விடிவெள்ளி – 4
3223
0
அத்தியாயம் – 4
மாநில அளவில் நடக்கும் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டியில் கலந்துகொள்வதற்காக பள்ளி நிர்வாகத்தின் மூலம் தடகள வீரனான ஜீவனும் மற்ற மாணவர்களும் கோயம்புத்தூர் அழைத்து செல்லப்பட்டார்கள்.
அதே விளையாட்டு போட்டியில் கலந்துகொள்வதற்காக கூடை பந்து வீராங்கனையான புனிதாவும் அவளுடைய பள்ளியின் சார்பாக வந்திருந்தாள்.
காலை நேர பயிற்சிக்காக அவள் மைதானத்திற்கு செல்லும் போது… ஒரு மாத காலம் அவள் கண்ணில் தென்படாமல் அவ்வப்போது அவள் கனவில் வந்து தொல்லை செய்து கொண்டிருந்த ஜீவனை கண்டாள். ட்ராக் சூட்டில் மிதமான வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தான்.
எதிர்பாராத இடத்தில் அவனை பார்த்ததில் அவளுடைய இதயம் வேகமாக துடித்தது. அடிவயிற்றில் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறந்தன. அவன் மீது பதித்த பார்வையை அவளால் விளக்க முடியவில்லை.
“ஹேய்… என்னடி அப்படியே நின்னுட்ட… ப்ராக்ட்டிஸ்க்கு வரலையா…?” புனிதாவின் தோழி அவள் தோளை உலுக்கினாள்.
“நா அப்புறம் வர்றேன்… நீங்க போங்க…” என்று தோழிகளை அனுப்பிவிட்டு தூரத்தில் மைதானத்தை சுற்றி ஓடிக் கொண்டிருந்தவனை கண்களால் தொடர்ந்தபடி அங்கிருந்த ஸ்டோன் பெஞ்சில் அமர்ந்துவிட்டாள்.
அவன் அறியாமல் நாள் முழுவதும் அவனை கண்களால் தொடர்ந்து கொண்டிருந்தாள்.
ஜீவன் இரண்டாவது நாளிலிருந்து தொடர்ந்து பல போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை குவித்துக் கொண்டிருந்தான். அந்த பள்ளி வளாகத்தில் தங்கியிருந்த வெவ்வேறு பள்ளி மாணவ மாணவிகளுக்கும் அவன் தெரிந்த முகமாகிவிட்டான். ஒரு கட்டத்தில் போட்டியில் ஜீவன் இருக்கிறான் என்றால் முதல் பரிசு அவனுக்குத்தான் என்று மாணவர்கள் முனுமுனுக்கும் அளவிற்கு அவன் பிரபலமானதோடு புதிதாக ஒரு விசிறி கூட்டத்தையும் சம்பாதித்துவிட்டான். அவன் எங்கு போனாலும் அவனிடம் யாராவது வந்து பேசுவதும் மற்ற பள்ளி ஆசிரியர்கள் கூட அவனை பார்த்து தலையசைத்து சிரிப்பதுமாக இருந்தார்கள்.
இவையெல்லாம் புனிதாவை நிலைகுலைய வைத்தது. இரண்டே நாட்களில் அவளுடைய கட்டுப்பாடு தவிடுபொடியானது. மூன்றாவது நாள் அவள் தோழியுடைய கைபேசியை இரவல் வாங்கி அதிலிருந்து ஜீவனை அழைத்தாள்.
“காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்…
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்…
உன் எண்ணம் என்ற ஏட்டில் என் என்னைப் பார்த்த போது
நானே என்னை நம்பவில்லை எந்தன் கண்ணை நம்பவில்லை
உண்மை உண்மை உண்மை உண்மை
அன்பே உன்மேல் உண்மை உன் வசம் எந்தன் பெண்மை
டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி…”
ரிங் சத்தத்திற்கு பதில் அந்த பக்கத்திலிருந்து பாடல் ஒலித்தது. இந்த பாடல் தனக்காகத்தான் ஒலிக்கிறது என்கிற எண்ணம் கொடுத்த மகிழ்ச்சியில் நொகிழ்ந்து போய் உணர்ச்சிகளின் பிடியில் சிக்கியபடி அவனுடைய பதிலுக்காக காத்திருந்தாள்.
“ஹலோ…” ஜீவனின் குரல் பிசிறில்லாமல் ஒலித்தது.
“ஹலோ…” குழைவான பெண் குரல் ஜீவனின் ஜீவனை தொட்டது.
அவன் பேச்சிழந்து அமைதியாகிவிட்டான்.
“ஹலோ…” மீண்டும் அவளுடைய குரல்.
“போன் நம்பர் கொடுத்து இவ்வளவு நாள் ஆகுது… இப்பதான் கூப்பிடணும்ன்னு தோணுதா…?” என்றான் தெளிவாக.
அவனுடைய அன்பில் அவள் தன் நிலையிழந்தாள். சின்ன பெண்தானே… உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரியவில்லை. விம்மி வெடித்து அழுதுவிட்டாள்.
“ஏய்… என்ன ஆச்சு…?” அவன் பதறினான்.
“ஜீவா… சாரி ஜீவா… ரொம்ப ரொம்ப சாரி… நான் உங்களை ரொம்ப கஷ்ட்டப்படுத்திட்டேன்… ரொம்ப அவமானப் படுத்திட்டேன்…. சாரி ஜீவா… சாரி… சாரி… சாரி…” உருகினாள்.
“ஹேய்… அதெல்லாம் ஒன்னும் இல்ல நீ முதல்ல அழுகையை நிறுத்து…”
“ஓகே…” அவள் மூக்கை உறிஞ்சியபடி உடனே சரியென்று சொன்னாள்.
