Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

காஃபி வித் கரேஜியஸ் கதாசிரியர்

பத்து வயதில் துவங்கிய எழுத்துப் பயணம்… ஐநூறுக்கும் மேற்பட்டக் கவிதைகள்… நூற்றுக்கும் மேற்பட்டக் கதைகள்… குடும்ப நாவல்கள், பாக்கெட் நாவல்கள், மாத இதழ்கள் என்று அனைத்திலும் கால் ஊன்றித் தனக்கென்று ஒரு முத்திரையைப் பதித்துக் கொண்டவர்… இணையத்தள வாசகர்களைத் திருப்திப்படுத்தத் தனக்கென்று ஒரு வலைத்தளத்தை உருவாக்கிக் கொண்டவர்… எழுத்தரசி என்று பாக்கெட் நாவல் திரு அசோகன் அவர்களால் பட்டம் சூட்டப்பட்டவர்.

 

இத்தனை அடையாளங்களுடன் தமிழ் வாசகர்கள் மனதில் நிலையான இடத்தைப் பிடித்துக் கொண்ட அந்த கரேஜியஸ் கதாசிரியரிடம் “நீங்கள் யார்…?” என்று கேட்க வேண்டும் என்கிற ஆசை நீண்ட நாட்களாக எனக்கிருந்தது. அதை இந்த சந்தர்பத்தைப் பயன்படுத்திக் கேட்டேவிட்டேன்.

 

“முத்துலஷ்மி ராகவன் என்னும் நபர் யார்?”

 

“நான் யார் என்கிற விடையைத் தேடிப் போக முடியாத சாதாரண பெண்” என்று இன்முகத்துடன் நம்முடன் பேச ஆரம்பிக்கிறார் நம் சிநேகிதி.

 

“ஆணாகப் பிறந்திருந்தால் ஆன்மீக ரீதியாக நான் யார் என்கிற கேள்விக்கான விடையைத் தேடி சித்தர் போல கிளம்பியிருப்பேன். ஆனால் பெண்ணாகப் பிறந்துவிட்ட ஒரே காரணத்தால் வீட்டைவிட்டு வெளியேற விருப்பமின்றிக் கூட்டுக்குள் என்னை நானே அடைத்துக் கொண்டேன். வீட்டுக்கு வெளியே பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்கிற எனது எண்ணம் தான் அதற்கு காரணம்” என்று கூறும் இவர் வீட்டுக்குள் இருந்தே தன்னை ஒரு தேர்ந்த எழுத்தாளராக அடையாளப் படுத்திக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஒரு எழுத்தாளர் என்பதைத் தவிர இவருக்கு வேறு என்னென்ன அடையாளங்கள் இருக்கக் கூடும் என்கிற எனதுக் கேள்விக்கு “எழுத்து ஒன்று தான் என்னுடைய ஒரே அடையாளம். வேறு எதிலும் நான் சிறந்தவளாக எனக்குத் தோன்றவில்லை” – சுருக்கமாக பதிலளித்துவிட்டார். ஆனாலும் அவருடைய குடும்பம் சொந்த ஊர் பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளவில்லை என்றால் எனக்கு தலையே வெடித்துவிடும் போல் தோன்றியதால் சுற்றி வளைக்காமல் நேரடியாகவேக் கேட்டுவிட்டேன்.

 

“உங்களுடைய சொந்த ஊர்… பெற்றோர் பற்றி கூறுங்களேன்…”

 

“என்னுடைய சொந்த ஊர் மதுரை. ஆனால் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக திண்டுக்கல்லிலேயே தங்கிவிட்டதால் இப்போது எனது சொந்த ஊரே திண்டுக்கல் என்றாகிவிட்டது. அப்பா ஆசிரியர். அம்மா இல்லத்தரசி. திருமணம் ஆனது மதுரை அருகில் ஒரு கிராமத்தில்”

 

“நான் போஸ்டல் டிபார்ட்மெண்டில் வேலை செய்துக் கொண்டிருந்தேன். என்னுடைய வேலையும் என் கணவருடைய தொழிலும் திண்டுக்கல்லில் அமைந்திருந்தது. அதோடு என் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை என் பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு நான் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருந்ததால், திருமணத்திற்குப் பிறகு திண்டுக்கல்லில் செட்டில் ஆகிவிட்டேன்” என்று விளக்கமாகத் தன்னுடையக் குடும்ப விபரங்களை நம்முடன் பகிர்ந்துக் கொண்டார்.

 

வாசகர்களால் MR மேம் என்று அன்போடு அழைக்கப்படும் திருமதி முத்துலஷ்மி ராகவன் அவர்களின் கதைகளுக்கு ரசிகர்களிடம் எவ்வளவு வரவேற்பு இருக்கிறது என்பது நாம் அறிந்ததுதான். அதனால்தானோ என்னவோ கதை எழுதுவதற்காகவே இவர் பார்த்துக் கொண்டிருந்த அரசு பணியை துறந்துவிட்டதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. இதை பற்றிக் கேட்ட போது “இல்லை…” என்று மறுத்துவிட்டவர் தான் வேலையை விட்டதற்கானக் காரணத்தை நம்மோடு மனம்விட்டுப் பகிர்ந்துக் கொள்கிறார்.

