Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 22

அத்தியாயம் – 22

இரவு முழுவதையும் நெடுந்தூர பயணத்தில் கழித்துவிட்டு மறுநாள் அதிகாலையில்தான் வீடு திரும்பினார் நரேந்திரமூர்த்தி. அவருடைய கண்கள் கோவைப்பழம் போல் சிவந்திருந்தன. முகம் பாறை போல் இருகியிருந்தது.
“எங்க போயிட்டீங்க நைட் முழுக்க? போன் கூட அட்டென்ட் பண்ணல” – கணவனைப் பார்த்ததுமே சீறினாள் பிரபாவதி. இரவு முழுக்க பட்ட அவஸ்த்தை அவளுக்குத்தானே தெரியும். மகளின் திருமண கவலை ஒரு பக்கம் என்றால் இவரை காணாமல் தவித்த தவிப்பு இன்னொரு பக்கம்.

 

நரேந்திரமூர்த்தி மனைவியை நிமிர்ந்து பார்க்கவே இல்லை. அவளுடைய கோபத்தை சிறிதும் மதிக்கவில்லை. “குளிக்கணும்… டவல் கொண்டுவா…” என்று கூறிவிட்டு படுக்கையறைக்குள் நுழைந்தார். இயல்புக்கு மாறான அவருடைய நடவடிக்கை பிரபாவதியைக் குழப்பியது. எதுவும் பேசாமல் அவரை தொடர்ந்துச் சென்று அவருக்கு தேவையானதை எடுத்துக் கொடுத்துவிட்டு வெளியே வந்தாள்.

 

“டாடி வந்தாச்சா? குரல் கேட்டுச்சே!” – தன்னுடைய அறையிலிருந்து வெளியே வந்தான் திலீப்.

 

“ம்ம்ம்… குளிக்கிறாரு…”

 

“என்ன பிரச்சனையாம்? நைட் எங்க போயிருந்தார்?”

 

“எதுவும் சொல்லல” கவலையோடு கூறினாள்

 

“கிஷோர் கொடுத்த டென்ஷன்ல அப்செட்டா இருப்பாரு மாம். நீங்க எதுவும் கவலைப்படாதீங்க. அவன் எங்க இருக்கான்னு விசாரிச்சுட்டேன். இன்னும் ஒரே நாள்ல கட்டி தூக்கிட்டு வந்து, டாடி முன்னாடி நிறுத்தறேன். அவன் மதுரா கழுத்துல தாலி கட்டிதான் ஆகணும்…” முரட்டுப் பிடிவாதத்துடன் சூளுரைத்தான்.

 

“யாரை கட்டித் தூக்கிட்டு வர போற?”- நெறுநெறுவென்று முறைத்தபடி அவன் எதிரில் வந்து நின்றார் நரேந்திரமூர்த்தி. அவருடைய கோபத்தைக் கண்டு வாயடைத்துப் போனான் திலீப்.

 

“இங்க பாரு… கிஷோரை மதுராவுக்காக கொண்டுவந்தது நீ தான். அவளோட வாழ்க்கையை சரிபண்ண வேண்டியது உன்னோட கடமை. நா என்ன சொல்றேனோ அதை மட்டும் செய். தேவையில்லாம எதையாவது செஞ்சு பிரச்னையை பெருசாக்கின… மகன்னு கூட பார்க்க மாட்டேன்” – கடுமையாக எச்சரித்தார்.

 

அவனால் எதுவும் பேசவே முடியவில்லை. ஓரிரு நிமிடங்கள் அவரையே திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவன் பிறகு தாயைப் பார்த்தான். அவளும் அவரை புதிராகத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“மதுரா எங்க?” – நரேந்திரமூர்த்தி.

 

“ரூம்ல” – பிரபாவதி.

 

“பேசிட்டியா?”

 

“ம்ம்ம்”

 

“என்ன சொன்னா?”

 

“அவ என்ன சொல்லுவா? சின்ன பொண்ணு… பயந்தா… அழுதா… இப்போ படுத்திருக்கா… நைட்டெல்லாம் தூங்கினாளோ இல்லையோ.. கடவுளுக்குத்தான் வெளிச்சம்” –

 

கண்களை இறுக்கமாக மூடி மகளின் துன்பத்தை ஜீரணிக்க முயன்றவர், ஒரு நீண்ட பெருமூச்சுடன் அவளைத் தேடித் சென்றார்.

