உனக்குள் நான்-4
5663
1
அத்தியாயம் – 4
“தினம் ருசித்த நின்காதல் கிட்டாமல்
மனம் பசித்து வாடும் வேளை…
தன் வசமிழக்கும் மிருகமாய்
நான் மாறிப் போகிறேன்…!“
“எக்ஸ்கியூஸ் அஸ் சார்…” – இனிமையான குரலில், ஆசிரியர்கள் அறையில் அமர்ந்து அடுத்த வகுப்பிற்கான பாடக்குறிப்புகளைத் தயார் செய்து கொண்டிருந்த விரிவுரையாளர் வெங்கடேஷ் திரும்பிப் பார்த்தார். இரண்டு இளம்பெண்கள் வாசலில் நின்று கொண்டிருந்தார்கள்.
“கம் இன்…” கண்ணாடியைச் சரி செய்துகொண்டே அந்தப் பெண்களைப் பார்வையால் அளந்தபடி கூறினார்.
“தேங்க் யு சார்…” – உள்ளே வந்தார்கள்.
“என்ன வேணும்?”
“கார்முகிலன் சாரைப் பார்க்கணும்… இங்க இருப்பார்னு சொன்னாங்க….”
“ஓ… முகிலன் சாரைப் பார்க்கணுமா? அந்த மூணாவது டேபிள்ல இருக்காரு பாருங்க”
“தேங்க் யு சார்…” மறுபடியும் நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்கள்.
“குட் ஈவ்னிங் சார்…” இருவரும் சேர்ந்தார் போல் சொல்ல, கார்முகிலன் படித்துக் கொண்டிருந்த புத்தகத்திலிருந்து பார்வையை விலக்கி “ஈவ்னிங்…” என்றபடி நிமிர்ந்து பார்த்தான்.
“சார்… என் பேர் கலைவாணி. இவ ரேவதி. தர்மராஜ் சார் உங்களை வந்து பார்க்கச் சொன்னார்” குட்டையாக மெலிந்த மேனியுடன் பள்ளி மாணவி போல் தோற்றமளித்த பெண் பேசினாள்.
“ஓ… ஏ.ஆர்.எம் காலேஜ் மாணவிகளா..?” – ரேவதியைப் பார்த்துக் கேட்டான்.
“ஆமாம் சார்…” – கலைவாணி தான் பதில் சொன்னாள்.
“நீயும் ஃபைனல் இயர் படிக்கிறியாம்மா?” – கலைவாணியைப் பார்த்துச் சந்தேகமாகக் கேட்டான்.
அவள் தலையை ‘ஆம்…’ என்பது போல் ஆட்டிவிட்டு கெக்கபுக்கவென்று சிரித்தாள்.
அவளுடைய சிரிப்பொலி அந்த அறையிலிருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. திரும்பிப் பார்த்த அனைவருமே சிறு புன்னகையுடன் ‘எப்படிச் சிரிக்குது இந்தப் பொண்ணு…!’ என்று அவளை ஒரு நிமிடம் சுவாரஸ்யமாகப் பார்த்துவிட்டு பிறகு தங்களுடைய வேலையில் கவனமானார்கள்.
கார்முகிலன் கூட லேசாகப் புன்னகைத்தபடி தான் “ம்ம்ம்… உக்காருங்க” என்று அவர்களை அமரச் சொன்னான்.
“பரவால்ல இருக்கட்டும் சார்…” என்று சொல்ல நினைத்த ரேவதி வாயைத் திறப்பதற்குள், “நன்றி சார்” – என்று கூறியபடி கலைவாணி சட்டென்று அமர்ந்து கொண்டாள். தோழியை லேசாக முறைத்துவிட்டுக் கொஞ்சம் தயக்கத்துடன் ரேவதியும் அமர்ந்தாள்.
“கடைசி வருட ப்ராஜெக்ட் தானே?”
“ஆமாம் சார்”
“என்ன செய்யப் போறீங்கன்னு ஐடியா இருக்கா?”
“இருக்கு சார்” – கலைவாணி சொன்னாள்.
“எக்ஸ்ப்ளைன் பண்ண முடியுமா?”
“கண்டிப்பா சார்…” என்று பந்தாவாக முகிலனிடம் சொன்னவள் “ஏய்… சொல்லுடி…” என்று ரேவதியின் பக்கம் திரும்பி அவளைத் தூண்டினாள்.