 

“திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே என்னுடைய உடல்நிலை திடீரென்று பாதிக்கப்பட்டது. தலைதீபாவளியக் கூட மருத்துவமனையில் கழித்த நான், 1995-ல் ப்ரைன் TB-யால் பாதிக்கப்பட்டேன். வலது கண்ணின் பிம்பம் மூன்றாகப் பிரிந்துத் தெரிவதோடு வலது கை மற்றும் வலது கால் செயலிழந்து ஏறக்குறைய நடைபிணமாக திருச்சி சுந்தரம் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தேன். சிகிச்சைக்கு பிறகு ஓரளவு குணமடைந்ததும் உடனடியாக மீண்டும் வேலையில் சேர விரும்பினேன். ஆனால் மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை”

 

“வலியில்லாத நாட்கள் என் வாழ்க்கையில் வருமா என்கிற அளவில் உடல் ரீதியாக நான் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த நேரம் அது. என்னுடைய கணவர் என்னை மகாராணி போல் பார்த்துக் கொண்டார் என்றாலும், அவருக்கு பாரமாக இருக்க எனக்கு விருப்பம் இல்லை. குறைந்தபட்சம் என்னுடைய மருத்துவச் செலவை நானே பார்த்துக்கொள்ள விரும்பினேன். அதனால் மருத்துவர்களுடையப் பேச்சையும் மீறி பிடிவாதமாக வேலையில் சேர்ந்தேன்”

 

“அப்போது நான் வேலைப் பார்த்த போஸ்ட் ஆஃபீஸ் மசூதியின் ஒரு பகுதியில் இயங்கிக் கொண்டிருந்தது. தினமும் சரியாக பகல் பனிரெண்டு மணிக்கு மசூதியில் ஒலிக்கும் ‘அல்லாஹூ அக்பர்…’ என்கிற பாடல் எனக்குள் ஒரு தாக்கத்தை உண்டாக்கியது. மெல்ல மெல்ல என் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு நான் பழையபடி நடமாடியதற்கு, அர்த்தம் புரியாத அந்த தெய்வீக அரபு வார்த்தைகளுக்கு இருந்த ஏதோ ஒரு சக்தி தான் முக்கியக் காரணம்”

 

“அந்த நம்பிக்கையை ஆதாரமாக பிடித்துக் கொண்டு தொடர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் எனக்கு சோதனை காலம் ஆரம்பித்தது. மருத்துவர்கள் எனக்கு கர்ப்பையில் ஏதோ பிரச்சனை என்றும் உடனே அறுவைசிகிச்சைச் செய்ய வேண்டும் என்றும் கூறினார்கள். செய்துக் கொண்டேன். கர்பப்பையுடன் சேர்த்து ஹார்மோன் சுரக்க உதவும் ஓவரியையும் நீக்க வேண்டிய அவசியம் இருந்ததால் நீக்கிவிட்டார்கள். ஏற்கனவே பாதிப்படைந்து குணமாகியிருந்த என்னுடைய கால்கள் மீண்டும் வலுவிழந்து போயின. வீட்டில் ஓர் அறையிலிருந்து மற்றொரு அறைக்குச் செல்ல வேண்டும் என்றால் கூட எதையாவதுப் பிடித்துக் கொண்டு தான் நடக்க வேண்டும் என்கிற நிலையில் இனியும் தொடர்ந்து வேலை செய்ய முடியாது என்பதால் வேலையை விட்டுவிட்டேன்”

 

அன்றைய நினைவில் பேச முடியாமல் கரகரக்கும் குரலை செருமி சரி செய்துக் கொண்டுத் தொடர்ந்து, தான் கடந்துவந்தப் பாதையை திரும்பிப் பார்க்கும் இந்த போராளிப் பெண்மணிக்கு எழுத வேண்டும் என்கிற எண்ணம் எப்படி வந்திருக்கும்!

 

“இதை நான் பல இடங்களில் பலரிடம் கூறியிருக்கிறேன். என்னுடைய பத்து வயதில் என் அண்ணன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டான். அந்த நிகழ்வின் தாக்கத்தால் எனக்குள் எழுந்த கோபம், ஆத்திரம், ஆதங்கம் என்று என்னுடைய உணர்வுகள் அனைத்தையும் பேனா மையின் மூலம் காகிதத்தில் கொட்டினேன். அது,

 

“அவனும் ஓர் ஆண்தானோ…
பெண்ணாய் இருந்தவனோ…
பெற்றோரே சண்டையிட்டால்…
பிள்ளையவன் என்ன செய்தான்?
பனிரெண்டு வயது
பாலகனின் உயிரை எடுத்த
பேடியவன் என்ன பிறப்பு…?
பேயோ இல்லை பிசாசோ!”

 

என்கிறக் கவிதையாய் மாறியது. அன்றிலிருந்து இன்றுவரை மே 26-ம் தேதி என் அண்ணனுக்கான நினைவு நாள் கவிதை எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.

