விடிவெள்ளி – 5
3191
0
அத்தியாயம் – 5
புனிதா கோவமாக கிளம்பியதும் படபடப்பான ஜீவன் , “ஹேய்… நில்லு… நில்லுன்னு சொல்றேன்ல்ல…” என்று அவள் கையை பிடித்து தடுத்து நிறுத்தினான்.
“உன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது என்னன்னு தெரியுமா…?” அவள் முகத்தை காதலுடன் பார்த்துக் கொண்டே கேட்டான்.
“என்ன…?” அவள் எரிச்சலுடன் கேட்டாள்.
அவளுடைய இரண்டு கன்னங்களையும் சுட்டிக்காட்டி “இந்த ஸ்வீட் பம்க்கின்தான்… உன்கிட்ட அதை பற்றி பேசாம வேற எதை பேசுறது…? நீ ஒரு குட்டி ஜோதிகா பம்க்கின்…” என்றான் செல்லமாக.
அவனுடைய கொஞ்சல் பேச்சு அவளை மேலும் நெகிழ்த்தியது. “நெஜமாவா…” என்றாள்.
“சத்தியமா…” என்றான்.
இப்போது அவள் சத்தமாக சிரித்தாள். “அதுசரி… ஏதோ நேர்ல பார்க்கும் போது சொல்றேன்னு சொன்னிங்களே… சொல்லவே இல்ல…”
“ம்ம்ம்…. விடாம கேக்குற… அவ்வளவு ஆசை…!”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல… நீங்க எதுவும் சொல்ல வேண்டாம் போங்க…” அவள் திரும்பவும் முறுக்கிக் கொண்டாள்.
“அது எப்படி… இவ்வளவு தூரம் வந்ததுக்கு பிறகு சொல்லாம இருக்க முடியமா…? கண்டிப்பா சொல்லுவேன்…”
“………………” அவள் மெளனமாக இருந்தாள்.
“என்ன சொல்லவா…?” மீண்டும் காதல் பார்வை பார்த்தபடி கேட்டான்.
“……………..” இதழ்களில் புன்னகை பூத்தாலும் மௌனம் மட்டும் கலையவில்லை.
இதழ்களில் புன்னகையுடன் “சரி சொல்றேன்… நல்லா கேட்டுக்கோ… என்னோட இதயத்தை ஒரு சின்ன பொண்ணு திருடிட்டா… அவ இப்போ ரொம்ப சின்ன பொண்ணுங்கறதால விட்டுவச்சிருக்கேன்… இன்னும் அஞ்சாறு வருஷத்துல அவ வளந்துடுவா… அதற்கு பிறகுதான் அவளுக்கு தண்டனை குடுக்கணும்…” என்று சினிமா வசனத்தையும் சொந்த வசனத்தையும் கலந்தடித்தான்.
அவளுக்கு இன்ப படபடப்பில் உடல் நடுங்கியது… “எ.. என்ன தண்டனை…?” என்றாள் தடுமாற்றத்துடன்.
“கல்யாணம்தான்…” என்றான் அவன் தெளிவாக. அவனுடைய அந்த தெளிவும் அவளை ஈர்த்தது.
நிறைவான மனதுடன் சிரித்தாள். அவன் சொன்ன கல்யாணம் என்கிற வார்த்தை அவர்களை இன்னும் நெருக்கமாக்கியது.
மணிக்கணக்கில் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். கேண்டீனில் சென்று சேர்ந்து உணவருந்தினார்கள். பள்ளி வளாகத்தை மீண்டும் மீண்டும் சுற்றிக் கொண்டிருந்தார்கள்.
ஆயிரம் மாணவர்கள் சுற்றிக் கொண்டிருந்த அந்த பெரிய பள்ளி வளாகத்தில் அவனை தெரிந்தவர்கள் இருபது மாணவர்களும் இரண்டு ஆசிரியர்களும்தான். அவர்களும் தங்கள் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் போட்டி தளங்களில் கூடியிருந்தார்கள். அதே கதைதான் அவளுக்கும். அதனால் அவர்களுடைய நெருக்கம் அவர்களை சேர்ந்தவர்கள் யாருடைய கண்களிலும் படவில்லை. அதோடு பல மாணவ மாணவிகள் ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் கூட்டம் கூட்டமாகத்தான் மேட்ச் நடக்கும் இடங்களை சுற்றினார்கள். இந்த சூழ்நிலையும் அவர்களுடைய நெருக்கத்தை அதிகமாக்கியது.