தோழியின் பக்கம் திரும்பியிருந்த கலைவாணியின் முகத்துக்கு நேராகக் கையை நீட்டி… இரண்டு முறை சொடக்குப் போட்டான் கார்முகிலன்.
“ஹாங்…” என்கிற சத்தத்துடன் சட்டென்று திரும்பிப் பார்த்தாள்.
“நீ சொல்லு…” – அழுத்தமாகச் சொன்னான்.
“நானா…!”
“நீ தான்….”
ஓரிரு நொடிகள் கையைப் பிசைந்தபடி திருதிருவென்று விழித்தாள்.
‘நல்லா பேசவும், சிரிக்கவும் மட்டும் தான் தெரியும் போல…’ – அவன் எரிச்சலுடன் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே… அவள் தங்களுடைய ப்ராஜெக்ட் திட்டம் என்ன என்பதை விவரித்தாள்.
முதலில் சந்தேகத்துடன் துவங்கியவள் போகப்போக அவன் கண்களை நேருக்கு நேர் நோக்கி… ஒவ்வொரு வார்த்தையையும் தெளிவாக உச்சரித்து, அழகாக விளக்கி முடித்தாள். அந்தத் திட்டத்தில் சில எதிர்மறை புள்ளிகள் இருந்தாலும் அவற்றையும் கவனத்துடன் அவளே எடுத்து எடுத்துச் சொல்லி அவனை அசத்தினாள்.
“வெரி குட்… அருமையான யோசனை… யாருடைய ஐடியா..?” மகிழ்ச்சியோடு பாராட்டினான்.
“ரெண்டு பேருடயதும் பேரோடுதும் தான் சார்…” இருவருமே சேர்ந்தார் போல் சொன்னார்கள்.
“ஓகே…” என்றவன் கலைவாணியின் பக்கம் திரும்பி “இவ்வளவு அழகா பிளான் போட்டு வச்சுக்கிட்டு… அது என்ன… ஒண்ணும் தெரியாதது மாதிரி ரியாக்ஷன் கொடுக்கற?” – சிரித்துக்கொண்டே கேட்டான்.
“சார்… அது வந்து… எங்களோட பிளானை நீங்க கொஞ்சம் குழப்பிட்டீங்க சார்… அதான் நானும் குழம்பிட்டேன்…”
“நானா…! நான் என்ன குழப்பினேன்..?”
“உங்ககிட்ட… எங்களை இன்ட்ரோ பண்றது நான்… ப்ராஜெக்ட் எக்ஸ்ப்ளைன் பண்றது ரேவதின்னு பேசி வச்சிருந்தோம்… நீங்க திடீர்னு என்னை எக்ஸ்ப்ளைன் பண்ண சொல்லிட்டீங்களா… அதான் ஒரு நிமிஷம் அ…ப்படியே… லை…ட்டா ஷாக்காயிட்டேன்…” என்று அவள் லைட்டா வடிவேலுவை இமிடேட் செய்து பேசியதில்… அவன் ஷாக் ஆகிவிட்டான்.
கலைவாணியிடம் கபடமற்ற பேச்சோடு புத்திசாலித்தனமும் கூடவே இருந்ததால் கார்முகிலன் எனும் கண்டிப்பான ஆசிரியரைக் கூட அவளால் இளகவைக்க முடிந்தது.
அவன் புன்னகையுடனே சொன்னான், “நெக்ஸ்ட் வீக் ப்ராஜெக்ட் வொர்க் ஸ்டார்ட் பண்ணிடலாம்…” – மாணவிகள் இருவரும் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து புறப்பட்டதும், தர்மராஜைக் கைப்பேசியில் அழைத்தான்.
“சொல்லுடா முகிலா… என் பேத்தியும், கொள்ளு பேத்தியும் எப்படி இருக்காங்க..?”
“நான் போன் பண்ணினா… என்னை நல்லா இருக்கியான்னு கேக்கறதை விட்டுட்டு உங்க பேத்தியைத்தான் கேக்கணுமா?”
