Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

உனக்குள் நான்-1

அத்தியாயம் -1

“காடு பற்றி எரியும் போதும்

வேட்டையாடச் செல்லும் வீரன் – அவள்

கண்ணீர் நெஞ்சை நனைத்த வேளை

தணலில் விழுந்த புழுவைப் போல – மனம்

வெந்து தணிந்து சாம்பலானான்

 

“நம்பிக்கையென்னும் உயிரைத் தொலைத்துவிட்ட நடைபிணம் தான் நான்…” என்று சொல்லிவிட்டுத் தரையில் சரிந்தமர்ந்து, முகத்தைக் கைகளுக்குள் புதைத்து விம்மியழுதாள் மதுமதி. பட்டாம்பூச்சி போல் சிறகடித்துக் கொண்டிருந்தவளின் சிறகை ஒடித்துத் துடிக்க வைத்துவிட்டோம் என்கிற குற்ற உணர்ச்சியும், தவிப்புமாக அவளைப் பார்த்த கார்முகிலன்… எப்படியாவது அவளுடைய மனக்காயத்தை ஆற்றிவிட வேண்டும் என்கின்ற வேகத்தில், அவளுக்கு அருகில் அமர்ந்து அவள் தலைகோதினான்.

மதுமதி அவனுடைய கையைத் தட்டிவிடவில்லை. அவனைத் திட்டவில்லை… அவனைக் காயப்படுத்தவும் விழையவில்லை. மாறாகத் தன்னை மறந்து அவன் மார்பில் முகம் புதைத்துக் கண்ணீர் விட்டாள். அவளுடைய அந்தச் செயலில்… அவன் தணலில் விழுந்த புழுவைப் போல வெந்து தணிந்து சாம்பலானான்.

‘உங்க மேல நான் வச்சிருக்கற காதல்…! எனக்குள்ள தீயா எரிஞ்சுக்கிட்டு இருக்கிற காதல்…! நீங்க இல்லைன்னா… என்னையே அழிச்சிடக் கூடிய குரூரமான காதல்…! அதோடு போட்டிப் போட முடியாமல் தான்… அதை ஜெயிக்க முடியாமல் தான் உங்ககிட்ட திரும்ப வந்தேன்…’ சற்றுநேரத்திற்கு முன் அவள் உதிர்த்த வார்த்தைகள் அவன் செவிகளில் எதிரொலித்தன.

‘எப்படிப்பட்ட அன்பை உதாசீனம் செய்து விட்டோம்…! என்ன மாதிரியான காதலைச் சோதித்துவிட்டோம்…!’ அவன் மனம் பதறியது. அவளை எப்படி ஆறுதல்படுத்துவது என்று புரியாமல், மொழி மறந்து ஊமையாகிப் போனவன் வார்த்தைகளைத் தேடித் தவித்தான். கலைந்திருந்த அவள் கூந்தலை ஒதுக்கிவிடும் போதும், அழுகையில் குலுங்கும் முதுகை வருடும் போதும், கன்னங்களை நனைக்கும் கண்ணீரைத் துடைத்துவிடும் போதும்… நடுங்கும் அவன் விரல்கள் அவனுடைய துடிப்பைப் படம் போட்டுக் காட்டினாலும், அதை உணரும் நிலையில் மதுமதி இல்லை. அவள் மனம் கடந்தகாலத் துன்பச் சுழலில் சிக்கித் தத்தளித்தது.

வற்றாத ஜீவநதி போல் பெருகிக் கொண்டிருந்த மனைவியின் கண்ணீரைப் பொறுக்க முடியாமல்… அவளை இறுக்கமாகத் தன்னோடு சேர்த்தணைத்து ஆறுதல்படுத்த முயன்றான். அவளும் விலகாமல் இன்னும் ஆழமாக அவனுக்குள் புதைந்தாள்.

அவளுடைய அந்தச் செயல் ஒரு பக்கம் அவனுக்கு ஆறுதலாக இருந்தாலும்… இன்னொரு பக்கம் வேதனையாக இருந்தது. ‘கோபத்திலும் இப்படி ஒட்டிக் கொள்கிறவளைச் சமாதானம் செய்வது சாத்தியமா..?’ அவன் மனம் ஆரம்பத்திலேயே சோர்ந்தது. பெண்ணைவிட ஆணுக்கு மனோபலம் மிகக் குறைவு என்பது கார்முகிலனின் விஷயத்தில் ஊர்ஜிதமானது.

