Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

மயக்கும் மான்விழி-1

அத்தியாயம் – 1

கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டுந் திருடலாம்

ஆவணி மாதம் அமாவாசை இருள் எங்கும் சூழ்ந்திருந்தது… அந்த இரவின் நிசப்தத்தைக் குலைக்கும் சில்வண்டுகளின் ரீங்காரமும்… பத்து வயல்களுக்கு அப்பால் வரப்பில் வானுயர வளர்ந்து நிற்கும் பனைமரத்தின் உச்சியில் சீரியல் விளக்குகளைப் போல் ஒளிரும் மின்மினி பூச்சிகளும்… களத்துமேட்டில் மலைப் போல் அடுக்கடுக்காக அடுக்கப்பட்டிருந்த ஆயிரம் கடலை மூட்டைகளும்… மாரியின் நெஞ்சத்தில் திகிலை உண்டாக்கின.

 

“குப்பா… எல்லாம் முடிஞ்சுதா….?” தன்னுடைய குரலைக் கேட்க குப்பனைத் தவிர அங்கு ஒரு மைல் தூரத்திற்கு யாரும் இல்லை என்று உறுதியாகத் தெரிந்தாலும் ஏனோ குரலை தாழ்த்திக் கிசுகிசுப்பாகக் கேட்டான் மாரி.

 

“ம்ம்ம்… ம்ம்ம்… வண்டிய ஓட்டு… பாத்து தடத்தோட போ… வரப்புல விட்டுறாத…” என்றபடி மாட்டுவண்டியின் பின்னால் தாவி ஏறி முன்பக்கம் நகர்ந்து வந்தான் குப்பன்.

 

“ஜல்… ஜல்… ஜல்… ஜல்…” என்று சத்தமிட்டபடி மாட்டுவண்டி இருபது கடலை மூட்டைகளோடு மாரியையும் குப்பனையும் சுமந்துகொண்டு நகர்ந்தது.

 

“மாரி… கொஞ்சம் வெரசா போ… ரோட்டு மேல ஏறி கெழக்கால ஒரு மைல் தூரம் போய்ட்டோமுன்னா நிம்மேலி வந்துரும்… தப்பிறலாம்… ம்ம்ம்… மாட்ட அடிச்சு ஓட்டு…”

 

“ஹேய்… ஹேய்…” மாரி தார்க்குச்சியால் மாட்டை இரண்டு அடிப் போட்டு மூக்கணாங்கயிற்றைச் சுண்டிவிட்டான். வண்டிமாடு வேகமெடுத்து ஓட அவர்களின் பயணமும் சூடு பிடித்தது.

 

அவர்கள் இன்னும் ஐந்துநிமிடம் பயணம் செய்தால் வயல்வெளியைத் தாண்டி சோலையூரின் எல்லையைக் கடந்து சாலையை அடைந்துவிடலாம் எனும் நிலையில் தூரத்தில் இரண்டு தீப்பந்தங்கள் தெரிந்தன.

 

“குப்பா… வடக்கத் திரும்பிப் பாரு…” மாரி கலவரத்துடன் சொல்ல, அவசரமாகத் தலையை வடக்குப்பக்கம் திருப்பிய குப்பனையும் கலவரம் தொற்றிக் கொண்டது.

 

“ஆங்… மாரி… ஓட்டு… ஓட்டு… அடிச்சு ஓட்டு… மோப்பம் புடிச்சிட்டானுவன்னு நெனக்கிறேன்… வெரசா…” குப்பன் படபடத்தான்.

 

“ஹேய்… ஹேய்…” என்று மாட்டை விரட்டியபடி அதன் வாலை முறுக்கிவிட்டான் மாரி.

 

வண்டியில் கணம் அதிகம் இருந்ததாலோ, வயல்வெளியின் கரடுமுரடான பாதையாலோ அவர்கள் எதிர்பார்த்த அளவு மாடு வேகம் பிடிக்க மறுத்தது… முதலில் இரண்டாகத் தெரிந்த தீப்பந்தங்கள் இப்போது நான்கைந்தாக மாறி நெருங்கி வந்து கொண்டிருந்தன. இவர்கள் வண்டியின் வேகம் குறைந்து கொண்டிருந்தது. தீப்பந்தங்களின் வேகம் அதிகரித்துக் கொண்டிருந்தன.

