இல்லறம் இதுதான் – 4
3093
1
அத்தியாயம் – 4
செல்போன் மெல்ல சிணுங்கியது. அதற்கு ஆதரவுக் கொடுத்தாள் சிவா.
“ஹலோ சிவா ஹியர்”
“நான் லட்சுமி பேசறேன்”
“சொல்லுங்கக்கா… என்ன விசேஷம் திடீர்ன்னு”
“இப்போ எங்க இருக்க?”
“ஆபீஸ்லதான்”
“எப்போ முடியும்?”
“அஞ்சு மணிக்கு ”
“முடிஞ்சதும் வீட்டுக்கு வர முடியுமா?”
“ரொம்ப முக்கியமா?”
“ஆமாம்”
“சரி அப்பாவுக்கு போன் பண்ணி சொல்லிட்டு வர்றேன்”
“தேங்க்ஸ்”
“வெல்கம்”
“வச்சுடறேன் பாய்”
“ஓகே.. பாய்”
வண்டியை வாசலில் நிறுத்திவிட்டு சாவியை கையில் சுழற்றியவாறே தன் ஹை ஹீல்ஸ் நடையில் கதவை அடைந்தாள் சிவா. காலிங் பெல்லை அழுத்திவிட்டு தோளில் அலைபாய்ந்த கூந்தலை கோதிவிட்டாள். ஜீன்ஸ் பேண்டின் பாக்கெட்டில் கைவைத்தபடி காத்திருந்தாள். லட்சுமிதான் கதவைத் திறந்தாள்.
“வா சிவா”
“அத்தை எங்கக்கா?”
“ரூம்ல படுத்திருக்காங்க”
“சரி… டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்”
“பெரியத்தான் டெல்லி போயாச்சா?”
“இல்ல… கம்ப்யூட்டர் ரூம்ல இருக்காங்க”
“அண்ணனுக்கும் தம்பிக்கு இதே வேலை” என்று அலுத்துக் கொண்டே அந்த அறைக்குள் நுழைந்தாள் சிவா. வேகமாக சென்று அவன் கண்களை மூடினாள். கைகளைத் தடவிப் பார்த்தான். பிரேஸ்லெட் தட்டுப் பட்டது.
“ஏய் வாயாடி வந்துட்டியா?” என்று செல்லமாக பயந்தான்.
“உங்களை…” என்று அவன் காதுகளை பிடித்துத் திருகினாள். இவர்களுடைய விளையாட்டை ரசித்தவாறே நின்றுக் கொண்டிருந்தாள் லட்சுமி.
“ஏய் சிவா… என்ன பண்ணுற?” என்று உறுமிக் கொண்டு வந்தாள் சாரதா. உடனே கைகளை விளக்கிக் கொண்டாள் சிவா.
“வயசு பெண்ணா லட்சணமா நடந்துக்க. என்ன டிரஸ் இது? சகிக்கலை. எத்தனை தடவை சொல்லியிருக்கேன். ஜீன்ஸ் போடாதேன்னு?”
“இல்ல… வண்டி டிரைவ் பண்ண இதுதான் வசதி. அதான்…” என்று இழுத்தாள்
“ஊர்ல யாரும் சுடிதார் போட்டுக்கிட்டு வண்டி ஓட்டலையா? இல்ல சாரிதான் கட்டிக்கிட்டு வண்டி ஓட்டலையா? புதுசா வானத்துலேருந்து குதிச்சுட்டா. இங்க வரும் போது ஒழுங்கா டிரஸ் பண்ணிட்டு வா, வெளியில நீ எப்படி போனாலும் கவலை இல்ல” உறுமினாள்.
“சாரி அக்கா… இனிமேல் ஒழுங்கா வர்றேன்” என்று கூறிவிட்டு தோட்டத்திற்கு ஓடினாள்.
கிணற்றின் மேல் அமர்ந்துக் கொண்டு தண்ணீரையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களிலும் கண்ணீர்.
“என்ன? பெரியக்கா மேல கோபமா?” பின்னிருந்து லட்சுமி கேட்டாள்.
“சத்தியமா இல்ல” அவசரமாக மறுத்தாள்.
“அப்புறம் கண் கலங்கியிருக்கு?”
“அவங்க சொன்னதை தாங்கிக்க முடியலை”
“கோபம் இல்லைன்னு சொன்ன?”
“ஆமாம், சின்ன வயசுலேருந்து ஒண்ணா விளையாடி வளர்ந்தவங்க நாங்க. அவங்களுக்குன்னு ஒருத்தி இருக்காங்கறதை மறந்துட்டு நான் தான் தப்பு பண்ணிட்டேன்”
“நீ என்ன தப்பு பண்ணின?”