 

தந்தைக்கு முதுகுக்காட்டி ஒருக்கணித்துப் படுத்திருந்த மதுரா, “மது…” என்று அவர் அழைத்ததும் எழுந்து அமர்ந்தாள். கண்கள் வீங்கியிருந்தது. முகம் சோர்ந்திருந்தது.

 

“ஆர் யு ஓகே?” – அன்போடு அவள் தலையை வருடினார்.

 

“ம்ம்ம்… ஐ ஆம்…” – தலையை ஆட்டி புன்னகைக்க முயன்றாள். தந்தையிடம் தன் மனதை திறந்துக்காட்டி அவரை வருத்தப்படுத்த அவள் விரும்பவில்லை. ஆனால் மகளின் மனம் தந்தைக்குப் புரியாமல் போய்விடுமா என்ன?

 

“உன்கிட்ட எந்த தீங்கும் நெருங்காது மது. நா நெருங்க விட மாட்டேன். நீ அப்பாவை நம்மறியா?” என்றார் அவளுக்கு அருகில் அமர்ந்து. சட்டென்று தந்தையை கட்டிப் பிடித்துக்கொண்ட மகள் தேம்பினாள்.

 

“நீ அழ கூடாது. ஏஞ்சல்ஸ் எல்லாம் அழ கூடாது மது. நீ எங்களோட ஏஞ்சல்… எங்களோட சந்தோஷம்… நீ அழவே கூடாது. அப்பா இருக்கேன்…” என்று மகளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டே அவர் அழுதார். அதை பார்த்துக் கொண்டிருந்த பிரபாவதிக்கும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.

 

கல்யாண வீடு துக்க வீடாக மாறிவிட்டது போல் தோன்றியது. ஒவ்வொருவரும் மற்றவர்கள் அறியாமல், தனித்தனியாக ஏதோ மூலையில் ஒதுங்கி கண்ணீர்விட்டுக் கொண்டிருந்தார்கள். துருவன் திலீப் இருவரையும் தன்னிடம் நெருங்கவிடவில்லை நரேந்திரமூர்த்தி. அவர்களுடைய ஆலோசனையை கேட்க அவர் விரும்பவில்லை. எந்த முடிவாக இருந்தாலும் அதை தானே எடுப்பது என்பதில் உறுதியாக இருந்தவர், வெகுநேரம் தனிமையில் சிந்தித்து ஒரு முடிவை எடுத்தார்.

 

இதுவரை குடும்பத்தோடு கலந்தாலோசிக்காமல் எந்த முடிவையும் அவர் எடுத்ததில்லை. இதுதான் முதல் முறை. அதை பற்றி கவலையில்லை. மதுராவின் வாழ்க்கைக்கு எது சரியோ அதை மட்டும்தான் இப்போது செய்தாக வேண்டும். வேறு எதை பற்றியும் அக்கறை இல்லை. சற்று நேரம் அமைதியாக கண்களை மூடி, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தவர், பிறகு கைபேசியை எடுத்து தங்கைக்கு அழைத்து அவளை உடனே வீட்டிற்கு வர சொன்னார்.

 

நரேந்திரமூர்த்தி, இராஜேஸ்வரியோடு தனிமையில் பேசவே விரும்பினார். அவர் என்ன பேசப் போகிறார் என்பதைப் பற்றி வீட்டில் உள்ள யாருக்கும் எதுவும் தெரியாது. பிரபாவதிக்கு அதைப் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வம் இருந்தாலும் கணவனுடைய கடுமை அவளை தள்ளி நிறுத்தியது. எனவே இராஜேஸ்வரி வந்ததும் அவளை, அவர் இருக்கும் அறைக்கு அனுப்பிவைத்துவிட்டு இவள் மதுராவின் அறைக்கு சென்றுவிட்டாள்.

 

இராஜேஸ்வரி உள்ளே நுழையும் போது சாய்வு நாற்காலியில், கண்களைமூடி தளர்ந்து அமர்ந்திருந்தார் நரேந்திரமூர்த்தி. திடீரென்று வசயாகிவிட்டது போல் பலவீனமாகத் தெரிந்தார். அண்ணனை அந்த நிலையில் பார்க்க அவள் மனம் வருந்தியது.

