கனல்விழி காதல்- 48
9448
8
அத்தியாயம் – 48
வீட்டிற்குள் நுழையும் போதே, இன்று அவள் வந்திருப்பாள் என்று அவன் உள்ளம் சொன்னது. எதிர்பார்ப்போடுதான் மாடிக்கு வந்தான். கதவு மூடியிருந்தாலும் உள்ளே மின்விளக்கு எரிந்துக் கொண்டிருப்பது தெரிந்தது. ‘வந்துட்டா…’ – உறுதியாகிவிட்டது. இரண்டு நாட்களாக அவளை எதிர்பார்த்துக் காத்திருந்த வேகம் கோபமாக மாறி உள்ளே உறுமியது. ‘சண்டை போட்டுடாதடா…’ என்று மூளை எச்சரிக்க, ஓரிரு நிமிடங்கள் வாயிலிலேயே தாமதித்து நின்றவன், பின் மெல்ல கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான்.
மதுரா கட்டிலில் படுத்திருந்தாள். இரண்டு நாட்களாக கல்யாண கலாட்டாவில் தொலைத்திருந்த தூக்கம் இன்று அத்துமீறி அவளை ஆக்கிரமித்துக் கொண்டது. அருகில் சென்று பார்த்தான். தளிர்கொடி ஒன்று மஞ்சத்தில் துயில் கொண்டிருப்பதாகத் தோன்றியது. அவள் முகத்தை பார்த்த கணத்திலேயே, கனன்றுக் கொண்டிருந்த அவன் கோபம் மெல்ல வடிந்தது. சற்றுநேரம் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன், தலையை உலுக்கிக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான். உடை மாற்றிக் கொண்டு வெளியே வந்தவன் அமைதியாக அவளுக்கருகில் வந்து படுத்தான்.
மறுநாள் அவன் கண்விழிக்கும் போது, அட்டை போல் அவனை ஒட்டிக் கொண்டு படுத்திருந்தாள் மதுரா. அவனுடைய புஜம் அவளுக்கு தலையணையாக மாறியிருக்க, அவளுடைய வலது கை அவன் மீது கொடி போல் படர்ந்திருந்தது. அவளுக்கே உரிய பிரத்தியேக வாசம் அவன் நாசியை தீண்ட சொர்க்கத்தை உணர்ந்தான் தேவ்ராஜ். அவனுக்கு எழுந்துகொள்ளவே மனமில்லை. காலம் இப்படியே நின்றுவிட்டால் கூட நன்றாக இருக்கும் என்று யோசித்தான்.
வேகமாக மூச்சுவிட்டால் கூட அவள் எழுந்துவிடுவாளோ என்று அஞ்சியவன் போல அசையாமல் படுத்திருந்தான். அப்படியும் அவளுக்கு ஏதோ அசவுகரியம்… தூக்கத்திலேயே அசைந்து இன்னும் அவனோடு நெருங்கினாள். இதயம் ட்ரம்ஸ் வாசிக்க துவங்கியது.
‘ரெண்டு நாளா தனியா விட்டுட்டு போயிட்டு, இப்ப வந்து புள்ளப்பூச்சி மாதிரி ஒட்டிக்கிட்டு கிடைக்கறதைப்பாரு…’ – பூரிப்பை புறந்தள்ளிவிட்டு எரிச்சலை இழுத்துப் பிடித்துக் கொண்டான்.
அவளுக்கு ரொம்பவும் குளிர்விட்டுப் போச்சு… இடம் கொடுக்கக் கூடாது. ஒருமுறை விட்டால் மீண்டும் மீண்டும் அதையேதான் செய்வாள். கொஞ்சம் தட்டிவைக்க வேண்டும் என்று நினைத்து மனதை கல்லாக்கிக் கொண்டு அவளை தன்னிடமிருந்து விளக்கிவிட்டான். சட்டென்று உறக்கம் களைந்து கண்விழித்த மதுரா கணவனின் கடுகடுத்த முகத்தை கண்டு குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள்.
ஒன்றும் புரியவில்லை. காலையிலேயே ஏன் இப்படி கோவமாக இருக்கிறான் என்று யோசித்தவளுக்கு சில நிமிடங்களுக்குப் பிறகுதான் தெளிவு பிறந்தது.
‘ஆஹா…! சார் கோவமா இருக்காரோ!’ – யோசனையுடன் கணவனைப் பார்த்தாள். அவன் இவள் பக்கம் திரும்பாமலே எழுந்து அமர்ந்தான்.