 

மாரிக்கும் குப்பனுக்கும் பீதியில் வயிறு கலங்கியது… மூச்சே நின்று விடுவது போல் இதயம் படபடவென அடித்துக் கொண்டது. அவர்கள் இருவரும் அடுத்தது என்ன என்று யோசிப்பதற்குள் தீப்பந்தங்களுடன் வந்த ஆட்கள் பத்துபேர் அவர்களைத் திமுதிமுவெனச் சுற்றி வளைத்து விட்டார்கள்.

 

“எலேய்… மாரி… வண்டி எங்கடா போவுது…?” தீபந்தங்களுடன் வந்தவர்களில் தலைவன் தோரணையில் இருந்த வீரன் அதிகாரமாகக் கேட்டான்.

 

“பெரிய வீட்டுக்குண்ணே…” மாரி பம்மினான்.

 

“பெரிய வீட்டுக்குப் போறதுக்கு என்னாத்துக்குடா இந்தப் பக்கம் போற…?”

 

“இப்புடியே போயி ரோட்டு மேல ஏறி தெக்காலப் போனா… அம்பலாந்தெருவப் புடுச்சுப்புடலாம்… இருட்டுக்குள்ள இங்குட்டாலப் போவாம ரோட்டோட போயிடலாமேன்னுதா…” அவன் சாமர்த்தியமாகப் பேசினான்.

 

“இந்நேரத்துல கல்லமூட்டைய ஏத்திகிட்டுப் போற… ஐயாவுக்குத் தெரியுமா…?”

 

“ம்ம்… தெ… தெரியாம எப்புடி… தெரியு…” தட்டுத் தடுமாறி சமாளித்தான்.

 

அவன் சொல்வதைச் சந்தேகக்கண்ணோடு பார்த்த வீரன் “எலேய் காத்தமுத்து… போர்செட்டுல என்னோட சைக்கிள் இருக்கு… எடுத்துக்கிட்டு ஓடிப் போய் ஐயா வீட்டுக்குச் சேதி சொல்லி வெவரத்த தெரிஞ்சுகிட்டு வா…” என்று தன்னுடன் வந்த மற்றொருவனுக்கு உத்தரவிட்டான்.

 

“அண்ணே… எதுக்குண்ணே பெரியவீட்டுக்குச் சேதி சொல்லி அனுப்புற… நாங்க அங்கதாண்ணே போறோம்… வழிவிட்டு வெலகுண்ணே…” குப்பன் கொஞ்சம் துணிச்சலாகப் பேசினான்.

 

“தம்பிகளா… செத்தப் பொறுங்க… நா(ன்) கரம்பகளத்துல தான் காவலுக்கு இருந்தே(ன்)… பெரிய வயக்களத்துல நீங்க ரெண்டு பேருந்தான் காவலுக்கு இருக்குறதா ஐயா சொன்னாரு… ஆனா ரெண்டு நாளா உங்களுவ முழி சரியில்லன்னு உங்க மேல ஒரு கண்ணு(ம்) வச்சிருக்கச் சொன்னாரு… அதான் மாட்டுவண்டி சத்தம் கேட்டோன்ன ஆளுகள தெரட்டிக்கிட்டு வந்தேன்… பெரிய வீட்டுலேருந்து சேதி வர்ற வரைக்கும் நீங்க ரெண்டு பேரும் நவர கூடாது… மீறுனிங்க அப்பறம் நான் பேசமாட்டேன்… இந்தச் சுளுக்கி தான் பேசும் சொல்லிப்புட்டேன்…” என்று ஆவேசமாகக் கையில் இருந்த சுளுக்கியை தரையில் குத்திக் காண்பித்தான் அந்த விசுவாசமான முரட்டு வேலைக்காரன்.

 

வீரனின் ஆவேசத்தில் மாரியும் குப்பனும் குலைநடுங்கிப் போனார்கள். ‘இன்னைக்கு விடியலப் பாக்க உசுரோட இருப்பமோ இல்லையோ தெரியல… ஆனா விடிஞ்சா நமக்குச் சங்கு ஊதுறது உறுதி…’ என்று நினைத்தபடி வண்டியிலிருந்து இருவரும் கிழே இறங்கி தலையில் கட்டியிருந்த முண்டாசை அவிழ்த்துத் தோளில் போட்டுக் கொண்டு ஆளுக்கொரு பக்கமாக நடுக்கத்துடன் நின்றார்கள்.

