Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

உனக்குள் நான்-3

அத்தியாயம் – 3

 

“உரிமையோடு எனை வெறுத்தால் கூட

சுகமாகப் பொறுத்துக் கொள்வேன் – ஆனால்

சிரித்துக் கொண்டே நீ காட்டும் விலகல்

கண்ணே! என்னைக் கொல்லாமல் கொல்லுதடி…!”

 

மதுமதி கணவனைக் கவனிக்கவில்லை என்று சொல்ல முடியாது. அவனுக்கு எந்த நேரத்தில் என்னென்ன தேவை என்பதைப் பார்த்துப் பார்த்துத்தான் செய்தாள். நேரத்திற்கு உணவும், மருந்தும் கேட்காமலேயே கொண்டு வந்து கொடுத்தாள். கூப்பிட்டக் குரலுக்கு ஓடிவந்து “என்ன வேண்டும்?” என்று கேட்டு அவளுடைய கடமையைச் சரியாகச் செய்தாள். ஆனால் கடமையை மட்டும் தான் செய்தாள்.

 

அவனுடைய காயத்திற்காக இவள் அழவில்லை. அவன் வலியில் முகம் சுளிக்கும் போது இவள் கலங்கவில்லை. அவனுடைய துன்பத்தை இவள் பகிர்ந்து கொள்ளவில்லை. கார்முகிலனுக்கு அது பெரிய குறையாக இருந்தது.

 

கடமைக்காக அவள் எதையும் தனக்குச் செய்யத் தேவையில்லை என்று வீம்புடன் எண்ணியவன், மறுநாளிலிருந்து தன்னுடைய வேலைகளைத் தானே செய்து கொள்ள ஆரம்பித்தான். எதற்கும் மனைவியை அழைப்பதில்லை. போதாதற்குக் கல்லூரிக்கும் கிளம்பினான்.

 

சட்டை பட்டனை போட்டுக் கொண்டிருந்த கணவனை வியப்போடு பார்த்த மதுமதி, “காலேஜ் கிளம்புறீங்களா..?” என்றாள்.

 

‘எங்க கிளம்பிட்டீங்க..? கால் முடியாம இருக்கும்போது காலேஜுக்குப் போறது ரொம்ப அவசியமா..? பேசாம லீவ் போட்டுட்டு வீட்டுல ரெஸ்ட் எடுங்க…’ என்று மனைவி உரிமையோடு அதட்டுவாள் என்கிற எதிர்பார்ப்போடு “ஆமாம்…” என்றான். ஆனால் அவன் நினைத்தது நடக்கவில்லை.

 

“ஓ… லஞ்ச் ரெடி பண்ணித் தரட்டுமா..?” என்றாள் அவள் சாதாரணமாக.

 

அவனுக்குக் கோபம் சுள்ளென்று உச்சிக்கு ஏறியது. பதில் சொல்லாமல் சீப்பை எடுத்துத் தலை வாரினான்.

 

“சீக்கிரம் போகணுமா..? ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ண முடியுமா..? ரெண்டு சப்பாத்தி போட்டு, பருப்பு தாளிச்சு… டப்பால போட்டு கொடுத்திடுறேன்…” என்றாள் பரபரப்போடு.

 

சட்டென்று திரும்பி அவள் கண்களுக்குள் பார்த்தவன் “ஒரு நேரம் வெளியே சாப்பிட்டேன்னா செத்துட மாட்டேன்…” என்றான் சுள்ளென்று. நொடியில் அவள் முகம் வதங்கிவிட்டது. பதில் பேசாமல் உள்ளே சென்றுவிட்டான்.

 

மனைவியின் முகமாற்றம் அவனை வருத்தியது. கையிலிருந்த சீப்பை தூரப் போட்டுவிட்டுத் தலையை அழுந்த கோதியபடி கட்டிலில் அமர்ந்தான்.

 

‘ப்ச்… ஏற்கனவே நொந்து போயிருந்தவளை மேலும் நோகடிச்சுட்டோமே…! என்ன மனுஷன் நான்…’ தன்னைத் தானே கடிந்து கொண்டான். அவளை அனுசரித்துப் போக வேண்டும்… அவளிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவேண்டும் என்று இவன் எவ்வளவுதான் முயன்றாலும் ஓரளவுக்கு மேல் இறங்கிப் போகவே முடியவில்லை. கோபத்தில் கையை முறுக்கி அமர்ந்திருந்த மெத்தையில் குத்தினான்.

 

அவளைச் சமாதானம் செய்யாமல் வெளியே செல்ல மனம் வரவில்லை. கல்லூரிக்குச் செல்வதை ரத்துச் செய்துவிட்டு “மதி…” என்று சத்தமாக அழைத்தான்.

