Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

இல்லறம் இதுதான்

Share Us On

[Sassy_Social_Share]

இல்லறம் இதுதான் – 7

அத்தியாயம் – 7

மோகன் அலுவலகம் வரும் போது மணி சரியாக 8.55. அவனுக்கு ஒன்பது மணிக்குத்தான் அலுவலகம் துவங்கும். எப்பொழுதும் அவன் ஐந்து நிமிடம் முன்பாகவே சென்றுவிடுவான். இது அவனுடைய தனித்தன்மை.

 

 

ஒன்பது மணி அலுவலகத்திற்கு ஒன்பது முப்பது மணிக்கு வந்துவிட்டு “பஸ் லேட் சார்… ட்ரைன் லேட் சார்… வண்டி ஸ்டார்ட் ஆகலை சார்… அம்மாவுக்கு உடம்பு முடியலை சார்… மனைவிக்கு இடுப்பு வலி சார்…” என்று வகைவகையாக புளுகுவோர் மத்தியில் மோகன் மேனஜரின் கண்ணுக்கு தனிப்பட்டவனாய் தெரிந்தான்.

 

 

அவருக்கு உச்சகட்ட ஆச்சர்யத்தைக் கொடுத்தது எது என்றால், திருமணமான இரண்டே நாளில் அவன் அலுவலகம் வந்ததுதான். அவரவர் ஒரு மாதம் தொடர்ந்து லீவ் எடுக்கும் விஷயம் திருமணம். ஆனால் மோகன் திருமணத்திற்கு மொத்தமாக எடுத்த லீவ் மூன்றே நாள் தான் இதனாலே மேனேஜருக்கு அவன் மீது தனி மரியாதை கொடுத்தது.

.

 

அவன் வேளைகளில் எப்பொழுதுமே தவறுகளோ, தாமதமோ செய்வதில்லை. அதிகமாக யாருடனும் பேசமாட்டான். அந்த அலுவலகத்தில் அவன் சற்று அதிகமாக பேசுவது என்றால் அது சாரதி மற்றும் விஜய்யோடுதான் எந்தவிதமான கெட்டப் பழக்கங்களும் இல்லாதவன். இதனால் அவனுக்கு ப்ரோமோஷன் மற்றும் இன்கிரிமெண்ட் வாய்ப்புகளும் வந்து குவிந்தன.

 

 

தன் கேபினில் சென்று அமர்ந்துக் கொண்டு ஏசியை இயக்கினான். தன் டேபிளை சரி செய்தான். தன் பேகை எடுத்து அதில் உள்ள கோப்பை எடுத்தான். அப்பொழுதான் ஞாபகம் வந்தது, “ஐயோ இன்று சாப்பாடு கொண்டுவர மறந்துவிட்டேனே! கேண்டீன் சாப்பாடா…!” தலையில் கைவைத்துக் கொண்டான்.

 

 

ஹ்ம்ம்… இன்னிக்கு லட்சுமியின் சமையல். காலையிலேயே பூரி செய்து அசத்திவிட்டாள். நாளை அவளிடம் பிரிஞ்சி என்றதுமே அவனுக்கு வாய் ஊறியது. கட்டுப் படுத்திக் கொண்டு வேலையைத் தொடங்கினான்.

 

 

12.30 மணி, லஞ்ச் டைம். மோகன் தான் பார்த்துக் கொண்டிருந்த கோப்பை மூடிவிட்டு வெளியே வந்தான். அவனுக்காக வெளியே காத்துக் கொண்டிருந்தான் சாரதி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த சாரதியா இவன்? நினைக்கவே சோகம் முட்டிக் கொண்டு வந்தது. அவனின் நிலை தாடியும் வெட்டப்படாத முடியும், சோகத்தை மட்டும் எப்போதும் எடுத்துக் காட்டும் முகமுமாக விளங்கினான்.மோகனுக்கு திருமணம் என்றதும் முதலில் சந்தோஷப்பட்டவன் சாரதிதான்.

 

 

“டேய் மச்சான். நான் தான் என்பாட்டுக்கு போய் இப்படி செருப்படி வாங்கியிருக்கேன். நீயாவது உங்க அப்பா அம்மா சொன்ன பெண்ணை திருமணம் செஞ்சுக்க போறியே. ரொம்ப சந்தோஷம்டா ” என்று கூறி அனைத்துக் கொண்டான்.

 

 

மோகனின் நினைவலைகளைக் கலைத்தது விஜையின் குரல்.

 

“வாங்கடா சாப்பிடலாம். எனக்கு பயங்கர பசி” என்றபடி அவன் கேண்டீனை நோக்கி நகர இருவரும் அவனை பின்தொடர்ந்தார்கள்.

 

 

அவர்கள் மூலையில் ஒரு டேபிளை பிடித்து அமர்ந்த நேரம் பியூன் மோகனை நோக்கி அவசரமாக நடந்து வந்தான்.

 

 

“சார்… உங்க மனைவி இந்த டிபன் பாக்சை உங்ககிட்ட கொடுக்க சொன்னாங்க”

 

 

“என் மிஸஸ்ஸா?”

 

“ஆமாம் சார்”

 

“எப்படி வந்தாங்க?”

 

“ஸ்கூட்டில வந்தாங்க. உங்ககிட்ட இதை கொடுக்க சொல்லிட்டு அவங்க உடனே போயிட்டாங்க”

 

 

“சரி நீ போ…” – ஹாட் பாக்சை திறந்து உள்ளேயிருந்த  டிபன் பாக்சை வெளியே எடுத்தான். முதல் கேரியரில் ஆவி பறக்கும் பிரிஞ்சியின் வாசனை நாசியை நிரப்பின. இரண்டாவதிலும் பிரிஞ்சி. மூன்றாவதில் தயிர் பச்சடி. பிரிஞ்சிக்கென்றே தேர்ந்தெடுக்கப்பட்ட சைட்டிஷ்.