‘பண்ணின தப்புக்கு நாலு அடி அடிச்சாலும் பொறுத்துக்கலாம்… இப்படிக் கொல்லாமக் கொல்லுறாளே…!’ என்ற ஆதங்கத்துடன் “மதி…” என்று அழைத்தான்.

அழுகை ஓய்ந்து, எஞ்சியிருந்த சிறு செருமல்களுடன் அவனோடு ஒட்டிக் கொண்டிருந்தவள்… அவனுடைய அழைப்பிற்குப் பின் தன்னைச் சுதாரித்துக் கொண்டு விலகி அமர்ந்து, கண்களைத் துடைத்தபடி “சாரி… கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்…” என்று மன்னிப்பு கேட்டாள். நொடியில் அவள் காட்டிய விலகல், அவன் மனதில் ஊசி போல் இறங்கியது.

“என்கிட்ட சாரியெல்லாம் கேட்பியா மதி நீ..?” வேதனை நிறைந்த குரலில் கேட்டான்.

“ஹ்ம்ம்…” என்ற பெருமூச்சைத் தொடர்ந்து “எல்லாத்தையும் பெருசா யோசிக்காதீங்க… நிம்மதி போய்டும்…” என்று சொல்லிவிட்டு எழ முயன்றாள். அவள் கையைப் பிடித்துத் தடுத்து, அமர வைத்தவன்

“நம்பிக்கை செத்துப் போச்சுன்னு சொன்னியே… அது… என்மேல இருந்த நம்பிக்கையா..? இல்ல என் காதல் மேல இருந்த நம்பிக்கையா..?” அவள் கண்களைப் பார்த்துக் கேட்டான். அந்தக் கேள்வியைக் கேட்கும்போதே அவனுக்கு அவன் உடலோடு சேர்ந்து குரலும் நடுங்கியது.

அவனுடைய நடுக்கம் அவளைச் சிறிதும் பாதிக்கவில்லையோ… அல்லது பாதிப்பை அவள் வெளிக்காட்டவில்லையோ… சிறிதும் தயக்கமின்றி “ரெண்டுமே தான்…” என்று பதில் கொடுத்தாள்.

அவள் சொன்ன பதில் ஒரு பக்கம் விழுந்த அடியென்றால்… அவள் காட்டிய அலட்சிய முகப்பாவம் இன்னொரு பக்கம் விழுந்த மரண அடி. இப்படியெல்லாம் கூட மதுமதியால் அவனிடம் அலட்சியம் காட்ட முடியுமா…! அவன் – அயர்ந்து போனான்.

‘இந்தத் துன்பத்தைத் தாங்கவே முடியாது… பழைய மதி எனக்கு வேண்டும்… கட்டாயம் வேண்டும்…’ அவன் மனதில் ஓர் ஆவேசம் உண்டானது.

“உன் மனநிலை எனக்குப் புரியுது மதி… அதே மாதிரி என்னோட மனசையும் உனக்குப் புரிய வைப்பேன்… உன்னோட நம்பிக்கையை மீட்டெடுப்பேன்… நாம பழையபடி சந்தோஷமா வாழ்வோம் மதி… நிச்சயம் வாழ்வோம்…” – உறுதியோடு பேசினான்.

மூச்சுப்பிடித்து உணர்ச்சியோடு பேசிக் கொண்டிருப்பவனுக்கு, சிறு வறட்சி புன்னகையை மட்டும் பதிலாகக் கொடுத்துவிட்டு எழுந்து சென்றாள் மதுமதி.

அந்தப் புன்னகையே… அவள், அவனுடைய வார்த்தையை மருந்துக்கும் நம்பவில்லை என்று சொல்லிவிட… கார்முகிலனின் மனம் ஊமையாக அழ, கண்கள் கண்ணீரில் பளபளத்தன.

காலை பதினொரு மணி… கார்முகிலனுக்கு, ‘மனைவியை எப்படிச் சமாதானம் செய்வது… என்ன செய்தால் அவள் மனம் ஆறும்’ என்று யோசித்து யோசித்துத் தலைவலி வந்தது தான் மிச்சம். உருப்படியாக ஒரு யோசனையும் தோன்றாமல் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டான்.