 

அவளிடமிருந்து பதில் வரவில்லை. எழுந்து நொண்டிக்கொண்டே சென்று பக்கத்து அறைக்குள் எட்டிப் பார்த்தான். தரையில் விரித்திருந்த மெத்தையில் குழந்தைக்கு அருகில் படுத்திருந்தாள். உள்ளே சென்று அவளுக்கருகில்… வலது முழங்கையைத் தரையில் ஊன்றி, உள்ளங்கையைத் தலைக்கு அணைவாகக் கொடுத்து… ஒருக்களித்துப் படுத்தவன்… இடது கையால் கலைந்திருந்த அவள் கூந்தலைக் காதோரம் ஒதுக்கிவிட்டு “பொம்மு குட்டி என்ன செய்றாங்க..?” என்றான்.

 

பக்கத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையைப் பார்க்காதது போல் அவன் கேட்டாலும், அதைக் கண்டுகொள்ளாமல் “தூங்கறா…” என்று பதில் சொன்னாள் மதுமதி.

 

‘பார்த்தா தெரியல… பக்கத்துல தானே தூங்கிகிட்டு இருக்கா..?’ என்று மனைவி எரிந்து விழுந்திருந்தால் கூட மகிழ்ந்திருப்பான். ஆனால் அவள் இப்படி ஒட்டாமல் பேசியது தான் அவனை மிகவும் வருத்தியது. வருத்தத்தைப் பின்னுக்குத் தள்ளி வைத்துவிட்டு, அவள் காதில் இதழ் பதித்து “கோபமா..?” என்றான்.

 

“இல்லையே…”

 

“அப்புறம் ஏன்… நான் கூப்பிட்டப்போ வரல..?”

 

“கவனிக்கல…”

 

“பொய் சொல்ற”

 

“………………..” அவள் பதில் பேசவில்லை.

 

“என்னாச்சு..? ஒண்ணும் பேசமாட்டேங்கிற?”

 

“பேசினாலும் நம்ப மாட்டீங்க… அப்புறம் எதுக்குப் பேசணும்..?”

 

அவள் அமைதியாகத்தான் கேட்டாள். ஆனால் அந்த அமைதிக்குள் ஒளிந்திருந்த உணர்வுகள் அவன் இதயத்தைக் கூர் ஈட்டியாக மாறிக் கிழித்தது. இப்போது அவன் மௌனமாகிவிட்டான். அவளிடமிருந்து விலகி புரண்டு மல்லாந்து படுத்தான். விட்டத்தில் அவனுடைய பழைய வாழ்க்கை படமாக ஓடிக் கொண்டிருந்தது. ‘எப்படி இருந்தவள்…! மொத்தமா மாத்திட்டோமே…!’ – கழிவிரக்கம் அவனைக் கொன்றது.

 

“டிஃபன் எடுத்து வைக்கவா..?” அவள் மீண்டும் பேச்சைத் துவங்கினாள்.

 

அவன் மூச்சை ஆழமாக இழுத்துத் தன்னைச் சமாதானம் செய்துகொண்டு “நீ சாப்பிட்டியா?” என்று கேட்டான்.

 

“இன்னும் இல்ல…”

 

“சரி… வா ரெண்டு பேருமே சாப்பிடலாம்…”

 

அவள் மறுக்காமல் எழுந்து சென்று அவனோடு சேர்ந்து அமர்ந்து உணவருந்தினாள். கனமான மனநிலையோடு அன்றைய காலை பொழுது கரைந்தது.

 

###

 

கார்முகிலனும், வீரராகவனும் ஹால் சோபாவில் அமர்ந்திருந்தார்கள். கௌசல்யா கையில் ட்ரேயுடன் சமையலறையிலிருந்து வெளிப்பட்டாள்.

 

“சூப் எடுத்துக்க முகிலா… இந்தாங்க… உங்களுக்கு ஜூஸ்…. எடுத்துக்கோங்க…” என்று தம்பி மற்றும் கணவனிடம் அவரவர்கான பானங்களை நீட்டினாள்.

 

“கால் தான் முடியலையேடா முகிலா… லீவ் போட்டுட்டு வீட்டுல ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே?”

 

“வேலை இருக்குக்கா”

 

“என்ன பெரிய வேலை? உடம்பை விட முக்கியமான வேலை!”

 

“எக்ஸாம் டைம்க்கா…”

 

“என்னங்க இவன் இப்படிச் சொல்றான்..? காலுக்கு ஒண்ணும் பிரச்சனை இருக்காதே!” – கணவனிடம் திரும்பிக் கேட்டாள்.

 

“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது கௌசி… சின்னச் சுளுக்குத் தான்… ரெண்டு நாள்ல தானா சரியா போய்டும்…”

 

“என்னத்த சரியாப் போகுமோ… கார் இருக்கும் போது வண்டில போயி கால உடைச்சுக்கிட்டு வந்து உட்கார்ந்திருக்க…! ஏன்டா… முகிலா… நாங்க எதுக்குடா இருக்கோம்..? அடிபட்ட உடனே ஒரு போன் பண்ணி சொல்லமாட்டியா? நாங்களா வரும் போதுதான் தெரிஞ்சுக்கணுமா?”

