…? இத்தனை நாள் நல்லாதானே இருந்த…”
“நான் உளறல… நல்லா யோசிச்சு தெளிவாதான் பேசுறேன்… நீயும் வேணுன்னா நல்லா யோசிச்சிட்டு சொல்லு. ஒன்னும் அவசரம் இல்ல…”
“இதுல யோசிக்க என்ன இருக்கு… எனக்…” அவள் சொல்லி முடிக்கும் முன்
“உனக்கு என்னை பிடிக்கலைன்னு சொல்லப் போறியா…? இதை நம்ப எவனாவது காதுல பூ வச்சவன் இருப்பான். அவன்கிட்ட போயி சொல்லு…”
அவள் பதில் பேச முடியாமல் வாயடைத்து நின்றாள். அவளுக்கு அவனை பிடித்திருப்பது உண்மைதான். ஆரம்பத்திலிருந்து அவள் மனதில் இருப்பவன் அவன் மட்டும்தானே…! ஆனால் அதை வெளிப்படுத்தும் நிலையில் அவள் இல்லையே…!
மனதை சிரமப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டு,
“தீரஜ்… நீயா எதையாவது கற்பனை பண்ணிக்கிட்டு பேசாத… சொன்னா புரிஞ்சுக்கோ… ப்ளீஸ்…” அவள் இறங்கிவிட்ட குரலில் பேசினாள்.
“எதை புரிஞ்சுக்கணும்…”
“என் நிலைமையை புரிஞ்சுக்கணும்…”
“என்ன உன் நிலைமை…? சொல்லு புரியுதான்னு பார்க்குறேன்…”
“என் நிலைமை என்னன்னு உனக்கு தெரியாதா…?”
“தெரியல… என்ன உன் நிலைமை…? சொல்லு…” அவன் விடாபிடியாக அவளிடம் விதண்டாவாதம் செய்தான்.
“தீரஜ்… எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு… நீ என்கிட்டே இப்படி பேசுறது சரியில்ல… இது உனக்கு புரியலையா…?” அவள் ஆற்றாமையாக கேட்டாள்.
“தப்பா சொல்லாத சூர்யா… உனக்கு விவாகரத்து முடிந்து நான்கு மாதம் முடிந்துவிட்டது. இப்போ நீ ஒரு சுதந்திரமான பெண். உன்னுடைய வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ள உனக்கு உரிமை இருக்கு. அப்படி இருக்கும் போது உன் மனதுக்கு பிடித்த ஒருவனை திருமணம் செய்துகொள்ள எதற்கு தயங்குற…?”
“உன்னை பிடிச்சிருக்குன்னு நான் சொன்னேனா…?”
“சரிதான்… நீ என்னை பிடிச்சிருக்குன்னு சொல்லதான்… ஆனா பிடிக்கலைன்னும் சொல்லலையே… அப்படியே நீ என்னை பிடிக்கலன்னு சொன்னாலும் அதை நான் நம்ப மாட்டேன்… அதனால உண்மையை மட்டும் பேசு… ”
“…………………….”
“என்னதான் சூர்யா உன் பிரச்சனை… சொல்லு… பேசி தீர்க்க முடியாத பிரச்சனை என்று எதுவுமே இல்ல…”
“…………………….”
“சொல்லு சூர்யா உண்மையிலேயே உனக்கு என்ன தயக்கம்… சொல்லு…”
“நீ ஏன் என்னையே நினச்சுகிட்டு இருக்க தீரஜ்…. உன்னை மாதிரி ஒரு ஆணை திருமணம் செய்ய, அழகான படித்த வசதியான இன்னும் எல்லா விதத்திலும் உனக்கு பொருத்தமான பெண்கள் எத்தனை பேர் தயாரா இருக்காங்க தெரியுமா…? அவங்கள்ள யாரையாவது திருமணம் செய்துகொண்டு சந்தோஷமா வாழறதை விட்டுட்டு என்னை ஏன்…” அவளுக்கு அதற்கு மேல் பேச முடியாமல் தொண்டையை அடைத்தது.
“ஏன்னா நீ மட்டும்தான் ‘சூர்யா…’ எனக்கு சூர்யா மட்டும்தான் வேணும்…”
அவள் மனம் அவளுடைய கட்டுப்பாட்டை மீற துடித்துக் கொண்டிருந்தது. அவள் அவனை இயலாமையுடன் பார்த்தாள்.
அவளுடைய யாசிக்கும் பார்வையை அவன் மனதை பிசைய “என்ன சூர்யா…?” என்று உருக்கமாக கேட்டான்.
“எல்லாருக்கும் காதலிச்சவங்கலையே திருமணம் செய்துகொள்ளும் பாக்கியம் கிடைப்பதில்லை தீரஜ்… நமக்கும் அந்த பாக்கியம் இல்லை என்று நினைத்துக் கொள்.” அவள் தன்னை அறியாமலே அவனை காதலித்தாள் என்பதை மறைமுகமாக அவனிடம் ஒத்துக் கொண்டுவிட்டாள்.
“ஏன்… ஏன் நமக்கு நினைத்த வாழ்க்கை அமையாது… நான் நினைத்தால் எதையும் செய்வேன்…”
“உன்னை போல நினைத்ததை எல்லாம் நான் செய்துவிட முடியாது தீரஜ்… நான் ஒரு குழந்தைக்கு தாய்… எனக்கு அவளுடைய எதிர்காலம் முக்கியம்..”
“நானும் ஒரு குழந்தைக்கு தகப்பன்தான்… நான் நினைத்ததை என்னால் செய்ய முடியும் போது நீ நினைத்ததை உன்னால் செய்ய முடியாதா…?”
“என்ன உளர்ற தீரஜ்…?”
“நான் உளறல… கீர்த்தி உனக்கு மட்டும் மகள் இல்லை. அவள் எனக்கும் மகள்தான். மனதளவில் நான் அவளுடைய தந்தையாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அவளுடைய எதிர்காலம் எனக்கும் முக்கியம் என்பதால்தான் இந்த திருமணத்திற்கு அவசரப்படுகிறேன். உன்னைவிட என்னால் கீர்த்திய நன்றாக பார்த்துக் கொள்ள முடியும். அவளை நான் யாருக்கும் விட்டுக் கொடுக்கவே மாட்டேன்… உனக்கு கூட…”
கீர்த்தி விஷயத்தில் தீரஜ் அடாவடிதான் செய்கிறான். அநியாயம்தான் செய்கிறான். சூர்யாவின் மகளிடம் அவளைவிட அவன் அதிகம் உரிமை பாராட்டுவது தவறான விஷயம்தான்.
ஆனால் அவன் அந்த தவறை செய்வது சூர்யாவிற்கு உண்மையில் ஆறுதலாக இருந்தது. இன்னும் ஆழ்ந்து நோக்கினால் அவள் மனம் அவனுடைய அடாவடித்தனத்தில் மகிழ்ந்தது.
அவனுடைய அடாவடித்தனத்திக்கு அடிப்படை காரணம் அவன் கீர்த்தி மீது வைத்திருக்கும் பாசமாயிற்றே….! அந்த பாசம் சூர்யா மீது அவன் கொண்ட காதலால் பிறந்ததாயிற்றே…! அவள் உருகினாள். அவனுடைய காதலில் கரைந்தாள். முகத்தை மூடிக்கொண்டு தேம்பினாள்.
Comments are closed here.