“நைட் எத்தனை மணிக்கு வந்தீங்க? ரொம்ப நேரம் முழிச்சிருந்தேன். எப்போதான் தூங்கினேன்னு தெரியல” நைசாங்க பேச்சு கொடுத்துப் பார்த்தாள். அவன் பதில் சொல்லாமல் குளியலறைக்குள் சென்றான். அனிச்சம் பூ போல அவள் முகம் உடனே வாடிவிட்டது.
அவன் வெளியே வரும்வரை காத்திருந்து, “ரெண்டு நாளா உங்களுக்கு ட்ரை பண்ணிகிட்டே இருந்தேன். நீங்க போனை எடுக்கவே இல்ல” என்று தன் பக்கத்து நியாயத்தை கூறினாள்.
“பிஸியா இருந்தேன்” – வெட்டிப் பேசினான்.
‘போனை எடுத்து பேச கூட முடியாத அளவுக்கு பிஸியா!’ – மனம் வலித்தது. ரெண்டு திட்டு திட்டிட்டாக் கூட பரவால்ல. இது என்ன புதுசா ஒதுங்கிப்போறான்! – அவனையே ஏக்கத்தோடு பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அவனிடம் ஏதாவது பேச வேண்டும் போல் இருந்தது. ஆனால் என்ன பேசுவதென்று தெரியாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
டிராக் சூட்டில் தயாராகி அறையிலிருந்து வெளியேறி மாடிப்படிகளில் தாவி ஏறினான். உடற்பயிற்சி கூடத்திற்கு செல்கிறான் என்பதை புரிந்துக் கொண்ட மதுரா, தன்னுடைய காலை வேலைகளையெல்லாம் முடித்துக் கொண்டு மீண்டும் அவனுக்காகக் காத்திருக்க துவங்கினாள்.
உடற்பயிற்சி முடித்துவிட்டு வந்த பிறகும் அவனிடம் பேச முயன்றாள் மதுரா. அவன் முகம் கொடுக்கவில்லை. காலை உணவின் போதும் அவள் பக்கம் திரும்பவில்லை. மாலை அலுவலகத்திலிருந்து வந்த போதும் அவன் உண்டு அவன் வேலை ஊன்று என்றுதான் இருந்தான். புத்தகம், போன், லேப்டாப் என்று அனைத்து வஸ்துக்களுடனும் கூடிக் கூடி உறவாடியவன் அவள் வீட்டில் இருப்பதையே கணக்கில் எடுத்துக்கொள்ளாதது போல் நடந்து கொண்டான். மறுநாளும் அதேதான் நடந்தது.
ஆரம்பத்திலிருந்தே அவன் அப்படிதான் என்றால் பிரச்சனையே இல்லை. ஆசை காட்டி மோசம் செய்வது போல், முரட்டுத்தனமாக அவளிடம் பாசத்தை திணித்துவிட்டு இப்போது யாரோ போல் விலகிச் சென்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்! மனம் வலித்தது. எந்த வேலையிலும் லயிக்க முடியவில்லை. இப்படி தனக்குத்தானே புலம்பி தவிப்பதற்கு அவனிடம் நேரடியாகவே பேசி பிரச்னையை தீர்த்துவிடலாம் என்று எண்ணினாள்.
அன்று வீட்டிற்கு வரும் பொழுதே சற்று எரிச்சலோடுதான் காணப்பட்டான் தேவ்ராஜ். அவன் வீட்டிற்கு கிளம்பும் நேரம் பார்த்து, அடித்துப்பிடித்து அலுவலகத்திற்குள் நுழைந்துவிட்டார். மகனை பார்த்துவிட்டுத்தான் போவேனென்று ஆர்ப்பாட்டம் செய்தவரை, காவலாளிகள் பெரும்பாடுபட்டு வெளியே அனுப்பினார்கள். அவரை பார்க்க பிடிக்கவில்லை, பேசப்பிடிக்கவில்லை என்று கூறியும் தேவையில்லாமல் அவர் இப்படி தொல்லை செய்வதில் கடுப்பானான்.
கணவனோடு சமாதான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்த மதுரா அவன் முகத்தை பார்த்ததுமே முடிவு செய்துவிட்டாள்.. ‘இன்னைக்கு பேசினமாதிரிதான்…! ஒரு காபியை கொண்டு வந்து கொடுத்து பார்ப்போம். மூட் மாறினா பேசலாம். இல்லன்னா நைட் பார்த்துக்கலாம்’ என்று முடிவு செய்து சமையலறைக்குச் சென்றாள்.