 

“அதை என் ஆசை பொண்டாட்டிகிட்டக் கேளு… கால்வலில கெடக்குற நானா போன் பண்ணி சொல்லிக்கிட்டு இருப்பேன்…”

 

அப்போது தான் குழந்தையோடு மாடியிலிருந்து இறங்கி வந்த மதுமதியைப் பார்த்துக் கொண்டே சொன்னான். அவள் அவன் சொல்வதைக் கண்டுகொள்ளாமல் குழந்தையைக் கொண்டு வந்து தாயிடம் கொடுத்தாள்.

 

“இதெல்லாம் நல்லா பேசு… அவ என்னடா பண்ணுவா குழந்தையைப் பார்ப்பாளா..? உன்னைப் பார்ப்பாளா..? இல்லை எனக்கு போன் பண்ணிக்கிட்டு இருப்பாளா? உனக்குக் கால் தானே முடியல… கையும் வாயும் நல்லாதானே இருந்தது? நீதான் பண்ணனும்…” என்று கௌசல்யா போட்டுத் தாக்கவும் கார்முகிலனின் முகத்தில் அசடு வழிந்தது. வீரராகவனும் மதுமதியும் வாய்விட்டுச் சிரித்தார்கள். அவர்களோடு குழந்தையும் சேர்ந்து சிரித்தது.

 

புன்னகை மாறாத முகத்துடன், சிரிக்கும் மனைவியின் முகத்திலிருந்து பார்வையை விலக்காமல் “க்கா… நீவேற… மதி குழந்தையையெல்லாம் எங்க பார்த்தா… எனக்கு அடிபட்ட அன்னிக்கு எப்படித் துடிச்சுப் போய்ட்டா தெரியுமா? என்…னா…ஆ… அழுகை…! கடைசில நான் தான் அவளைச் சமாதானம் செஞ்சு தேத்தற மாதிரி ஆயிடுச்சு…” என்றான் நக்கலாக.

 

பாட்டியின் மடியில் அமர்ந்திருந்த குழந்தைக்கு ‘செர்லாக்’ ஊட்டிக் கொண்டிருந்த மதுமதி, சட்டென்று கணவனைத் திரும்பிப் பார்த்தாள். அவள் கண்களிலிருந்த வலி அவனை வாயடைக்கச் செய்தது.

 

‘அடிபட்டு வந்து நின்னப்போ மூன்றாம் மனுஷி மாதிரி விலகி நின்றவள்… அதை விளையாட்டாகச் சொல்லிக்காட்டும் போது எதுக்கு இப்படி வேதனைப்படுகிறாள்…!’ கார்முகிலன் அவளைப் புரியாமல் பார்த்தான்.

 

மதுமதி கார்முகிலனைக் காதலிக்கிறாள் என்பது உண்மை… அவனுக்காகப் பதறினாள், துடித்தாள் என்பதும் உண்மை. ஆனால் அவனுடைய காதல் மீதும் அதிலிருக்கும் உண்மையின் மீதும்… அவளுக்கு நம்பிக்கை இல்லையெனும் போது தன்னுடைய காதலையும், துடிப்பையும் அவளால் எப்படி வெளிக்காட்ட முடியும்?

 

அவள் உள்ளுக்குள்ளேயே மறைத்துக் கொண்டாள். ஆனால் கணவன் அதைப் புரிந்து கொள்ளவில்லை என்றதும் ஒரு நொடி அவளைமீறி அவளுடைய துன்பம் பார்வையால் வெளிப்பட்டுவிட்டது. ஒரு நொடி தான்… ஒரே நொடியில் தன்னைச் சுதாரித்துக் கொண்ட மதுமதி ‘என்னைக்குத்தான் என் மனசு உங்களுக்குப் புரிஞ்சிருக்கு… இன்னிக்குப் புரியிறதுக்கு..?’ என்கிற நினைவோடு மீண்டும் உணர்ச்சிகளற்ற முகத்துடன் குழந்தைக்கு உணவை ஊட்ட ஆரம்பித்தாள்.

 

கணத்திற்குக் கணம் மாறுபடும் மனைவியின் முகப்பாவங்களிலிருந்து அவள் மனவோட்டத்தைக் கணக்கிட முடியாதவனின் மனம் வறட்சியில் விரிசல் விட்டு வெடித்தது.

 

“ஓய்வின்றி நீ பேசும் – வார்த்தை

மொழியின்றி வரண்டுவிட்ட என் நெஞ்சம்

கவர்ந்திழுக்கும் உன் காந்தக் கண்கள்

பேசும் பார்வைமொழி விளங்காமல்

பாளம் பாளமாய் விரிசல்விட்டு வெடிக்குதடி...! “

 




1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    D Deepa D deepa says:

    Nice epi

You cannot copy content of this page