கனல்விழி காதல் – 19
10014
4
அத்தியாயம் – 19
நரேந்திரமூர்த்திக்கு தேவ்ராஜின் மீதிருக்கும் மோகம் இன்னமும் குறையவில்லை. வாய்ப்பே இல்லை என்று தெரிந்துவிட்ட பிறகும் கூட அவர் மனம் அவனை சுற்றிக் கொண்டேதான் இருந்தது. என்ன காரணமென்றெல்லாம் தெரியாது. ஆனால் தன் மகளோடு அவனை இணைத்துவைத்து கற்பனை செய்து பார்க்கும் பழக்கம் மட்டும் அவரிடமிருந்து விலகவே மாட்டேன் என்கிறது. அதுமட்டும் அல்ல, எந்த மாப்பிள்ளையை கொண்டுவந்தாலும் அவனை தேவ்ராஜுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பழக்கமும் நீங்கவில்லை. கிஷோரிடம் கூட முழுமனதாக அவர் திருப்தியடையவில்லை. தேவ்ராஜ் போல் ஒருவன் கிடைக்கமாட்டானா என்றுதான் ஏங்கினார்.
ஒருமுறை அவனை நேரில் சென்று பார்த்துவிட்டு வரலாம் என்று நினைத்தார். வீட்டில் சந்திக்க வேண்டுமென்றால், வார இறுதிவரை காத்திருக்க வேண்டும். ஆனால் அவருக்கு பொறுமை இல்லை. இன்றே பார்க்க வேண்டும். அதுவும் இப்போதே! உடனே அவனுடைய எண்ணிற்கு அழைத்தார். ரகீம் எடுத்தான். முக்கால்வாசி நேரம் அந்த போன் இவனிடம்தான் இருக்கும். தெரிந்த விஷயம்தானே! எனவே, தான் தேவ்ராஜை சந்திக்க வருவதாக கூறி, அவன் அலுவலகத்தில் இருக்கிறானா என்பதை உறுதி செய்து கொண்டு புறப்பட்டார்.
நரேந்திரமூர்த்திக்கு, தேவ்ராஜின் அலுவலகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ரகீமே, நேரடியாக கீழே வரவேற்பு கூடத்திற்கு வந்து, அவரை தேவராஜ் இருக்கும் தளத்திற்கு அழைத்துச் சென்றான். விருந்தினர் அறையில் அமரவைத்து பழரசம் கொடுத்து உபரசித்தான். அடுத்த சில நிமிடங்களில், “வெல் கம் மாமா…” என்று புன்னகையுடன் அவர் எதிரில் தோன்றி கையைப் பிடித்துக் குலுக்கினான் தேவ்ராஜ்.
அவனை பார்க்கும் பொழுதே பூரிப்பில் பொங்கியது அவர் உள்ளம். “ஹ…ல்…லோ மை டியர் மேன்…” என்று சந்தோஷமாக அவனை அணைத்து தோளில் தட்டிக்கொடுத்தார். அவன் மீது அவருக்கு இவ்வளவு அன்பும் அபிமானமும் வருவதற்கு அவனுடைய வெற்றி ஒன்றுதான் காரணமா என்றால், அதை அறுதியிட்டுக் கூற முடியாது. வெற்றியும் ஒரு காரணம். முக்கிய காரணமாக் கூட இருக்கலாம். ஆனால் அதையும் தாண்டி அவன் மீது ஒரு ஆழமான அன்பு அவருக்குள் இருந்தது. அந்த அன்புதான் அவரை இப்போது இங்கே இழுத்துக் கொண்டு வந்திருக்கிறது.
“ப்ளீஸ் சிட் மாமா… என்ன சாப்பிடறீங்க?”
“ஏற்கனவே சாப்பிட்டுட்டேன் மேன்…” என்று பழரச கோப்பையை கைகாட்டினார்.
“ஓஹ்! சாரி… ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சுட்டேனா?” என்றான்.
“ஒண்ணும் பிரச்சனை இல்லை. இப்போதான் வந்தேன். சொல்லு… எப்படி போயிட்டு இருக்கு பிசினஸ்?”
“கோயிங் வெல்… ஹொவ் அபௌட் ஜூம்…?” என்று அவருடைய சேனலை பற்றி விசாரித்தான்.
தொழில்நல விசாரிப்புகள் முடிந்த பிறகு, குடும்பத்தைப் பற்றி பேசிக் கொண்டார்கள். அப்போது, “பாரதி எப்படி இருக்கா?” என்றார் நரேந்திரமூர்த்தி. சட்டென்று இறுகிய அவன் முகம் உடனே இலகுவானது.
