கனல்விழி காதல் – 20
36655
4
அத்தியாயம் – 20
பெயருக்கு ஏற்றார் போல், அரண்மனை போல் பறந்து விரிந்து உயர்ந்து நிற்கும் குளோபல் பேலஸ் திருமண மண்டபம், அன்று மாலை ‘பாந்த்ரா’ ஏரியாவையே அதிரச்செய்தது. அலங்கார மின்விளக்குகளும், அழகிய தோரணங்களும், வான வேடிக்கைகளும், வரிசைகட்டும் விஐபி-களின் வாகனங்களும் வழிப்போக்கர்களைக் கூட நின்று வேடிக்கைப் பார்க்கச் செய்தது. மண்டபத்திற்கு உள்ளே பகட்டான விருந்தினர்கள் பஞ்சமில்லாமல் நிறைந்திருந்தார்கள்.
தங்கநிற திரைப் பின்னணியில், கொத்துக்கொத்தாக பூத்திருக்கும் கெர்பெரா மலர்களும், அழகிய வட்டங்களில் சரமாய் தொங்கி கொண்டிருக்கும் வெண்முத்து மணிகளும், மைறைத்து வைத்தாற் போல் ஆங்காங்கே, ஒளிந்துக் கொண்டு மந்தமாய் ஒளிரும் மின்விளக்குகளும் அந்த மேடையை வேறு ஒரு உலகமாய் காட்டியது. அங்கே அழகின் மொத்த உருவாய் மதுராவும், அவள் கரத்தை ஆசையோடு பற்றியபடி கிஷோரும் நின்றிருக்க, அவர்களின் பின்னணியில் நெருங்கிய உறவினர்கள் கூடியிருந்தார்கள். சற்று நேரத்திற்கு முன் கிஷோர் அணுவித்த மோதிரத்தை புன்னகையுடன் மதுரா பார்க்க, அந்த காட்சியை தவறவிடாமல் புகைப்படக்காரர் கேமிராவில் பதியவைத்து அழகுபார்த்தார். உறவினர்களும் நண்பர்களும் மேடையேறிவந்து அவர்களை வாழ்த்திவிட்டு, சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.
மகிழ்ச்சியோடு அந்த தருணத்தை அனுபவித்துக் கொண்டிருந்த மதுராவிற்கு ஏதோ ஒரு உறுத்தல்… உள்ளே ஒரு நெருடல்… என்னவென்று புரியவில்லை. வெகுநேரம் அந்த உணர்வை தாக்குப்பிடிக்க முடியாமல், மெல்ல அந்த குறிப்பிட்ட திசையில் திரும்பிப் பார்த்தாள். சுற்றிக் கொண்டிருக்கும் மோனோகிராம் லைட்டிங் வெளிச்சத்தில் நனைந்துநனைந்து மீண்டபடி, தீர்க்கமாக அவளை பார்த்துக் கொண்டிருந்தான் தேவ்ராஜ். ஜிவுஜிவுவென்று சிவந்திருந்த அவன் முகம், அந்த நேரத்தில் கூட அவளை அச்சுறுத்தியது. அரங்கத்திலிருந்த அநேகமானவர்களின் பார்வை அவள் மீதுதான் இருந்தது என்றாலும், அவன் ஒருவனுடைய பார்வை மட்டும் அவளை ஆழதுளைத்து ஆன்மாவைத் தொட்டது.
‘ஏன் இப்படி பார்க்கிறான்!’ – தான் எந்த இடத்தில் இருக்கிறோம்… யாருக்கு அருகில் நிற்கிறோம்… சுற்றி யார்யாரெல்லாம் சூழ்ந்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் ஒரு நொடியில் மறந்துவிட்டாள். விசையால் ஈர்க்கப்பட்டது போல் அவளுடைய பார்வை அவன் கண்களிலேயே நிலைத்திருந்தது.
தன் பிடியில் அடங்கியிருக்கும் மதுராவின் மெல்லியகரம் நடுங்குவதை உணர்ந்த கிஷோர், “வாட்ஸ் ராங்?” என்றபடி அவளை பார்த்தான். அவளுடைய கவனம் அவன் பக்கம் மீளவில்லை.