 

கவிதைக்கும் கதைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறதே! கவிதை எழுதும் ஆர்வம் கதைப் பக்கம் எப்படித் திரும்பியிருக்கும்!

 

“நான் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருந்த சமயத்தில் என்னுடைய டிப்ரஷனிலிருந்து வெளியே வருவதற்குக் கதை எழுதுவது ஒரு சிறந்த வழியாக இருக்கும் என்று என் கணவர் அறிவுரைக் கூறினார். சரி… முயன்றுப் பார்க்கலாமே என்றுதான் “நிலா வெளியில்” என்கிற கதையை என்னுடைய இருபத்தி நான்காவது வயதில் எழுதினேன்”

 

உங்களுடைய முதல் முயற்சி எப்படித் தொடர்ச்சியாக மாறியது?

 

“புத்தகம் படிப்பதில் சிறு வயதிலிருந்தே எனக்கு ஆர்வம் அதிகம். ஏறக்குறைய எல்லா எழுத்தாளர்களின் புத்தகங்களையும் கரைத்துக் குடித்திருக்கிறேன். ஒரு புத்தகத்தை அல்லது கதையைச் சிறந்த முறையில் விமர்சிக்க ஒரு தேர்ந்த வாசகரால்தான் முடியும். நான் ஒரு தேர்ந்த வாசகி என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. அந்த வகையில் என்னுடைய எழுத்தை நானே திரும்பப் படித்துப் பார்க்கும் பொழுது நான் நன்றாக எழுதுவதாகத் தோன்றியது. தொடர்ந்து அடுத்தடுத்தக் கதைகளை எழுத ஆரம்பித்தேன்”

 

தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் விருப்பமானக் கதாசிரியைத் தன்னுடைய இருபத்தி நான்கு வயதிலிருந்து எழுதிக் கொண்டிருக்கிறாரா! ஆனால் எனக்கு சில வருடங்கலாகத்தானே இவருடைய கதைகள் பரிட்சயம்! – என்னுடைய சந்தேகத்தை அவரிடம் கேட்ட பொழுது அவர் அளித்த பதில் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

 

“‘தொடுவானம்’ என்கிற என்னுடைய இரண்டாவதுக் கதையை எழுதி முடித்ததும் ஒரு பதிப்பகத்தாருக்கு அனுப்பிவைத்தேன். அவர் அதை நேராக குப்பைத் தொட்டிக்கு அனுப்பிவைத்தார். நான் மிகவும் ரசித்து எழுதிய என்னுடையப் படைப்பு குப்பைத் தொட்டியில்…! மிகுந்த மனவேதனைக்கு ஆளானேன். கதையைப் புத்தகமாக வெளியிடும் முயற்சியை விடுத்து என்னுடைய ஆத்மதிருப்திக்காகத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தேன்”

 

“பல நீண்டநெடும் ஆண்டுகளுக்கு பிறகு என் கணவரின் முயற்சியால் 2009-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் அருணோதயம் பதிப்பகத்தின் மூலம் ‘தொடுவானம்’ கதைப் புத்தகமாக வெளிவந்தது. அடுத்தடுத்து முப்பது கதைகள் தொடந்து புத்தகமாக்கப்பட்டன. ஆனாலும் என் மனம் குப்பைத் தொட்டிக்குப் போன கதையிலேயே இருந்தது. அந்த பதிப்பகத்தாருக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதினேன்”

 

“என் பெயர் முத்துலஷ்மி ராகவன். கவிதை மற்றும் கதை எழுதுவது எனக்கு மூச்சுக்காற்றை சுவாசிப்பதுப் போன்றது. இது வரை முப்பது கதைகள் புத்தகங்களாக இன்னென்னப் பதிப்பகங்களில் வெளிவந்துள்ளன. இது தவிர உங்களுக்கும் எனக்கும் ஏற்கனவே ஒரு அறிமுகம் உள்ளது. நான் என்னுடைய முதல் கதையை உங்களுக்கு அனுப்பி வைத்த பொழுது அதை நீங்கள் நிராகரித்துவிட்டீர்கள். இன்று உங்கள் பதிப்பகத்திற்காக நீங்கள் என்னிடம் கதை எழுதக் கேட்டால்… மன்னிக்கவும்… எனக்கு நேரம் இல்லை…” – இது தான் நான் அவருக்கு எழுதியக் கடிதம்.

 

ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்குப் பிறகு பழையக் கோபத்தை மனதில் வைத்துக் கொண்டு ஒரு பதிப்பகத்தாருக்கு இப்படி ஒரு கடிதமா! கர்வம் என்று நினைத்திருப்பாரோ!

 

Vidhya“கர்வம் அல்ல… எனக்கிருப்பது வித்யாகர்வம். சரஸ்வதி எப்பொழுதும் கால் மீது கால் போட்டு… முகத்தில் ஒரு அலட்சிய புன்னகையுடன் தான் அமர்ந்திருப்பார். அவருக்கு இருக்கும் வித்யாகர்வம்தான் எனக்கும் இருக்கிறது. திறமை உள்ள அனைவருக்கும் இருக்கக் கூடிய நிமிர்வு அது” – உறுதியான குரலில் அழுத்தமாகக் கூறுகிறவர் எதிராளியின் நியாயத்தையும் புரிதலுடன் பேசுகிறார்.

