கனல்விழி காதல் – 33
9699
4
அத்தியாயம் – 33
பதினைந்து நிமிடத்திற்குள் வீட்டிற்கு வரவேண்டும் என்று சொல்லி, நான்கு மணிநேரமாகிவிட்டது. இன்னும் அவள் வந்தபாடில்லை. பேசிக் கொண்டிருக்கும் போதே அழைப்பை வேறு துண்டிக்கிறாள்! எவ்வளவு திண்ணக்கம்! – தேவ்ராஜின் விழிகள் சிவந்தன. அவனுடைய பேச்சுக்கு அவளிடம் மதிப்பில்லை என்பது அவனுக்குள் எரிமலையின் சீற்றத்தை தோற்றுவித்தது. எப்போது வேண்டுமானாலும் வெடித்துச் சிதறும் அபாயத்துடன் காத்திருந்தான்.
முட்டாளாக இருக்கலாம். ஆனால் அடிமுட்டாளாக இருக்கலாமா! அவன் ‘வருகிறேன்… வருகிறேன்…’ என்று சொல்லிக் கொண்டே இருப்பானாம். அதை இவளும் நம்பிக் கொண்டே இருப்பாளாம்! இவள் நம்பியதை அவனே நம்பவில்லையே! அப்படியென்றால் இது எவ்வளவு பெரிய வடிகட்டிய முட்டாள்தனம். – தன்னை நினைத்துத் தானே தலையிலடித்துக் கொண்டாள் மதுரா. படித்திருந்தாலும் பெருநகரத்தில் வளர்ந்திருந்தாலும் அனுபவம் இல்லாதவள். பொத்திப்பொத்தி செல்லமாக வளர்க்கப்பட்டவள். இப்படியும் ஒருவன் ஏமாற்றக் கூடும் என்று எண்ணியதே இல்லை. ஆனால் இப்போது தெரிந்துக் கொண்டுவிட்டாள். அவன் தெரியப்படுத்திவிட்டான். அவமானம்தான். ஆனால் அனுபவம்… தேவராஜ் கொடுத்த அனுபவம். – இறுகிய மனநிலையுடன் காரிலிருந்து இறங்கினாள் மதுரா.
அவள் வீட்டிற்குள் வரும்பொழுது இராஜேஸ்வரியும் பாரதியும் கூடத்து சோபாவில் அமர்ந்திருந்தார்கள். மதுராவை பார்த்ததும் மாமியார் எழுந்து வந்தாள்.
“என்ன ஆச்சு? உன்ன மட்டும் அங்க விட்டுட்டு தேவ் ஏன் உடனே வந்துட்டான்?” – அக்கறையுடன் கேட்டாள். முகத்தில் புன்சிரிப்புடன் அமர்ந்திருக்கும் பாரதி அவளுடைய பார்வை வட்டத்தில்தான் இருந்தாள். தன் சங்கடத்தை அவள் ரசிக்கிறாளோ என்று தோன்றியது மதுராவிற்கு. முயன்று முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டாள்.
“ஏதாவது பிரச்சனையா?” – இராஜேஸ்வரி.
“உங்க பையன்கிட்ட கேட்கலையோ?”
“அவன் பதில் சொல்லல”
“சொல்ல முடிஞ்சிருக்காது” – மெல்ல முணுமுணுத்தாள். கண்கள் மாதஇதழில் இருந்தாலும், செவியை தீட்டி அவர்களுடைய உரையாடலை உள்வாங்கி கொண்டிருந்த பாரதிக்கு, மதுராவின் குரலை கேட்க முடியவில்லை.
குழப்பமும் அதிர்ச்சியுமாக இராஜேஸ்வரி மதுராவை பார்த்தாள். என்னதான் அவள் முகத்தை இயல்பாக வைத்திருக்க முயற்சி செய்திருந்தாலும் மனதின் இறுக்கம் முகத்தில் தெரியத்தான் செய்தது. “இந்த பிரச்னையை பெருசாக்காத மதுரா. விட்டுடு…” – கெஞ்சுதலாகக் கூறினாள். ஆரம்பத்திலேயே அவர்களுக்குள் சிக்கல் வந்துவிடக் கூடாதே என்கிற அக்கறை தெரிந்தது அவள் குரலில். வாய் திறந்து எந்த பதிலும் கூறாமல் தலையை மட்டும் ஆட்டிவிட்டு மாடிக்குச் சென்றாள் மதுரா.
