மயக்கும் மான்விழி-4
7420
1
அத்தியாயம் – 4
“கணக்கன் கணக்கறிவான் தன் கணக்கைத் தான் அறியான்“
தன் பிரச்னையைச் சுமூகமாகத் தீர்த்து வைக்க வேண்டி ருத்ரனைத் தேடி அவனுடைய வீட்டிற்கு வந்த கலியபெருமாளுக்கு அவன் மேட்டுவயலுக்குச் சென்றிருப்பதாகத் தகவல் கிடைத்தது.
அவனைத் தேடி அங்குச் சென்றார். அங்கே, அவன் தோப்பில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. தோப்பிற்குச் சென்று பார்த்தார். அவன் சோலையூரை அடுத்துள்ள டவுனிற்குச் சென்றிருப்பதாகவும் மாலை மூன்று மணிக்குத் தான் மீண்டும் வருவான் என்றும் அறிந்துகொண்டு வீட்டிற்குச் சென்றார்.
ஊரெல்லாம் ருத்ரனைத் தேடியலைந்து களைத்து வீட்டிற்குச் சென்று தாகத்தைத் தணிக்க மனைவியின் கையால் ஒரு சொம்பு நீர்மோரை நிம்மதியாக அருந்துவதற்குள், நிலத்தை வாங்கியவர்கள் வீட்டுவாசலில் வந்து நின்றார்கள். அவர்களுக்குக் கும்பிடுப் போட்டுப் பதில் சொல்லி அனுப்பிவிட்டு, எப்போதடா மாலை மூன்று மணியாகும் என்று கடிகாரத்தைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்து, சரியாக இரண்டே முக்காலுக்கெல்லாம் ருத்ரனின் தோப்பிற்குக் கிளம்பிவிட்டார்.
“மாப்ள… எங்க இன்னும் அவரக் காணும்…?” என்று ருத்ரனின் அண்ணன் பீமனிடம் கேட்டார்.
“பொறுமையா இருங்க மாமா… தம்பி சரியா மூணு மணிக்கு வந்திடும்…” பீமன் அவருக்குச் சமாதானம் சொன்னான்.
தோப்பு வீட்டுச் சுவற்று ஆணியில் மாட்டியிருந்த பீமனின் வெள்ளை சட்டையின் பாக்கெட்டிலிருந்து அவனுடைய கைப்பேசி அழைத்தது. நாடாக் கட்டிலிலிருந்து எழுந்துச் சென்று கைப்பேசியை எடுத்துப் பார்த்தான்.
“தம்பி தான் மாமா…” என்று சொல்லியபடி கைப்பேசியைக் காதில் வைத்துப் பேசினான்.
“சரி தம்பி…”
“………………..”
“சரிப்பா…”
“………………..”
“சரி… சரி…”
“………………..”
“ம்ம்ம்…. சரி… வச்சிர்றேன்…” என்று பேச்சை முடித்துட்டு கலியபெருமாளின் பக்கம் திரும்பிச் சொன்னான்…
“மாமா… தம்பி வீட்டுக்குப் போயிட்டு… நீங்க அங்க போய்ப் பாருங்க…” என்று சொல்லி தன் வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.
ருத்ரன் தன்னை வேண்டுமென்றே அங்குமிங்கும் அலைய விடுகிறான் என்கிற உண்மை புரியாமல் வெள்ளந்தியாக முதல்தெருவில் இருக்கும் ருத்ரனின் வீட்டிற்கு விரைந்தார் அவர்.
# # #
வீட்டிற்கு வந்த கலியபெருமாளை இன்முகமாக வரவேற்று… நலம் விசாரித்து… டீ கொடுத்து உபசரித்து… பதட்டம் குறைந்து அவர் நிதானத்திற்கு வந்த பிறகு,
“சொல்லுங்க மாமா… காலையிலேருந்து என்ன வெரட்டிக்கிட்டே இருக்கிங்களாமே… என்ன விஷயம்…?” என்று விசாரணையை ஆரம்பித்தான் ருத்ரன்.
அவர் தன்னுடைய பிரச்சனையை விலாவாரியாக அவனிடம் சொன்னார்.
