Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

மயக்கும் மான்விழி-3

அத்தியாயம் – 3

ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி,

ஆறு கடந்தால் நீ யார்… நான் யார்?”

 

சிதம்பரத்தின் கறார் பேச்சு ருத்ரனைச் சீண்டிவிட்டது. அவன் நாலாங்கரைக்கு மேட்டுவயலிலிருந்து தண்ணீர் கொண்டு செல்வதற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராகிவிட்டான். அதற்கு முதற்கட்டமாகத் தன்னுடைய பெரிய தாத்தா பேரனும்… தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரனும்… நண்பனுமாகிய வைத்திலிங்கத்தைக் கைப்பேசியில் அழைத்தான்.

 

“ஹலோ… வைத்தி… எங்க இருக்க…?”

 

“டவுனுக்குப் போயிருந்தேன்… ஊருக்குத்தான் வந்துக்கிட்டு இருக்கேன்… ஆத்துப் பாலத்துகிட்ட வந்துட்டேன்…. என்ன விஷயம் ருத்ரா…?”

 

“சரி… நீ வீட்டுக்குப் போக வேண்டாம்… நேரா மேட்டு வயலுக்கு வந்துடு… அஞ்சு நிமிஷத்துல நானும் அங்க வந்துடுவேன். முக்கியமான விஷயம்…. லேட் பண்ணிடாத…”

 

“சரிப்பா… வண்டிய இப்புடியே மேட்டுவயப் பக்கம் திருப்பிடுறேன்…” அவனுடைய வண்டி ருத்ரனின் வயல்களில் ஒன்றான மேட்டுவயலை நோக்கிப் பறந்தது.

 

அடுத்தப் பத்தாவது நிமிடம் ருத்ரனின் முன் நின்ற வைத்திலிங்கம் அவன் சொன்ன விஷயத்தைத் தெளிவாகக் கேட்டுக் கொண்டான்.

 

“என்ன ருத்ரா இது… நீ கேட்டும் தண்ணிப் பாய வாய்க்கா குடுக்க மாட்டேன்னுட்டானுகளா…!”

 

ருத்ரன் பதில் சொல்லாமல் வெள்ளை வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு பனியனுடன் நின்றபடி… வரப்பில் நடப்பட்டிருந்த வாழைமரத்தில் காய்ந்துத் தொங்கிக் கொண்டிருந்த பட்டையைக் கத்தியை வைத்துக் கவனமாக நறுக்கிக் கொண்டிருந்தான்.

 

அவன் எதையோ யோசிக்கறான் என்று உணர்ந்த வைத்தி சிறிதுநேரம் அமைதியாக இருந்தான். பின் அவனே அமைதியைக் கலைத்துப் பேச ஆரம்பித்தான்.

 

“என்ன செய்யலாம்…?”

 

“அவனுங்க தானா என்னுகிட்ட வந்து மண்டியிடணும்டா வைத்தி…”

 

“எப்புடி…? அவனுங்கதான் புடிவாதமா இருக்கானுவளே…!”

 

“பிடிவாதத்தையெல்லாம் நொறுக்கிட வேண்டியதுதான்…”

 

“என்ன சொல்ற…?” வைத்திக் குழப்பத்துடன் கேட்டான்.

 

“வைத்தி… ஏற்கனவே அவனுவளுக்குள்ள பேசி முடிவுப் பண்ணின விஷயத்த இன்னைக்கு என்னுகிட்ட வந்து ஒப்பிச்சிட்டுப் போறானுவ… இந்தக் கூட்டுக் களவாணிப் பயலுவள தனித்தனியா அடிக்கணும்டா…”

 

“………………………”

 

“அவனுக நாலு பேர்ல என்னோட மொதோ குறி கலியபெருமாள் தான்… அவன் போன வருஷந்தானே அவனோட மேட்டுவயல வித்தான்…?”

 

“ஆமா… ஒரு பத்து ஏக்கர நாலு பேருக்கிட்ட தனித்தனியா வித்தான்… அதுக்கு என்ன இப்ப…?”