மதுரா அறைக்குள் நுழைந்த போது தேவராஜ் அங்கே இல்லை. டெரஸில் அவன் அமர்ந்திருப்பது கண்ணாடித்தடுப்பின் வழியாக தெரிந்தது. மடியில் லேப்டாப்… டீப்பாயில் அந்த டின்… மதுபான டின். முகம் சுளித்த மதுரா, க்ளோஸெட்டிற்குள் சென்று உடைமாற்றிக் கொண்டு வெளியே வந்தாள். அவனிடம் பேசப்பிடிக்கவில்லை. கீழே செல்லலாம் என்றால் பாரதி அமர்ந்திருக்கிறாள். அவளுக்கும் இவனுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. இருவருமே அடுத்தவரின் துன்பத்தை ரசிக்கிறார்கள். எரிச்சலுடன் எண்ணியவள், கட்டிலில் சாய்வாக அமர்ந்து, மடியில் தலையணையை எடுத்து வைத்துக் கொண்டு மொபைலில் ஆங்கிரி பேர்ட்ஸ் விளையாட ஆரம்பித்தாள்.
கண்கள் கணினியில் இருந்தாலும் கவனம் அதில் இல்லை. அவள் உள்ளே வந்ததிலிருந்து, நின்று தன்னை பார்த்தது, உடைமாற்ற சென்றது, மீண்டும் வந்து தன்னை பார்த்தது, பிறகு கட்டிலில் ஏறி ஜம்பமாக அமர்ந்துக் கொண்டது அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தான் தேவ்ராஜ். எவ்வளவு நெஞ்சழுத்தம்! வெளித்தோற்றத்திற்கும் அவளுடைய குணத்திற்கும் சம்மந்தமே இல்லை. பூனை போல் பவ்விபவ்வி பேசுகிறாள். ஆனால் செயல்களெல்லாம் எதிர்மறையாக இருக்கிறது! திமிர்பிடித்தவாள். – பட்டென்று லேப்டாப்பை மூடி போட்டுவிட்டு வேகமாக உள்ளே வந்தான். பயத்தை மிஞ்சிய கோபம் அவளை சிலைபோல் அமர்ந்திருக்கச் செய்தது. தான் உள்ளே வந்த பிறகும் தலை நிமிராமல் அமர்ந்திருக்கும் அவளுடைய அலட்சியம் அவனை மேலும் மிருகமாக்கியது. பிரிட்ஜை திறந்து இன்னொரு மதுபான டின்னை எடுத்துத் திறந்து ஒரு மிரடு குடித்துவிட்டு மீண்டும் அவளை பார்த்தான்.
“திமிரு…?” – இறுகியிருந்த அவன் குரல் அவள் கோபத்தை சற்றே அசைத்துப் பார்த்தது. ஆனாலும் அவள் முற்றிலும் பயந்துவிடவில்லை. ஏதோ ஒரு குருட்டு தைரியம் அவளை வழிநடத்த அழுத்தமாக அமர்ந்திருந்தாள்.
“பேசிகிட்டு இருக்கும் போதே போனை கட் பண்ணற?” – அப்போதும் அவள் நிமிரவில்லை.
சட்டென்று அவளை நெருங்கியவன், போனை பிடிங்கி தூக்கியெறிந்தான். நல்லவேளை அது மெத்தையில் விழுந்ததால் சேதாரமில்லாமல் தப்பித்தது. இதென்ன நாகரீகமற்ற செயல்! அவனை வியப்புடன் பார்த்தாள் மதுரா. செக்கச்செவேலென்று சிவந்திருந்த கண்கள், அவனுடைய கோபத்தின் அளவைக் காட்ட, மெளனமாக அவன் முகத்தை பார்த்தபடி எழுந்து நின்றாள்.
“ஏன் இவ்வளவு லேட்?” – விழிகளை உருட்டினான்.
