இல்லறம் இதுதான் – 12
2537
1
அத்தியாயம் – 12
“டேய் விஜய், சைட் அடிச்சது போதும்டா நான் ஒருத்தன் வந்துட்டேன்ல்ல. இனி நான் பார்த்துக்கறேன்” சாரதி விஜய்யின் தோளைத் தொட்டான்.
“வந்துட்டியா? இந்த வயசுல மனுஷன் நிம்மதியா செய்யற ஒரே வேலை இதுதான் அதையும் ஷிப்ட் போட்டு செய்ய சொல்றியே” – கடிந்துக் கொண்டான்.
“சரி சரி… எவ்வளவு சைட் அடிக்கணுமோ அவ்வளவு சைட் அடிச்சுக்கோ மோகன் வந்தா அப்புறம் கண்டபடி திட்டுவான்”
“அவன் வர இன்னும் பத்து நிமிஷம் இருக்கு”
“அதுக்காக இப்படியா ஜொள்ளு விடுறது. பாவம் ரோட்ல போறவங்க எல்லாம் டிரெஸ்ஸை தூக்கிப் பிடிச்சிகிட்டுத்தான் போகணும். இல்லன்னா டிரஸ் நனைஞ்சிடும்”
“அடிங்” – அவனைத் துரத்தினான் விஜய் அவனிடமிருந்து தப்பி ஓடிய சாரதி அந்தப்பக்கமாக வந்த ஒரு பெண் மீது மோத இருவரும் கீழே விழுந்தாலும் சாரதி மட்டும் காதலிலும் சேர்த்து விழுந்தான்.
அவளிடம் அவன் தன் காதலை சொல்ல நினைத்த போது அம்மா திருமணத்திற்கு பெண் பார்த்துக் கொண்டு வந்து நின்றாள். அவனோ வேண்டாம் என்று மறுத்தான். அப்போதும் தாய் விடவில்லை. பிடிவாதமாக தன் கையிலிருந்த படத்தை மகனிடம் திணித்துப் பார்க்கும்படி செய்தாள். அவன் மூச்சு திணறிப் போனான். காரணம் அவன் மனதிலிருக்கும் அதே பெண் அவன் கையிலிருக்கும் புகைப்படத்திலும் இருந்தாள்.
“அ… அம்…மா…”
“என்னடா…?”
“இந்த… இந்த பொண்ணு…”
“பேரு சுருதி…” என்று ஆரம்பித்து தாய் அந்த பெண் பற்றிய அனைத்து விபரங்களையும் கூற மகன் அதை எதையும் காதில் வாங்கிக் கொள்ளமாலேயே திருமணத்திற்குப் பச்சைக் கொடி காட்டிவிட்டான். பிறகென்ன… டும் டும் டும் தான்…
முதலிரவு அறை சாரதி காத்திருந்தான். முதல் முறையாக அவன் விரும்பி மணந்த பெண்ணிடம் பேசப் போகிறான். என்ன பேசுவது… எப்படி பேசுவது… சற்று படபடப்புடன் கூடிய சந்தோஷத்தை அனுபவித்தபடி அமர்ந்திருந்தான். அவள் வந்தாள்.
“ஹாய் சுருதி… வா… வந்து இப்படி உட்கார்…” இயல்பாகவே பேசினான்.
அவள் உள்ளே வந்தாள்… அமர்ந்தாள்…
“எல்லாமே கனவு மாதிரி இருக்கு சுருதி. உனக்கு தெரியுமா… நான் உன்னை கல்யாணத்துக்கு முன்னாடியே பார்த்திருக்கேன். நீயும் தான்… ஞாபகம் இருக்கா” – அவள் அவனை புரியாமல் பார்த்தாள்.
“சாரி… உன்னை எனக்கு வரன் பேசினதுக்கு பிறகு நான் சொல்லல. அதுக்கு முன்னாடியே” – அவளுடைய குழப்பம் சற்று தெளிந்தது.
“நீயும் என்னை பார்த்திருக்க சுருதி… ஞாபகம் இருக்கா?” – அவள் பதில் பேசாமல் இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்தாள்.
‘கடி போடறோமோ!’ அவனுக்குள் சந்தேகம் எழுந்தது.
“சுருதி…” – மெல்ல அழைத்தான். அவள் நிமிரவில்லை
“போர் அடிக்கிறேனா?” – சந்தேகத்துடன் கேட்டான்.
“…….”
“ஆப்பிள் சாப்பிடறியா?” – பேச்சை மாற்றினான்.
அவளிடம் எந்த ரியாக்ஷனும் இல்லை.