 

“பாட்டன் சம்பாரிச்ச பொதுச்சொத்த அண்ணனும் தம்பியும் பங்குப் பிரிச்சுகிட்டானுவ. பங்குப் பிரிச்சதுல தகராறு வந்து ரெண்டுபேரும் தனித்தனியா போயிட்டானுவ… அந்தக் கலவரத்துல பாகப்பிரிவினை பத்திரம் பதிஞ்ச மாதிரி எனக்குத் தெரியல…”

 

“பண்ணலன்னுதான் நெனக்கிறேன்…”

 

“அண்ணன் தம்பி சொத்துப் பிரச்சனைய வாய் வார்த்தையா முடிச்சுகிட்டவனுங்க எழுத்துல எதையும் உறுதிப்படுத்திக்கல. இந்த நெலமைல கலியபெருமாளு போன வருஷம் தன்னோட பங்கு நெலத்துல ஒரு பகுதிய வித்துருக்கான். இவன் வித்த நெலத்தப் பட்டா பண்ணும்போது வில்லங்கம் வராம இருக்கத் தம்பிய கூப்பிட்டுக் கையெழுத்துப் போட சொன்னானா…?”

 

“தெரியலையே…”

 

“சொல்லியிருக்க மாட்டான்… அவன் தம்பி மணிகிட்ட சொல்லி…. என்ன வந்து பாக்கச் சொல்லு…”

 

“ருத்ரா…!!!” வைத்தி ஆச்சர்யத்தில் விழி விரித்தான்.

 

ருத்ரன் முகத்தில் விஷமப் புன்னகையுடன் “ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?” என்றான்.

 

# # #

 

அன்று காலை கலியபெருமாள் வயலுக்குச் செல்வதற்கு முன் இரண்டு மூன்று ஆண்களின் கலவையான குரல் வாசலிலிருந்து ஒலித்தது…

 

“கலியா… ஏம்ப்பா கலியா…”

 

“வீட்டுல யாரு… வாங்க வெளிய…”

 

“யாரது…?” என்றபடி கலியபெருமாள் வாசலுக்கு வந்தார்.

 

வாசலில் நான்கு ஆட்கள் ஆளுக்கொரு சைக்கிளை கையில் பிடித்தபடி நின்று கொண்டிருந்தார்கள்.

 

“வாங்க… வாங்க சுந்தரம்… என்ன எல்லாரும் ஒன்னா வந்துருக்கிங்க…? என்ன சமாச்சாரம்…?” சாதரணமாகக் கேட்டபடி அவர்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார் கலியபெருமாள்.

 

“என்னப்பா இது…? உன்னோட நெலத்த வாங்கி ஒரு வருஷம் கூட நாங்க விவசாயம் பண்ணல… அதுக்குள்ள உன் தம்பி பிரச்னையைக் கொண்டு வந்துட்டானே…!” வருத்தத்துடன் சொன்னார் வந்தவர்களில் மூத்தவராக இருந்த சுந்தரம்.

 

“தம்பியா…! அவன் என்ன பிரச்சனை பண்ணுறான்…?”

 

“கோர்ட்டுல கேசு குடுத்துட்டானாம்… அரசாங்கம் நாங்க யாரும் வயல்ல இறங்கக் கூடாதுன்னு உத்தரவுப் போட்டுடுச்சாம்… கையில ஒரு பேப்பர வச்சுகிட்டு எங்களுகிட்ட தகராறு பண்ணுறான்… நீ வந்து என்னான்னுக் கேளு… காலையிலையே வந்துட்டான் எங்க வேலையக் கெடுக்க…” எரிச்சலுடன் படபடத்தார் சுந்தரம்.

 

“என்ன சொல்றிங்க… எனக்கு ஒன்னும் புரியலையே… என்னோட நெலத்த நீங்க காசு குடுத்து வாங்குனிங்க. அது இப்ப உங்களோட நெலம். அதுல உங்கள இறங்க வேண்டாமுன்னு சொல்ல அவனுக்கு என்ன ரைட்டு இருக்கு…?”

 

“அதை ஏன் எங்களுகிட்டக் கேக்குற… அங்க வந்து உன் தம்பிய கேளு… கெளம்பி வா…” என்று பிடிவாதமாக அவரைக் கிளப்பி வயலுக்கு அழைத்துச் சென்றார்கள்.