“உனக்கென்னடா… தடிப்பயலே… உன்கிட்ட மாட்டின என் பேத்தியை தான் நான் கேட்பேன்… எதுக்குக் கூப்பிட்ட சொல்லு…”
“நீங்க அனுப்பின ஸ்டூடண்ட்ஸ் வந்திருந்தாங்க”
“என்ன சொல்றாங்க… ப்ராஜெக்ட் பிளான் கேட்டியா? முடிச்சிடலாமா?”
“அருமையான பிளான் சார்… அந்தப் பொண்ணுங்களும் நல்லா பர்ஃபாம் பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன்…”
“ஆமாடா… நல்ல புத்திசாலி பொண்ணுங்க… நீ சரியா வழி நடத்தினா நிச்சயமா ப்ராஜெக்ட்டை முடிச்சிடுவாங்க…”
“ஓகே சார். அடுத்த வாரம் வொர்க் ஸ்டார்ட் பண்ணிடலாம்….”
“சரிடா… மதுவையும் குழந்தையையும் ஒரு தரம் வீட்டுக்குக் கூட்டிட்டு வா”
“ம்ம்ம்….”
“என்னடா இழுக்கற?”
“கூட்டிட்டு வர்றேன்…”
“எப்போ?”
“இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை”
“கட்டாயம் கூட்டிட்டு வர்ற”
“நிச்சயமா சார்…” என்று உறுதியளித்துவிட்டு கைப்பேசியை அணைத்தான்.
###
மாலை கல்லூரியிலிருந்து வீடு திரும்பிய கார்முகிலன், வண்டியை நிறுத்திவிட்டு ஒரு கையில் ஹெல்மெட்டும் மறு கையில் சில புத்தகங்களோடும் வந்து அழைப்புமணியை அழுத்தினான். மதுமதி குழந்தையோடு வந்து கதவைத் திறந்தாள்.
கையிலிருந்த ஹெல்மெட்டை மனைவியின் தலையில் மாட்டிவிட்டு வண்டி சாவிகொத்தைக் குழந்தையின் முகத்துக்கு நேராக ஆட்டிக்காட்டி “ஹேய்… பொம்முலுக்குட்டி… அஜுலுக்குட்டி… புஜிலுக்குட்டி…” என்று உற்சாகத்துடன் குரல் கொடுத்தான்.
தினமும் வண்டியை வாசலிலும், ஹெல்மெட்டை மனைவியின் தலையிலும் பார்க் செய்வது முகிலனுக்குப் பிடித்தமான விளையாட்டு. அவள் ஒரு கையில் குழந்தையைப் பிடித்துக்கொண்டே… மறுகையால் தன் தலையில் மாட்டியிருக்கும் ஹெல்மெட்டைக் கழட்ட முயன்றாள்.
மனைவியின் முயற்சியை ஓரக்கண்ணால் ரசித்தபடியே குழந்தைக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தான். தாயின் இடுப்பில் அமர்ந்திருந்த யாழினி, தந்தையிடம் இருக்கும் சாவிகொத்தைப் பிடுங்கும் வேகத்தில் அவனிடம் தாவியபடி “ங்குகூ…. ங்குகூ…. ப்ப்பூபூ… ங்கா…” என்று தேன்சிந்தும் மலர்போன்ற தன் சின்னஞ்சிறு செவ்விதழை, குருவி போல் திறந்து மூடி விதவிதமாக மழலை மொழி பேசினாள்.
அதில் மயங்கிப்போன முகிலன், கையிலிருந்த பொருட்களை ஒரு பக்கம் போட்டுவிட்டு… மகளைத் தூக்கி… அவள் வயிற்றில் தன் முகத்தைப் புதைத்து ‘கிச்சுகிச்சு’ மூட்டி சிரிக்கவைத்துத் தானும் சிரித்தான்.
குழந்தை சிரித்துக்கொண்டே தன் தந்தையின் முடியைப் பிடித்து ஆட்டியது. சுகமான வலியைச் சிரித்துக் கொண்டே அனுபவித்தவன், மனைவியின் பக்கம் திரும்பி “ஏய்… அட்டாக் பண்ண அடுத்த ரௌடியை ரெடி பண்ணிட்டியா..? கா…ப்…பாத்துடி…” என்று அவளையும் ஆட்டத்திற்குள் இழுத்தான்.
கணவனுடைய புத்தகங்கள் மற்றும் ஹெல்மெட்டை அதற்கான இடத்தில் வைத்துவிட்டு வந்த மதுமதி, “யாழி… அப்பாவ தொல்லை பண்ணாதடா…” என்று குழந்தையை அவனிடமிருந்து வாங்க முயன்றாள்.
