Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

vidivelli

Share Us On

[Sassy_Social_Share]

விடிவெள்ளி – 6

அத்தியாயம் – 6

புனிதாவை தேடி விடுதிக்கு வந்த ஜீவன் விடுதி வாசலிலிருந்து அவளை கைபேசியில் அழைத்தான்.

 

“சொல்லுங்க…”

 

“வெளிய வா…”

 

கட்டிலில் படுத்திருந்த புனிதா விருட்டென எழுந்து அமர்ந்தாள்

.

“எங்க இருக்கீங்க…?”

 

“லேடீஸ் ஹாஸ்ட்டல் வாசல்லதான் இருக்கேன்… எந்த ரூம் உன்னோடது…?”

 

“ஐயையோ… வெளிய போங்க முதல்ல… நான் இப்போ வர்றேன்…” என்று விழுந்தடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்து  யாரும் அவனை கவனித்துவிடக் கூடாது என்பதற்காக அவசரமாக பள்ளி வளாகத்திற்கு தள்ளிக் கொண்டு வந்தாள்.

 

“என்ன ஜீவா இப்படி பண்ணிட்டிங்க…? யாராவது பார்த்திருந்தா என்ன ஆயிருக்கும்…?”

 

“இப்ச்… அதை விடு… நீ போன்ல என்னவோ சொன்னியே… அதை இப்போ சொல்லு…” என்றான் ஆசையாக.

 

“இதை கேட்கத்தான் இப்ப வந்திங்களா…?”

 

“இதைவிட வாழ்க்கையில் வேறு எதுவும் எனக்கு முக்கியம் இல்ல… நீ சொல்லு முதல்ல…” என்றான்.

 

அவள் சிறிது பயத்துடன் தயங்கிக் கொண்டே சொன்னாள் “ஐ… லவ் யு ஜீவா…

அவன் உணர்ச்சிவசப்பட்டு அவளுடைய கையை பிடித்து முகத்தில் வைத்துக் கொண்டு சொன்னான்.

 

“லவ் யு டூ பம்கின்… நீ என்னை விட்டு எப்பவும் பிரியவே கூடாது… நீதான் எனக்கு எல்லாமே… நீ இல்லாம என்னால இருக்கவே முடியாது…”

 

“கண்டிப்பா உங்களை விட்டு நான் பிரியவே மாட்டேன்… இனிமே நீங்களும் நானும் ஒன்னுதான்… கவலைப்படாதிங்க….” என்று அவனுக்கு உறுதி கொடுத்தாள்.

 

பிறகு அவன் பேன்ட் பக்கெட்டில் வைத்திருந்த அத்தனை பதக்கங்களையும் எடுத்து அவளுடைய கழுத்தில் மாட்டிவிட்டான். இது எல்லாமே உனக்குத்தான்… என்னோட எல்லா வெற்றியும் உன்னைத்தான் சேரும்…” என்றான்.

 

அவள் புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்டாள். அந்த நேரம் அவன் பயன்படுத்திக் கொண்டிருந்த கைபேசி அழைத்தது.

 

“சரி மச்சான்… இபோ வர்றேன்…” என்று சொல்லி போனை வைத்துவிட்டு “சரி வா… விழாவுல அடுத்து எங்க ஸ்கூல் கப் வாங்கும். நான் அங்க இருக்கணும்…” என்று சொல்லி அவளையும் அழைத்தான்.

 

அவள் கழுத்தில் இருந்த பதக்கங்களை கழட்டி அவனிடம் கொடுத்துவிட்டு அவனோடு சேர்ந்து விழாவிற்கு சென்றாள். விழாவில் கூடியிருந்த ஏகப்பட்ட கண்கள் அவர்கள் இருவரையும் கவனித்தன. அது அவர்கள் இருவருக்குமே பெருமையாக இருந்தது.

 

அந்த ஆண்டு வெற்றிக் கோப்பையை ஜீவனின் பள்ளி தட்டி சென்றது. அதில் பெரும் பங்கு ஜீவனுடையது என்பதால் பீடி வாத்தியார் அவனுடன் சமாதானம் ஆகிவிட்டார். அதனால் பின் வரும் காலங்களில் அவன் செய்யும் தவறுகளை அவர் கண்டும் காணாமல் விட்டுவிட்டார். அவன் எல்லை மீறும் போது ஒரு நண்பனை போல் பாவித்து புத்தி மட்டும் சொல்லுவார். ஆனால் அதை கேட்டு நடக்கும் மனநிலையில் அப்போது அவன் இருக்கவில்லை.