 

“அண்ணா…!” என்று மெல்ல அழைத்தாள். அவர் கண்விழித்துப் பார்த்தார்.

 

“வா ராஜி…”- தங்கையைக் கண்டதும் நிமிர்ந்து அமர்ந்தவர், அவளையும், “இப்படி வந்து உட்காரு” என்று அமரச் சொன்னார்.

 

கலையிழந்த அவர் முகம் அவளை உறுத்தியது. திருமணத்திற்கு இன்னும் ஆறே நாட்கள்தான் இருக்கின்றது. ஓடியாடி வேலை செய்ய வேண்டிய நேரத்தில் ஏன் இப்படி சோர்ந்து போய் அமர்ந்திருக்கிறார் என்று கவலைப்பட்டாள்.

 

“என்ன ஆச்சு அண்ணா? ஏன் ஒருமாதிரி இருக்கீங்க?” என்று அவள் கேட்டதுதான் தாமதம். அவள் கையைப் பிடித்துக் கொண்டு சிறு பிள்ளை போல் குலுங்கி அழுதார்.

 

அதை சற்றும் எதிர்பாராத இராஜேஸ்வரி, “அண்ணா…? என்ன ஆச்சு…? என்னனு சொல்லுங்க…” என்று பதறினாள். அவர் பதில் சொல்லவில்லை.

 

“வீட்ல யாருக்கும் முகமே சரியில்ல. வீடே ‘ஓ…’ன்னு இருக்கு. கல்யாணக்கலையே இல்ல. என்ன ஆச்சு?” – அவருடைய மௌனம் அவளுடைய பதட்டம் அதிகமானது. “அந்த பையனுக்கு… எதுவும்… ஒண்ணும் இல்லையே! நல்லாதானே இருக்கான்?” – அவளுடைய சந்தேகம் எங்கோ போனது.

 

சட்டென்று முகத்தைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்தார். “அவனுக்கும் நமக்கும் இனி எதுவும் இல்ல…” என்றார்.

 

“என்ன!” – திகைப்புடன் சகோதரனைப் பார்த்தாள்.

 

“கல்யாணம் நின்னுடுச்சு ராஜி” – மெல்லிய குரலில் கூறினார். அதிர்ச்சியில் உறைந்து போனாள் இராஜேஸ்வரி.

 

“என்ன சொல்லறீங்க அண்ணா! ஏன்? எப்படி?” – பதறும் தங்கையை ஆழ்ந்து பார்த்தார் நரேந்திரமூர்த்தி. “எதையுமே நீ தெரிஞ்சுக்க வேண்டாம். இப்போதைக்கு என்னோட மரியாதையை காப்பாத்த உன்னால மட்டும்தான் முடியும். செய்வியா?” என்றார்.

 

“நா என்ன செய்யணும்னு மட்டும் சொல்லுங்க அண்ணா…”

 

“தேவ் கிட்ட பேசு” – அவளுக்கு புரிந்துவிட்டது. இது அவளுக்கு கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பு. இதை தவறவிட அவள் தயாராக இல்லை. எப்பாடுபட்டாவது அவன் மனதை மாற்றியே ஆகவேண்டும் என்கிற முடிவோடு, “மதுரா என்னோட மருமக. குறிச்ச தேதியில கல்யாணம் நடக்கும். நீங்க தைரியமா இருங்க” என்று அவருக்கு உறுதி கொடுத்தாள்.




6 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vatsala Mohandass says:

    ஆரம்பத்தில் இருந்து விறுவிறுப்பாய் நகர்கிறது.. அருமை…


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Welcome to Shaptham Vatsala… 🙂 Thank you so much…


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    தேவ் பற்றி தெரியாமல் இராஜேஸ்வரி அண்ணனிடம் வாக்கு கொடுக்கின்றாரே,அப்படி என்னதான் கிஷோர் குடும்பம் நரேந்திரமூர்த்தியிடம் கூறியிருப்பார்கள்,இப்போ திலீப்பிற்கு கட்டாய திருமணம் செய்துவைக்கப்போகின்றார்கள்,இவற்றுக்கெல்லாம் காரணகர்த்தா தேவ்தானே.

    நன்றி


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you so much Thadsayani… 🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ugina begum says:

    super ud sis
    devin pathi yennavoooooo
    dilip ippo bharahyai kattikuvaanaaaaa


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you Ugina… 🙂

You cannot copy content of this page