 

“நான் அனுப்பிய கடிதம் அவருக்கு கிடைத்த மறு நாளே என்னை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு வருத்தம் தெரிவித்ததோடு முடிந்தால் அவருடைய பதிப்பகத்திற்குக் கதை எழுதித் தரும்படி கேட்டார். தவறைத் தவறென்று ஏற்றுக்கொள்ளும் அவருடைய பக்குவம் எனக்குப் பிடித்திருந்தது. தொடர்ந்துப் பதினைந்துக் கதைகள் எழுதிக் கொடுத்தேன்”

 

சட்டென்றுக் கோபப்படுவது… அடுத்த கணமே அன்போடு அரவணைப்பது… இதுதான் இவர் குணமோ! ஆனால் இந்த குணம் இவருடைய கதாநாயகன்களுக்கே உரியதல்லவோ! கதாநாயகன்கள் இருக்கட்டும்…! இவருடைய நாயகன் மிஸ்டர்.ராகவனின் குணம் எப்படி? என்னவென்று நான் சொல்ல பிரபாகரன்… நெஞ்சமடி நெஞ்சம் ஹரிஹரன்… மாதிரி உரிமை உணர்வும் கோபமும் கொண்டவராக தான் இருப்பாரோ!

 

“இல்லை இல்லை…” – அவசரமாக மறுத்துவிட்டுத் தொடர்ந்து “கோபக்காரர் தான்… ஆனால் என்னுடையக் கதாநாயகன்கள் அளவுக்கு இல்லை” என்று சிரித்துக் கொண்டேக் கூறியவரின் முகத்தில் வெட்கம் படர்ந்திருக்குமோ! அதை நேரில் பார்க்க முடியவில்லையே என்கிற வருத்தத்தோடு “உரிமை உணர்வைப் பற்றி சொல்லவில்லையே…!” என்று ஞாபகப்படுத்தினேன்.

 

“உரிமை உணர்வில்லாத ஆண்கள் ஏதம்மா? எல்லா ஆண்களிடமும் இவள் என்னுடையவள் என்கிற ‘பொசசிவ்னஸ்’ இருக்கும். அது ஆண்களின் இயல்பு. அதோடு பாரதியாரின் ‘ரௌத்திரம் பழகு’ என்கிற வாசகம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஆண்களிடம் ரௌத்திரம் இருக்க வேண்டும் என்று நான் நினைப்பேன். அதனால் என்னுடையக் கதாநாயகர்களை நான் அந்த வகையில் படைக்கிறேன்” என்று அழகாக விளக்கம் அளிக்கிறார்.

 

இவ்வளவு அழகாக எல்லோரும் விரும்பும் விதமாகப் பாத்திரங்களைப் படைத்துப் புதியப் படைப்புகளை உருவாக்கும் இவரைப் போன்றப் பல படைப்பாளிகள் நசுக்கப்படுவதும், அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதும் வேதனையல்லவா! வெகுசில விதிவிலக்குகளைத் தவிர காலகாலமாகத் தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கும் இந்த அநீதியைப் பற்றி இவர் என்ன நினைக்கிறார்?

 

“படைப்பாளிகள் நசுக்கப்படுவது நூறு சதம் உண்மைதான். என்னுடைய விஷயத்தில் கூட இது நடந்திருக்கிறது. எழுபது கதைகள் புத்தகமாக வெளிவந்த பிறகும் என்னுடையக் கதைகள் மறுபதிப்புச் செய்யப்படவில்லை என்று இன்றுவரை சாதித்துக் கொண்டிருக்கும் பதிப்பகத்தார் என்னை நசுக்கத்தான் செய்தார்கள். ஒவ்வொருக் கதைக்கும் மிகக் குறைவானத் தொகைதான் எனக்கு ராயல்டியாக வழங்கப்பட்டிருக்கிறது. அதை பற்றி விளக்கம் கேட்கும் உரிமையும் எனக்குக் கொடுக்கப்படவில்லை. மீறிக் கேட்டால் புத்தகம் விற்கவில்லை… உங்களுடையக் கதைக்கு இதுவே அதிகம் என்று கூறி மனதளவில் நம்முடைய நம்பிக்கையை குலைப்பார்கள்”

 

“அதனால் தான் லக்ஷ்மிபாலாஜி உருவானதா?”

 

“நிச்சயமாக… லக்ஷ்மிபாலாஜி உருவான பிறகு தான் எனக்கான அங்கீகாரமும் பொருளாதார ரீதியிலான நியாயமும் கிடைத்தது”

 

ஒரு தொழிலை துவங்குவது சுலபம். ஆனால் அதை தொடர்ந்து கொண்டு செல்வது கடினம். அந்த வகையில் லஷ்மிபாலாஜியை தொடர்ந்து கொண்டு செல்லவும் பல சவால்களை சந்திக்க வேண்டியிருந்திருக்கும் அல்லவா?