# # #

 

“ஆத்தா… பெரியாத்தா… பெரியாத்தா…. யாத்தோவ்…” அந்த ஊரிலேயே மிகப்பெரிய வீடான வள்ளியம்மாள் இல்லத்தின் வாசலில் நின்றபடி காத்தமுத்து குரல் கொடுத்தான்.

 

“ஆர்ராது (யாரடா அது)… ஆர்ரா இந்தச் சாமத்துல…?” அந்த வீட்டின் மூத்த குடிமகள் வள்ளியம்மாள் பாட்டியின் வெண்கல குரல் திண்ணையிலிருந்து அதட்டியது.

 

பாட்டியின் படுக்கையறை எப்பொழுதுமே திண்ணை தான். கிராமத்தில் திருட்டுப் பயம் இல்லாததால் கேட்டைப் பூட்டாமல் இயற்கைக் காற்றை அனுபவித்துக் கொண்டு, திண்ணையில் ஒரு மூலையில் போடப்பட்டிருக்கும் கட்டிலில் உறங்குவது தான் வள்ளிப் பாட்டியின் வழக்கம்.

 

“நான்தா(ன்) பெரியாத்தா…”

 

“நாந்தான்னா… எந்தக் களவாணி பயடா…? பேருல்லையோ…?” என்று எரிந்து விழுந்தபடி மின்விளக்கின் பட்டனைத் தட்டினார்.

 

‘களத்துமேட்டுல மூட்ட மூட்டையா வண்டிக் கட்டி களவாடிகிட்டுப் போறவனுவள விட்டுப்புட்டு… துப்புச் சொல்ல வந்த என்னயப் போய் களவாணிங்குது பாரு கெழவி…’ என்று மனதில் நினைத்ததை வெளியில் சொல்லாமல்

 

“யத்தா நாந்தாத்தா காத்தமுத்து… வெளிய வந்து சேதியக் கேளுத்தா…” என்று சற்று எரிச்சலுடன் படபடத்தான் காத்தமுத்து.

 

“காத்தனா…! என்னடா இந்நேரத்துல… வெள்ளி (விடியலில் தோன்றும் நட்சத்திரம்) மொளக்காங்காட்டியும் வந்து நிக்கிற…?” என்று கடிந்து கொண்டே வாசலுக்கு வந்தார் வள்ளி பாட்டி.

 

“களத்துமேட்டுலேருந்து வர்றேத்தா… மாரியும் குப்பனும் கல்லமூட்டைய வண்டில ஏத்திகிட்டு ரோட்டுப் பக்கமா போனானுவ… கேட்டா இங்க வர்றதா சொல்றானுவ… வீரண்ணே என்னான்னு கேட்டார (கேட்டுவிட்டு வர) சொன்னிச்சு…”

 

“ஆத்தி… பக்குவமா ஆஞ்சு மூட்டகட்டி வச்ச கல்லைய நடுசாமத்துல வண்டில ஏத்தச் சொல்ல நா என்ன கூறு கெட்டவளா…? பாவிப் பயலுவள காவலுக்கு வச்சா… வேலியே பயிர மேயிற கதையாவுல்ல போயிட்டு… கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்னு கூடினா விடியு மட்டு(ம்) திருடலாம்கறது சரியாத்தான் இருக்கு…”

 

“நீ அவனுவள வண்டிக் கட்ட சொல்லலன்னா, ஐயாவ எழுப்பி வெவரத்த கேளுத்தா…”

 

“என்னத்தடா கேக்குறது… தூக்கத்துல எழுப்புனா உங்கையாவுக்குக் கோவந் தாங்காது… நீ போயி அவனுவள அந்த எடத்துலேருந்து நவரவிடாம பாத்துக்க… அந்தா… மானத்துல (வானத்தில்) வெள்ளி மொளச்சுட்டு… இன்னும் ரெண்டொரு மணி நேரத்துல ராசா முளிச்சிடும். நா வெவரத்தச் சொல்லி களத்துக்கு வரச் சொல்றேன்… நீ போ…” என்று காத்தமுத்துவிற்குப் பதில் சொல்லி அனுப்பிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தார்.