“ஷி இஸ் குட்…” என்றான் புன்னைகையுடன். அவனுடைய முகமாற்றத்தை அவர் கவனிக்க தவறவில்லை. அவருக்கும் சங்கடமாகத்தான் இருந்தது. “சாரி பேட்டா… திலீப் எடுத்த முடிவுல என்னால எதுவும் செய்ய முடியல” என்றார்.
“தட்ஸ் பர்ஃபெக்ட்லி ஆல் ரைட் மாமா… அது அவனோட லைஃப்… அவனோட முடிவு. நீங்க வருத்தப்பட தேவையில்ல”
“ஓகே…” என்று தலையை ஆட்டி… தாடையை வருடியவாறு சற்று நேரம் எதுவும் பேசாமல் யோசனையில் ஆழ்ந்திருந்தார். அவனும் அவருடைய சிந்தனையில் குறுக்கிடாமல் அவரை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தான்.
அவருக்குள் பெரிய போராட்டமே நடந்துக்க கொண்டிருந்தது. இதுவரை பல முறை, மாயாவின் மூலமும், துருவனின் மூலமும், இராஜேஸ்வரியின் மூலமும் கேட்ட அதே கேள்வியை இன்று நேரடியாக ஒருமுறை கேட்டுவிடலாம் என்றுதான் வந்திருக்கிறார். ஆனால் எப்படி கேட்பது! கேட்டால் அவனுடைய பதில் எப்படி இருக்கும்!
அந்த நேரத்தில், அத்தனை வருட அனுபவமோ வயதோ அவருக்கு கைகொடுக்கவில்லை. விடலைப்பையன் வயதுப் பெண்ணிடம் பேச தடுமாறுவது போல் தடுமாறினார். தான் தூக்கி வளர்த்த ஒரு சிறுவன் முன் பதட்டப்பட்டார்.
“என்ன ஆச்சு மாமா? ஏதாவது பிரச்சனையா” – அவர் என்ன கேட்கப் போகிறார் என்பதை ஊகித்துவிட்ட தேவ்ராஜ் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.
“இல்ல… பிரச்சனை ஒண்ணும் இல்ல தேவ். ஆனா உன்கிட்ட ஒரு சீரியஸான மேட்டர் பேசணும்”
“சொல்லுங்க மாமா…”
“தேவ்… நா என்ன சொல்ல வர்றேன்னா…” என்று சற்று தயங்கியவர் பிறகு நிதானத்தை வரவழைத்துக் கொண்டு, “மதுராவோட கல்யாணம் உன்கூட நடக்கணும்னு நா விரும்பறேன்” என்றார். இதுவரை யாரிடமும் இவ்வளவு சங்கடப்பட்டு எதையும் அவர் கேட்டதில்லை. இன்று தேவ்ராஜ் முன்பு கேட்டுவிட்டார். அவன் என்ன சொல்லப் போகிறான்…! எதிர்பார்ப்புடன் அவனைப் பார்த்தான்.
ஓரிரு நொடிகள் அவரை ஆழமாகப் பார்த்த தேவராஜ், பிறகு நிதானமாக சாய்ந்து அமர்ந்தான். வெளிக்காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் முகத்தில் சிறு புன்னகை… இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் என்பது போன்ற அமர்த்தல்… என்ன சொல்லப் போகிறான்!- அவருடைய பார்வை அவன் முகத்திலிருந்து அகலவில்லை.
“பாரதியோட கல்யாணம் திலீப் கூட நடக்கணும்னு நா விரும்பறேன் மாமா…” என்றான் அழுத்தமாக. அவனுடைய தோரணையே மாறியிருந்தது. இப்போது அவர் கண்முன் அமர்ந்திருப்பது, இதுவரை அவரிடம் பேசிக் கொண்டிருந்த தேவ்ராஜே அல்ல. இவன் ஒரு தேர்ந்த வணிகன். பேரம் பேச தெரிந்தவன்… ஒப்பந்தம் பண்ண தெரிந்தவன்… ஆனால் உறவுகளை மதிக்க தெரியுமா இவனுக்கு! – அவருக்கு சந்தேகம் வந்தது. அவன் மதுராவை மறுத்ததை அவர் தவறென்று நினைக்கவில்லை. ஆனால் அவன் பேசிய விதம்! அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. திகைப்புடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
“என்ன ஆச்சு மாமா?” – புன்னகையுடன் கேட்டான். அந்த புன்னகை அவரை வெறுப்பேற்றியது.