 

“ஆம்… எதிராளிகள் விற்பனையை முடக்க முயற்சித்தார்கள். பிரிண்டிங் பிரஸ்ஸை தங்களுடையக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து எங்களுடைய வேலையை நடக்கவிடாமல் முட்டுக்கட்டைப் போட்டார்கள். மாதம் மூன்று புத்தகங்கள் கொடுத்துக் கொண்டிருந்த நான் இரண்டு மாதத்திற்கு ஒரு புத்தகம் கூட கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டேன்…”

 

“எப்படி சமாளித்தீர்கள்?”

 

“பிரிண்டிங் வேலைகளை திண்டுக்கல்லிலிருந்து சென்னைக்கு மாற்றினோம். அப்போதும் தொடர்ந்து நான்கு புத்தகங்களை ஒரு பிரஸில் பிரிண்ட் செய்தால் ஐந்தாவது புத்தகத்தை இழுத்தடிப்பார்கள். எதனால் இந்த இழுத்தடிப்பு என்று எங்களுக்கு புரிந்துவிடும். அதனால் மீண்டும் பிரஸ்ஸை மாற்றுவோம். இப்படியே ஒவ்வொரு நான்கு புத்தகங்களுக்கும் ஒரு பிரஸ்ஸை மாற்றி தொடர்ந்து வேலை நடக்குமாறு பார்த்துக் கொண்டோம். மாதஇதழ் விற்பனை உரிமையை நக்கீரன் பப்ளிக்கேஷனிடம் கொடுத்துவிட்டோம். இன்று இந்த துறையில் காலூன்றிவிட்டோம்…” – தங்களுக்கு ஏற்பட்ட சிக்கல்களையும் அதிலிருந்து எப்படி வெளியே வந்தோம் என்கிற சூட்சமத்தையும் மறைக்காமல் கூறுகிறார்.

 

திரு அசோகன் அவர்கள் இவருக்கு எழுத்தரசி என்கிற பட்டம் சூட்டியது நாம் அறிந்த ஒன்றுதான். ஆனால் லக்ஷ்மிபாலாஜி பதிப்பகத்தில் வெளியாகும் எந்த புத்தகத்திலும் அந்த அடைமொழியை நான் கண்டதில்லையே! இதற்கு பின் இருக்கும் ரகசியம் என்னவாக இருக்கும்!

 

“ரகசியம் என்றெல்லாம் எதுவும் இல்லையம்மா. திரு அசோகன் அவர்கள் என்னுடைய எழுத்தை கௌரவிக்கும் விதமாக எனக்கு அந்த பட்டத்தைக் கொடுத்தது நல்ல விஷயம் தான். ஆனால் புத்தக அட்டையில் வெறும் ‘முத்துலஷ்மி ராகவன்’ என்று என்னுடைய பெயரை பார்க்கும் பொழுது அதில் இருக்கும் அமைதி… ‘எழுத்தரசி முத்துலஷ்மி ராகவன்’ என்று பார்க்கும் பொழுது இருப்பதில்லை. அதோடு சரஸ்வதியை தவிர வேறு எந்த மானுடரும் எழுத்துக்கு அரசியாக முடியாது என்பது என் நம்பிக்கை. என்னுடைய மனதிலிருப்பதை திரு அசோகன் அவர்களிடம் வெளிப்படுத்திய பொழுது அவர் புரிந்துக் கொண்டு அடுத்தடுத்த புத்தகங்களில் அந்த அடைமொழியை விடுத்து என்னுடைய பெயரை மட்டும் அச்சிட்டார். அதனால்தான் லஷ்மிபாலாஜி பதிப்பகப் புத்தகங்களில் எழுத்தரசி என்கிற அடைமொழியை நாங்கள் பதிவிடுவது இல்லை”

 

இன்றைய இளம் எழுத்தாளர்களில் குறிப்பிடும்படியாக யாரையேனும் சொல்ல விரும்புகிறீர்களா?

 

“2011 டிசம்பரில் நித்யா கார்த்திகன் அவருடைய முதல் நாவல் ‘இரும்பின் இதயம்’ புத்தகமாக வெளிவந்த பொழுது அதை எனக்கு அனுப்பி வைத்தார். கதையை படித்தேன் நன்றாக இருந்தது. அதன் பிறகு அனு பிரியா, தமிழ் மதுரா, மல்லிகா மணிவண்ணன், ரேவதி அசோக், சுகந்தி ரமேஷ், இன்ஃபா, மாலா கஸ்தூரிரங்கன் அனைவரும் முகநூலில் அறிமுகமானார்கள். அவர்களுடைய எழுத்தும் அறிமுகமானது. எல்லோரும் நன்றாக எழுதுகிறார்கள். இவர்களில் அனு பிரியா மட்டும் இப்போது நம்மோடு இல்லை. ஆனால் அந்த பெண்ணின் நினைவுகள் என்றென்றும் என் நெஞ்சில் வாழும்”

 

வளரும் கதாசிரியர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

 

“மனதில் நினைப்பதை அப்படியே எழுதுங்கள். எழுத்தாளரின் பெயரை நீக்கிவிட்டுக் கதையை மட்டும் கொடுத்தால் அது யாருடையக் கதை என்று வாசகர்களால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவேண்டும். அப்படி உங்களுடைய எழுத்தைக் கண்டுபிடிக்க வைத்துவிட்டீர்கள் என்றால் அதுதான் உங்களுடைய வெற்றி”

 

ஒவ்வொரு எழுத்தாளரும் தங்களுடைய எழுத்தில் தனித்தன்மையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்வது மட்டும் அல்லாமல் அதை செய்துக்காட்டிய நீங்கள்… உங்களுடைய கற்பனை களவாடப்படுவதாக தொடர்ந்து உங்கள் ஆதங்கத்தை பதிவு செய்துக் கொண்டே இருக்கிறீர்களே!

