விடிவெள்ளி – 7
3187
0
அத்தியாயம் – 7
இப்போதெல்லாம் ஜீவனுக்கு ஒவ்வொரு நாளும் நரகமாக மாறிக் கொண்டிருந்தது. தினமும் புனிதா செய்யும் சித்ரவதையை அவனால் தாங்க முடியாமல் போனது. கணக்கு பாடத்தை பொருத்தவரை சின்ன சின்ன விஷயங்களிலெல்லாம் அவனை முடிவெடுக்க விடாமல் இறுக்கி பிடித்தாள்.
ஏற்கனவே அவனுக்கு படிப்பின் மீது இருந்த வெறுப்பு அதிகமாகி அலர்ஜியாக மாறியது. கணக்கு புத்தகத்தை பார்க்கவே பிடிக்காமல் போனது… கணித எண்களை பார்த்தாலே பூச்சியாகவும் புழுவாகவும் கற்பனை செய்ய தோன்றியது… அதன் விளைவாக மாத தேர்வில் ஒற்றை இலக்கத்தில் மதிப்பெண் பெற்று புனிதாவின் கோபத்திற்கு ஆளானான். அவள் இவனுடன் இரண்டு நாட்கள் பேசாமல் இருந்தாள். அவனுடைய மன அழுத்தம் அதிகமானது.
“மாப்ள… தங்கச்சி சமாதானம் ஆயிடிச்சாடா…?” என்று சாதாரணமாக கேட்ட ஆட்டோ
கார நண்பனை தூக்கி போட்டு மிதித்தான்.
மற்ற நண்பர்கள் சண்டையை விலக்கிவிட்டு இருவரையும் தனித்தனியாக தள்ளிக் கொண்டு போனார்கள்.
“டேய்… என்னடா ஆச்சு உனக்கு…? அவன் சாதாரணமா தானேகேட்டான்..? எதுக்கு இப்ப இப்படி கோபப்படற…?” என்றான் ஒருவன்.
“ஏய்… அவன் வேணுன்னே என்ன நக்கல் பண்றாண்டா…” என்று குதித்தான் ஜீவன்.
“அதெல்லாம் இல்லடா… உனக்குத்தான் இப்போல்லாம் தேவையில்லாம கோபம் வருது… இந்தா இதை ஒரு இழுப்பு இழு… எல்லா கோபமும் பறந்துடும்…” என்று புகைந்து கொண்டிருந்த சிகரெட் ஒன்றை ஜீவனின் வாயில் வைத்தான்.
அதுதான் அவன் முதல் முறை சிகரெட் பிடித்தது. அன்றிலிருந்து அவனை புகை பழக்கம் பற்றிக் கொண்டது… கோபம் வரும் பொழுதெல்லாம் சிகரெட் நண்பனானது…
# # #
“சாக்லேட் எடுத்துக்கோங்க…” என்று சொல்லி ஜீவனிடம் ஒரு டப்பாவை நீட்டினாள் புனிதா.
“எதுக்கு…?” அவன் எரிச்சலுடன் கேட்டான்.
“பிளஸ் டூல பாஸ் பண்ணினதுக்கு …”
“குத்தி காட்றியா…?”
“அதெல்லாம் இல்ல… எல்லாருக்கும் கொடுத்தேன். உங்களுக்கு கொடுக்கலன்னா சரியா இருக்காதுன்னு கொண்டு வந்தேன். எடுத்துக்கோங்க…”
“இவ்வளவு நாள் கழிச்சு இப்போ கொண்டுவந்து கொடுக்கற..?” என்று முறைப்புடன் சொல்லிக் கொண்டே சாக்லேட் ஒன்றை எடுத்துக் கொண்டான். அவனுடைய முறைப்புக்கான காரணம் அவன் அந்த ஆண்டும் கணிதத்தில் தேறவில்லை என்பதுதான்…
“அடுத்த வாரம் நான் காலேஜ்ல சேர்றேன்… எம்.என் எஞ்சினியரிங் காலேஜ்… ”
“ம்ம்ம்…. டெய்லி இந்த பக்கமாதானே போவ…?” அவன் கவலை அவனுக்கு.