“சரி ஜீவா… டைம் ஆச்சு… இன்னிக்கு மேட்ச் எல்லாம் முடிஞ்சிடுச்சு போலருக்கு… பிள்ளைகள் எல்லாரும் ஹாஸ்ட்டல் பக்கம் போக ஆரம்பிச்சுட்டாங்க… நான் கிளம்புறேன்…”
“சரி பாத்து போ… நீ கால் பண்ணின போன் உன்னோடதுதானே…?”
“இல்ல.. இல்ல… அது என் ஃபிரண்டோடது…”
“ஓ… சரி அப்போ நீ என்னோட போனை வச்சுக்க… நான் என்னோட ஃப்ரண்ட் போனை வாங்கி வச்சுக்கறேன். நைட் கால் பண்ணி நம்பர் கொடுக்கறேன்…” என்று சொல்லி அவனுடைய போனை அவளிடம் கொடுத்து அனுப்பினான்.
அன்று இரவு அவனுடைய நண்பனின் கைபேசியை வாங்கி அவளை அழைத்தான். ஆசிரியர்கள் ஆசிரியர் அறையில் உறங்கியதால் இவர்களுக்கு வசதியாகிவிட்டது. மற்ற மாணவர்கள் அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கையில் இவர்கள் மட்டும் எழுந்து வந்து அவரவர் ஹாஸ்ட்டல் வராண்டாவில் அமர்ந்து விடிய விடிய பேசிக் கொண்டிருந்தார்கள்.
###
ஜீவாவும் புனிதாவும் கோயம்புத்தூரில் சந்தித்த முதல் நாளை தவிர மற்ற நாட்களிலெல்லாம் ஒன்றாக சுற்றினாலும் மணிக் கணக்கில் பேசிக் கொண்டிருந்தாலும் காலையும் மாலையும் விளையாட்டு பயிற்ச்சியில் கவனமாக இருந்தார்கள். அதன் பலனாக ஜீவன் தான் கலந்து கொண்ட போட்டிகள் அனைத்திலும் வெற்றிகளை குவித்திருந்தான்.
அவளுடைய குழுவும் கூடை பந்து போட்டியில் வெற்றி பெற்றிருந்தது. ஏழாவது நாள் அந்த பள்ளியின் சார்பாக வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை கௌரவிக்க பெரிய அளவில் விழா ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது. உள்ளூர் அரசியல் தலைவர்கள்… பெரும் தொழிலதிபர்கள்… என்று பலரும் வந்திருந்து விழாவை சிறப்பித்தார்கள்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை ஒவ்வொருவராக பெயரை குறிப்பிட்டு மேடைக்கு அழைத்து பதக்கத்தை கழுத்தில் போட்டு சான்றிதழை கையில் கொடுத்து வாழ்த்தினார்கள். பரிசு கொடுக்க ஆரம்பித்த சிறிது நேரத்தில் மீண்டும் மீண்டும் ஆர்.ஜீவன் என்கிற பெயர் ஒலிப்பெருக்கியில் ஒலித்துக் கொண்டே இருந்தது. கீழே இறங்குவதும்… அடுத்த நொடியே மேடைக்கு தாவி ஓடுவதுமாக இருந்த ஜீவனை பார்த்து, பரிசுகளை கொடுத்துக் கொண்டிருந்த சிறப்பு விருந்தினர்….
“தம்பி… இங்கயே இருப்பா… உனக்கு சேர வேண்டிய எல்லா பரிசையும் மொத்தமா வாங்கி கொண்டு கடைசியா கீழ போயிக்கலாம்…” என்று சொன்னார்.
மெதுவாக அவர் சொன்னது ஒலிப்பெருக்கியில் கேட்டுவிட மற்ற பள்ளி மாணவர்கள் கூட “ஜீ…வன்…! ஜீ…வன்…! ஜீ…வன்…!” என்று ஆர்ப்பரித்தார்கள்.