 

“என்னுடையக் கற்பனைக் களவாடப்படுவது உண்மை தான். அதுமட்டும் அல்ல. இணையத்தில் என்னுடைய அனுமதி இல்லாமல் பிரதியெடுக்கப்பட்ட என் கதைகள் உலவிக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன்” என்று தயங்காமல் கூறுகிறார்.

 

உங்கள் கதைகளில் அடிக்கடி நான் ஒரு வாசகத்தை படித்திருக்கிறேன். ‘ஓடுகிற மானுக்கு ஒரு நியாயம் இருந்தால் துரத்துகிற புலிக்கும் ஒரு நியாயம் இருக்கும்…’ எனக்கு மிகவும் பிடித்த வாசகம் இது. இந்த வாசகம் உண்மை என்றால் உங்கள் கதைகளை பிரதி எடுப்பவர்களுக்கும் அதை படிப்பவர்களுக்கும் கூட ஒரு நியாயம் இருக்கத்தானே செய்யும்?

 

“நிச்சயமாக… அவர்கள் பக்கமும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. என்னுடையக் கதைகள் இணையத்தில் முறையாகக் கிடைக்கும் வசதியை இன்னும் நான் முழுமையாக செய்து முடிக்கவில்லை. முறையாகக் கிடைக்கவில்லை என்றாலும் எதாவது ஒரு விதத்தில் என் கதைகளை படித்துவிட வேண்டும் என்கிற வேகம் என் ரசிகர்களிடம் உள்ளது. அதனால் கிடைக்கின்ற பிரதியை படிக்கிறார்கள். அது அவர்களுக்கான நியாயம். அதே போல் பிரதி எடுப்பவர்கள் எனக்கு தீங்கு இழைத்தாலும் என் ரசிகர்களுக்கு நன்மை செய்கிறார்கள். அது அவர்களுக்கான நியாயம்”

 

“நான் வெறும் வியாபாரியாக இருந்திருந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பேன். ஆனால் நான் ஒரு படைப்பாளி. என் ரசிகர்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுப்பது தான் எனக்கு முக்கியம். அதனால் என்னுடைய இணையதள ரசிகர்களுக்கு முறையாக என் புத்தகங்கள் கிடைக்க வழி செய்துக் கொண்டிருக்கிறேன். வேலை முழுமையாக முடிந்துவிட்டால் மற்ற தளங்களில் என் கதைகள் கிடைக்காமல் தடை செய்துவிடுவேன்”

 

வில்லங்கமானக் கேள்விக்கும் மிகத் தெளிவாக பதிலளிக்கும் இவருடைய முகநூல் பதிவிற்கு வந்த விமர்சனத்தைப் பற்றி அவரிடமே கேட்டேன்.

 

“சரிச்சைக்குரிய விவாதங்களில் உங்களுடையக் கருத்தை பதிவு செய்கிறீர்கள். அது உங்களுடைய உரிமை என்றாலும் நீங்கள் அதிகப்படியாகப் பேசுவதாக சிலர் கூறுகிறார்களே!”

 

“பேசுவேன்… தப்பைத் தப்பென்றுச் சுட்டிக்காட்டுவதற்குப் பேசித்தானே ஆகவேண்டும். சமீபத்தில் முகநூலில் நான் பதிவு செய்த இரண்டு விஷயங்கள் தேனூர் சிவன் கோவில் பிரச்சனை மற்றும் பெண் எழுத்தாளர்கள் பற்றி திரு ஜெயமோகன் கூறிய கருத்து. இவை இரண்டுமே மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்”

 

“சோழவந்தான் அருகில் தேனூர் என்கிற கிராமத்தில் சிதிலமடைந்துக் கிட்டத்தட்ட அழிவின் எல்லையில் இருக்கும் சிவன் கோவிலுக்குச் சொந்தமானச் சொத்து மதிப்பு இரண்டு கோடிக்கும் மேல். அதை அனுபவித்துக் கொண்டிருக்கும் பிரசிடெண்டுக்கு கோவிலை மறுசீரமைக்க வேண்டும் என்று தோன்றவில்லை. கோவில் வளாகத்தில் கிடைத்தத் தங்க புதையலைக் கைப்பற்றிச் சென்ற அரசாங்கத்திற்கும் கோவிலை சீரமைக்க வேண்டும் என்று தோன்றவில்லை. அதை சுட்டிக் காட்டும் என்னுடையச் சாதாரணப் பேச்சு அதிகப்படியென்றால் நான் அதிகப்படியாகப் பேசுவதற்கு வருத்தப்படவில்லை. அதுமட்டும் அல்ல. எழுத்தாளர் ஜெயமோகன் பெண் எழுத்தாளர்களைப் பற்றி கூறியக் கருத்து ஏற்கத்தக்கதல்ல. அதை நாகரீகமான முறையில் சுட்டிக்காட்டிய என்னுடைய வாதம் அதிகப்படியானது என்றால் எனக்கு அதிகப்படியாக பேசுவதைத் தவிர வேறு வழியில்லை…” என்று உறுதியாக கூறியவர் தொடர்ந்து,

 

 

“தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?”