“நீ என்ன சொல்ல வர்றேன்னு எனக்கு புரியுது. ஆனா, இதுதான் உன்னோட முடிவா?”
“நிச்சயமா. அந்த கல்யாணம் நடந்தா இந்த கல்யாணமும் நடக்கும். என்னோட இந்த முடிவு `உங்களுக்கு தெரிஞ்சதுதானே மாமா?” என்றான். அவன் தன்னை எள்ளிநகையாடுவது போல் உணர்ந்தார் நரேந்திரமூர்த்தி.
“ஓகே… அப்போ நா ஏன் இங்க வந்தேங்கற விஷயத்தையும் உன்கிட்ட சொல்லிடறேன். இன்னும் பத்து நாள்ல மதுராவுக்கு நிச்சயம்” என்று கூறி அவனை கூர்ந்து பார்த்தார்.
இப்போது அதிர்வது அவன் முறை. ஆனால் அதை முகத்தில் காட்டாமல் திறமையாக மறைத்துக் கொண்டு, ” ம்ம்ம்! குட் நியூஸ்!” என்றான் கூலாக.
“வீட்டுக்கு வந்து முறையா கூப்பிடறேன். குடும்பத்தோட வந்துடு”
“நிச்சயமா…” – அலட்டிக்கொள்ளாமல் கூறினான்.
அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. தன்னுடைய அனுபவம்தான் அவனுடைய வயது. ஆனால் எவ்வளவு சாமர்த்தியம்! அழுத்தம்! – பிடிக்கவில்லை என்றாலும் அவர் மனம் அவனை மெச்சியது.
****************
ஏதோ ஒரு வேகத்தில்தான் என்றாலும் தேவ்ராஜிடம் சபதம் போட்டது போல் பேசிவிட்டு வந்துவிட்டார். அதை நிறைவேற்றியே ஆகவேண்டும் என்கிற நோக்கத்தில் கிஷோர் வீட்டில் அழுத்தம் கொடுத்து, அடுத்த வாரத்திலேயே நிச்சயதார்த்த தேதியை குறித்தார் நரேந்திரமூர்த்தி. மாயாவின் மூலம் விஷயத்தைத் தெரிந்துக் கொண்ட இராஜேஸ்வரி கலங்கினாள். மனதில் ஏதோ ஒரு மூலையில் அவளுக்கு நம்பிக்கை இருந்திருக்க வேண்டும். அந்த நம்பிக்கை இன்று முழுவதுமாக நொறுங்கிவிட்டதால்தானோ என்னவோ அவளால் தாங்கமுடியவில்லை.
சொன்னபடியே, மகளின் நிச்சயதார்த்த விழாவிற்கு முறையாக அழைக்க, மனைவியோடு தங்கை வீட்டிற்கு வந்திருந்தார் நரேந்திரமூர்த்தி. மனதில் எவ்வளவு தூக்கமிருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவர்களை உபசரித்தாள் இராஜேஸ்வரி. கடமைக்காக அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாள் பாரதி. தேவ்ராஜ் வீட்டில்தான் இருந்தான். அவர் வந்திருக்கிறார் என்று தெரிந்தும் கீழே வரவில்லை.
“தேவ் எங்க? இன்னைக்கு ஞாயிற்றுக் கிழமைதானே! வீட்ல இருக்கானா?” – நரேந்திரமூர்த்தியின் கோபம் அடங்கவில்லை. அவனை நேருக்குநேர் பார்த்து தன் மகளின் திருமண செய்தியைக் கூற வேண்டும் என்று விரும்பினார்.
“ஆங்… மேல… கொஞ்சம் வேலையா இருக்கான்… வர சொல்றேன்…” – எடுபடாத குரலில் கூறிவிட்டு மகனைத் தேடித் சென்றாள் இராஜேஸ்வரி.
‘திறமையானவர் என்று தெரியும்… ஆனால் கபடமானவர் என்பது தெரியாமல் போய்விட்டது… மாற்று மாப்பிள்ளையை கையில் வைத்துக் கொண்டே, அன்று நம்மிடம் சமாதானம் பேச வந்திருந்தாரே!’ – அவனால் நம்பவும் முடியவில்லை, ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. எப்பேர்ப்பட்ட சுயநலம்! ஒருவேளை இவன் சம்மதித்திருந்தால் அந்த மாப்பிள்ளைக்கு என்ன பதில் சொல்லியிருப்பார்! – நரேந்திரமூர்த்தியின் செயலை வெறுத்தான் தேவ்ராஜ்.