“இதுதான் மாப்ள இப்ப பிரச்சன… ஒரு மழை வந்தா கல்லக்கொடியெல்லாம் நாசமாப் போயிரும்… நீங்க தான் தலையிட்டு இந்தப் பிரச்சனைய தீக்கணும்…”
அவன் அவருக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் தாடையைத் தடவி… தலையைக் கோதி… எழுந்து அதே அறையில் குறுக்கும் நெடுக்குமாக இரண்டுமுறை நடந்து… எதையோ சிந்தனைச் செய்துவிட்டுக் கடைசியாகச் சொன்னான்…
“உங்க பிரச்சனயை நான் தீர்த்து வச்சா நான் கேக்கறத நீங்க கொடுக்கணும்…”
அவருக்குப் பகீர் என்று ஆனது. நியாயம் தீர்த்து வைப்பதற்கு இது போல் பேரம் பேசும் வழக்கம் அந்த ஊரில் இல்லவே இல்லை… ருத்ரனுடைய இந்தப் புதுவிதப் பேச்சு அவரைக் கலவரப்படுத்தியது.
“என்ன மாப்ள…? என்ன கேக்கப் போறீங்க…?” அவர் குரலே எழும்பாமல் கேட்டார்.
“உங்களோட நாலாங்கர வயல எனக்குப் பத்திரம் பண்ணிக் குடுங்க…”
“என்னது…!!!” அவர் அதிர்ந்து எழுந்தார்.
“எதுக்கு இவ்வளவு அதிர்ச்சி…? நீங்க எனக்குச் சும்மா ஒன்னும் குடுக்க வேண்டாம்… நெலத்துக்கு உண்டான பணத்த வாங்கிக்கங்க… இல்லன்னா உங்க வயலுக்கு ஈடா என்னோட நெலத்துல மேட்டுவய பக்கமா எழுதித் தர்றேன்…”
“என்ன மாப்ள… இப்புடியெல்லாம் பேசுறிங்க… இதெல்லாம் உங்களுக்கே நல்லா இருக்கா… உங்க தரத்துக்கு நீங்க இப்புடியெல்லாம் பேசக் கூடாது மாப்ள…”
அவன் அவரைப் பார்த்து ஒரு சிரிப்புச் சிரித்தான். அந்தச் சிரிப்பில் இருந்த கேலி அவருக்குச் சந்தேகத்தை எழுப்பியது…
“மாப்ள… நீ…ங்க… நீங்க எதுவும் என் தம்பிக்கிட்ட…” அவர் முடிக்க முடியாமல் தடுமாறினார்.
அவன் அவருடைய தடுமாற்றத்தை நிதானமாக உள்வாங்கிக் கொண்டு அவருடைய கண்களை நேருக்குநேர் பார்த்து… “ஆமா… உங்க தம்பி தானா எதையும் செய்யல… நான் தான் செய்ய வச்சேன்…” என்றான்.
அவர் அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து பட்டென்று எழுந்தார்.
“நீங்க இவ்வளவு இறங்குவிங்கன்னு நான் நெனக்கல…” என்றார் கோபத்தை அடக்கியபடி.
“வேற என்ன செய்யணுங்கறிங்க… உங்ககிட்ட வந்து கெஞ்சிக்கிட்டு நிக்கணுமா…? நடக்காது…” என்று உக்கிரமாகச் சொன்னவன்… அடுத்த நொடியே அமைதியாக “சரி… எப்ப பத்தரப் பதிவு வச்சிக்கலாம்..” என்றான் எதுவுமே நடக்காதது போல்.
“தர மாட்டேன்… என்னோட நெலத்த நான் யாருக்கும் குடுக்க மாட்டேன்…” என்று அவருடைய மனம் அலறினாலும்… வெளியே தன்னை அமைதியாகக் காட்டிக் கொண்டு
“நான் நெலத்த எழுதிக் குடுக்கலன்னா என்ன செய்விங்க…?” என்றார் நிதானமாக.
“உங்க தம்பி உங்க மேல போட்டிருக்க கேஸ் ஒரே மாசத்துல முடியிறதுக்கு என்ன செய்யணுமோ அதச் செய்வேன். கோர்ட் மூலம் உங்களுக்கு மறுபடியும் பங்குப் பிரிக்கும் போது… எனக்குத் தேவையான நெலம் உங்க தம்பி பக்கம் போற மாதிரி பாத்துக்குவேன்… அப்பறம் அவருகிட்டேருந்து என் கைக்கு மாத்திக்கிறது ஒன்னும் சிரமமா இருக்காதுன்னு உங்களுக்கே தெரியும்…” என்று அவருக்கு செக் வைத்தான்.