அவனுடைய அந்த கேள்வி அவளுடைய கோபத்தை அதிகப்படுத்தியது. “எதுக்கு கேக்கறிங்க… இந்த ஆட்டோ ஸ்டாண்டே கதின்னு இருந்துட்டு கடைசில என் பேர சொல்லவா…?”
“எதுக்கு கோபப்படற… படிப்பு இல்லன்னா என்ன…? விட்டுதள்ளு… எல்லாரும் படிச்சுதான் பெரிய ஆளா வந்திருக்காங்களா…?”
“பேச்சு மட்டும் நல்லா பேசுங்க…” என்று அலுத்துக் கொண்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவன் அவளிடம் கொடுத்த அவனுடைய கைபேசியை திருப்பிக் கொடுத்தாள்.
“இந்தாங்க…”
“என்ன இது…? ”
“உங்க செல்….”
“அது தெரியுது… அதை எதுக்க இப்ப என்கிட்ட கொடுக்கற?”
“எனக்கு அப்பா புது செல் வாங்கி கொடுத்திருக்கார்… இங்க பாருங்க…” என்று அவளுடைய புது கைபேசியை அவனிடம் காட்டினாள்.
“புதுசு வந்த உடனே பழச தூக்கி போட்டுடுவியா…?” அவன் குதர்க்கமாக கேட்டான்.
“இப்ச்… எதுக்கு இப்படியெல்லாம் பேசுறிங்க… என்கிட்ட பேசணும்ன்னுதானே இந்த செல் போனை என்கிட்ட கொடுத்திங்க… இப்போதான் என்கிட்டையே ஒரு போன் இருக்கே… இனியும் இதை நான் கைல வச்சிருக்கது ரிஸ்க்தானே… அதான் திருப்பி கொடுக்கறேன்… அதை எதுக்கு தப்பா எடுத்துக்கரிங்க…” என்று அவனை சமாதானம் செய்து அவனுடைய கைபேசியை அவனிடமே திருப்பி கொடுத்துவிட்டு சென்றுவிட்டாள்.
ஆனால் ஜீவன் சமாதானம் ஆகவில்லை. அவள் கொடுத்துவிட்டு சென்ற கைபேசியை திருப்பி திருப்பி பார்த்தான்.
அது பழைய மாதிரி கைபேசி. அந்த போனை பத்திரப் படுத்துவதற்காக பிளாஸ்டிக் கவர் போட்டு வைத்திருந்தாள். எதார்த்தமாக அந்த கவரை நீக்கினான். அதற்குள்ளேயிருந்து ஒரு சாக்லேட் கவர் வந்தது. அதில் அவனுடைய கையெழுத்தும் இருந்தது. அதை பார்த்ததும் அவனுக்கு சுள்ளென்று கோபம் வந்தது.
அந்த பேப்பர் அவளுடைய பிறந்த ஆள் அன்று அவன் கையெழுத்திட்டு அவளிடம் கொடுத்தது. அதை அவள் அவனுக்கு தெரியாமல் குப்பையில் போட்டிருந்தால் கூட அவன் கவலை பட்டிருக்க மாட்டான். ஆனால் அவனிடமே திருப்பி கொடுத்துவிட்டாள் என்றதும் அவனால் தாங்க முடியவில்லை. அவன் தன்னை விட்டு விலகுகிறாளோ…! என்கிற சந்தேகம் வந்ததும் தாங்க முடியாத துக்கம் நெஞ்சை அழுத்தியது.
இறுகிய முகத்துடன் ஆட்டோவில் அமர்ந்துவிட்டான். காரணம் கேட்ட நண்பர்களிடம் மனதை மறைக்காமல் சொன்னான். பெண் பிள்ளை போல் கண்கலங்கினான். அவர்கள் அவனுடைய துக்கத்தை குறைக்க வழி சொன்னார்கள். அன்றுதான் அவன் குடிக்க ஆரம்பித்தான்.