 

ஏழு நாட்களுக்கு முன் நீ யாரோ… நான் யாரோ… என்று தனித்தனியாக கோயம்புத்தூர் வந்த இருவர்…       அந்த ஏழு நாட்கள் முடிந்து ஊர் திரும்பும் பொழுது ஈருடல் ஓருயிராக மாறியிருந்தார்கள். கண்ணீருடன் ஜீவனிடம் பிரியாவிடை பெற்று தன் பள்ளி பேருந்தில் மாலை மூன்று மணிக்கு ஏறினாள் புனிதா. அவளுக்கு துணையாக தன்னுடைய கைபேசியை அவளுடனே அனுப்பி வைத்த ஜீவன் ஆறு மணிக்கு தன் பள்ளி பேருந்தில் புறப்பட்டு ஊர் திரும்பினான்.

 

# # #

புனிதாவிடம் தன்னுடைய கைபேசியை கொடுத்துவிட்டு தொலைந்துவிட்டது என்று தாயிடம் பொய் சொல்லி பிடிவாதம் பிடித்து புது கைபேசி ஒன்றை வாங்கிவிட்டான் ஜீவன். அலைபேசியின் உதவியுடன் அவர்களுடைய காதல் விருட்சமாக வளர்ந்து கொண்டிருந்தது.

 

காதல் பார்வை… குறும்பு பேச்சு… செல்ல சண்டை… சின்ன சீண்டல்… உரிமை உணர்வு… பரிசுகள் பரிமாற்றம்… கொஞ்சம் அழுகை… நிறைய சிரிப்பு… கொஞ்சம் பயம்… நிறைய உற்சாகம் என்று உணர்வுகளின் குவியலாக இருந்தது அவர்களுடைய இளம் வயது காதல். காலம் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தது. ஆறுமாத காலம் நொடி போல் மறைந்துவிட இருவரும் பொது தேர்வு முடிவுக்காக காத்திருந்தார்கள்.

 

ஒரு மாத இடைவெளியில் இருவருக்கும் முடிவுகள் தெரிந்துவிட்டது. புனிதாவிற்கு எதிர்பார்த்த அளவு மதிப்பெண் கிடைக்கவில்லை. ஆனால் ஓரளவு சொல்லிக்கொள்ளும் அளவில் மதிப்பெண் பெற்றிருந்தாள். ஜீவன் அந்த அளவில் கூட தப்பவில்லை. கணிதத்தில் மட்டமான மதிப்பெண்ணை வாங்கி தேர்வில் தோல்வியடைந்தான்.

 

அவனுடைய தோல்விக்காக அவனைவிட புனிதாதான் அதிகமாக வருந்தினாள்… அழுதாள்… அவனுடைய அலட்சியமான போக்கை கண்டித்தாள். சண்டை போட்டாள். பிறகு அவளே சமாதானமாகி அவனுக்கு ஆறுதல் சொன்னாள். தைரியம் சொன்னாள். ஊக்கம் கொடுத்து இரண்டு மாதத்தில் வரும் உடனடி மறுதேர்வை பயன்படுத்திக் கொள்ள சொன்னாள்.

 

அவளுடைய ஒவ்வொரு வார்த்தையிலும் கண்ணீரிலும் அவன் மீதான அக்கறை இருந்ததை உணர்ந்த ஜீவன் கருத்தாக படித்தான். இரண்டு மாதத்தில் மீண்டும் தேர்வை சந்தித்தான். அவன் எதிர்பார்த்தபடி வினாத்தாள் வரவில்லை… மீண்டும் தோல்வியை சந்தித்தான்.

 

“ஜீவா… என்ன ஜீவா ஆச்சு உங்களுக்கு… நீங்க டென்த்ல நானுற்றி  இருபது மார்க்குன்னு சொன்னிங்களே… என்கிட்ட பொய் சொன்னிங்களா…?” புனிதா சந்தேகமாக கேட்டாள்.

