கனல்விழி காதல் – 31
9574
8
அத்தியாயம் – 31
திருமணத்திற்குப் பிறகு பெற்றோரின் வீட்டுக்கு செல்வதென்றால் பெண்களின் உற்சாகத்திற்கு அளவேது! மதுராவும் அதற்கு விதிவிலக்கல்ல. அன்று காலை எழுந்ததிலிருந்தே பரபரப்பாக இயங்கினாள். குளித்துமுடித்து நன்றாக அலங்காரம் செய்து கொண்டு விரைவாகவே தயாரானாள். இடையிடையே அவனுடைய தேவைகளையும் வலியச் சென்று கவனித்தாள். தயக்கமும் குழப்பமுமாகவே சுற்றிக் கொண்டிருக்கும் மதுராவிற்கு இவ்வளவு சுறுசுறுப்பாகவும் இயங்க முடியும் என்பதை அன்றுதான் அறிந்துக் கொண்டான் தேவ்ராஜ். ‘ஹும்ம்ம்!’ – அறையை வட்டமடிப்பவளை ஓரக்கண்ணால் கவனித்தபடி லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தான்.
“இன்னும் எவ்வளவு நேரம் வேலை இருக்கு?”
“என்ன விஷயம்?” – எதுவும் தெரியாதது போல் கேட்டான். பக்கென்றிருந்தது அவளுக்கு.
“இன்னைக்கு ஜூஹூ போறோமே!” – அவசரமாக அவனுக்கு நினைவுபடுத்தினாள்.
“ஓ! அதான் இவ்வளவு பரபரப்பா இருக்கியா! ஓகே ஓகே… நீ ரெடியாயிட்டியா?”
“ம்ம்ம்… பத்து நிமிஷத்துக்கு முன்னாடியே ரெடியாயிட்டேன்”
“ஆல் ரைட்… எனக்கும் ஒரு பத்து நிமிஷம் கொடு. நானும் ரெடி ஆயிடறேன்” என்று கூறி லேப்டாப்பை மூடி வைத்தான்.
திருமணமானதிலிருந்து முதல் முறையாக தேவ்ராஜோடு ஒரு மகிழ்ச்சியான மகிழுந்து பயணத்தை அனுபவித்தாள் மதுரா. செவியில் இழையும் இசையையும், தேகம் தீண்டும் குளிரையும் தண்டி அவன் அருகாமை அவளை ஈர்த்தது. மனம்கொள்ளா மகிழ்ச்சியுடன் அவன் பக்கம் பார்வையை திருப்பினாள். ‘என் கணவன்!’ – பெருமையாக எண்ணியது உள்ளம். தனக்குள் இவ்வளவு பெரிய மனமாற்றம் இவ்வளவு விரைவாக நிகழும் என்பதை அவளே நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால் நிகழ்ந்துவிட்டது. புன்னைகை விரிந்தது அவள் முகத்தில்.
“என்ன ஆச்சு?” – சாலையில் பார்வையை பதித்தபடி கேட்டான்.
“ஒண்ணும் இல்ல…” – தலையை குறுக்காக ஆட்டினாள்.
“ஏதோ உன் மண்டைக்குள்ள ஓடிக்கிட்டு இருக்க மாதிரி தெரியுதே! என்னன்னு சொல்லு”
“தேங்க்ஸ்…”
“எதுக்கு?”
“என்கூட வீட்டுக்கு வர்றதுக்கு”
“உன் தேங்க்ஸை நீயே வச்சுக்கோ” – அவன் முகத்தை சுளித்துக்கொண்டு சொல்ல அவள் சிரித்தாள்.
“ஏன் சிரிக்கிற?”
“நீங்க கொஞ்சம் நல்லவர்தான்”
“கொஞ்சம்தான் நல்லவனா?”
“அப்படிதான் நினைக்கிறேன்” – கேலிப் புன்னகையுடன் கூறினாள். இதெல்லாம் எப்போதிலிருந்து ஆரம்பித்தது என்று கேட்டால் அவளிடமும் பதிலில்லை.
“நா ரொம்ப நல்லவன் மதுரா. எவ்வளவு நல்லவன்னு உன்கிட்ட காட்டல அவ்வளவுதான்” – அவனும் புன்னகையுடன் கூறினான். அது கேலி புன்னகையல்ல, கபட புன்னகை என்பது மதுராவிற்கு தெரியாமல் போனதில் ஆச்சர்யம் இல்லை.
அடுத்த சில நிமிடங்களிலேயே ‘சில்வர் பீட்ச் அபார்ட்மெண்ட்ஸ்’ வந்துவிட மதுராவை மெயின் கேட்டிலேயே இறக்கிவிட்டான் தேவ்ராஜ். அவள் புரியாம பார்த்தாள். “நீங்க?”