 

மின்விளக்கின் வெளிச்சத்தாலும்… பேச்சுக் குரல்களாலும் கூடத்திலும் திண்ணையின் மறுபக்கத்திலும் படுத்து உறங்கிக் கொண்டிருந்தவர்கள் கண்விழித்து விட்டார்கள்.

 

“என்னத்தா சேதி… காத்தமுத்து எதுக்கு இந்நேரத்துல இங்கன வந்தா(ன்)…?” என்று கேட்டபடி திண்ணையில் படுத்திருந்த ‘குட்டாரு’ என்னும் கணக்கபிள்ளை எழுந்து வந்தார்.

 

“என்ன… என்ன இந்த நேரத்துல மாநாடு…?” என்று கணீர் குரலில் கேட்டபடி பாட்டியின் மூன்றாவது பேரனான தேவன் கூடத்திலிருந்து எழுந்து வந்தான்.

 

“அந்தக் கதையை ஏன்டா கேக்குறிங்க…!” என்று ஆரம்பித்து அனைத்தையும் சொல்லி முடித்தார் பாட்டி.

 

இவர்களின் பேச்சுக்குரல் கேட்டு வீட்டிற்குள் படுக்கையறையில் கதவைத் திறந்து வைத்தபடி உறங்கிக் கொண்டிருந்த பாட்டியின் மருமகள் வைதேகி

 

“என்னத்த… யாரு வந்தது…?” என்றபடி வெளியே வர… அடுத்த அறையிலிருந்து அதே கேள்வியை வைதேகியைப் பார்த்துக் கேட்டபடி அவளுடைய மருமகள் ராஜேஸ்வரி வந்தாள்.

 

வீட்டில் இருந்த அனைவருக்கும் விஷயம் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவியது போல் ஊருக்குள்ளும் கசிந்து ஊர்மக்கள் களத்து மேட்டில் வேடிக்கைப் பார்க்க சூழ்ந்துவிட்டார்கள். அதுவரை முக்கியமான ஆளுக்கு விஷயம் எட்டவில்லை.

 

# # #

 

“அத்த… நடுலவருக்குச் சேதி எட்டுனிச்சா…?” காலை காப்பிக்கு டிக்காஷனைத் தயார் செய்தபடி ராஜேஸ்வரி என்னும் ராஜி வைதேகியிடம் கேட்டாள்.

 

“மொதல்ல ஒம்புருஷனுக்குச் சொன்னியா இல்லையா…?” மாமியார் மருமகளைப் பதில் கேள்விக் கேட்டாள்.

 

“அதெல்லாம் சாமத்துலையே சொல்லிட்டேன்… இவரும் சின்னவரும் கருக்கல்லையே களத்துக்குக் கெளம்பிட்டாக… நடுலவருக்குச் சொல்லியாச்சா இல்லையா…? அதச் சொல்லுங்க மொதல்ல…” மருமகள் மாமியாரிடம் உரிமையுடன் எரிச்சலைக் காட்டினாள். அண்ணன் மகளாயிற்றே…!

 

“பீமனோட தேவனும் கெளம்பிட்டானா… நல்லது… ஐயா டவுனுக்குப் போயிட்டு ராவு ஒரு மணிக்குத்தானே வந்திச்சு… இன்னும் எழும்பல… எழுந்தோன ஆச்சி சொல்லிக்குவாக நீ வேலையப் பாரு…” என்று மருமகளிடம் பேச்சை முடித்துவிட்டு வீட்டின் பின்பக்கம் கடைக்கோடியில் இருக்கும் மாட்டுத் தொழுவத்தை நோக்கிச் சென்றாள் வைதேகி.

 

மூத்த மகனையும், இளைய மகனையும் பெயர் சொல்லி அழைக்கும் வைதேகி நடு மகனை மட்டும் ஐயா என்றும், ராசு என்றும், சாமி என்றும் தான் அழைப்பாள். அவனுடைய கம்பீரமான உருவமும்… கூர்மையான பார்வையும்… நினைத்ததைச் சாதிக்கும் அறிவும்… இறைவனையே எதிர்த்து நிற்கும் தைரியமும்… அவனைப் பெற்ற தாயையே அவன் பெயரைச் சொல்லி அழைக்கத் தயங்க வைக்கும்.