 

“இங்க பாரு புனிதா… என்கிட்ட இது மாதிரி பேசாதன்னு ஆயிரம் முறை சொல்லிட்டேன். கேட்கவே மாட்டியா…? உன்கிட்ட பொய் சொல்லி நான் என்னத்த சாதிக்க போறேன். வேணுன்னா நாளைக்கு மார்க் ஷீட்டை கொண்டு வர்றேன்… நீயே பார்த்துக்கோ…” என்றான் எரிச்சலுடன்.

 

 

கோபப்படும் பொழுது மட்டும் புனிதா என்று அழைப்பான். மற்றபடி இன்றும் அவள் அவனுக்கு பம்கின்தான்…

 

“அப்புறம் எப்படி ஜீவா இந்த தடவையும் ஃபெயில் ஆனிங்க…?”

 

“எப்படியோ ஆயிட்டேன்… அதை ஆராய்ச்சி பண்ணி இப்போ நீ என்ன செய்ய போற…? விட்டு தொலை…” என்றான் எரிச்சலுடன்.

 

“அது எப்படி விட முடியும்…? ஒழுங்கா படிக்காம எப்ப பார்த்தாலும் ஆட்டோ ஸ்டாண்ட்லையே குடியிருந்தா எப்படி பாஸ் பண்ண முடியும்?” என்று எகிறினாள்.

 

இதே கேள்வியை எட்டு மாதத்திற்கு முன் கேட்டிருந்தாள் என்றால் ஒருவேளை அவன் உருப்பட்டிருப்பான். ஆனால் அப்போது தனக்காக ஒருவன் சாலையோரம் காத்துக் கிடக்கிறான் என்கிற இன்பத்தை ரசித்து மகிழ்ந்துவிட்டு… அவனுடைய ஒழுங்கீன செயலை கண்டிக்காமல் விட்டுவிட்டு… இப்போது எகிறி என்ன செய்வது…?

 

அதே எண்ணம்தான் அவனுக்கும் தோன்றியதோ என்னவோ… அவனும் கோபம் மிகுந்த குரலில் கத்தினான்…

 

“உன்ன பார்க்கதானேடி அங்க வந்து தொலைச்சேன்… அது மறந்து போச்சா…?”

 

“ஓஹோ… அப்படின்னா என்னாலதான் ஃபெயிலானிங்களா…? எம்மேலையே பழிய தூக்கி போடுங்க…” என்று அழ ஆரம்பித்துவிட்டாள் புனிதா.

 

“ஐயோ… பம்கின்… அழுகையை நிறுத்து முதல்ல… நானே நொந்து போயிருக்கேன்… அடுத்த வருஷம் எப்படியாவது பாஸ் பண்ணிடறேன்… இப்ப முடிஞ்சா நீ கொஞ்ச நேரம் நல்லா பேசி என்னை ரிலாக்ஸ் பண்ணு… இல்லன்னா போனை வையி…” என்று அலுப்புடன் சொன்னான்.

 

உடனே அவள் தன்னை தேற்றிக் கொண்டு அவனுக்கு ஆறுதல் சொன்னாள். இப்படியே அவர்களுடைய சண்டையும் சமாதானமும் தொடர்ந்து கொண்டிருந்தது. ஜீவன் பரிட்சையில் கோட்டைவிட்ட பயத்தில் புனிதா படிப்பில் அதிக கவனம் செலுத்தினாள். நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.

 

# # #

ஊரில் உள்ள தெய்வங்களுக்கு எல்லாம் அர்ச்சனை செய்துவிட்டு ஜீவனின் தேர்வு முடிவுக்காக காத்திருந்தாள் புனிதா… ஜீவன் தேர்வு முடிவுக்கு பயந்தானோ இல்லையோ… அங்கு நகத்தை கடித்தபடி அமர்ந்திருக்கும் புனிதாவை நினைத்து நடுங்கி போய் அமர்ந்திருந்தான்.

 

“தம்பி உங்க நம்பர் என்னப்பா…?” ப்ரௌசிங் சென்ட் நடத்தும் நபர் கேட்டார்.