“ஆபீஸ்ல ஒரு சின்ன வேலை இருக்கு. பத்து நிமிஷத்துல வந்துடறேன். நீ உள்ள போ” – அவள் முகம் அதிர்ந்தது.
“ஆர் யு சீரியஸ்?”
“ஜஸ்ட் டென் மினிட்ஸ். ஏன் இவ்வளவு டென்ஷன்?” – இலகுவாகக் கேட்டான்.
உதட்டைக் கடித்துக் கொண்டு தலைகவிழ்ந்தாள் மதுரா. அவனுடைய செய்கையில் அவளுக்கு சிறிதும் உடன்பாடில்லை.
“என்ன ஆச்சு?”
“மேல வந்துட்டு… ஜஸ்ட் எல்லாரையும் மீட் பண்ணிட்டு போங்களேன்” – கிட்டத்தட்ட கெஞ்சினாள்.
“நீ குழந்தை இல்ல மதுரா. சூழ்நிலையை புரிஞ்சுக்க ட்ரை பண்ணு. நான்தான் பத்து நிமிஷத்துல வர்றேன்னு சொன்னேன்ல. உள்ள போ” – முகத்தில் கடுமையைக் கூட்டி கண்டிப்புடன் கூறினான்.
வேறு வழியில்லாமல் “சீக்கிரம் வந்துடுங்க” என்றாள். “ஐ வில்…” என்று உறுதிகொடுத்துவிட்டு ஆக்சிலேட்டரை மெல்ல அழுத்தினான். அங்கிருந்து கார் நகர்ந்தது. கலங்கிய கண்களுடன், விலகிச் செல்லும் காரை பார்த்தபடியே நின்றாள் மதுரா.
“அடடே… வாங்க… வாங்க.. வாங்க…” – மதுராவைக் கண்டதும் சந்தோஷமாக கிரில் கதவைதிறந்த நரேந்திரமூர்த்தியின் உற்சாகம், உடனே வடிந்தது.
“மது, என்ன தனியா வந்திருக்க! தேவ் எங்க?” – வெளியே எட்டிப்பார்த்தபடி கேட்டவர் ஏமாற்றத்துடன் மகளை பார்த்தார்.
‘என்ன ஆச்சோ தெரியலையே!’ – கணவனின் உற்சாகக் குரலைக் கேட்டு சமையலறையிலிருந்து ஓடிவந்த பிரபாவதி, தனியாக வந்து நிற்கும் மகளைக் கண்டதும் திகைத்தாள். “நீ மட்டும்தான் வந்திருக்கியா?” – பதட்டத்துடன் கேட்டாள்.
“இல்லம்மா… தேவ் கூடத்தான் வந்தேன்” – புன்னகைக்க முயன்றபடி கூறினாள். ‘உஃப்’ – இறுக்கம் தளர்ந்த நேரேந்திரமூர்த்தி இயல்பாக மூச்சுவிட்டார். பிரபாவதிக்கும் அப்போதுதான் நிம்மதியாக இருந்தது.
“ரெண்டு பேரும் சேர்ந்தே மேல வந்திருக்கலாம்ல. நீ மட்டும் அவசரமா ஓடி வந்துட்டியா?” சிரித்துக் கொண்டே கேட்டவள், “ஒருநிமிஷம் இங்கேயே வெயிட் பண்ணு வந்துடறேன்” என்று கூறிவிட்டு உள்ளே திரும்பினாள். மாயா ஆராத்தித்தட்டை அவள் கையில் கொடுத்தாள்.
“வந்துட்டாப்லயா பாருங்க” – கணவனிடம் கூறினாள்.
“ம்மா… அது… வந்து…” – தயங்கினாள் மதுரா. அதற்குள் அங்கே வந்துவிட்ட துருவன், “பார்க்கிங்ல ஏதாவது பிரச்சனையா? தேவ் ஏன் மேல வரல?” – என்று கீழே செல்ல எத்தனித்தான்.
“இல்ல பாய்… அவர்… பத்து நிமிஷத்துல வந்துடுவார். ஒரு எமர்ஜென்சி… சாரி டாடி…” – அண்ணனிடம் ஆரம்பித்து தந்தையிடம் கெஞ்சுதலாக முடித்தாள்.
“என்ன சொல்ற நீ!” – அதிருத்தியுடன் கேட்டாள் பிரபாவதி.
துருவன் மாயாவைப் பார்த்தான். ‘எனக்கென்ன தெரியும்?’ என்பது போல் அவள் தோளை குலுக்கினாள்.