முதல் முறையே அளவுக்கு மீறி குடித்துவிட்டு கவிழ்ந்துவிட்ட நண்பனை ஆட்டோவில் அள்ளிப் போட்டுக் கொண்டு சென்று வீட்டில் விட்டார்கள். சிவகாமி மகனின் நிலையை கண்டு அழுது கண்ணீர்விட்டாள். மறுநாள் எழுந்ததும் திட்டி தீர்த்தாள்.
“அந்த ஆட்டோகார பசங்கதான் நீ இப்படி கெட்டு சீரழியிரதுக்கு காரணம்… இனி நீ அங்க போகவே கூடாது…” என்று கண்டித்து சொன்னாள்.
இவனும் எதிர்த்து சண்டை போட்டான். பாட்டிதான் சமாதானம் செய்தார்கள். எப்படியோ அம்மாவை சமாளித்துவிட்டு நண்பர்களை தேடி ஆட்டோ ஸ்டாண்டிற்கு வந்து புனிதாவின் புது எண்ணிற்கு அழைத்தான்.
அவளுக்கு இவன் குடிக்க ஆரம்பித்திருந்தது தெரியாது. எப்பொழுதும் போல் அன்பாக பேசினாள். கடைசியாக முடிக்கும் பொழுது எப்படியாவது இந்த ஆண்டு முயற்சி செய்து படித்து பாஸ் செய்ய சொன்னாள்.
முன்பெல்லாம் படிப்பை பற்றி பேசும் பொழுது அவள் குரலில் அவன் எப்படியாவது பாஸ் செய்துவிட வேண்டுமே என்கிற தவிப்பும் எதிர்பார்ப்பும் இருக்கும். ஆனால் இன்று அப்படி எதுவும் இருந்ததாக தெரியவில்லை. அவனும் அதை பற்றி கவலைப்படவில்லை…
“சரி… சரி…” என்று ஒப்புக்கு சொல்லிவிட்டு போனை வைத்தான். இனி படிக்க முடியும் என்கிற நம்பிக்கையே அவனுக்கு இல்லை.
கைபேசியில் அவர்களுடைய பேச்சு தொடர்ந்து கொண்டிருந்தது… முன்பெல்லாம் தினமும் பேசுபவர்கள் இப்போதெல்லாம் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை… அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறைதான் பேசிக் கொண்டிருந்தார்கள். ஜீவன் அவளுடன் பேசுவதற்கு ஆர்வமாகத்தான் இருப்பான். ஆனால் புனிதாவிற்குதான் படிப்பு வேலையும் எழுத்து வேலையும் அதிகமாக இருக்கும்.
சரியாக பேசுவதில்லை என்று ஜீவன் அவளிடம் சண்டை போடுவான். அவளும் திருப்பி கத்துவாள். பிறகு அவளே சமாதானம் செய்து அறிவுரை சொல்வாள். இவன் அதை மனதில் வாங்கிக் கொள்ள மாட்டான். சமையத்தில் இவனும் சில அறிவுரைகளுடன் சமாதானத்திற்கு வருவான். இப்படியே காதலும் சண்டையுமாக நான்கு ஆண்டுகள் கழிந்தன.
அவள் படிப்பை முடித்து கையில் டிகிரியுடன் வந்தாள். இவனிடம் எந்த மாற்றமும் இல்லை. நான்கு ஆண்டுகளுக்கு முன் என்ன நிலையில் இருந்தானோ அதே நிலையில்தான் இன்றும் இருந்தான்.
ஆனால் அவனுடைய குடும்பத்தில் சில மாற்றங்கள் நடந்திருந்தன. அவனுடைய தம்பி ஒரு ஆண்டுக்கு முன்பே பொறியியலில் பட்டம் பெற்று வேலைகிடைத்து அமெரிக்கா சென்று நன்றாக சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டான். அவன் அனுப்பும் பணத்தை வைத்து இவன் ஊரில் பெரிதாக ஒரு வீட்டை கட்டியிருந்தான். அழகிய அந்த வீடு மாளிகை போல்… அந்த ஏரியாவிலேயே பெரிதாக உயர்ந்து நின்றது.
Comments are closed here.