 

தொழுவத்தில் ஐம்பத்தி இரண்டு மாடுகளும் சிறப்பாகப் பராமரிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணித்தவள்…

 

“அடேய் மாயா… இந்தச் செவல கன்னுக்குட்டி ஏன்டா சோந்தாப்ல நிக்குது…? பாலு குடிக்குதா… தீவனம் திங்குதா…? ”

 

“பால் இன்னிக்கு எத்தன லிட்டர் கண்டுச்சு…?”

 

“தீவனம் இன்னும் எத்தனை நாளைக்கு வரும்… நாளைக்கு டவுனுக்குப் போயி வாங்கிக்கிட்டு வந்துடு…. குட்டாருகிட்ட சொல்லி வக்கிறேன்… பணம் வாங்கிக்க…” என்று தொழுவத்தில் வேலை செய்யும் முதன்மை வேலைக்காரனான மாயனிடம் உத்தரவோடு பேசிக் கொண்டிருக்கும் போது, வள்ளி பாட்டி வீட்டுக்குள் இருக்கும் மாடிப்படியில் பதித்திருக்கும் பளிங்கு கல்லின் வழவழப்பிற்குப் பயந்து… வீட்டின் பின்பக்கம் உள்ள மரத்தாலான படியில் ஏறி மாடியில் இருக்கும் நடுப் பேரனுடைய அறைக்குச் செல்வது தெரிந்தது.

 

“ஹும்… இன்னும் கொஞ்ச நேரத்துல நடுலவனுக்குச் சேதி தெரிஞ்சிடும்… என்ன ஆகப் போகுதோ… கெரகம் புடிச்சவனுங்க… குடுக்குற சம்பளத்துக்கு விசுவாசமா வேல செய்யாம களவாணித்தனம் பண்ண பாத்துருக்காணுவ…” என்று முனுமுனுத்தபடி மாடியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்றாள் வைதேகி.

 

வைதேகி மட்டும் அல்ல… தொழுவத்திலும் தோட்டத்திலும் வேலைச் செய்யும் அனைவரின் பார்வையும் கண்டும் காணாதது போல் மாடிப்பக்கம் தான் இருந்தது.

 

பாட்டி காலை ஆறு மணிக்குப் பேரனின் அறைக்குச் சென்றார். ஆறு முப்பதுக்குக் கீழே வந்தார். சிறிது நேரத்தில் காபி மேலே சென்றது… அதன் பிறகு மாடியில் எந்த அசைவும் தெரியவில்லை. எட்டு மணிக்கு டிஃபன் மேலே சென்றது… மீண்டும் அமைதி… வீட்டு மக்களும் வேலைக்காரர்களும் எதிர்பார்த்தபடி அங்கு எந்த எரிமலையும் வெடிக்கவில்லை. மாறாக மற்ற நாட்களைவிட இன்று அந்த வீடு மிகவும் அமைதியாக இருந்தது.

 

# # #

காலை ஒன்பது மணி, இதமான காலை வெயில் வயல்வெளியில் கூடியிருந்த மக்களைக் குளிர்காய வைத்தது.

 

மாட்டு வண்டியிலிருந்த மூட்டைகள் இறக்கி வைக்கப்பட்டிருந்தன. வண்டி மாடுகள் பக்கத்தில் ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்தன. வண்டியில் பீமன் அமர்ந்திருந்தான். தேவன் அடுக்கப்பட்டிருந்த மூட்டை மேல் ஏறி அமர்ந்திருந்தான். மாரியும் குப்பனும் ஒரு பக்கத்தில் கையைக் கட்டியபடி நின்று கொண்டிருந்தார்கள். அவர்களைச் சுற்றி வளையம் போல் மக்கள் முகாமிட்டு அமர்ந்திருந்தார்கள்.

 

“எலேய் சின்னசாமி… நெதமும் (தினமும்) கருக்கல்ல ஏழு மணிக்கெல்லாம் வயலுக்கு வர்ற ஐயாவ இன்னைக்கு இன்னமும் காணுமே, என்னடா சேதி…?”