அவளுடைய காபி என்றால் அவனுக்கு பிரியம். வேலைக்காரர்கள் கொண்டுவந்தால் கூட திருப்பி அனுப்பிவிட்டு, அவளிடம் குறிப்பிட்டு ‘நீ போயி கொண்டு வா…’ என்பான். இன்று அவன் கேட்காமலேயே காபி கொண்டுவந்து கொடுத்திருக்கிறாள். ஆனாலும் அவன் முகத்தில் செந்தழிப்பு இல்லை. நியாயம் கேட்பதற்கு இது சரியான நேரம் அல்ல என்பதை புரிந்துக் கொண்டு ஒதுங்கிவிட்டாள் மதுரா.
மந்தமான மனநிலையிலேயே இரவு உணவை முடித்துக்கொண்டு மாடிக்கு வந்த தேவ்ராஜை அலைபேசி அழைத்தது. எடுத்துக் பார்த்தான். ரஹீம்…
‘என்ன இந்த நேரத்துல கூப்பிட்டிருக்கான்!’ – சிந்தனையுடன் எடுத்தவனின் முகம் அவன் சொன்ன செய்தியைக் கேட்டு கோபத்தில் சிவந்தது.
சமூகவலைத்தளத்தை அவசியத்திற்காக மட்டுமே பயன்படுத்தும் பழக்கம் உள்ளவன் தேவ்ராஜ். தேவையில்லாத சொந்த விஷயங்களை பொதுத்தளத்தில் பகிரங்கப்படுத்துவதை அவன் துளியும் விரும்புவதில்லை. அப்படியிருக்கும் போது சென்றவாரம், திலீப்பின் திருமணத்தில் கலந்துகொண்ட போது அவன் தன் மனைவியோடு நெருக்கமாக எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் வெளியே கசிந்துள்ளன. இது எப்படி சாத்தியம்!
“கேமரா மேன் ஸ்டேஜ்ல எடுத்த போட்டோஸா இருக்கும்… தப்பான இன்ஃபார்மேஷன். ஒழுங்கா செக் பண்ணி பாரு…” – அதட்டினான்.
“சாரி சார்… எல்லாமே செல்ஃபி… போன்ல எடுத்ததாதான் இருக்கணும்”
“வாட்!” – அவனால் நம்பவே முடியவில்லை.
“சோர்ஸ், மதுரா மேம் பேஸ்புக் அக்கௌன்ட் தான் சார்…” என்று ரஹீம் கூறியதும் தேவ்ராஜின் முகம் பயங்கரமாக மாறியது. வெகுவாய் முயன்று தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
“சார்…” – ரஹீம் அவனுடைய உத்தரவுக்காக காத்திருந்தான்.
“வைப் இட் ஆஃப்…” – அனைத்தையும் அழித்துவிடு என்று உத்தரவிட்டான்.
“மேம் அக்கௌன்ட்ல இருக்க போட்டோஸையுமா சார்?”
“நோ… அதை நான் பார்த்துக்கறேன். நீ வெளியே இருக்கறத மட்டும் கிளீயர் பண்ண சொல்லு”
“ஓகே சார்…” – அழைப்பு துண்டிக்கப்பட்டது.
“மது..ரா…” – ஓங்கி ஒலித்த அவன் குரல் தோட்டத்திலிருந்த மதுராவை எட்டவில்லை.
தடதடவென்று மாடிப்படியேறி ஓடிவந்த வேலைக்காரன், “மேம் வாக்கிங் பண்ணிட்டு இருக்காங்க சார். வர சொல்லட்டுமா?” என்றான்.
“இந்த நேரத்துல என்ன வாக்கிங்… வர சொல்லு இங்க…” – உறுமினான். அவள் வரும்வரை பொறுமையில்லாமல், அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தவனின் கண்ணில் அவளுடைய அலைபேசி தென்பட்டது. இதுவரை அதை நுனிவிரலால் கூட தொட்டுப்பார்த்திராதவன், இன்று எடுத்து அவளுடைய பேஸ்புக்கை திறந்தான்.
அவள் எந்த புகைப்படத்தை பதிவிட்டுத் தொலைத்தாள் என்று பார்த்து அதை உடனடியாக அழித்துவிடவேண்டும் என்கிற அவசரம் அவனை நிலைகொள்ள விடவில்லை.