அவள் தனக்குக் கிண்டலாக ஏதாவது பதில் கொடுப்பாள்… குழந்தையைத் தன்னோடு சேர்ந்து கொஞ்சுவாள் என்று எதிர்பார்த்த கார்முகிலனின் உற்சாகம் சர்ரென்று இறங்கிவிட… அலுப்போடு குழந்தையை அவள் கையில் கொடுத்துவிட்டு “ஏன்டி இப்படியிருக்க? இன்னும் எத்தனை நாளைக்குத்தான் என்னை இப்படிப் படுத்துவ?” என்றான்.
“இப்போ நான் என்ன பண்ணினேன்?”
“நீ எதுவுமே பண்ணல… நான் தான் எல்லாத்தையும் செஞ்சேன். அதுக்குத்தான் இப்போ அனுபவிக்கிறேன்… நடத்து… இன்னும் எத்தனை நாள் இதே மாதிரி இருப்பன்னு பார்க்கறேன்…” அவன் குரலிலிருந்த வருத்தம் மதுமதியின் கண்களைக் கலங்க செய்தன. அவளுடைய கண்ணீரைப் பார்க்க சகிக்காமல் உள்ளே சென்றுவிட்டான்.
அரை மணிநேரம் கழித்து ஷார்ட்ஸ்… டீ ஷர்டிற்கு மாறி மாடியிலிருந்து இறங்கி வந்தான் கார்முகிலன். குழந்தை ஹாலில் விரிக்கப்பட்டிருந்த படுக்கையில் அமர்ந்து விளையாட்டுச் சாமான்களை உருட்டிக் கொண்டிருந்தது. மதுமதி சோபாவில் அமர்ந்து டிவி திரையில் பார்வையைப் பதித்திருந்தாள்.
“எங்கே எனது கவிதை..?
கனவிலே எழுதி மடித்த கவிதை…” என்கிற பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, அதில் நடித்திருந்த நடிகையின் முகத்தில் இருந்த சோகத்தை விடப் பலமடங்கு அதிகமான சோகம் மதுமதியின் முகத்தில் படர்ந்திருந்தது.
ஜீவனற்ற கண்களோடு தொலைகாட்சிப் பெட்டியில் ஆழ்ந்திருக்கும் மனைவியின் முகத்தைப் பார்த்துக்கொண்டே அவளுக்கருகில் வந்து நெருக்கமாக அமர்ந்த முகிலன், டிவியின் சத்தத்தை முழுமையாக முடக்கிவிட்டு அவள் கரத்தைத் தன் கரங்களுக்குள் எடுத்தான்.
அவள் கணவனை நிமிர்ந்து பார்க்க, அவன் அவளுடைய கண்களை நேருக்கு நேர் பார்த்து “ஐ லவ் யு மதி…” என்றான். அவன் உயிரில் தோய்ந்து வெளிப்பட்ட குரல் குழைந்து கெஞ்சியது.
அவள் அவன் கண்களுக்குள் பார்த்தாள். ‘பாருடி… நல்லா பாரு… என் கண்ணுல பார்த்து என் மனச தெரிஞ்சுக்கோ…’ தவித்தான்.
சில நொடிகளுக்குக் கூட அவளால் அவன் பார்வையின் வீரியத்தைத் தாங்க முடியவில்லை. பார்வையை விலக்கிக் கொண்டு பதில் பேசாமல் அவனிடமிருந்து தன் கரத்தை உருவ முயன்றாள். அவனுடைய பிடி இறுகியது. அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவனுடைய முகப்பாவம் மாறியது.
ஒவ்வொரு முறையும் அவள் விலகி நிற்பதையும்… ஒட்டாமல் பேசுவதையும்… தன்னைச் சுற்றி அகழி அமைத்துக் கொண்டதையும் அமைதியாகப் பொறுத்துக் கொண்டவனால், அவனுடைய காதலை அவள் நேரடியாக அலட்சியப்படுத்துவதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
எதிர்பாராத நேரத்தில் பலமாக அடிபட்டால் கோபத்தோடு வலியை தாங்கும் ஒரு முகப்பாவம் தோன்றுமே… அதே முகப்பாவம் தான் இப்போது கார்முகிலனிடம் இருந்தது. அவனுடைய மனநிலையை மதுமதி புரிந்து கொண்டாள் தான்…
ஆனால் அவளால் அவன் சொல்லும் ‘காதல்’ என்னும் வார்த்தையை நம்பமுடியவில்லை. இப்படி ‘ஐ லவ் யு…. ஐ லவ் யு’ என்று ஆயிரம் முறை சொல்லிவிட்டுத் தானே கடைசியாக அவள் கழுத்தை அறுத்தான்.