 

“அதாண்ணே எனக்கும் ஒன்னும் புரியல… இந்தப் பயலுவள என்ன செய்யப் போறாருன்னு பாத்துட்டுப் போவலாமுன்னு உக்காந்திருக்கேன்… எந்த வேல எங்கன கெடந்தாலும் கெடக்கட்டும்… இன்னைக்கு இங்க என்ன நடக்குதுன்னு பாக்காம நவர மாட்டேன்…”

 

“ஆமா… ஆமா… அதுக்குத்தான் நானும் உக்காந்துருக்கேன்…” என்று கூட்டத்தில் உள்ள இருவர் தங்களுக்குள் ரகசியமாகப் பேசிக் கொண்டிருந்த போது தூரத்தில் ‘புடுபுடு’வென புல்லட் வரும் சத்தம் கேட்டது. அனைவரின் பார்வையும் ஒருசேர சத்தம் வந்த திசையை நோக்கிப் பாய்ந்தது.

 

காற்றில் கலைந்து நெற்றியில் புரளும் கேசத்தைத் தங்கக்காப்பு அணிந்த ஒரு கை கோதிவிட, மறு கை ரத்தத்தை ஒத்த சிவப்பு நிறத்தில் பளபளக்கும் புல்லட்டை சீரான வேகத்தில் இயக்க, வெள்ளை வேட்டிச் சட்டையில் ராஜதோரணையுடன் வந்து கொண்டிருந்த ருத்ரனைப் பார்த்த நொடி… வித்தைக்காரனைச் சுற்றி முற்றுகையிடுவது போல் மாரியையும் குப்பனையும் சுற்றி முற்றுகையிட்டு அமர்ந்திருந்த கூட்டம் தானாக எழுந்து நின்றது.

 

புல்லட் கூட்டத்தை நெருங்கியது. கூட்டம் விலகி உள்ளே புல்லட் நுழைய வழிவிட்டது.

 

ஓர் ஓரத்தில் மர நிழலில் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கினான் ருத்ரன். மடிப்புக் கலையாத வெள்ளை வேட்டிச் சட்டையும், நெற்றியில் இடப்பட்டிருந்த அடர்த்தியான சிறு குங்கும பட்டையும் அவன் எவ்வளவு நிதானமாகத் தயாராகி வந்திருக்கிறான் என்பதைத் தெளிவாகக் காட்டியது.

 

‘இங்கு இவ்வளவு பெரிய பிரச்சனைக்கு முடிவு தெரிவதற்காக ஊரே ஒன்று திரண்டு காத்திருக்கும் போது, காலையில் எழுந்ததும் முகத்தை மட்டும் கழுவிவிட்டு பீமனும் தேவனும் ஓடி வந்தது போல் அரக்கபறக்க வந்து பிரச்சனைக்கு முடிவு கட்டாமல்… வெள்ளை வேட்டி மைனர் கெட்டப் சிறிதும் குறையாமல் முறுக்கு மீசையும் குங்கும பட்டையுமாக ஆற அமர காலை ஒன்பது மணிக்கு வந்து நிற்கிறானே இந்த ருத்ரன்…! ‘வயலுக்கு வருவதற்கு இவ்வளவு மேக்கப் தேவையா….!’ என்றெல்லாம் சிறிதும் எரிச்சல்படாமல்… ஏதோ தெய்வத்தையே நேரில் கண்டுவிட்டது போல் அந்த ஊர் மக்கள் முகத்தில் காட்டிய பிரகாசமும்… எழுபது வயது கிழவனும் அந்த முப்பது வயது இளைஞனைப் பார்த்து முதுகை வளைத்து முட்டி வரை குனிந்து துண்டை கக்கத்தில் வைத்துக் கொண்டு வணக்கம் சொன்ன விதமும்… அவனுக்கு அந்த ஊரில் உள்ள மதிப்பைக் காட்டினாலும்… அந்த ஊர்மக்கள் ஒரு நூற்றாண்டு பின்தங்கி இருக்கிறார்கள் என்பதைத் தெளிவாக உணர வைத்தது.

 

சகோதரன் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டதை அடுத்து பீமனும் தேவனும் எழுந்து அவனை நெருங்கினார்கள்.