“இட்ஸ் ஓகே… இட்ஸ் ஓகே… வரட்டும் வரட்டும்… ஒண்ணும் பிரச்சனை இல்ல… நீ முதல்ல உள்ள வா…” – தன்னை சுதாரித்துக்கொள்ள ஓரிரு நிமிடங்கள் எடுத்துக் கொண்ட நரேந்திரமூர்த்தி மகளுக்கு ஆதரவாகப் பேசினார்.
‘இதை என்ன பண்ணறது!’ – ஆராத்தித்தட்டுடன் நின்ற பிரபாவதியின் மனம் அலைபாய்ந்தது.
“நில்லு…” என்று கூறி, மகளுக்கு மட்டும் திருஷ்ட்டி கழித்து உள்ளே அழைத்தாள். இவ்வளவு நாள் காத்திருந்தது மகளை மட்டும் உள்ளே அழைப்பதற்குத்தானா என்கிற எண்ணம் அவளுக்குள் கோபத்தை துளிர்க்கச் செய்தது.
வேலைக்காரர்களை உதவிக்கு வைத்துக்கொண்டு சமையலறையில் ரகளை செய்தாள் பிரபாவதி. என்னதான் தேவ்ராஜ் மீது கோபம் இருந்தாலும், மருமகனாயிற்றே! விட்டுக்கொடுத்துவிட முடியுமா? அதுவும் முதன்முறையாக வீட்டிற்கு வருகிறான். மாமியாரின் கைவண்ணத்தை காட்ட வேண்டாம்? – சுவையான பதார்த்தங்கள் பலவற்றை சமைத்து, அதை அழகிய பாத்திரத்தில் எடுத்து அலங்காரமாய் உணவு மேஜையில் அடுக்கி வைத்துவிட்டு அவனுடைய வரவிற்காக காத்திருந்தாள்.
அலுவலகத்தில் இன்று ஒரு முக்கியமான மீட்டிங். தேவ்ராஜ் திடீரென்று வீட்டிற்கு வருவதாக கூறிவிட்டதால், திலீப்பை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார் நரேந்திரமூர்த்தி. அவனும் தேவ்ராஜை சந்திக்க விரும்பாததால் மகிழ்வாகவே அங்கிருந்து சென்றுவிட்டான். ஆனால் எதிர்பாராதவிதமாக நரேந்திரமூர்த்தியின் இருப்பு அலுவலகத்தில் அவசியப்பட்டது. அவருடைய உதவியாளர் தொடர்ந்து அலைபேசியில் அழைத்துக் கொண்டே இருந்தார்.
இவரும் தொடர்ந்து அறிவுறுத்தல்களை கொடுத்துக் கொண்டே இருந்தார். ஒருகட்டத்தில் முடியாமல் போனது. ‘இனி எனக்கு போனே பண்ணாத. வீட்டுக்கு மருமகன் வந்திருக்காப்ல… நா ரொம்ப பிஸியா இருக்கேன்” என்று கண்டிப்புடன் கூறி போனை அனைத்துவிட்டார். ஆனால் பதற்றமாக இருந்தார். அடிக்கடி மதுராவிடம், “என்னம்மா ஆச்சு? தேவ் ஏன் இன்னும் வரல? போன் பண்ணி பாரு” என்று கேட்டுக் கொண்டே இருந்தார்.
‘நல்லவேளை! அன்று அவனாகவே போன் நம்பரை கொடுத்தான். இல்லையென்றால் இன்று என்ன செய்திருப்பாள்!’ – அதற்கு ஒருமுறை மானசீகமாக அவனுக்கு நன்று கூறிவிட்டு அலைபேசியை எடுத்து அவனுக்கு அழைத்தாள்.
“சொல்லு…” அலுப்புடன் ஒலித்தது அவன் குரல்.
“என்ன ஆச்சு, இன்னும் வேலை முடியலையா?” – கரிசனமாகக் கேட்டாள்.
“என்ன விஷயம் சொல்லு” – கத்தரித்துப் பேசினான். அவன் பேசியவிதம் சஞ்சலத்தை ஏற்படுத்தினாலும், அதை ஓரம்கட்டிவிட்டு, “இங்க எல்லாரும் உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. எப்போ வருவீங்க”
“வந்துட்டு இருக்கேன்… டென் மினிட்ஸ்ல வந்துடுவேன். வெயிட் பண்ணு…”
“சரி… சீக்கிரம் வந்துடுங்க…” என்று கூறி முடிக்க நினைத்தவள் வாயிலிருந்து, “பார்த்து… பத்திரமா…” என்கிற வார்த்தைகள் தானாக வந்து விழுந்தன.