தன்னை எந்தப் பக்கமும் நழுவ விடாமல் கார்னர் பண்ணிவிட்டான் என்பதைப் புரிந்து கொண்டவர் வீம்பு பிடிக்காமல்
“நாளைக்கே பத்திரப் பதிவ வச்சுக்கலாம்… வயல்ல அறுவடைச் செய்ய உடனே ஆரம்பிக்கணும். அவனுகிட்டச் சொல்லிப் பிரச்சனை எதுவும் பண்ண வேண்டாமுன்னு சொல்லிடுங்க…” என்று சொல்லிவிட்டு பாரமான மனதுடன் வீடு வந்து சேர்ந்தார்.
# # #
கலியபெருமாள் தன்னுடைய நிலத்தை ருத்ரனுக்குப் பத்திரம் செய்து கொடுத்துவிட்டு அதற்கு ஈடாக அவனிடமிருந்து பணம் வாங்கிக் கொண்டார். இது நடந்த இரண்டாவது நாள் பழையபடி சிதம்பரத்தின் தென்னந்தோப்பில் பங்காளிகள் நால்வரும் கூடினார்கள்.
“நீ இப்புடி செய்வன்னு நா நெனக்கவே இல்ல கலியா… எங்களையெல்லாம் ஏமாத்திப்புட்டப்பா…”
“இல்ல பங்காளி… எனக்கு வேறவழி இல்ல… எல்லாப் பக்கமும் மடக்கிப்புட்டான். எப்புடியும் என்னோட நெலத்த என்கிட்டேருந்து பறிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டான். அவனுகிட்ட போராடுறதுக்குத் தெம்பில்லன்னு தெரிஞ்சுடுச்சுன்னா வெலகிட வேண்டியது தான்… அதத்தான் நான் செஞ்சேன்…”
“ஒன்னுகிட்டேருந்து நெலத்த வாங்கிட்டாப் போதுமா… நாங்க மூணுபேரும் சம்மதிக்கலைன்னா நாலாங்கரைக்குத் தண்ணிப் பாயாது… பாத்தர்றேன்… நானா அவனான்னு…” சிதம்பரம் சூளுரைத்தார்.
“பங்காளி… சொல்லுறேன்னு தப்பா நெனக்காதிங்க… அவனோட சூது… மந்திரமெல்லாம் சுட்டுப் போட்டாலும் நமக்கு வராது… பேசாம தண்ணி விடுறேன்னு சொல்லிட்டு உங்க நெலத்தக் காப்பாத்திக்கங்க… இல்லன்னா ஒரேடியா உங்களுவ நெலத்தையும் புடிங்கிடுவான். எனக்காவது பணத்தக் குடுத்து செட்டில் பண்ணினான். உங்களுக்கெல்லாம் அதையும் குடுக்க மாட்டேனுட்டான்னா ஒன்னும் செய்ய முடியாது… சொல்லிப்புட்டேன்…”
“யோவ்… என்னய்யா பூச்சாண்டிக் காட்டுற… அவன் உன் நெலத்த வாங்கினானா… இல்ல உன்னையே வாங்கிட்டானா… வந்துட்டான் ஞாயம் பேச… உன்னோட நெலத்தப் புடுங்குன மாதிரி எங்ககிட்ட வாலாட்ட முடியாது… எங்கப் பிரச்சனைய நாங்க பாத்துக்குறோம்… நீ கெளம்பு…” சிதம்பரம் கோபமாகப் பேச… மற்ற இருவரும் கோபத்தை வார்த்தைகளில் காட்டாமல் முகத்தில் காட்டியபடி அமர்ந்திருக்க… ‘உங்க விதிய யாரால மாத்த முடியும்… அனுபவிங்க…’ என்று சொல்லாமல் சொல்லிவிட்டு கலியபெருமாள் அங்கிருந்துச் சென்றார்.
அதன்பிறகு மீதமிருந்த பங்காளிகள் மூவரும் என்ன பிரச்சனை வந்தாலும்… மிரட்டல் வந்தாலும்… தங்களுடைய நிலத்தை ருத்ரனுக்குக் கொடுக்கக் கூடாது என்கிற உறுதியை எடுத்துக் கொண்டார்கள்.