“காபி எடுத்துக்கோங்க…”

நிமிர்ந்து பார்த்தான். இதழ்களில் புன்னகையுடன் காபி ட்ரேயை நீட்டியபடி நின்ற மதுமதியின் சிவந்து வீங்கியிருந்த முகமும், கண்களும் அவனைக் குத்தின. ‘அழ வச்சுட்டோமே…!’ என்ற வருத்தத்துடன் காபியைக் கையில் எடுத்தவனுக்கு, மின்னல் போல அந்த ஞாபகம் வந்தது.

‘மாமா… காலைலயும் சாயந்திரமும் பால் தான் மாமா குடிக்கணும்… அதே மாதிரி மதியம் ஜூஸ் தான் குடிக்கணும்… இந்த டீ காபியெல்லாம் உடம்புக்கு நல்லதில்ல மாமா…’ முன்பெல்லாம் அடிக்கடி மதுமதி இந்த வார்த்தையைக் கணவனிடம் கூறுவாள்.

‘என்ன..? டாக்டரோட பொண்ணுன்னு காட்டுறியா..? எனக்கு காபி தான் பிடிக்கும். என்னால ஜூசு… கீசெல்லாம் குடிக்க முடியாது…’ – அவனுடைய விருப்பத்தைத் தடை செய்கிறாளே என்கிற கோபத்தில் கார்முகிலன் முறைப்பான்.

அவள் தலையிலடித்துக் கொண்டு ‘எப்படியோ போங்க மாமா… உங்ககிட்ட மனுஷி பேசுவாளா…?’ என்று அலுத்துக்கொண்டு போய் விடுவாள். ஆனால் அவளுக்குள் கணவன் தன் பேச்சைக் கேட்கவில்லையே என்ற வருத்தம் இருக்கும்.

‘அந்த வருத்தத்தை இப்போது தீர்த்து வைத்தால் என்ன..?’ என்கிற யோசனை அவனுக்குத் தோன்றியது. சின்னச் சின்னச் செயல்கள் தானே பெரிய மாற்றங்களை உண்டாக்கும்…

கையில் எடுத்த காபியை மீண்டும் ட்ரேயில் வைத்துவிட்டு “வேண்டாம் மதி… காபி, டீ குடிக்கறது இல்லைன்னு முடிவு பண்ணியிருக்கேன்… இனி பால், ஜூஸ் மட்டும் தான்…” என்றான் பெரிய தியாகி போல்.

அவள், அவனை யோசனையோடு பார்த்தாள். பிறகு எதுவும் சொல்லாமல் திரும்பிச் சென்றுவிட்டாள். அவளின் முகத்தில் மகிழ்ச்சியின் சாயல் சிறிதும் இல்லாததைக் கண்டு அவன் மனம் தளரவில்லை. ‘இது முதல் படி தான்… இனி கொஞ்சம் கொஞ்சமாக என்னை உனக்குப் புரிய வைப்பேன்’ என்று நினைத்தான். அதோடு இனி அவளுக்குப் பிடிக்காத எதையுமே செய்யக்கூடாது என்று முடிவு செய்துவிட்டு, என்னவெல்லாம் அவளுக்கு அவனிடம் பிடிக்காது என்று யோசித்தான்.

காபி குடிப்பது… சிகரெட் பிடிப்பது… முன்கோபம்… பொருட்களை எடுத்த இடத்தில் வைக்காதது… வெளியே சாப்பிடுவது… பார்த்த நியூஸையே திரும்பத் திரும்ப வெவ்வேறு சானல்களில் பார்த்துக் கொண்டிருப்பது… கிரிக்கெட் பார்க்கும் பொழுது உலகத்தையே மறந்துவிடுவது… இரவு படுக்கையறைக்குள் மடிக்கணினியைக் கொண்டு வருவது என்று பட்டியல் நீண்டு கொண்டே சென்றது.

நினைத்துப் பார்க்கும் போதே கார்முகிலனுக்குக் கிறுகிறுத்தது… ‘இவ்வளவு அக்கப்போரா பண்ணியிருக்கோம்…!’ என்று நினைத்தவன், தன்னிடமுள்ள அத்தனை குறைகளையும் களைய வேண்டும் என்று உறுதி கொண்டான். உறுதி எடுப்பது சுலபமாகத்தான் இருந்தது ஆனால் அதைத் தொடர்ந்து கடைபிடிக்கும் போதுதான் அதில் உள்ள சிரமங்கள் தெரிந்தன.