 

அவனை முந்திக் கொண்டு புனிதா பதில் சொன்னாள். அவர் கம்ப்யூட்டரில் போட்டு பார்த்துவிட்டு “ஐயையோ… அஞ்சு மார்க்ல போயிட்டே தம்பி…” என்றார்.

 

புனிதாவின் தலையில் இடி விழுந்தது. அவள் எதுவும் பேசாமல் அந்த கட்டிடத்தைவிட்டு வெளியே வந்தாள். தனக்கு இன்று என்னவிதமான மண்டகப்படி கிடைக்கப் போகிறதோ என்கிற பீதியில் அவன் அவளை பின்தொடர்ந்து வந்தான்.

 

சைக்கிள் ஸ்டாண்டில் யாரிடமோ சொல்வது போல் “விசாலாட்சி அம்மன் கோவிலுக்கு வாங்க…” என்று சொல்லிவிட்டு அவளுடைய சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டாள்.

 

பலி ஆடு போல் இவனும் அவள் சொன்ன கோவிலுக்கு சென்றான். இவன் கோவிலை அடையும் பொழுது கணபதி சந்நிதானத்தில் அமர்ந்திருந்தாள் புனிதா…

 

ஜீவன் அவளை நெருங்கியதும் கணபதியை வணங்கிவிட்டு விசாலாட்சி அம்மனிடம் அழைத்து சென்று “அம்மா… தாயே… இவனுக்கு எப்படியாவது படிப்பை கொடும்மா…” என்று மனமுருக வேண்டினாள். பின் அம்மன் குங்குமத்தை எடுத்து அவன் நெற்றியில் இட்டுவிட்டாள்.

 

‘இவையெல்லாம்  பலியாட்டுக்கு நடக்கும் மாலை மரியாதை போலத்தான்…’ என்று நினைத்துக் கொண்டிருந்தவனிடம்

 

“வெளியே போயி பேசலாம் வாங்க…” என்று சொல்லி சன்னிதானத்திலிருந்து வெளியே அழைத்துக் கொண்டு வந்து ஒரு மறைவான இடமாக பார்த்து அமர்ந்தாள்.

 

“என்ன ஜீவா… ஒரு வருஷம் முழுக்க ஒரே ஒரு பேப்பர் படிச்சு பாஸ் பண்ண முடியலையா உங்களுக்கு… உண்மையிலேயே உங்களால படிக்க முடியலையா…? அது எப்படி ஜீவா…? டென்த்ல நல்ல மார்க் வாங்கின உங்களால இப்ப மட்டும் எப்படி படிக்க முடியாம போச்சு…?” என்று ஆற்றாமையுடன் கேட்டாள்.

 

“அதெல்லாம் ஒன்னும் இல்ல… எப்படியோ இந்த தடவ தப்பா போச்சு… இந்த வருஷம் கண்டிப்பா நல்லா படிச்சு பாஸ் பண்ணிடறேன்…” என்று சமாதானம் சொன்னான்.

 

“இந்த வருஷம் நானும் பன்னிரெண்டாம் வகுப்புதானே… நாம ரெண்டு பேரும் டைம் டேபிள் போட்டு படிப்போம். நான் என்றைக்கு என்ன பாடம் படிக்கிறேனோ அன்றைக்கு நீங்களும் அதை முடிச்சுடனும்… மாத மாதம் டியூஷன் சார்கிட்ட சொல்லி மன்த்லி டெஸ்ட் வைக்க சொல்லுங்க. அந்த பேப்பர்ல நீங்க என்ன மார்க் வாங்கரீங்கன்னு எனக்கு சொல்லணும். செய்வீங்களா…?” என்றாள்.

 

“கண்டிப்பா செய்றேன்…” என்று வாக்குக் கொடுத்தான்.

 

“சரி வாங்க கிளம்பலாம்…”

 

“பம்கின்… என்மேல கோபம் இல்லையே…” என்றான் வருத்தத்துடன்.

 

அவள் சோக சிரிப்புடன் சொன்னாள்… “கோபப்பட்டு என்னத்த சாதிக்க போறேன்… வாங்க போகலாம்…”

 

கனத்த மனதுடன் அன்று இருவரும் விடைபெற்றார்கள்.

 




Comments are closed here.

You cannot copy content of this page