“மதுரா…” – புன்னகை மாறா முகத்துடன் அவளை தோளோடு அனைத்து தன் பக்கம் திருப்பி, “என்ன ஆச்சு?” என்றான்.
“இல்..ல… எதுவும்… இல்ல…”- புன்னகையுடன் தலையை ஆட்டினாள்.
“திடீர்ன்னு நர்வஸ் ஆயிட்டியே! ஒண்ணும் பிரச்சனை இல்லைல?”
“இல்ல… பயப்படறமாதிரி எதுவும் இல்ல…” என்று அவனிடம் சமாதானம் சொன்னவளின் பார்வை, மறுகணமே தேவ்ராஜிடம் மீண்டது.
கண்களில் பறக்கும் தீப்பொறியைப் பற்றி புத்தகங்களில் படுத்திருக்கிறாள். ஆனால் நேரில் பார்ப்பது இதுதான் முதல் முறை. அப்படி ஒரு உக்கிரம் அந்த பார்வையில். ஏன் என்றுதான் புரியவில்லை. அப்படி என்ன தவறு செய்துவிட்டாள். ஏன் இவ்வளவு வெறுப்பு அவள் மீது! அதுவும் இப்படி ஒரு சுபகாரியம் நடக்கும் பொழுது! வாழ்த்த வேண்டிய நேரத்தில் சபிப்பது போல் பார்த்துக் கொண்டிருக்கிறானே! – அவளும்தான் ஏன் அவனுடைய பார்வையைப் பற்றியும் வெறுப்பைப் பற்றியும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாள். அவளுடைய ஒவ்வொரு அசைவையும் கவனித்து அவனுக்காக உருகும் கிஷோர் அருகிலிருக்கும் பொழுது அவளுடைய கவனம் ஏன் சிதறுகிறது! -நினைவுகள் அவனையே சுற்றிக் கொண்டிருக்க தன்னைப் பற்றி சிந்திக்க மறந்தாள் மதுரா.
***************
நிச்சயதார்த்தம் வெகு விமர்சையாக நடந்து முடிந்தது. திருமண தேதியும் குறிக்கப்பட்டுவிட்டது. அதன் பிறகு இருவரும் போனில் பேசிக்கொள்ள துவங்கினார்கள். டேட்டிங்… டின்னர் எல்லாம் கூட அவர்களுக்குள் இயல்பாகிப்போனது. அன்றும் அப்படித்தான்… தன்னுடைய நெருங்கிய நட்பு வட்டத்திற்கு விருந்து கொடுக்க மதுராவையும் உடன் அழைத்து வந்திருந்தான் கிஷோர்.
அந்த நட்சத்திர ஹோட்டலின் வெளிப்புறத் தோட்டத்து புல்வெளியில், அவர்களுக்கென்று சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அழகிய மேசை நாற்காலி அமைப்பு… ஒவ்வொரு மேஜையிலும் முழுகுவர்த்தி விளக்குகள்… வண்ண மலர் அலங்காரம்… ஒளிரும் சீரியல் விளக்குகள்… பஃபே உணவு… மது மற்றும் குளிர்பான ட்ரேயுடன் சுற்றி வரும் சீருடை அணிந்த பணியாளர்கள் என்று பார்ட்டி சூழ்நிலை பக்காவாக அமைந்திருந்தது.
கிஷோரின் ஆடை வண்ணத்திற்கு பொருத்தமான நிறத்திலேயே அமைந்திருந்தது மதுரா அணிந்திருந்த சல்வார். எதார்த்தமாக அமைந்ததுதான்… ஆனால் வந்திருந்தவர்கள் நம்பவில்லை… இவர்கள் வாதாட, அவர்கள் மறுக்க… கேலி பேச்சும் கலகல சிரிப்பும் அந்த இடத்தையே அமர்க்களப்படுத்தியது. சந்தோஷத்தின் எல்லை இதுதானோ என்று எண்ணும் அளவிற்கு மகிழ்ச்சியாய் பொழுதை கழித்த மதுராவிற்குள் அன்று போல் இன்றும் ஏதோ ஒரு உறுத்தல்… சட்டென்று சுற்றும் முற்றும் பார்த்தாள். எதிர்பார்த்தபடி யாரும் அவள் கண்ணில் படவில்லை. மீண்டும் கவனத்தை நண்பர்கள் பக்கம் திருப்பியவளுக்குள் அதே நெருடல்… அன்று… நிச்சயதார்த்தத்தில் உணர்ந்த அதே உணர்வு… சுற்றிச்சுற்றிப் பார்த்தாள். அவன் இங்குதான் எங்கோ இருக்கிறான் என்று அவள் உள்மனம் கூறியது.