இவர்கள் மூவரும் இங்குச் சபதமெடுத்துக் கொண்டிருக்கையில், அவர்களில் ஒருவரான நாராயணமூர்த்திக்கு ஆப்பை தயார் செய்துவிட்டான் ருத்ரன்.
###
நாராயணமூர்த்திக்கு மற்றப் பங்காளிகளைப் போல் நிலம் அதிகம் கிடையாது. ஆனால் மனைவியின் விருப்பப்படி மாளிகை போல் வீட்டை இழைத்து வைத்திருந்தார். அந்த வீட்டிலும், வீட்டைச் சுற்றி உள்ள தோட்டத்திலும் தான், அவர் மனைவியுடைய சந்தோஷமே இருக்கிறது. தனது சக்திக்கு மீறி நாற்பது லட்சம் செலவு செய்து ஒரு அழகிய வீட்டை அந்தக் கிராமத்தில் கட்டியிருந்தார். ஆனால் அவ்வளவு செலவு செய்வதற்கு முன் ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்கத் தவறிவிட்டார்.
அவர் தன்னுடைய பூர்வீகமனையில் தான் வீட்டைக் கட்டினார். காலங்காலமாகப் புழங்கி வந்த பூர்வீகமனை என்பதால் அந்த மனையில் ஏதேனும் வில்லங்கம் இருக்கிறதா என்பதைச் சரிபார்க்காமல் அவ்வளவு பெரிய தொகையை அந்த இடத்தில் கொட்டி வீடாக எழுப்பியவருக்குத் தெரியவில்லை… அவருடைய வீட்டு வாசலிலிருந்து மெயின் ரோட்டிற்குச் செல்லும் மண்சாலையை அடைய… ருத்ரனுடைய தாத்தா அந்தக் காலத்தில் வாங்கிப் போட்ட ஐந்து செண்டு மனையைக் கடந்துதான் வர வேண்டும் என்பது…
ருத்ரனின் குடும்பத்தினர் அந்த மனையை வாங்கிப் போட்டதோடு மறந்துவிட்டார்கள். அனாமத்தாகக் கிடந்த இடத்தில் ஒரு சிறு பகுதியைப் பாதைக்காக நாராயணமூர்த்தியின் குடும்பம் மூன்று தலைமுறையாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தது. இன்றுவரை அதில் எந்தப் பிரச்சனையும் எழுந்ததில்லை.
ருத்ரன் தன்னை எந்த வகையிலும் தாக்க முடியாது என்று இறுமாப்போடு இருந்தவருக்குத் தெரியவில்லை அனாமத்தாகக் கிடக்கும் இடம் ருத்ரனுக்குச் சொந்தமானது என்பதோடு தங்கள் வீட்டிற்கும்… தெருவின் மண்சாலைக்கும் இடையில் அமைந்திருக்கும் பாதையும் அவனுக்குச் சொந்தமானதுதான் என்பது.. கணக்கன் கணக்கறிவான் தன் கணக்கைத் தான் அறியான் என்பது இவர் விஷயத்தில் உண்மையானது.
நகரங்களில் பிரிப்பது போல் முறையாகச் சாலைவசதியுடன் மனைகள் பிரிக்கப்படாததால் கிராமங்களில் அவ்வப்போது எழும் பாதை பிரச்சனை தான் நாராயணமூர்த்தியைத் தாக்குவதற்கு ருத்ரனுக்கு ஆயுதமானது.
# # #
வண்டி வண்டியாகத் தன்னுடைய வீட்டிற்கு முன் வந்து இறங்கும் மணலும்… செங்கல்லும்… சிமெண்டும்… ஜல்லியும்… நாராயணமூர்த்தியைக் குழப்பியது. அவர் வண்டிக்காரர்களை நிறுத்தி விபரம் கேட்டார். அவர்கள் ருத்ரனின் பெயரைச் சொன்னார்கள். அவனுடைய பெயரைக் கேட்டதும் உடலில் குளிர் பரவியது…
“எ… எதுக்கு… இங்க…? என்ன வேல…?” என்று தடுமாற்றத்துடன் மீண்டும் விசாரித்தார்.