கார்முகிலன் ஆரம்பக்கட்ட ஆர்வக்கோளாறில் முதல் மூன்று நாட்கள் எல்லாவற்றையும் சரியாகச் செய்தான். காபி, சிகரெட், கோபம், லேப்டாப், கடை சாப்பாடு என்று அனைத்தையும் தவிர்த்துச் சாந்த சொரூபனாக மாறியவன்… எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைப்பது, ஒரு முறைக்கு மேல் நியூஸ் சேனலுக்குள் நுழையாமல் இருப்பது என்று பொறுப்போடும் நடந்து கொண்டான். அதோடு தங்களுக்குள் எந்தப் பிரச்சனையுமே இல்லை என்பது போல் இயல்பாக அவளைச் சீண்டுவதும், கேலி செய்வதுமாக இருந்தான்.

மதுமதி அவனுடைய மாற்றங்களைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள் என்றாலும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவள் அப்படிக் கண்டும் காணாமல் இருந்தது அவனை வலுவிழக்கச் செய்தது. அவனுடைய தன் முயற்சிக்கு அவளிடமிருந்து சிறு அங்கீகாரம் கூட வராதது அவனுடைய உற்சாகத்தைக் குறைத்தது. ஆனாலும் அவன் சோர்ந்துவிடவில்லை.

அன்று ஞாயிற்றுக்கிழமை. தாமதமாக எழுந்து காலை வேலைகளை முடித்தவன், ஹாலில் விரித்திருந்த படுக்கையில் அமர்ந்து “ங்ங்ங்க்… ங்ங்ங்…க்… ங்…க்க்க்கு” என்கிற மழலைக் குரலோடு விளையாட்டுச் சாமான்களை உருட்டிக் கொண்டிருந்த மகளிடம் அமர்ந்து பேச்சுக் கொடுத்தான்.

சமையலறையில் மதுமதி வேலைக்கார அம்மாவிற்கு மணக்க மணக்க பில்டர் காபி தயாரித்துக் கொண்டிருந்தாள் போலும். அங்கிருந்து வந்த வாசம் கார்முகிலனைத் தூக்கியது. மனம் காபிக்காக ஏங்கியது.

“உங்க அம்மா கலக்கற காபி எப்பவுமே கலக்கலா இருக்கும்டா செல்லம்… ஹும்… இனி அதையெல்லாம் நினைக்கவே முடியாது…” என்று ஏக்கப் பெருமூச்சோடு புலம்பிவிட்டு “நீ ‘ங்கா’ சொல்லுடா… ‘ங்….கா…'” என்று பேசச் சொல்லிக் கொடுப்பது போல் மகளைக் கொஞ்சினான்.

“அவ ‘இங்கா’ மட்டும் தானே சொல்றா… அதையே எதுக்குத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொடுக்கறீங்க… வேற ஏதாவது புதுசா சொல்லிக் கொடுங்களேன்…” என்று கூறியபடி, அவனிடம் பால் டம்ளரை நீட்டினாள் மதுமதி.

“பாருடா பொம்மு… சொல்லிக் கொடுக்கறதைப் பத்தி உங்க அம்மா எனக்கே சொல்லித் தர்றா… அவளுக்கே பாடம் சொல்லிக் கொடுத்த வாத்தியார் நான்தாங்கிறதை மறந்துட்டா போலருக்கு…!” என்று மகளிடம் பேசியபடி மனைவியைப் பார்த்துக் கண் சிமிட்டினான்.

பழைய மதுமதியாக இருந்திருந்தால் “மாமா… என்ன மாமா நீங்க..?” என்று சிணுங்கியிருப்பாள். ஆனால் இன்றைய மதுமதியிடம் சிறு வெட்கப்புன்னகை கூட இல்லை. மெல்லிய சிரிப்புடன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு “பாலைக் குடிச்சிட்டுப் போய்க் குளிச்சிட்டு வாங்க… டைமாச்சு சாப்பிடலாம்…” என்று இயல்பாகச் சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

இயந்திரம் போல் செல்பவளைக் கண்டு அவனுக்கு ஏமாற்றத்தில் எரிச்சல் பொங்கியது. ஆனால் கோபப்படக்கூடாதே…! போட்டு வைத்திருக்கும் எட்டு கட்டளைகளில் மூன்றாவது கட்டளையை மீறி விட்டதாகிவிடுமே…! உஸ் புஸ் என்று மூச்சை இழுத்து விட்டுவிட்டு… ஒரே மடக்கில் பாலை வாயில் சரித்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான்.




Comments are closed here.

You cannot copy content of this page