“பம்கின்… அழுதுகிட்டே பேசினாலும் இன்னிக்கு ரொம்ப ஸ்வீட்டா பேசுற… நம்பவே முடியல… இதெலாம் நெஜம்தானான்னு சந்தேகமா இருக்கு…”
“சத்தியம் ஜீவா… நம்புங்க…”
“ஹேய்… என்னோட பேரை கண்டுபிடிச்சிட்டியா…? வார்த்தைக்கு வார்த்தை ஜீவா… ஜீவான்னு சொல்ற…? எப்படி கண்டுபிடிச்ச…? யார்ட்ட கேட்ட…?”
“அதெல்லாம் மூணு நாளுக்கு முன்னாடியே கண்டுபிடிச்சுட்டேன். நான் யார்கிட்டயும் போயி கேட்கல… தானா தெரிஞ்சுது…?” என்று கலகலவென சிரித்தாள்.
“ஆஹா… இந்த நேரத்துல நான் ஊர்ல இல்லாம போயிட்டேனே… இப்ப மட்டும் உன் பக்கத்துல இருந்தேன்….” என்று முடிக்காமல் இழுத்தான்.
“இருந்தா…?” என்று அவன் சொல்ல வந்ததை சொல்லி முடிக்க தூண்டினாள் புனிதா.
“அப்படியே அந்த பம்க்கின் கன்னத்…த…” அவன் மீண்டும் முடிக்காமல் இழுக்க, அவள் முகம் குப்பென்று சிவந்துவிட்டது. சில நொடிகள் மௌனத்திற்கு பிறகு,
“பம்க்கின் கன்னத்த…?”என்று கேள்வியாக நிறுத்தினாள்.
“பிடிச்சு கிள்ளிடுவேன்…” என்று சிரித்தான்.
“ஹேய் ரொம்ப ஓவரா பேசுரிங்கப்பா… ரொம்பத்தான் தைரியம்…” என்றாள் அவனுடைய குரும்பை ரசித்தபடி.
“ஹும்… இப்போதைக்கு பேசத்தான் முடியும்… மற்றதுக்கெல்லாம் இன்னும் அஞ்சாறு வருஷமாவது வெயிட் பண்ணனுமே…!” என்றான் மீண்டும் பூடகமாக.
“மற்றதுக்கெல்லாம்ன்னா…? என்ன மற்றது…?” என்றாள் குறுஞ்சிரிப்புடன்.
“அது என்னன்னு உனக்கு தெரியாதா…?”
“சொன்னாதானே தெரியும்…?”
“ஓஹோ… அப்படியா…?”
“அப்படித்தான்…”
“அப்படின்னா உன்ன நேர்ல பார்க்கும் போது சொல்றேன்…”
“ஓகே… பாருங்க…”
“பாருங்களா…? இப்ப எப்படி பா…ர்…க்… ஹே…ய்… பம்க்கின்… நீ இப்போ எங்க இருக்க…?” என்று உரக்க கத்தினான் உற்சாக மிகுதியில்.
“ரைட் சைடு திரும்பி பாருங்க… எங்க இருக்கேன்னு தெரியும்…” என்றாள் அவள் அமைதியாக..
சட்டென திரும்பினான். மர நிழலில் இருந்த ஒரு ஸ்டோன் பெஞ்சில் அமர்ந்திருந்தாள். அந்த நொடி ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் அவன் இதயத்தை சுகமாக வருடியது போல் ஒரு உணர்வு வந்து போனது. துள்ளி குதித்து அலைபாயும் கேசத்தை விரல்களால் கோதியபடி அவளை நோக்கி ஓடி வந்தான்.
“ஹேய்… எ… எப்படி… நீ இங்க…! பம்க்கின்… நான் கனவு எதுவும் காணலையே…!” என்றான் குதித்துக் கொண்டு.
அவள் சிரித்துக் கொண்டே “நிஜம்தான்… வேணுன்னா கன்னத்த கிள்ளி பார்த்துக்கோங்க… உங்க கன்னத்த…” என்று சொன்னதும் அவன் சத்தமாக சிரித்தான்.
“நீ இங்க எப்படி…? உங்க ஸ்கூல் இவ்னிஃபாம் போட்ட பொண்ணுங்கள இங்க பார்த்தேன்… உன் ஞாபகம் வந்துட்டே இருந்தது… ஆனா நீ வந்திருப்பேன்னு நெனைக்கல… ஆமாம் என்ன கேம்காக வந்திருக்க…?”
“பேஸ்க்கட் பால்…”
“பேஸ்க்கட் பாலா… நீயா…! ஹா… ஹா…” வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தான்.
“என்ன…? எதுக்கு சிரிக்கிறிங்க…?”
“உன்னபோய் பேஸ்க்கட் பால் டீம்க்கு ரெடி பண்ணியிருக்காங்களே…! ஹா… ஹா…”
“ஏன்…? எனக்கென்ன…?”
“இல்ல… பாலுக்கும் உனக்கும் வித்தியாசம் தெரியாம… உன்ன தூக்கி பேஸ்க்கட்ல போட்டுட போறாங்க…” என்று மீண்டும் சிரித்தான்.
அவளுக்கு கோபம் வந்துவிட்டது.
“ரொம்ப சிரிக்காதிங்க… நான் என்ன அவ்வளவு குண்டவா இருக்கேன்… பிடிக்கலன்னா பேசாம இருக்க வேண்டியதுதானே… எதுக்காக பின்னாடியே வந்திங்க… என்கூட இனி நீங்க பேச வேண்டாம் போங்க…” என்று கோவித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.
Comments are closed here.