– என்கிற பாரதியாரின் கவிதை ஒன்றையும் பிசிறில்லாதக் குரலில் சொல்லிமுடித்தார்.

 

பாரதிக் கண்டப் புதுமைப் பெண்ணாக நேர்படப் பேசும் இவரிடம் என்னை உறுத்திக் கொண்டிருந்த இன்னொருக் கேள்வியையும் கேட்டுவிட்டேன்.

 

“என்னை பொருத்தவரை உங்கள் கதைகளில் எதார்த்தம் இருக்கும். இரண்டுக் கதாபாத்திரங்கள் பேசிக்கொள்ளும் பொழுது நாடகத்தனமாக இல்லாமல் ஒரிஜினலாக… ரசிக்கும்படியாக இருக்கும். ஆனால் அதுவே அதிகமாகும் பொழுது சற்று அலுப்புத்தட்டிவிடுகிறது. இதையே சிலர் நீங்கள் பக்கத்தை நிரப்புவதற்காக வசனம் எழுதுவதாக கூறுகிறாகளே!”

 

“கதை முழுக்க வர்ணனைகளை மட்டுமே எழுதிக் கொண்டிருந்தால் படிக்கிறவர்கள் பாதியிலேயே புத்தகத்தை மூடி வைத்துவிட்டுத் தூங்க வேண்டியது தான். ‘டையலாக்ஸ்’ படிக்கும் பொழுது அதிலிருக்கும் உயிரோட்டம் கதைக்கு மிகப்பெரிய பலம். என்னுடையக் கதைகளில் வசனங்கள் பெரிய பலம். அதனால் தேவைப்படும் இடத்தில் நான் வசனமெழுதித் தான் ஆக வேண்டும்”

 

ரசிகர்கள் மத்தியில் உங்களுடையப் புத்தகங்களுக்கான மோகம் குறையவில்லை என்றாலும் புத்தகம் வெளியான முதல் நாளே கடைக்கு ஓடிப் போய் புத்தகத்தை வாங்கிவந்துப் படித்துவிட்டுக் கதை நன்றாக இல்லை என்று எழுதுகிறார்களே! அவர்களுக்கு உங்களுடைய பதில் என்ன?

 

“நான் முன்பே சொன்னது போல் ஒரு நல்ல வாசகரால் மட்டும் தான் ஒரு கதையை சரியான முறையில் விமர்சிக்க முடியும். என்னுடையக் கதை நன்றாக இல்லை என்று ஒரு நபர் மனதார நினைத்தால் அவரால் நிச்சயமாக அடுத்த முறை என்னுடைய புத்தகத்தை வாங்க முடியாது. அதையும் மீறி வாங்கிப் படிக்கிறார் என்றால் கதையில் ஏதோ ஒன்று அவருக்குப் பிடித்திருக்கிறது, ஆனால் அவர் எதிர்பார்க்கும் ஏதோ ஒன்றுக் குறைகிறது என்று அர்த்தம். அவர் எதை எதிர்பார்க்கிறார் அல்லது அவருக்கு என்ன பிடித்திருக்கிறது என்று தெளிவுபடக் கூற முடியாதவர் நல்ல விமர்சகராக முடியாது”

 

அப்படியானால் உங்களுடையப் பழையக் கதை அளவிற்கு இப்பொழுது வரும் கதைகளும் தரமாக உள்ளதா?

 

“நிச்சயமாக… கதையின் தரத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் என்னுடையப் பழையக் கதையில் இல்லாத ஒரு விஷயம் இப்போது வரும் கதைகளில் உள்ளது. அதுதான் நகைச்சுவை. பழையக் கதைகளில் நகைச்சுவை சுத்தமாக இருக்காது. மாறாக மனதை வலிக்கச் செய்யும் கனமானச் சம்பவங்கள் இருக்கும். இப்பொழுது நகைச்சுவை அதிகமாக இருப்பதால் சம்பவங்களின் அழுத்தம் தானாகக் குறைந்துவிடுகிறது. அந்த கதைகளுக்கு ஒரு ரசிகர் வட்டம் இருக்கிறது என்றால் இந்த கதைகளை ரசிப்பதற்கும் ஒரு பெரிய வட்டம் இருக்கிறது. ஒரே ஸ்டைலில் எழுதிக் கொண்டிருக்க முடியாதே!”