“என்னோட அப்பாம்மாவ ஏன் புண்படுத்துனீங்க?” – மென்குரலில் கேட்டாள். குரல் மென்மையாகத்தான் இருந்தது. ஆனால் அவள் கேட்ட கேள்வி! கேட்ட நேரம்! அவனுடைய வார்த்தைகளுக்கோ கோபத்திற்கோ சிறிதும் மதிப்பதில்லையா!
“நா கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லு” – பல்கலைக் கடித்தான்.
“அவங்க மேல உங்களுக்கு என்ன கோவம்?” – அவளுடைய குரல் மெல்ல உயர்ந்தது. என்ன நெஞ்சழுத்தம்! ஓங்கி அறைய வேண்டும் போலிருந்தது அவனுக்கு.
“எம்மேல வெறுப்புன்னா அதை என்கிட்ட காட்டுங்க. என்னோட அப்பாம்மாகிட்ட விளையாடாதீங்க”
“வாய்ஸ் ரெய்ஸ் பண்ணாத” – சுட்டுவிரல் நீட்டி எச்சரித்தான். அவள் கேட்கவே இல்லை. உள்ளே அடக்கிடக்கி வைத்திருந்ததெல்லாம் பொங்கி சிதறியது.
“அவங்க வயசானவங்க. பேஷண்ட்ஸ்…”
“ஸ்டாப்…” – “உங்களோட அரக்கத்தனத்தை அவங்ககிட்ட காட்டாதீங்க…” – “சத்தமா பேசாதன்னு சொன்னேன்” – ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு வார்த்தைகளை கடித்துத் துப்பினான்.
“அவங்கள்லாம் ரொம்ப நல்லவங்க. உங்களை பத்தி தெரிஞ்சா உயிரையே விட்….” – ‘டமார்…’ – “ஸ்டாப் யுவர் நான்சென்ஸ் யு ப்ளடி …………” – கையிலிருந்த மதுபான டின்னை தரையில் ஓங்கி அடித்துவிட்டு காட்டுக்கத்துக் கத்தினான். திகைத்துப் போய் நின்றாள் மதுரா. அவன் பேசிய வார்த்தைகளை ஜீரணிக்கவே முடியவில்லை. ஆங்கிலத்தில் பேசினாலும் கெட்ட வார்த்தை கெட்ட வார்த்தைதானே! எப்படி பேசினான்! அதுவும் நம்மை பார்த்து! – அழகிய அவள் விழிகள் வெறுப்பை கக்கின.
“எந்த தைரியத்துல நீ என்கிட்ட இப்படி பேசிகிட்டு இருக்க? என்ன நெனச்சுக்கிட்டு இருக்க என்னை பத்தி?” – அவள் தோள்களை அழுந்த பிடித்து உலுக்கினான். வலியில் முகம் சுளித்த மதுரா, “யு ஆர் டிஸ்கஸ்டிங்…” என்றாள். வெறிபிடித்துக் கொண்டது அவனுக்கு.
நல்ல நாளிலேயே தில்லைநாயகம்… இதில் அவனுடைய அகங்காரத்தை தூண்டிவிடும் வகையில், ‘நீ அருவறுப்பானவன்’ என்று சொன்னால் விடுவானா! போதாத குறைக்கு மதுவின் போதைவேறு… மனிதன் மிருகமாக மாறினான். அவள் போராடினாள். அவன் இழுக்கும் போது எதிர்திசையில் விசைகொடுத்தாள். தள்ளும்போது தடுமாறினாலும் சுதாரித்து நின்றாள். அழுந்த பிடிக்கும் போது விடுவித்துக்கொள்ள முயன்றாள். ஆனால் அசுர புயலில் ஆம்பல் மலர் எம்மாத்திரம்! அவன், அவளை அடிக்கவில்லை… ஆனால் காயப்படுத்தினான். அடுத்த மூன்று நாட்களுக்கு எழுந்துகொள்ளவே முடியாத அளவிற்கு காயப்படுத்தினான்.
கிழிந்த நாராக தரையில் சுருண்டுக் கிடந்தாள் மதுரா. வேட்டையாடிய மிருகம் விட்டத்தை வெறித்தபடி கட்டிலில் மல்லார்ந்து கிடந்தது. வேட்டைக்குப் பின் வெறி அடங்கிவிட்டது. ஆனால் நெஞ்சுக்குழிக்குள் ஏதோ ஒரு வலி. மோசமான வலி… என்னவென்று புரியாத வலி… கண்கள் தானாக மதுராவின் பக்கம் திரும்பின. முதுகு குலுங்கியது. அழுகிறாள்! – உள்ளே சுரீரென்று பாய்ந்தது. கண்களை இறுக மூடிக் கொண்டான்.