 

 

“மச்சான்… வாசனையே ஆளை தூக்குதே” – விஜய் ஒரு கேரியரை எடுத்துக் கொண்டான். அடுத்ததை சாரதி எடுத்துக்கொள்ள அவனிடமிருந்து பாதியை அவசரமாகப் பிடுங்கிக் கொண்டான் மோகன்.

 

 

‘கொஞ்சம் அசந்தாலும் நம்மள பட்டினி போற்றுவானுன்களே’ – நினைத்துக் கொண்டே பிரிஞ்சியை சுவைக்கத் துவங்கினான். அமிர்ந்தமாயிருந்தது.

 

 

“ஆஹா… அருமை அருமை… டேய் மச்சான்… இது வழக்கமான டேஸ்ட் இல்லையே… புதுசா இருக்கே”

 

 

“ஹ்ம்ம்… இன்னிக்கு லட்சுமிதான் சமையல்” முதன் முறையாக மனைவியை நினைத்து பெருமைப் பட்டான்.

 

 

“நீ ரொம்ப கொடுத்து வச்சவன்டா. என் மனைவியும் இருக்காளே சீரியல் அட்வர்டைஸ்மென்ட்டுக்கு நடுவுல எதையாவது கொடுப்பா. வாயை மூடிகிட்டு சாப்பிடனும். இல்லன்னா அடுத்த நாள் அதுவும் கிடைக்காது” – சாரதி அங்காலைத்தான்.

 

மாலை 7 மணி, மோகன் பைக் சாவியை கையில் சுழற்றியபடி வீட்டிற்குள் நுழைந்தான். குடும்ப நாவல் ஒன்றில் மூழ்கியிருந்த லட்சுமி இவன் வரும் ஆரவாரம் கேட்டு நாவலை மூடி வைத்தாள்.

 

 

“என்ன சார் ரொம்ப நல்ல மூட்ல இருக்க மாதிரி தெரியுது” குறுகுறுக்கும் கண்களால் அவனை நோக்கினாள்.

 

 

“ஆமாம்…”

 

“என்ன விஷயம்”

 

“அப்பா அம்மா எங்கே?”

 

 

“அவங்க ரெண்டு பெரும் சாயங்காலமே கோவிலுக்கு போய்ட்டாங்க. ஒன்பது மணிக்குத் தான் வருவாங்களாம். அங்கேயே டின்னர் முடிச்சிக்குவாங்கலாம். நம்ம ரெண்டு பேருக்கு மட்டும் சமைச்சுக்க சொன்னாங்க”

 

 

“அப்படியா. சரி நீயும் இப்படி உட்க்காறேன்” சோபாவில் அமர்ந்துக் கொண்டு அவளை அழைத்துக் கை நீட்டினான். லட்சுமி அவனுக்கருகில் தயக்கத்துடன் அமர்ந்தாள்.

 

 

“மதியம் லஞ்ச சூப்பர். என் நண்பர்கள் எல்லோரும் ரொம்ப விரும்பி சாப்பிட்டாங்க. தேங்க்ஸ்..” அவள் கைகளை எடுத்து அவன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு பரவசமாகப் பேசினான்.

 

 

“ஹை… தேங்க்ஸ் சொன்னா சரியா போச்சா? இதுக்கு பதிலா நீங்க எனக்கு கம்ப்யூட்டர் சொல்லித் தரனும்” அவனுடைய மூக்கைப் பிடித்து இருபுறமும் செல்லமாக ஆட்டினாள்.

 

 

“கண்டிப்பா… அதக்கு முன்னாடி சூடா ஒரு கிளாஸ் பால் ப்ளீஸ்…”

 

 

“இதோ… ரெண்டே நிமிஷம்” கிச்சனுக்குள் நுழைந்தாள்.

 

 

மோகன் கம்ப்யூட்டர் சொல்லிக் கொடுத்தான். சரியாய் ஒரு மணிநேரம் எப்படி போனதென்று தெரியவில்லை. அவனுடைய பேச்சைக் கேட்கவே அவளுக்கு உச்சிக் குளிர்ந்தது.

 

 

“இன்னிக்கு இது போதும்  லட்சுமி அதிகம் சொல்லிக் கொடுத்தா போர் அடிச்சிடும். எனக்கு கொஞ்சம் ரெஃபர் பண்ணற வேலையிருக்கு. அதுக்குள்ள நீ எதாவது டிபன் ரெடி பண்ணிடேன்”

 

 

“என்ன டிபன் செய்ய?”

 

“20 நிமிடத்துக்குள்ள செய்ய முடியிற டிபன் எதுவோ அதை செய்”

 

 

“சரி… ரவை உப்மா செய்யறேன்”

 

“ஓகே” அவன் கம்ப்யூட்டரில் மூழ்கினான்.

 

 

நாட்கள் வேகமாக நகர்ந்தன. அன்பான அத்தை மாமா ஆதரவான தோழி சிவா, அன்பு இருந்தும் அவ்வளவாக காட்டிக்கொள்ளாத கணவன் அவன் சொல்லிக் கொடுக்கும் கம்ப்யூட்டர், வீட்டுப் பராமரிப்பு என்று படு பிசியாக இருந்தாள் லட்சுமி. ஆறு மாதம் கண் மூடித் திறக்கும் முன் ஓடிவிட்டது. இப்படி இருக்கையில் தான் ஒரு நாள் சாரதாவும் ஷங்கரும் சென்னை வந்தனர்.

 




1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    நன்றாக இருந்தது இப்பகுதி.

    நன்றி

You cannot copy content of this page