 

“என்ன பீமா பிரச்சனை… எதுக்கு இங்க இவ்வளவு கூட்டம்…? யாரு மூட்டையெல்லாம் இங்க கொண்டு வந்து அடுக்குனது…? யாரு ஏத்திக்கிட்டு வரச் சொன்னது…?” எதுவுமே தெரியாதவன் போல் அண்ணனிடம் புதிதாக விசாரணையை ஆரம்பித்தான்.

 

“நா ஏத்திகிட்டு வர சொல்லல தம்பி…” பீமன் மாரியையும் குப்பனையும் முறைத்தபடி பதில் சொன்னான்.

 

ருத்ரனின் பார்வை தேவனிடம் திரும்பியது. “உன்ன கேக்காம நம்ம வீட்டுலேருந்து யாரும் எதுவும் செய்ய மாட்டாங்கண்ணே… மூட்டைய வண்டி கட்டி இங்க கொண்டுவந்து அடுக்குனது மாரியும் குப்பனுந்தான்…” என்று குற்றவாளிகளைக் கைகாட்டினான் தேவன்.

 

ருத்ரனின் பார்வை மாரியின் பக்கம் திரும்பியது…

 

“ஐயா… தப்புப் பண்ணிட்டேன் சாமி… என்ன மன்…னி… ஆ…த்தா…டி…” அவன் பேசி முடிப்பதற்குள் ருத்ரனின் முரட்டுக்கை அவனுடைய பிடரியைத் தாக்கியதில் “ஆத்தாடி….!!!” என்ற அலறலுடன் குப்புற விழுந்தான். விழுந்தவனிடம் அசைவே இல்லை.

 

நடுங்கியபடி நின்று கொண்டிருந்த குப்பனின் இரண்டு கைகளையும் முறுக்கி முதுகில் அணைகட்டி… தன்னுடைய வலதுக் கை விரல்களை இறுக்கி மடக்கி… கையையே ஒரு கனமான இரும்பு குண்டலமாக மாற்றி ஓங்கி முதுகில் ஒரு குத்து… அணைக்கட்டியிருந்த கைகளிலிருந்து நழுவி அரையடி முன்னால் நகர்ந்தது குப்பனின் முதுகு. ‘பட்..டட்’ என்று இரண்டு முறை நெட்டி முறியும் சத்தம் அவன் கை முட்டியிலிருந்து வெளிப்பட்டது… அவன் வலியில் துடித்தபடி தரையில் விழுந்து புரண்டான். நிமிட நேரத்தில் அவனுடைய இரண்டு கைகளும் புசுபுசுவென யானைக்கால் போல் வீங்கிவிட்டன.

 

“ஐயா சாமி… விட்டுடுங்கையா…” என்று பெருங்குரலெடுத்துக் கத்தியபடி ஒரு நடுத்தர வயது பெண் ருத்ரனின் காலடியில் கவிழ்ந்தாள்.

 

“ஏய்… இந்தா… எந்திரி மொதல்ல…” ருத்ரனின் அதட்டல் அவளுடைய அழுகையை அடக்கியது. அந்தப் பெண் கண்ணீருடன் எழுந்து நின்றாள்.

 

“உங்களுக்குப் புண்ணியமா போகுமுங்க… புத்திக்கெட்ட மனுஷன்… அவர விட்டுடுங்கையா…” இன்னொரு பெண் யாசிப்பது போல் அவனிடம் மடியேந்திக் கேட்டாள்.

 

அவன் அந்தப் பெண்களின் முகத்தைக் கூர்ந்துப் பார்த்தான். அவர்கள் இருவரும் அடிபட்டுக் கிடப்பவர்களின் மனைவிமார்கள் என்பது தெரிந்தது. என்ன நினைத்தானோ… “ஒரு மணிநேரம் உங்களுக்கு அவகாசம்… மூட்ட முடிச்சக் கட்டிக்கிட்டு ஊரை விட்டு ஓடிடுங்க…” கர்ஜனையாக எச்சரித்தான்.