“அவரு மன இங்க இருக்காமே… சுத்துச்சுவரு எழுப்ப… கல்லு மண்ணெல்லாம் எறக்கச் சொல்லியிருக்காரு…” என்று சொல்லிவிட்டு அவன் தன்னுடைய வேலையைக் கவனித்தான்.
‘அவன் மனைக்குச் சுவர் எழுப்புறதுக்கு… அவனோட மனையில… நடுவுல கொண்டு போயி சாமான எறக்காம… இங்க… இவ்வளவு தூரம் தள்ளி… நம்மளோட பாதையில எதுக்குக் கொண்டுவந்து எறக்கச் சொல்லியிருக்கான்…! பாதையில அரையடி… இல்லன்னா ஒரடி ஆக்கிரமிப்புச் செய்யப் போறானோ… அப்படி எதுவும் பண்ணிட்டான்னா மாட்டுவண்டி உள்ள வரமுடியாதே…!’ என்று அவர் மனம் பலவற்றையும் சிந்தித்துக் கொண்டிருக்கையில்…
இரண்டு அரசு அதிகாரிகள் இடத்தை அளந்து நூல் கட்டி கொண்டிருந்தார்கள். நாராயணமூர்த்திக்குச் சர்வமும் ஒடுங்கிவிட்டது. ஏனெனில் அவர்கள் நூல் கட்டியது அவருடைய பாதையும் சேர்த்துதான்.
“சார்… சார்… என்ன சார் இது… எதுக்கு சார் பாதை அடச்சு நூல் கட்டுறிங்க…?”
“இந்த எல்லையிலேருந்து அந்த மஞ்ச கம்பு நட்டிருக்குப் பாருங்க… அதுவரைக்கும் ருத்ரன் அய்யா வீட்டு எடம்தான்… நீங்க பயன்படுத்திக்கிட்டு இருக்கற பாதையும் அடிபடுது…” என்று சொல்லி அவர் தலையில் ஒரு பெரிய வெடிகுண்டைத் தூக்கிப் போட்டார்கள்.
அவர் செய்வதறியாதுத் திகைத்து நிற்கும் பொழுதே அவருடைய மனைவி அழுது ஆர்ப்பாட்டம் செய்ததால் தெரு கூடிவிட்டது.
நாராயணமூர்த்தி, சிதம்பரம், கோபால்சாமி அனைவரும் தெற்குத் தெருவை சேர்ந்தவர்கள். அந்தத் தெருவில் கிட்டத்தட்ட அனைவரும் பங்காளிகள். ஏதாவது ஒரு விதத்தில் ஒருவருக்கொருவர் சொந்தங்களாக இருந்தார்கள். ருத்ரன் முதல் தெருவை சேர்ந்தவன். அவன் அங்கிருந்து வந்து தங்களுடைய தெருவில் ஆக்கிரமிப்புச் செய்வதை அங்கிருந்த யாரும் விரும்பவில்லை. அதனால் அந்தத் தெருவாசிகள் அனைவரும் நாராயணமூர்த்திக்கு ஆதரவாகப் பேசினார்கள்.
வேலைச் செய்ய வந்தவர்களை வேலைச் செய்யவிடாமல் தடுத்தார்கள். பத்துபேர் கூட்டமாகத் திரண்டு ருத்ரனின் வீட்டிற்கு வந்தார்கள்.
அதை எதிர்பார்த்துக் காத்திருந்த ருத்ரனோ அவர்களை அசால்ட்டாக எதிர்கொண்டான்.
“என்ன விஷயமா எல்லாரும் கூட்டமா தெரண்டு வந்திருக்கிங்க…?” அனைவரையும் அமர வைத்து நிதானமாகக் கேட்டான்.
“அது ஒன்னுமில்ல மாப்ள… உங்க ஆளுங்க வந்து அங்க நாராயணமூர்த்தியோட பாதைய அடச்சு நூலு கட்டிட்டாங்க. அதான் உங்ககிட்ட அதப்பத்தி பேசிட்டுப் போகலாமுன்னு வந்தோம்…” சிதம்பரம் பேச்சை ஆரம்பித்தார்.
“என்னோட எடத்த அளந்து தானே நூல் கட்டச் சொன்னேன்… ”
“அதா(ன்)… அதா(ன்)… ஆனா… உங்க எடம் அவனோட பாதைய அடச்சாப்ள இருக்கு…” கூட்டத்தில் இருந்த மற்றொரு பெரியவர் பேசினார்.