மாணவர்களுடைய கூச்சல் புனிதாவை சிலிர்க்க செய்தது. அவனுடைய பெயர் ஒவ்வொரு முறை ஒலிப் பெருக்கியில் ஒலிக்கும் பொழுதும் இவள் துள்ளி குதிப்பாள். கழுத்து நிறைய பதக்கங்களும் கை நிறைய கோப்பையும் சான்றிதழுமாக கீழே வந்து அனைத்தையம் நண்பர்களிடம் கொடுத்துவிட்டு ஒரு நாற்காலியில் அமர்ந்தான் ஜீவன். அடுத்த நொடி மீண்டும் அவனுடைய பெயர் ஒலிப்பெருக்கியில் ஒலித்தது… ‘மென் ஆஃப் தி மேட்ச்…’
கைத்தட்டலும் விசில் சத்தமும் கூடியிருந்தவர்களின் செவிப்பறையை கிழித்தது. புனிதாவின் மனம் அடங்க மறுத்து ஆர்ப்பரித்தது. அவனுடைய வெற்றியின் மகிழ்ச்சியை தாங்க முடியாமல் உடல் நடுங்கி கண்களில் கண்ணீர் கசிந்தது. ஓடி சென்று அவனை கட்டிக் கொள் என்று மனம் அலறியது. இவன் என்னுடையவன் என்று சத்தமாக கத்த வேண்டும் போல் தோன்றியது. நாகரீகம் என்கிற போர்வை அவளுடைய எல்லா உணர்வுகளையும் மூடி மறைத்துவிட அவள் அமைதியாக அங்கிருந்து எழுந்து ஹாஸ்ட்டலுக்கு சென்றாள்.
தனிமையாக விடுதியில் இருந்த புனிதாவிற்கு ஜீவனுடன் உடனே பேச வேண்டும் போல் இருந்தது. கைபேசியை எடுத்து அவன் புதிதாக கொடுத்திருந்த எண்ணை அழுத்திவிட்டு காத்திருந்தாள்.
சிறிது நேரத்தில் அவன் எடுத்தான்… “ஏய்… எங்க இருக்க நீ…? ஸ்டேஜ்க்கு பக்கத்துலதானே உன்ன உக்கார சொல்லியிருந்தேன்.. எங்க போன நீ…?” என்று எரிச்சலுடன் கேட்டான்.
“ஜீவா… ஜீவா… ”
“சொல்லு…”
“ஐயோ ஜீவா… என்னால தாங்க முடியல… ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு ஜீவா… இந்த சந்தோஷத்த என்னால தாங்கவே முடியல ஜீவா… எவ்வளவு மெடல்… எவ்வளவு கைதட்டல்… எவ்வளவு பாராட்டு… எவ்வளவு பெருமை… எவ்வளவு சந்தோஷம்… எல்லாமே என்னோட ஜீவாவுக்கு… லவ் யு… லவ் யு சோ மச் ஜீவா… ஐ ரியல்லி லவ் யு ஜீவா…” உணர்ச்சியின் வேகத்தில் பொரிந்து கொட்டினாள் புனிதா.
அவளுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவனை எந்த அளவு பித்தனாக்கும் என்பது அவளுக்கு புரியவில்லை. ஜீவனை காதல்(!) மயக்கம் ஆட்கொண்டு அவன் இவ்வளவு நேரம் அனுபவித்த சந்தோஷத்தையும் பெருமையையும் துச்சமாக மாற்றிவிட்டது. அவளுடைய காதலுக்கும்… அவள் பேசும் வார்த்தைகளுக்கும் ஈடு இணை எதுவும் இல்லை என்று தோன்றியது அவனுக்கு.
விழா பாதி நடந்து கொண்டிருக்கிறது. அன்றைய விழாவின் நாயகனே அவன்தான் என்று மாறிவிட்டான். அப்படிபட்ட சூழ்நிலையில் விழாவை பாதியிலேயே விட்டுவிட்டு பைத்தியகாரன் போல் நண்பனிடம் பாத்ரூம் போவதாக சொல்லிவிட்டு அவளை தேடி ஓடினான்.
“பாத்ரூம் போறதுக்கு எதுக்குடா இதையெல்லாம் எடுத்துட்டு போற…?” என்று கேள்வி கேட்ட நண்பனை
“இப்ச்… பேசாம அங்க கவனிடா… நம்ம ஸ்கூல்க்குதான் இந்த வருஷம் கோப்பை கிடைக்கும். இவர் இன்னும் அரை மணி நேரம் பேசுவார் போலருக்கு. பேசி முடிச்ச உடனே கால் பண்ணு…” என்று அதட்டலாக பேசி அடக்கிவிட்டு மகளிர் விடுதிக்கு புனிதாவை தேடி ஓடினான்.
Comments are closed here.