 

###

 

“ஏய்… என்னடா பிரச்சன… எதுக்கு இவங்கக்கிட்ட தகராறு பண்ணிக்கிட்டு இருக்க…?” வயலுக்கு வந்த கலியபெருமாள் தம்பியிடம் பாய்ந்தார்.

 

“இந்தா… சும்மா மெரட்டுற வேலையெல்லாம் வேண்டாம்… எனக்கும் இந்த நெலத்துல பங்கு இருக்கு… என்ன கேக்காம நீ எப்புடி இந்த நெலத்தையெல்லாம் விக்கலாம்…?”

 

“உன்ன கேக்கணுமா…! அடேய்… இது என்னோட பங்கு நெலம்டா… உனக்கும் இதே போல ஒரு பங்கு கீழக்கரப் பக்கம் இருக்கேடா… அப்பறம் எதுக்கு இப்ப பிரச்சனப் பண்ணுற…?”

 

“பங்கா… எந்தப் பங்கு…? எல்லா நெலமும் நம்ம ரெண்டு பேருக்கும் பொதுவானதுதான்… கீழக்கரப் பக்கத்துல இருக்க நெலத்துல நா வெவசாயம் பாக்குறேன்… இந்தப் பக்கம் இருக்கறத நீ வெவசாயம் பாக்குற… அவ்வளவுதான் எனக்குத் தெரியும்… நீ என்னடான்னா… எனக்குத் தெரியாம இவனுங்ககிட்ட நெலத்த வித்துருக்க…! அதான் கோர்ட்டுல கேசப் போட்டு ஸ்டே ஆர்டர் வாங்கிட்டேன். இனி கேஸ் முடியிற வரைக்கும் எவனும் நெலத்துல கால் வைக்க முடியாது… மீறினா உள்ள போக வேண்டியதுதான்…” அவரின் தம்பி பேசி முடிப்பதற்குள்…

 

“அடேய்… துரோகி… ” என்று தன் தம்பி மீது பாய்ந்து அவன் சட்டையைக் கொத்தாகப் பிடித்தார். அண்ணன் தம்பி இருவருக்கும் கைகலப்பானது. சுற்றியிருந்தவர்கள் அவர்களைச் சிரமப்பட்டுப் பிரித்துவிட்டார்கள்.

 

“என்ன கலியா நீ… இவனுகிட்ட எடுத்துச் சொல்லி எங்கப் பிரச்னைக்கு வழி சொல்லுவன்னு பாத்தா… நீயும் உன் தம்பிக்கு இணையா சண்டைக்குக் கெளம்பிட்டியே…”

 

“இவன ஒரு கை பாக்காம விட மாட்டேன் சுந்தரம்… விட மாட்டேன்… இவனுக்கு என்னோட மல்லுக்கு நிக்கிறதே பொழப்பாப் போச்சு… இதுக்கு ஒரு முடிவுக் கட்டியே ஆகணும்…”

 

“கட்டு… கட்டு… கட்டுற முடிவ சீக்கிரம் கட்டு… கல்லக் கொடில்லாம் காஞ்சு வந்துட்டு… ரெண்டு நாளைக்குள்ள கல்லக்கொடியப் புடுங்க ஆரம்பிக்கலன்னா எங்களுக்கு நட்டமாயிரும்… பாத்துக்க…” என்று சொல்லிவிட்டு சுந்தரோடு சேர்ந்து கலியபெருமாளிடம் நிலம் வாங்கியிருந்த மற்ற மூவரும் அங்கிருந்து நகர்ந்துவிட்டார்கள்.

 

கலியபெருமாள் ஆடிப் போய்விட்டார். இரண்டு நாட்களுக்குள் இந்தப் பிரச்சனயைத் தீர்த்தாக வேண்டும். இல்லையென்றால் இந்த நிலத்தை விவசாயம் செய்தவர்களுக்கு நட்டம் வந்து சேரும் என்பது உறுதி…

 

ஒரு நொடி கூடத் தாமதிக்காமல் வக்கீலைத் தேடி நகரத்திற்குச் சென்றார்.