பத்து நிமிடம்… பத்து நிமிடம்… என்று கூறியே அரை நாளை கடத்திவிட்டான் தேவ்ராஜ். ‘வரானா வரலையா…’ – நரேந்திரமூர்த்தி விரக்தியடைந்துவிட்டார். பிரபாவதியின் உள்ளத்தில் தணல் தகித்தது. அதை யாரிடம் கொட்டுவது என்று காத்திருந்தவள் மாயாவை பிடித்துக் கொண்டாள்.
“என்ன மாயா? உங்க அண்ணன் வராப்லயா இல்லையா? போன் பண்ணி கேளு” என்று சிடுசிடுத்தாள்.
“இந்த ப்ரோக்ராமை நான் பிக்ஸ் பண்ணல. எதுவா இருந்தாலும் மதுராகிட்ட கேட்டுக்கோங்க. அவங்களுக்குள்ள என்ன பிரச்சனையோ! எனக்கு என்ன தெரியும்” என்று முகத்தில் அடித்தது போல் கூறிவிட்டு ஒதுங்கி கொண்டாள்.
துருவனும் டென்ஷனாகத்தான் இருந்தான். சாப்பாட்டு நேரமும் தாண்டிவிட்டது. நரேந்திரமூர்த்தி சர்க்கரை வியாதிக்காரர். நேரத்திற்கு சாப்பிட வேண்டும். பிரபாவதிக்கு அல்சர். சற்று நேரம் தவறினாலும் வயிற்று வலியால் துடித்துவிடுவாள். ஆனால் இன்று காத்திருந்துதான் ஆகவேண்டும். மோரைக் குடித்துக் குடித்து பசியை ஆற்றி கொண்டு காத்திருந்தாள்.
பெற்றோர் வருந்துவதை காண சகிக்காமல் வேதனைப்பட்டாள் மதுரா. பத்து நிமிடத்திற்கு ஒருமுறை அவனுக்கு அலைபேசியில் அழைத்துக் கொண்டே இருந்தாள். அவனும் அலுக்காமல் அதே பதிலை சரியான குரல் ஏற்ற இறக்கங்களுடன் கூறிக் கொண்டிருந்தான். அவன் வரமாட்டான் என்று ஒருமுறை கூட அவள் நினைக்கவில்லை. வேண்டுமென்றே நேரத்தை கடத்துகிறான். தாமதமாக வந்தாலும், நிச்சயம் வந்துவிடுவான் என்றே நம்பினாள். ஆனால் நேரமாக ஆக அவளுக்குள் பயம் துளிர்விட்டது.
“டாடி… அவர் ஏதோ முக்கியமான மீட்டிங்கில் மாட்டிக்கிட்டாரு. நீங்களும் அம்மாவும் முதல்ல சாப்பிட்டுடுங்க ப்ளீஸ்…” என்றாள் கெஞ்சுதலாக.
“நோ நோ… தேவ்காகத்தான் இந்த ஏற்பாடே! அவன் இல்லாம எப்படி! வரட்டும் வெயிட் பண்ணலாம். ஒண்ணும் பிரச்சனை இல்ல” என்று கூறிவிட்டு சோபாவில் சென்று அமர்ந்தார். அவர் காத்திருக்கத்தான் நினைத்தார். ஆனால் உடல் ஒத்துழைக்கவில்லை. சற்று நேரத்திலேயே முகத்தில் சோர்வும் உடலில் தளர்வும் தெரிந்தது. மதுரா மிகவும் சங்கடப்பட்டாள். “டாடி ப்ளீஸ்… நீங்க சாப்பிடுங்க” – கெஞ்சினாள்.
அதற்குமேல் காத்திருப்பது சற்று சிரமம்தான் என்று தோன்றிய பிறகு, “இன்னொருத்தரம் போன் பண்ணி பாரும்மா” என்றார்.
8 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ரமா says:
ஆனாலும் இந்த தேவ் இப்படி பழி வாங்க கூடாது ..பாவம் மதுரா
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
ஹாய் ரமாக்கா… நல்வரவு… 🙂 எப்படி இருக்கீங்க? உங்களை இங்க பார்த்ததுல மகிழ்ச்சி… கதை பிடிச்சிருக்கா? தொடர்ந்து படிங்க… கமெண்ட்ஸ் கொடுங்க…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
எதற்காக இந்த அலைக்கழிப்பு செய்கின்றார்,மதுராவை வருத்தவா அல்லது தன் மாமன் குடும்பத்தை வருத்தவா.
நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
மிக்க நன்றி தாட்சாயணி… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Pons says:
வரமாட்டான்…நம்பாத
பச்சப்புள்ளையா இருக்கிறாளே
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
எஸ் எஸ்… பாவம் பச்சப்புள்ள… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Lakshmi says:
Dav ….👿👿👿👿
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
Lakshmi…
Paavam dev… avanai thittadheenga…