 

‘பழையக் கதைகளில் நகைச்சுவை இல்லை… இன்றையக் கதைகளில் கனமான சம்பவங்கள் குறைவு…’ – உண்மைதானே! ஒரு கதையை சரியான முறையில் விமர்சிக்க ஒரு தேர்ந்த வாசகரால் மட்டும் தான் முடியும். MR மேம் ஒரு சிறந்த கதாசிரியர் மட்டும் அல்ல… நல்ல விமர்சகரும் கூட என்பதை நான் உணர்ந்துக் கொண்டேன். இவருடையப் பயணம் எந்த இலக்கை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது?

 

“என்னுடைய இறுதி மூச்சுவரைக் கதை எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். அதுவும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்தக் கதைகளை தான் எழுத வேண்டும். ஏனென்றால் பொதுவாக பெண்களுக்குக் கட்டுப்பாடுகளும் நெருக்கடிகளும் அதிகம். அவர்களுக்குக் கிடைக்கும் ஒரு சிறு ஆசுவாசமாக என் கதைகள் இருக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம்”

 

எளிமையான எதார்த்தமான பதில்… ஹ்ம்ம்… நீண்ட நேரமாக சீரியசாக பேசிவிட்டோம். இப்பொழுது ரிலாக்ஸ்டாக ஒரு கலகல கேள்வி…

 

“உங்களுக்கு உங்கள் தோழிகள் ஒரு செல்ல பெயர் சூட்டியிருக்கிரார்களாமே!” – கேட்ட மறு நொடியே வாய்விட்டு சிரிக்கிறார்…

 

“ஆம்… கலகல ப்ரியா…! என் தோழிகள் எனக்கு சூட்டிய பெயர்… எப்பொழுதும் கலகலப்பாக இருப்பதால் அந்த பெயரை எனக்கு அவர்கள் சூட்டினார்கள். இன்றும் கூட என்னுடைய தாய்மாமா எல்லோரும் என்னிடம் பேசும் பகடிக்கு நான் சரியான பதிலடிக் கொடுப்பேன். அதை ரசிக்கும் அவர்களுக்கும் என்னை வம்பிழுக்காமல் உறக்கம் வராது…” என்கிறார் சிரித்துக் கொண்டே.

 

அவருடைய சிரிப்பை கேட்கும் பொழுது என்னுடைய மனமும் நிறைந்துவிட்டது. நேற்றுவரை ஒரு கதாசிரியராக மட்டும் பார்த்த ஒரு பெண்ணை இன்று ஒரு உத்வேகம் நிறைந்த நபராக பார்க்கிறேன். கடுமையான உடல் உபாதைகளை மீறி தன்னம்பிக்கையோடு தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் இவர் நூறு ஆண்டுகள் உடல் ஆரோக்கியத்தோடும் மனநிம்மதியோடும் வாழ்ந்து இன்னும் பலநூறுக் கதைகளை படைக்க வேண்டும் என்று ஆண்டவனை பிராத்தனைச் செய்துக்கொள்கிறேன்.

 

– சகாப்தம்

 


Tags:


5 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Deeba Baskar says:

    நான் முத்துலட்சுமி ராகவனின் கதைக்கு தீவிர ரசிகை.இந்த பேட்டியை படிக்கும்போது அவர்களுடன் நான் பக்கத்தில் அமர்ந்து உரையாடிய மகிழ்ச்சி எனக்கு கிடைத்தது.இன்னும் சொல்லபோனால் இவர்களின் நாவல் படித்தபிறகு முன்பு கொஞ்சகாலம் வேறு யாருடைய நாவலையும் படிக்கும்போது அந்த திருப்த்தி எனக்கு கிடைக்காது அபொழுதுவரை வந்திருந்த அவரின் நாவல்கள் அனைத்தையும் நான் படித்துவேறு முடித்திருந்தேன்.எனவே அவர் போன்ற என் மனதை நிறைக்கும் கதைகளை தேடி சோர்ந்து பின்பு நானே கதை எழுத ஆரம்பித்த்துவிட்டேன்.இப்பொழுது என்னுடைய கதைக்கான பார்வை சற்று மாறியிருந்தாலும் என் ஆஸ்த்தான எழுத்தாளர் மேம் தான்.நான் இபொழுது தீபாஸ் என்றபேரில் கதை எழுதிக்கொண்டு இருக்கிறேன்.நான் மிகவும் சாதாரணப்பெண் என்னையும் எழுதவைத்த பெருமை முத்துலட்சுமி ராகவன் மேம் அவர்களுக்கே சமர்பனம்.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Santhya says:

    Migavum arumaiyana Peatti.. 🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    மங்களம் says:

    அருமை


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vatsala Mohandass says:

    அருமை!!!


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    முத்துலட்சுமி அம்மா அவர்களின் பேட்டி அருமையாக இருந்தது,மனதில் தைரியம் இருந்தால் எதையும் எதிர்கொள்ளலம் எதையும் தாங்கலாம் என்று அருமையாக எங்களுக்கு உணர்த்தியிருக்கின்றார்,என்றும் ஆரோக்யத்தடனும் பேருடனும் புகழுடனும் நல்வாழ்வு வாழ இறைவனை பிராத்திக்கிறேன்.

    நன்றி

You cannot copy content of this page