“நான் இங்கதானே இருக்கேன்? யாரை தேடற?” – கண் சிமிட்டிக் கிண்டலாகக் கேட்டான் கிஷோர். சட்டென்று அவள் முகத்தில் கலவரம் சூழ்ந்தது. ஏதோ தவாறு செய்துவிட்டார் போல். “ஐம் சாரி… ஐ ஜஸ்ட்… ஜஸ்ட் லூக்கிங் ஃபார்…” என்று மழுப்பத் தெரியாமல் தட்டுத்தடுமாறினாள்.
“தட்ஸ் ஓகே… ரிலாக்ஸ்… ஏன் டென்ஷனாகற?” என்று அவளை அமைதிப்படுத்தினான்.
“ஐம் ஓகே… ஐம் ஓகே…” – அவனிடம் தன்னை அமைதியாகக் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் அவள் மனம் சொன்னதையேதான் சொல்லிக்கொண்டிருந்தது.
‘அவன் இங்குதான் எங்கோ இருக்கிறான்…’
******************
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, கட்டுக்கோப்பான உடலும் உற்சாகமான மனதும் அவசியம் என்பதை அறிந்திருந்தான் தேவ்ராஜ். தன்னுடைய கடமை, பொறுப்பு, அடையாளம் என்று அனைத்தையும் மறந்து, லேசான மனதோடு அவன் சுற்றிவரும் இடம்தான் ‘மைல் ஸ்டோன் பிட்னெஸ் சென்டர்’. அவன் மனதிற்கு மிகவும் நெருக்கமான அந்த உடற்பயிற்சி மையம், மத்திய மும்பையில் உள்ள ஒரு பெரிய நட்சத்திர ஹோட்டலோடு இனைந்து அமைந்திருந்தது.
பல துறைகளிலும் பெயர்போன பெரும்புள்ளிகள் ஒன்றாக கூடும் இடம் என்றாலும், நீயா நானா என்கிற போட்டியில்லாமல், அனைவரையும் குழந்தைகளாக மாற்றி தன்னோடு ஐக்கியப் படுத்திக்கொள்ளும் ஆற்றல் ‘மைல் ஸ்டோனு’க்கு உள்ளது. ஜிம், மிகப்பெரிய நீச்சல் குளம், ஒவ்வொரு விளையாட்டுக்கும் தனித்தனியான உள்விளையாட்டு அரங்குகள், மைதாங்கங்கள், பயிற்சியாளர்கள் என்று எந்த வசதிக்கும் அங்கே பஞ்சமில்லை.
மாதத்திற்கு குறைந்தது மூன்று முறையாவது அங்கு வந்துவிடுவான். அங்குள்ள பெரிய நீச்சல் குளத்தில் மணிக்கணக்காக நீந்துவதும், ஷட்டில் விளையாடுவதும் அவனுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. அன்றும் அப்படித்தான் வெகுநேரம் நீந்திவிட்டு, ஆண்கள் லாக்கர் அறைக்குச் சென்று, ஷவர் எடுத்தபின் உடை மாற்றிக் கொண்டு, தன்னுடைய பொருட்களை முதுகுப்பையில் சேகரித்து மாட்டிக் கொண்டு வெளியே வந்தான். நன்றாக இருட்டியிருந்தது. மணிப் பார்க்க கையில் கடிகாரம் இல்லை. நேரம், எட்டு அல்லது எட்டரை இருக்கலாம் என்று ஊகித்தபடி, கைபேசியை எடுத்துக் பார்த்தான். அவனுடைய ஊகம் சரிதான் என்று கூறியதோடு, ரகீமின் தவறவிட்ட அழைப்புகளையும், வாய்ஸ் மெசேஜ்களையும் எடுத்துக்காட்டியது அவனுடைய லேட்டஸ்ட் மாடல் ஆப்பிள்.