‘அவளும் அப்படி பேசியிருக்கக் கூடாது! போதை வேறு…!’ – தனக்கான நியாயத்தை தேட முயன்றான். ஆனால் மிகவும் பலவீனமான நியாயங்கள் அவன் மனசாட்சியிடமே எடுபடவில்லை. உள்ளே நச்சு நச்சென்று… என்ன இம்சை இது…! தலையை உலுக்கிக் கொண்டு கட்டிலிலிருந்து எழுந்தான்.
போதை என்ன பெரிய போதை… இப்போதும் போதையில்தான் இருக்கிறான். ஆனால் யோசனை வேறு விதமாகவல்லவா இருக்கிறது! அப்படியென்றால் அவனுடைய நடத்தைக்கு கோபம் மட்டும்தான் காரணம். அப்படி என்ன கோபம்! கோபம் வந்தால் எதை வேண்டுமானாலும் செய்வாயா! உன்னுடைய கோபத்தை காட்ட பெண்தான் கிடைத்தாளா! – மனசாட்சி நறுக்கென்று கேட்டது. மிகவும் அவமானமாக உணர்ந்தான்.
காலத்தை சிலமணிநேரங்கள் ரிவைண்ட் செய்துவிட முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! – உண்மையில் வருந்தினான். அவளை காயப்படுத்த வேண்டும் என்று அவன் நினைக்கவில்லை. கோபம் கண்ணை மறைத்துவிட்டது. இப்போது வெட்கப்பட்டோ வருந்தியோ என்ன பயன்? – சிலை போல் நின்றுக் கொண்டிருந்தவன், மெல்ல மதுராவிற்கு அருகில் வந்தான்.
பிடிங்கியெறிந்த கோடி போல் தரையில் துவண்டுக் கிடப்பவளைப் பார்க்க உள்ளே வலித்தது. ‘கட்டிலில் படுக்காமல் கீழே கிடைக்கிறாளே!’ – தவிப்பாக இருந்தது. அதை அவளிடம் யார் சொல்வது! அவன்தான் சொல்ல வேண்டும். ஆனால் முடியவில்லை. நெஞ்சம் நிறைய வருத்தமிருந்தாலும் தன்னகங்காரம் குறையவில்லை. ஆதிக்கம் கொண்ட மனம் அவ்வளவு சீக்கிரம் இறங்கிவிடுமா என்ன! நீண்ட பெருமூச்சுடன் டெரஸிற்கு சென்றான். வெளியே நன்றாக இருட்டிவிட்டது. அவன் மனதிற்குள்ளும் காரிருள்தான் சூழ்ந்திருந்தது.
சூழ்ந்திருக்கும் இருளுக்குள் தொலைந்து போன எதையோ தேடுவது போல், டெரஸில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கம்பியில் கைகளை ஊன்றி எங்கோ வெறித்தபடி நின்றுக் கொண்டிருந்தான். எவ்வளவு நேரம் நின்றானோ… கால்களெல்லாம் மரத்துப் போய் வலிக்க ஆரம்பித்த பிறகு தான் தன்னிலைக்கு மீண்டான்.
தேவ்ராஜ் மீண்டும் உள்ளே வந்தபோது மதுரா, அதே இடத்திலேயே குருகிப் படுத்திருந்தாள். அருகில் வந்து பார்த்தான். அசைவில்லை. மூச்சுக்காற்று மட்டும் சீராக இருந்தது. சிறு செருமல் அவ்வப்போது தோன்றியது. கேசம் கண்டபடி கலைந்திருந்தது. வீங்கி சிவந்திருந்த முகத்தில் கண்ணீர் தடம் காய்ந்து கோடிட்டிருந்தது. தடித்த அவன் உதடுகள் குற்றஉணர்ச்சசியில் அழுந்த மூடின. இப்போது அகங்காரம் இரண்டாம் பட்சமாகிவிட்டது.