‘நல்லா சொதப்புரடா… ஃபர்ஸ்ட் நைட் ரூம்குள்ள உக்கார்ந்திருக்க புள்ளைகிட்ட மொத மொதல்ல ரோஜா பூவை எடுத்து நீட்டாம ஆப்பிளை எடுத்து நீட்டினா அவ கடுப்பாக மாட்டாளா!’ தன்னை தானே திட்டிக் கொண்டு ஆப்பிளோடு நீட்டிய கையை மடக்கிக் கொண்டு அவளைப் பார்த்து பரிதாபமாக விழித்தான். அவனிடம் காதல் கொட்டிக் கிடக்கிறது. ஆனால் அதை முறையாக வெளிப்படித்த அவனுக்கு தெரியவில்லை.
“என்னை உனக்கு பிடிச்சிருக்கா சுருதி…” – அவளை கவர வேண்டும் என்கிற முயற்ச்சிகளை எல்லாம் விட்டுவிட்டு பரிதாபமாகக் கேட்டான்.
“இல்லை” முதத்தில் அடித்தார் போல் அவள் பதில் சொன்னாள்.
“என்ன!” அவன் அதிர்ந்தான்.
“எனக்கு எதுவுமே பிடிக்கல” – உடைந்து அழுதாள். சாரதி பதறிவிட்டான்.
“என்ன… என்ன ஆச்சு சுருதி”
“நான் ஒருத்தரை உயிருக்குயிராய் விரும்பினேன். அவரை தான் கல்யாணம் செய்ய நினைத்தேன். ஆனா எங்க வீட்டுல என்னை கட்டாயப் படுத்தி உங்களுக்குக் கட்டி வச்சுட்டாங்க”
“என்ன சொல்ற சுருதி… இதை ஏன் நீ என்கிட்டே முன்னாடியே சொல்லல?” சற்று கோபத்துடன் கேட்டான்.
“நீங்க எங்க என் கூட பேசுனிங்க? வரன் பார்த்த பத்து நாள்ல கல்யாணம். இடையில் உங்க கூட பேசற வாய்ப்பே எனக்கு கிடைக்கல. நீங்களும் இந்த கல்யாணத்துல உனக்கு சம்மதமான்னு ஒரு வார்த்தை கேட்கல. ஒரு பொண்ணோட கழுத்து கிடைச்சதும் உடனே கையில இருந்த கயித்தை கட்டிட்டிங்க. அது இப்போ எனக்கு சுருக்குக் கயிறா மாறிடிச்சு” – பொரிந்துத் தள்ளிவிட்டு முகத்தைக் கைகளால் மூடிக் கொண்டு வெடித்து அழுதாள்.
சாரதிக்கு பிரமை பிடித்தது போல் இருந்தது. ஜன்னல் அருகே சென்று சாலையை வெறித்துப் பார்த்தான். நிசப்தமாய் இருந்தது. காற்று அவனை கட்டியணைத்தபடி நகர்ந்தது.
1 நிமிட அமைதிக்கு பிறகு சுருதியின் விசும்பல் ஒலி மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது. அவன் நீண்ட நேர யோசனைக்குப் பிறகு பேசத் துவங்கினான்.
“சுருதி தெரிஞ்சோ தெரியாமலோ நான் உன்னை லவ் பண்ணிட்டேன். இப்போ நம்ம கல்யாணமும் நடந்திருச்சு. ஒரு வேளை இந்த விஷயம் முன்னமே தெரிஞ்சிருந்தா இந்த கல்யாணம் நடந்திருக்காது. ஆனால் இப்போ எல்லாம் கைமீறி போய்டிச்சு. எவ்வளவோ பேர் லவ் பண்ணி பிரிஞ்சிருக்காங்க. அவங்கல்லாம் இந்த உலகத்துல வாழ்ந்துக் காட்டலையா? நீயும் உன் மனசை மாத்திக்கிட்டுத்தான் ஆகணும். ஏன்னா கல்யாண வாழ்க்கைங்கறது நாம ரெண்டு பேர் மட்டும் சம்மந்தப்பட்ட விஷயம் இல்ல. இதுல ரெண்டு குடும்பத்தோட மானம் அடங்கியிருக்கு. உனக்காக நான் எத்தனை நாள் வேணுன்னாலும் காத்துட்டு இருப்பேன். பழச மறந்துட்டு புது சுருதியா மாறி வா… உனக்கு துணையா நான் இருக்கேன். எப்பவும் இருப்பேன். இப்போ மனச போட்டு குழப்பிக்காம ரிலாக்ஸ்டா படு…”
சாரதி படுத்துவிட்டான். தூக்கம் மட்டும் வர மறுத்தது. என்னதான் அவளுக்கு ஆறுதல் கூறி சமாதானம் செய்தாலும் அவன் மனம் கிடந்து தவித்தது. ஒரு காதல் ஜோடியை பிரித்துவிட்ட வேதனை அவன் மனதை இறுக்கியது.
1 Comment
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
இப்பகுதி நன்றாக இருந்தது.
நன்றி