ரகீமின் பதிவு செய்யப்பட்ட குரல் செய்தியைக் கேட்டபடி, கார் பார்க்கிங் நோக்கி வந்தான் தேவ்ராஜ். புல்வெளியில் நடக்கும் பார்ட்டி அவன் கண்ணில் பட்டது. அதை பெரிதாக கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பார்க்கிங் நோக்கி சென்றுக் கொண்டிருந்தவனை தடுத்து நிறுத்தியது அந்த குரல். அவள் குரல்…
அவனால் நம்பமுடியவில்லை… இதுவரை மதுராவை ஒரு வீட்டுப் பூனையாகத்தான் நினைத்திருந்தான். சாதுவானவள்… அப்பாவி… கபடமற்றவள்… உலகம் தெரியாத அசட்டுப்பெண்… இன்னும் ஏதேதோ… ஆனால் அனைத்தையும் ஒரே நொடியில் பொய்யாக்கிவிட்டாளே! எவ்வளவு சிரிப்பு… கும்மாளம்… அதுவும் முன்பின் தெரியாத ஒரு ஆணுடன். – முகம் சுளித்தான். இன்னும் எவ்வளவு நேரத்திற்கு நீளும் இந்த கொண்டாட்டம்! – அவன் தாடை இறுகியது.
கிஷோர் அவளுக்கென்று நிச்சயிக்கப்பட்டவன். அவனோடு வெளியே வருவதிலும், கொண்டாட்டங்களில் கலந்துக்கொள்வதிலும் அவளுடைய பெற்றோருக்கே ஆட்சேபனை இல்லை என்னும் போது உனக்கென்ன பிரச்சனை என்று கேள்விக்கு கேட்கும் உள்மனதை புறந்தள்ளிவிட்டு, அவளை பார்வையால் பஸ்பமாக்கிக் கொண்டிருந்தான். திடீரென்று அவளுடைய பார்வை சுற்றுவட்டத்தை அலசியது. யாரையோ தேடினாள். இருள் மறைவிலிருந்தவன் அவள் கண்ணில் படவில்லை.
தேவ்ராஜ் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கிஷோர் அவளிடம் சரசமாகப் பேசினான். அவளும் இசைவாக பதிலளித்தாள். சட்டென்று அதிகமாகிவிட்ட இதயத்துடிப்பை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை அவனால். இந்த பதட்டமும், மனதிற்குள் ஏற்பாடும் அழுத்தமும் அவனுக்குப் புதிது. இதை எப்படி கையாள்வது என்பது கூட தெரியவில்லை. இன்னும் ஓரிரு நொடிகள் அங்கு தாமதித்தால் கூட ஏதாவது ரசாபாசமாகிவிடும் என்று மட்டும் புரிந்தது. ஏதிலிருந்தோ தப்பித்துக்கொள்ள ஓடுகிறவன் போல, வேகநடைபோட்டு அங்கிருந்து விலகிச் சென்றான் தேவ்ராஜ்.
4 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
மதுராவின் திருமணத்தில் குழப்பம் வரும் என்று சொன்னீர்கள் ,அது யாரால் மதுராவாலா அல்லது தேவ்வாலா.
நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ugina begum says:
WOWWWWWWW SEMAAAAAA BULP YERIYUTHUUUUUUUU
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Uma Deepak says:
Wow super appo kalyana kalatta confirm ..
Sema epi appo bharathi kkum theelip kum kooda kalyanam aagidum
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Pons says:
மாமனும் மருமகனும் விளையாடிட்டாங்க….மது உணர்வில்…
என்ன பண்ண போறான்..?
ராதாவை இழுத்து…உன் வாழ்வை நீயே கை கழுவிட்ட