‘மாமா’ என்கிற வார்த்தையையே சொல்லக்கூடாது என்று சொன்னானே…! ஒற்றைப் பைசா கையில் இல்லாமல் வயிற்றில் குழந்தையோடு வீட்டை விட்டுத் துரத்தினானே…! போலீசிடம் மாட்டிக்கொண்டு… பயந்து நடுங்கி அரை உயிராக போன் செய்த போது ‘கட்’ செய்தானே…! போலீஸ்… கோர்ட்… ஹாஸ்பிட்டல் என்று அலைந்து… அலுத்துக் கலைத்து… குற்றுயிராய்ப் போராடிக் கொண்டிருந்தவளைக் கடைசியாக விவாகரத்து மனு என்னும் வஜ்ராயுதத்தால் ஓங்கி அடித்துச் சாகடித்தானே…! எதை மறக்க முடியும்..? எப்படி மறக்க முடியும்..?
அவன் சொல்லும் ‘காதல்’ மனதில் கொஞ்சமாவது இருந்திருந்தால் இவற்றில் ஒன்றையாவது அவனால் செய்திருக்க முடியுமா..? அந்த நீலவேணி கெட்டவளாக இருந்தாலும் சொல்லிவிட்டுச் சென்றாளே…! ‘உன் மாமன் உன்னைக் காதலிக்கவே இல்லை… உன் அப்பாவைப் பழிவாங்க தான் திருமணம் செய்து கொண்டான்’ என்றாளே…! அவள் சொன்ன வார்த்தையை உண்மை என்று இவன் தானே நிரூபித்தான். அதை இந்த ஜென்மத்தில் மறக்க முடியுமா…!’ முடியவில்லை… அவளால் எதையுமே மறக்க முடியவில்லை… அழகூடச் சக்தியற்றுப் போய்விட்டது… கண்களும் மனமும் வறண்டுவிட்டது…
“ப்ளீஸ்… கையை விடுங்க…” – விரக்தியான குரல்.
அவனுடைய பிடி இளகியது. அவள் கையை உருவி கொண்டாள். அவள் அந்த இடத்திலிருந்து எழும் முன், அவன் அவள் மடியில் தலை சாய்த்துப் படுத்தான்.
“என்னதிது..?” – சிறு எரிச்சலுடன் கேட்டாள்.
அவள் கையை எடுத்துத் தன் தலையில் வைத்து “வலிக்குதுடி… கொஞ்சம் கோதிவிடு” – சோர்வான குரலில் சொன்னான். அவள் அசையாமல் அமர்ந்திருந்தாள்.
தலையை லேசாகத் தூக்கி அவள் முகம் பார்த்து “ப்ளீஸ்” என்றவனின் குரலிலேயே அவனுடைய தலைவலி தெரிந்தது.
விருப்பமே இல்லாமல் அவன் கேசத்தைக் கோதிவிட்டாள். அது அவனுக்குப் புரிந்தாலும், அவளுடைய வருடல் அவனுக்கு அந்த நேரத்தில் மிகவும் தேவையாக இருந்தது. முன்பெல்லாம் அவனுக்குத் தலைவலி வந்தால் தன் மடியில் படுக்க வைத்து… வெண்டைப் பிஞ்சையொத்த தன் பட்டுவிரலால் அவனுக்குத் தலைகோதி உறங்க வைப்பாள். ‘எத்தனை நாளாச்சு…!’ பழைய நினைவுகளில் இவருடைய மனமும் கலங்கியது. நேரம் கரைந்து கொண்டே இருக்க…
“டைமாச்சு… சாப்பிடலயா?” என்று மதுமதி கேட்டாள்
கண்களை மூடியிருந்தபடியே “பொம்மு குட்டி சாப்பிட்டாங்களா?” என்று பதில் கேள்வி கேட்டான்.