“கண்டிப்பா தப்புதான், எல்லா பெண்ணும் தன் கணவனுடன் தான் மட்டும் தான் விளையாடனும்னு நினைப்பா. இதுதான் பிரக்டிக்கல். நான் அத்தான் கூட விளையாடியதையும் உரிமை எடுத்துகிட்டதையும் அவங்களால பொறுத்துக்க முடியலை. அவ்வளவு தான்”
“சரி, விட்டுதள்ளு”
“என் கதை இருக்கட்டும். என்னை ஏன் வர சொன்னிங்க”
லட்சுமி வாயெடுக்கும் முன், “அடடே சிவா… நீ எப்பம்மா வந்த?” என்று சந்தோஷமாக வந்தாள் ராஜம்.
“இப்போதான் அத்தை வந்தேன். நீங்க தூங்கறதா அக்கா சொன்னாங்க. அதான் டிஸ்டர்ப் பண்ணலை”
“கல்யாண அலைச்சலால் இன்னும் உடம்பு முடியல”
“அது சரி… சின்னத்தான் எங்க?”
“அவனா, சரியான பைத்தியக்காரன். கல்யாணமாகி ஒரு வாரம் கூட இல்ல… அதுக்குள்ள ஆபீஸ் போயி தீருவேன்னு ஒத்தைக்கால்ல நிக்கறான். அதான் சரி போய் தொலைன்னு அனுப்பிட்டேன்”
சிவா லட்சுமியை பார்த்தாள். அவள் முகம் வாடியிருந்தது.
“சரி லட்சுமி, சிவாவுக்கு காப்பி போட்டுக் கொடும்மா”
“அம்மா சிவா, இப்படி வாம்மா”
“என்னத்த”
“இந்த லட்சுமி பொண்ணும் எதையுமே வெளிக்காட்டிக்க மாட்டேங்கறா. சந்தோஷமா இருக்க மாதிரிதான் இருக்கா. ஆனா உண்மை என்னன்னு என் வயசுக்கு அவகிட்ட கேட்க முடியில. அதனால நீ எப்படியாவது கேட்டு சொல்லு. மோகன் ஏதாவது கஷ்டம் கொடுத்தான்ன சொல்ல சொல்லு. அவனை அதட்டிக் கேட்கறேன்.”
“சரி அத்தை”
“போய் காப்பி குடிம்மா”
சிவா எழுந்து சமையலறைப் பக்கம் சென்றாள். அங்கே சங்கர் கதவில் கைவைத்து மறித்து கொண்டு நின்றான்.
“வழிவிடுங்க அத்தான். அக்கா வரப் போறாங்க”
“அவ அவங்க அம்மாவுக்கு போன் பண்ண எஸ்.டி.டி பூத்துக்கு போயிருக்கா. வர அரை மணிநேரமாவது ஆகும்”
“இருக்கட்டும், இப்போ வழி விடுங்க”
“என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லு. வழிவிடறேன்”
“எதுக்கு மன்னிப்பு?”
“என் மனைவி செய்த தவறுக்கு நான் தானே மன்னிப்பு கேட்க வேண்டும்?”
“அவங்க செஞ்சது தப்பில்லை, நான் செஞ்சது தான் தப்பு”
“இன்னிக்கு நைட் ட்ரைன்ல டெல்லி கிளம்பறோம். இதுக்கப்புறம் எப்போ வருவோம்னு தெரியில. இந்த நேரத்துல கொஞ்சம் பொறுத்துப் போயிருக்கலாம். தெரியாம திட்டிட்டா”
“அதை நான் மறந்தாச்சு, வேற ஏதாவது சொல்லுங்க”
“அவ சொன்ன மாதிரி இல்லை, நீ ஜீன்ஸ்ல சும்மா சூப்பரா இருக்க”
“ரொம்ப தேங்க்ஸ்”
“ரொம்ப கஷ்ட்டமா இருக்கு. இப்படி நீ என்னை மூன்றாம் மனுஷன் மாதிரி நினச்சு பேசறது”
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல”
“ஆமாம் அப்படித்தான்”
“இல்லை”
“ஆமாம்”
“சரி உங்க சண்டையை அப்புறம் வச்சுக்கலாம். முதல்ல காப்பி குடிங்க. ஆறிடப்போகுது” – லட்சுமி காப்பி டம்ளரை நீட்டி இருவரும் சிரித்துக் கொண்டே அதை வாங்கிக் கொண்டார்கள்.
“ஹேப்பி ஜேர்னி அத்தான்” கைகளை நீட்டினாள் சிவா.
“தேங்க்ஸ் சிவா” பதிலுக்குக் கைக் கொடுத்தான்.
“அடுத்த தடவை டெல்லிலேருந்து வரும் போது உனக்கு என்ன வேணும்?”
“நல்ல ஒரு பணக்கார சிங் பையனா பார்த்து கூட்டிட்டு வாங்க. கல்யாணம் பண்ணிக்கிட்டு டெல்லியிலேயே செட்டில் ஆயிடலாம்”
“அடிக்கழுதை”
டம்ளரை கீழே வைத்துவிட்டு அடிக்க கை ஓங்கினான். சிவா வாசலுக்கு ஓடினாள்.
1 Comment
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
நன்றாக இருந்தது இப்பகுதி.
நன்றி