“தேவ்… கீழவா… அவங்க உன்ன நேர்ல பார்த்து இன்வைட் பண்ணனும்னு சொல்றாங்க” – வழக்கம் போல படுக்கையறையுடன் கூடிய அட்டாச்ட் டெரஸில் அமர்ந்து மடிக்கணினியில் மூழ்கியிருந்தவன் தாய்க்கு செவி சாய்க்கவில்லை.
“தேவ்…” – குரலை உயர்த்தினாள் இராஜேஸ்வரி.
“வாட்?” – கணினியிலிருந்து கண்களை அகற்றாமலேயே கேட்டான்.
“அவங்க வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க”
“லெட் தெம் வெயிட்”
“எவ்வளவு நேரம்?”
“நா வர்ற வரைக்கும்”
“இது நல்ல குணம் இல்ல தேவ்” – வருத்தத்துடன் கூறினாள் இராஜேஸ்வரி. வேலையை நிறுத்திவிட்டு தாயைத் திரும்பிப் பார்த்தன் தேவ்ராஜ்.
“எனக்கு அவரை பார்க்க பிடிக்கலம்மா” – வெறுப்புடன் கூறினான். மகனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் இராஜேஸ்வரி.
“ஏன்?” – அவளுக்கு புரியவில்லை. அவர் மீது இவனுக்கு ஏன் இத்தனை வெறுப்பு!
“ஹி இஸ் ஸச் எ செல்ஃபிஷ் மேன்” – அவர் ஒரு சுயநலவாதி என்றான்.
“அவர் உன்னோட மாமா… என்னோட அண்ணன்… நீ ஏன் இப்படி பேசுற தேவ்?” – ஆற்றாமையுடன் கேட்டாள். என்ன இருந்தாலும் தன் அண்ணனை பற்றி அவன் இப்படி பேசுவதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அன்று அவர் அலுவலகத்திற்கு வந்ததையும், பேசியதையும் தாயிடம் வெளிப்படுத்திக் கூற விரும்பாத தேவ்ராஜ் அமைதியாக இருந்தான்.
“இப்போல்லாம் உன்னோட முரட்டுப் பிடிவாதத்துக்கு அளவே இல்லாம போயிட்டு இருக்கு. வீட்டுக்கு வந்திருக்கவங்களை அவமானப்படுத்தாத தேவ். கீழ வந்து அவங்ககிட்ட நல்லவிதமான பேசு… ப்ளீஸ்…” – ஒரு தாயாக அவனுக்கு அறிவுரை கூறி நெறிப்படுத்தினாள். அதற்கு மேல் பிடிவாதம் பிடிக்காமல் அவனும் கீழேச் சென்று அவர்களை வரவேற்றான்.
“வர்ற வெள்ளிக்கிழமை மதுராவுக்கு நிச்சயம்… நீங்க எல்லாரும் கண்டிப்பா வரணும்” என்று குங்குமம், பூ, பழம் கொடுத்து முறையாக அழைத்தார் நரேந்திரமூர்த்தி.
“கண்டிப்பா… ஃபேமிலி ஃபங்க்ஷனாச்சே! வராம எப்படி!” – கபட புன்னகையுடன் அவருடைய அழைப்பை ஏற்றுக் கொண்டான் தேவ்ராஜ்.
4 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Yazhvenba says:
Unga writing style semaya irukku mam… Dev pakka business man… But kalyanathayum business deal pesarathu???
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hadijha khaliq says:
Hi Nithya….nice epi ma….ivan kalyanathai business dealing maadhiri pesuvaanam aana avar magaluku maapilai parthirundhalum thangai maganai vidamudiyamal kalyanam pesavandhal suyanalama…ennada unnoda nyayam….needhaan avalai vendamnu solliteela appuram avaluku yaroda thirumanam nadantha unakenna, party seidha unakenna yenda appadhi Verichi parkirara? Pavam madhura bayapadrala
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
இப்போது மாமன் மருமகனுக்குள் பனிப்போர் தொடங்கிவிட்டதா,எதற்காக தேவ் கபடச்சிரிப்பு சிரிக்கின்றார்,தகப்பனும் தேவ்வும் மதுராவின் வாழ்க்கையில் விளையாடப்போகின்றார்கள் என்று தெரிகின்றது .
நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ugina begum says:
YENAAMO PLAN PANNITAANNNN