 

“மிஸ்டர் கலியபெருமாள். நீங்க வித்திருக்க நிலம் உங்களுக்கும் உங்கள் தம்பிக்கும் பொதுவானது. அவருடைய கையெழுத்தில்லாமல் நீங்கள் அதை விற்றது தப்புத்தான்…”

 

“ஐயையோ… இல்ல சார்… அந்த நெலம் எனக்குப் பங்குப் பிரிச்சுக் குடுத்த நெலம் சார்… என்னோட நெலத்தத்தான் நான் வித்தேன்…”

 

“பங்கு பிரித்தபோது பங்குப் பத்திரம் எழுதி ரிஜிஸ்டர் பண்ணினிங்களா…?”

 

“இல்லையே… வாய் வார்த்தையாதான் பிரிச்சுகிட்டோம்… ”

 

“டாகுமென்ட் இல்லன்னா கோர்ட்ல எதுவும் செல்லாது சார்…”

 

“எங்க ஊர்ல எல்லாரும் இப்படித்தான் சார் பிரிச்சுக்குவாங்க. யாருக்கும் எந்தப் பிரச்சனையும் வந்ததில்ல… இவன்தான் சார் இப்படிப் புதுப் பூதத்தக் கெளப்பி இருக்கான்…”

 

“சரி… நீங்க ரெண்டுபேரும் பங்கு பிரித்துக் கொண்டதற்குச் சாட்சி இருக்கா…?”

 

“இருக்கு சார்… எங்க ஊர்ப் பெரியவங்கதான் பங்குப் பிரிச்சுவிட்டாங்க…”

 

“அப்படின்னா நீங்க அவங்கள வச்சே இந்தப் பிரச்னையை நேர் பண்ண பாருங்க. கோர்ட்ல ஒரு பெட்டிஷனப் போட்டு அறுவடைச் செய்ய அனுமதி வாங்க என்னால முடியும். ஆனா பிரச்சனை அத்தோட முடிஞ்சிடாது… இது சிவில் கேஸ்… வருஷக் கணக்குல இழுக்கும்… யோசனைப் பண்ணுங்க…”

 

வழக்கறிஞர் கலியபெருமாளுக்குச் சூழ்நிலையைத் தெளிவாகச் சொல்லிவிட்டார். அவர் சிந்தனையுடன் ஊர் வந்து சேர்ந்தார்.

 

இந்தப் பிரச்னையை எப்படிச் சரி செய்வது என்று அவருக்கு ஒரே குழப்பமாக இருந்தது. ஊர் பெரியவர்களிடம் நியாயம் கேட்கலாம் என்றால் ருத்ரனிடம் தான் செல்ல வேண்டும். ஒரு வாரத்திற்கு முன் நாலாங்கரைக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்காக அவன் வாய்க்கால் கேட்டப் போது, முகத்தில் அடித்தது போல் ‘முடியாது…’ என்று சொல்லிவிட்டு இப்போது எப்படி அவனிடம் பஞ்சாயத்திற்குப் போய் நிற்பது என்கிற தயக்கம் அவரை அவனிடம் செல்லவிடாமல் தடுத்தது.

 

நாளுக்கு நாள் பிரச்சனை அதிகமாகிக் கொண்டே இருந்தது. நிலம் வாங்கியவர்கள் அவரை ஒவ்வொரு நொடியும் இம்சை செய்து கொண்டே இருந்தார்கள். தம்பியைச் சமாதானம் செய்யலாம் என்றால் அவன் பழைய பகையை மனதில் வைத்துக் கொண்டு வஞ்சம் தீர்த்துக் கொள்வதிலேயே குறியாக இருக்கிறான். ருத்ரனைத் தவிர மற்ற ஊர் பெரியவர்களிடம் நியாயம் கேட்கச் சென்றால்… அனைவரும் சொல்லி வைத்தது போல் ருத்ரனிடம் ஒரு வார்த்தை சொல்லிவிடுமாறு அறிவுரை கூறுகிறார்கள். அது அந்த ஊரின் வழக்கம் என்பதால் அவரால் அதற்கு மேல் யாரையும் வற்புறுத்த முடியவில்லை. சட்டத்திலும் இந்தச் சிக்கலை அவருக்குச் சாதகமாகத் தீர்க்க வழியில்லை.

 

எல்லாக் கதவுகளும் அடைப்பட்டு விட்ட நிலையில் அவர் வேறு வழியின்றி ருத்ரனைத் தேடிச் சென்றார்.




Comments are closed here.

You cannot copy content of this page