“ம்ம்ம்…”
“நீ..?”
“இன்னும் இல்ல”
மீண்டும் தலையை நிமிர்த்தி அவள் முகத்தைப் பார்த்து “எனக்காக வெயிட் பண்ணுனியா?” என்றான். ‘ஆமாமென்று பொய்யாவது சொல்லேன்…’ என்கிற எதிர்பார்ப்பு அவன் குரலில் நிறைந்திருந்தது.
“…………………” – அது அவளுக்குப் புரிந்தாலும், அவளால் பதில் சொல்ல முடியவில்லை.
“மதி….”
“ம்ம்ம்……”
“என்னை மன்னிக்கவே மாட்டியா?” – ஏக்கமாகக் கேட்டான்.
“எதுக்குப் பழசையே நெனச்சுக்கிட்டு இருக்கீங்க? இப்போ நாம வாழறது புது வாழ்க்கை… இதுல உங்களுக்கு என்ன குறை?”
“எனக்கு இந்த லைஃப் பிடிக்கல மதி… ரெண்டுபேரும் தனித்தனி தீவா இருக்கோம்… உன்னோட உணர்வுகளை எனக்குக் காட்ட மாட்டேங்கிற… என்னோட உணர்வுகளைப் புரிஞ்சுக்க மாட்டேங்கிற… என்னால முடியல மதி… ரொம்பக் கஷ்டமா இருக்கு…”
“போகப் போக எல்லாம் பழகிடும் விடுங்க…” – ஆறுதல் சொன்னாள்.
அவளுடைய ஆறுதல் வார்த்தைகள், அவன் மனதை இன்னும் காயப்படுத்தியது. வாழ்க்கை முழுக்க இப்படித்தான் இருக்கப் போகிறோம் என்று மறைமுகமாக அவள் சொல்வதைப் புரிந்து கொண்டவனுக்குத் துக்கம் பொங்கியது. அடுத்த நொடி ஆறுதல் தேடி மனைவியின் இடுப்பை இருகரம் கொண்டு வளைத்துக் கொண்டான்.
சிறிதுநேரம் பழைய நினைவுகளில் உழன்றபடி மதுமதி கணவனின் தலையைக் கோதிக் கொண்டிருக்க… அவன் இரவு உணவை மறந்துவிட்டு அவள் மடியிலேயே சுகமாக உறங்கிவிட்டான். அவளுக்கும் மனம் கனத்துப் போயிருந்தது.
அவள் அனுபவிக்க வேண்டிய துன்பங்களை எல்லாம் அனுபவித்து முடித்துவிட்டாள். இனி அவனை வருத்தி என்ன ஆகப்போகிறது. அதோடு அவன் துன்பப்படுவதையும் அவள் விரும்பவில்லை. அவனுடைய மகிழ்ச்சி அவளுக்கு நிம்மதியை தான் கொடுக்கும் என்றாலும்… அவனை மகிழ்விப்பதற்காக எதையும் பொய்யாகச் செய்ய முடியவில்லை.
குழந்தை போல் அவளை இறுக்கிப் பிடித்துக்கொண்டு உறங்குகிற கணவனின் முகத்தைப் பார்த்தாள். அவள் மனம் அவனுக்காக இரங்கியது… ‘எதுக்கு இப்படித் தவிக்கறீங்க..? இயல்பா இருக்க வேண்டியது தானே..?’ என்று கேட்டபடி அவன் தலையை அன்போடு கோதினாள். அவன்மீது தோன்றிய இரக்கத்தின் காரணமாக இனி ஓரளவு அனுசரணையாக நடந்துகொள்ள முயற்சிக்க வேண்டும் என்று நினைத்தாள்.
“அன்று ருசித்த நின் காதலால்
இன்றும் உனக்கடிமையாய் கிடக்குமென்
மனம் பசியில் வாடும் வேளை – எனை
மிருகமாக்கி வசமிழக்கச் செய்கிறது.…!”
“என்னைக் கட்டுப்படுத்தும் காதலெனும்
கடிவாளம் உன் கையில் இருக்க
மனமென் கட்டுப்பாட்டில் இல்லை
யென்றழுது பயனென்ன கண்மணி…!”
1 Comment
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
D Deepa D deepa says:
Nice epi