“அதுக்கு…?”
“இவனுக்குப் பாதைய நீங்க விட்டுக் குடுக்கணும்… பாவம் ரொம்பச் செலவுப் பண்ணி வீட்டக் கட்டிப்புட்டான்… அதுக்குப் போகவர பாத இருக்கான்னு பாக்கல மடப்பய…”
“விட்டுக் குடுக்கணுமா…! ஹா… நான் எதுக்கு விட்டுக் குடுக்கணும்…?” அலட்சியமாகக் கேட்டான்.
யார் யாரோ எதையெதையோ எடுத்துச் சொன்னார்கள்… அவன் எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுவிட்டுக் கடைசியாக விட்டுக்கொடுக்க முடியாது என்று தெளிவாகச் சொன்னான்.
வந்தவர்கள் வெறுத்துப் போனார்கள். இவ்வளவு நாளும் அவன் மீது அவர்களுக்கிருந்த மதிப்பு சிறிது தொய்வடைந்தது. ஆனாலும் அவனிடம் கடுமைக் காட்ட முடியவில்லை. காட்டினால் பயன் எதிர்மறையாகத்தான் இருக்கும் என்பது அவர்களுக்கு உறுதியாகத் தெரிந்தது.
பஞ்சாயத்தை அவனுடைய பாட்டி வள்ளியம்மாளிடம் எடுத்துச் சென்றார்கள். பாட்டி நாராயணமூர்த்திக்கு ஆதரவாகப் பேசினார்கள். எல்லோரும் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். பிரச்சனை முடிந்துவிடும் என்றும் நினைத்தார்கள். ஆனால் அவர்கள் நினைத்தபடி எதுவும் நடக்கவில்லை.
எப்பொழுதும் பாட்டியின் பேச்சைக் கேட்டு நடக்கும் ருத்ரன் இந்தமுறை அவரை அடக்கிவிட்டான்.
“ஆச்சி… இந்தப் பிரச்சனைல நீ தலையிடாத… எத எப்படி முடிக்கணுமுன்னு எனக்குத் தெரியும்… எல்லாம் நல்லபடியா முடியும்…” என்று பாட்டியின் பேச்சிற்கு முற்றுபுள்ளி வைத்துவிட்டான்.
அனைவரும் விக்கித்துப் போனார்கள். எதுவும் பேச முடியாமல்… ருத்ரனின் மீதான கையாலாகா கோபத்துடன் அங்கிருந்துச் சென்றார்கள்.
# # #
நாராயணமூர்த்தியின் மனைவி ஒப்பாரி வைத்து ஊரைக் கூட்டினாள். தெருவில் உள்ள பங்காளிகளும் சுற்றமும் “மோசம் போயிட்டியேடா நாராயணா…” என்று அவரைப் பயமுறுத்தினார்கள். வீட்டுவாசலில் அடுக்கியிருந்த செங்கல்லும்… கொட்டியிருந்த மணலும் அவர் வயிற்றில் புளியைக் கரைத்தன. சிதம்பரத்திடம் இதைப்பற்றிப் பேசினால்… ‘கேஸ் போடலாம்…’ என்கிறார்.
“என்றைக்கு கேஸ் போட்டு… அது என்றைக்கு விசாரணைக்கு வந்து… தீர்ப்பு வருவது… அப்படியே தீர்ப்பு வந்தாலும் நமக்குச் சாதகமாகத் தீர்ப்பு வருமா என்பது சந்தேகம்தான்…” என்றெல்லாம் யோசித்தவர், வேறு வழியின்றித் தானே ருத்ரனிடம் சென்றார்.
அவனோ ‘நாலாங்கரப் பக்கம் இருக்கற உங்களோட நிலம் எனக்கு… உங்க வீட்டுக்கு முன்னாடி இருக்கிற என்னோட கட்டுமனை உங்களுக்கு… டீலா…? நோ டீலா…?’ என்கிற ரேஞ்சில் சுருக்கமாகப் பேசினான்.
‘நோ டீல்…’ என்று சொல்லும் நிலையில் நாராயணமூர்த்தி இல்லை என்பதால் உடனடியாக நிலத்தை அவன் பெயரில் மாற்றிக் கொடுக்கச் சம்மதித்துவிட்டார்.
1 Comment
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
mariya daniel says:
adangappa ruthran kalakkuran