“மதுரா…” என்று மெல்ல அழைத்தான். அவளிடம் அசைவில்லை. முகத்தைப் பார்த்தாலே நன்றாக உறங்கிவிட்டாள் என்று தெரிந்தது. ஆனால் இரவுமுழுக்க அவள் தரையிலேயே படுத்திருக்க முடியாது.
“மதுரா…” – குரலை உயர்த்தினான். இப்போது அசைவு தெரிந்தது. ஆனால் விழித்துப் பார்க்கவில்லை.
“மதுரா எழுந்திரு…” – இன்னும் சத்தமாக அழைத்தான். அவள் விழித்துப் பார்த்தாள். ஜிவு ஜிவுவென்று கண்கள் சிவந்திருந்தன. பார்க்கவே பரிதாபமாக இருந்தாள். ஆனால் பார்வை மட்டும் அவனை சுட்டெரித்தது. அந்த பார்வையை அவனால் சந்திக்க முடியவில்லை. முகத்தை திருப்பிக் கொண்டு, “பெட்ல போயி படு…” என்று வறண்ட குரலில் கூறினான். அவள் ஆயாசத்துடன் மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள். இவள் இப்படியே தரையில் படுத்திருந்தால் அவனால் நிச்சயம் நிம்மதியாக இருக்க முடியாது.
“மதுரா… எழுந்து போயி பெட்ல படு…” – அதட்டினான். தட்டுத்தடுமாறி எழுந்துச் சென்று கட்டிலில் ஒரு ஓரத்தில் சுருண்டு படுத்துக் கொண்டாள்.
இன்டர்காம் அடித்தது. எடுத்து பேசினான். இராஜேஸ்வரி இரவு உணவிற்கு அழைத்தாள். அப்போதுதான் சாப்பிடவில்லை என்னும் நினைவே வந்தது. அவனைப்பற்றி கவலையில்லை… ஆனால் அவள்! – மனைவியை திரும்பிப் பார்த்தான்.
“ஒரு கிளாஸ் பால் மட்டும் மேல கொடுத்தனுப்புங்க. டின்னர் வேண்டாம்…” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான்.
சற்று நேரத்தில் கதவு தட்டப்பட்டது. எழுந்து சென்று பார்த்தான். வேலைக்காரப் பெண் உணவு நிறைந்த தட்டும், பால் டம்ளரும் கொண்ட ட்ரேயோடு நின்றுக் கொண்டிருந்தாள். அதை பெற்றுக் கொண்டு கதவை சாத்திவிட்டு உள்ளே வந்து மீண்டும் அவளை எழுப்பினான்.
4 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
இராஜேஸ்வரிக்கு இவர்களின் நிலை புரிந்திருக்கவேண்டும் அதனால்தான் பாலுடன் சாப்பாடும் கொடுத்தனுப்பியுள்ளார்,தேவ் மதுராவிடம் நடந்துகொண்ட முறை தவறு ,அதென்னவோ தெரியவில்லை ஆண்கள் மனைவி மீதுள்ள கோபத்தை சிலபேர் இப்படியும் காட்டுகின்றனர் ,இதிலெல்லாம் என்ன ஆறுதல் அவர்களுக்கு கிடைக்கின்றது என்று தெரியவில்லை ,ஒன்றில் சந்தோசப்படவேண்டும் மதுராவில் நிலையை பார்த்து தேவ் சந்தோசப்படவில்லை,ஆணாதிக்கத்தை காட்டியதில் களிப்படையவில்லை,மனசு வருத்தமடைகின்றது,அப்போ மதுராவை நோக்கி மனம் மெதுமெதுவாக நகர்கின்றது என்றுதானே அர்த்தம்.
நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vatsala Mohandass says:
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு..
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Lakshmi says:
Appadi enna kovam … Kovam vantha kattu marandi aaiduvana … Chai …
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ரமா says:
அம்மாடியோவ் ..என்ன ஒரு வில்லத்தனம்..பாவம் மதுரா ..தன் எதிர்ப்ப கூட காட்ட முடியல..இதுதான் பெண் களை வீக்கர் செக்ஸ் நு சொல்லுராங்க..நம்மால் எதிர்க்க முடியாத சில தருணம்