ஒவ்வொரு புகைப்படமாக பார்த்துக் கொண்டே வந்தான். ஐந்தாறு புகைப்படங்களை பதிவேற்றம் செய்திருந்தாள். அவன் பயந்த அளவிற்கு எதுவும் இல்லை என்றாலும், தனிப்பட்டமுறையில் எடுத்துக் கொண்ட படத்தை எதற்காக பொதுவெளியில் பதிவிட்டாள் என்கிற கோபம் மட்டும் குறையவில்லை.
“கூப்பிட்டீங்களா?” – இரண்டு நாட்களாக பேசாமல் இருந்தவன் இன்று கூப்பிட்டுவிட்டானே என்கிற உற்சாகத்துடன் உள்ளே நுழைந்தாள் மதுரா.
“என்னது இதெல்லாம்?” எரிச்சலுடன் கேட்டான்.
“எது?” – புரியாமல் கேட்டாள்.
“எதுக்கு இந்த போட்டோஸையெல்லாம் பேஸ்புக்ல போட்டு வச்சிருக்க? இதுக்குதான் நீ போன் வச்சிருக்கியா” – படங்களை அழித்துக் கொண்டே கேட்டான்.
“ஏன்… நீங்களும் தான் போன் வச்சிருக்கீங்க… சோசியல் மீடியால அக்கௌன்ட் வச்சிருக்கீங்க. போட்டோஸ் கூட அப்லோட் பண்ணறீங்க. என்னை மட்டும் கேட்கறீங்க?” – நொடித்துக் கொண்டாள். இப்போதாவது பேசினானே என்கிற சந்தோஷம் அவளுக்கு.
சட்டென்று நிமிர்ந்து அவளை முறைத்தவன், “அறிவோடதான் பேசுறியா? என்னோட அக்கௌன்ட்ஸை ஹாண்டில் பண்ண டெக்னிக்கல் டீம் இருக்கு. என்ன செய்யணும் செய்யக் கூடாதுன்னு அவங்களுக்கு தெரியும். என்னோட அக்கௌன்ட்ல அப்டேட் ஆகற ஒவ்வொரு நியூஸும் போடோஸும் நூறுதரம் ரெவ்யூ பண்ணப்பட்டதா இருக்கும். பர்சனல் போட்டோஸையெல்லாம் ஷேர் பண்ணற இடமா அது?” என்றான் பற்களை நறநறத்தபடி.
“அதெல்லாம் ஒண்ணும் அவ்வளவு பர்சனலா இல்ல… ஜஸ்ட் பக்கத்து பக்கத்துல நின்னு எடுத்திருக்கோம்… அவ்வளவுதானே?” – இலகுவாக சொன்னாள்.
அவளுக்கு பதில் சொல்லாமல் மீண்டும் அலைபேசியை தட்டி உள்ளே நுழைந்து அன்று தாங்கள் எடுத்துக் கொண்ட மற்ற படங்களையும் பார்த்துக் கொண்டே வந்தவனின் முகம் சட்டென்று மாறியது. முதலில் அதிர்ச்சி… பிறகு கோபம்… உக்கிரமான கோபம்…. திடீரென்று என்னவாயிற்று! ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டு நின்றாள் மதுரா.
8 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Kayalvizhi Ravi says:
மதுரா ஏதோ இழுத்து வைத்துவிட்டாள் போ.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Meena PT says:
இந்த மதுரா இப்போ என்ன பிரச்சனை இழுத்துவைத்திருக்கிறாள்?
கிஷோர் கூட எடுத்த போட்டோ எதையாவது வைத்திருக்கிறாளா?
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
எதற்கு கோபம், நிச்சயத்தின் போது அல்லது வேறு சந்தர்ப்பத்தில் மதுரா கிஷோர் கூட எடுத்த ஏதாவது படமா,அதுதான் இவ்வளவு கோபமா,எப்படியோ தேவ்விற்கு இன்று சண்டை போடுவதற்கும் கன்னாபின்னா என்று திட்டுவதற்கு காரணம் கிடைத்துவிட்டது,இன்றய நாள் தேவ்விற்கு அழகாக போகும் அதுதான் திட்ட காரணம் கண்டுபிடிச்சாச்சே.
நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
vijaya muthukrishnan says:
very nice ud. eagerly waiting for your next ud
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hadijha Khaliq says:
என்ன இருக்கு அந்த ஃபோட்டோல ஏன் கோபம்
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Lakshmi Narayanan says:
Haiyooo ippo enna da pathu tholaicha
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ugina begum says:
hayoooooo madraaaaaaaa pochchu onu maathee onnummmmmmmmm
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Pon Mariammal Chelladurai says:
முருங்கை மரம் ஏறிட்டானா..?