 

கூட்டமே அதிர்ந்தது. பிறந்து வளர்ந்த சொந்த ஊரைவிட்டு ஓடு என்றால் எங்கு ஓடுவது…! என்ன பிழைப்பு அவர்களுக்குத் தெரியும்…! பிள்ளைகளின் கதி என்ன…! ஒரு மணிநேரத்தில் எந்த மூட்டையைக் கட்டிக் கொண்டு எங்குப் போவது…! கதிகலங்கிப் போன பெண்கள் இருவரும்…

 

“ஐயோ சாமி… புள்ளக் குட்டிகாரவுகள இப்புடி வெரட்டுறிகளே… நாங்க எங்கப் போவோம்… என்ன செய்வோம்… பேசாம இந்த வீணாப் போன பாவி பயலுவளுக்கு முன்னாடி எங்களையும் எங்க புள்ளைகளையும் உங்க கையாலையே கொன்னுடுங்கைய்யா…” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுவதைப் பொருட்படுத்தாமல் புல்லட்டை ஸ்டார்ட் செய்தபடிச் சொன்னான்….

 

“ஏய்… காத்தமுத்து…. இந்த மூட்டையெல்லாம் வண்டில ஏத்திக்கிட்டு களத்துக்கு ஓட்டுறா…” அதிகாரத்தில் அதட்டலாக ஒலித்தது அவனுடைய குரல்.

 

# # #

 

ருத்ரனுக்குக் கட்டுக்கடங்காத ஆத்திரம்… ‘உண்ட வீட்டுக்கே ரெண்டகம் நெனச்சுட்டானுவளே…! துரோகிங்க… உயிரோட விட்டதே தப்பு… கொன்னுப் பொதச்சிருக்கணும்…’ என்று கொதித்தபடி சோலையூர் ஆற்றுப் பாலத்தில் வண்டியை விட்டான். தூரத்தில் சுடிதார் அணிந்த பெண்ணொருத்தி பாலத்தில் நின்றபடி ஆற்றை உற்றுஉற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

 

“தண்ணியில்லாத ஆற்றில் இந்தக் காலை வேளையில் அப்படி என்ன உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் இந்தப் பெண்…” என்று சம்மந்தம் இல்லாமல் அவனுடைய கோபம் அந்தப் பெண்ணின் மீது திரும்பியது. நொடியில் அவனுடைய வண்டி அந்தப் பெண்ணிடம் நெருங்கிவிட்டது.

 

“ந்தா… ஏய்… பொண்ணு…” அலட்சியமான அவனுடைய குரலில் வெடுக்கெனத் திரும்பிப் பார்த்தாள் அந்தப் பெண்.

 

“எந்த ஊரு…? இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க…?” அதிகாரத் தொனியில் வந்தது கேள்வி.

 

அவனை மேலும் கீழும் ஒருமுறை அளந்தவள் பதில் சொல்லாமல் திரும்பவும் ஆற்று மணலை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.

 

அவளுடைய அலட்சியம் அவனை மேலும் எரிச்சல்படுத்தியது…

 

“இந்தா புள்ள… இங்கெல்லாம் நிக்கக் கூடாது… கெளம்புக் கெளம்பு…” விரட்டினான்.

 

பாலத்துக்கு அடியில் தண்ணியடிப்பதும், சீட்டு விளையாடுவதும் அந்த ஊர் கழிசடைகளின் வழக்கம். அந்த இடத்தில் இந்தப் பெண் தனியாக நின்று கொண்டிருக்கிறாளே என்கிற அக்கறை கலந்த எரிச்சல் அவனுக்கு.

 

அவனுடைய எண்ணம் என்ன என்பதைப் படிக்குமளவிற்கு அவள் புத்திசாலி இல்லை என்பதால் அவளுக்கும் கோபம் மூக்கிற்கு மேல் வந்தது.

 

“ஏன் நிக்கக் கூடாது…? இந்தப் பாலத்த நீங்க பட்டா போட்டு வாங்கியிருக்கியளோ…!” நக்கலாகக் கேட்டாள்.

 

‘ஊர்ல ஒரு பய எதுத்துப் பேசுனது இல்ல… இந்தச் சுண்டெலி இப்படி அலட்சியப்படுத்திட்டாளே…!’ என்று நினைத்து அனல் பார்வையை அவளுக்குப் பதிலாகக் கொடுத்துவிட்டு அங்கிருந்து வண்டியை உதைத்து உறுமவிட்டுக் கிளப்பிக் கொண்டு நகர்ந்தான்.




2 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Mithra Ravi says:

    nice starting


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vatsala Mohandass says:

    Pppaa epdi ezhudaringa gramathu language ah!!! Sema!

You cannot copy content of this page