மயக்கும் மான்விழி-5
5549
3
அத்தியாயம் – 5
“கல்லாடம் [நூல்] படித்தவனோடு மல் ஆடாதே“
சோலையூர் கிராமத்திலிருந்து கல்லூரிக்கும் தனியார் பள்ளிக்கும் செல்லும் மாணவ மாணவிகள்… ஊருக்குள்ளிருந்து மெயின்ரோடு வரை சைக்கிளில் வந்து அங்கிருக்கும் டீக்கடை அல்லது பெட்டிக்கடைகளில் தங்களது சைக்கிளை விட்டுவிட்டுப் பேருந்தில் பக்கத்து டவுனிற்குச் செல்வார்கள். அப்படித்தான் சகோதரிகளான மான்விழியும் காவியாவும் இரண்டு சைக்கிளில் ஊருக்குள்ளிருந்து வந்து கொண்டிருந்தார்கள்.
“காவியா… நாலு நாளைக்கு முன்னாடி நம்ம நாராயணன் சித்தப்பா வீட்டுக்குப் போற பாதைய அடச்சு காம்பௌண்ட் கட்டப்போறேன்னு தகராறு பண்ணினானே… அவன் யாருன்னு உனக்குத் தெரியுமா…?” மான்விழி தன் தங்கையைக் கேட்டாள்.
“முதல்தெரு… பெரியவீட்டுல ஒரு ஆத்தா இருப்பாங்கல்ல… அவங்களோட பேரனாம்டி…”
“அது தெரியும்டி… அந்தக் கெழவிக்கு மூணு பேரனாச்சே… அதுல எந்தப் பேர(ன்) இப்புடிச் சண்டித்தனம் பண்ணிக்கிட்டுத் திரியிறா(ன்)…
“ரெண்டாவுது பேரன்டி… ஒசரமா… புல்லட்டுல போவானே… நீ பாத்ததுல்ல…?”
“இல்லையேடி…”
“பாத்ததுல்லையா…!” ஆச்சர்யமாகக் கேட்டாள் காவ்யா…
“ம்ஹும்…” அசால்ட்டாகப் பதில் சொன்னாள் மான்விழி.
“அவன் நம்ம தெருப்பக்கம் அதிகம் வரமாட்டான்டி… ஆனா பஸ் ஏறப்போகும் போது சாவடிப் (சத்திரம்) பக்கத்துல அடிக்கடி பாத்துருக்கேன். இனி பாத்தா உனக்கும் காட்டுறேன் பாரு…”
“ஏய்… அவன் என்ன பொருட்காட்சியில இருக்க அதிசயப்பொருளா… எல்லாரும் வாயத் தெறந்துகிட்டுப் பாக்க… ஆமா… அவனையெல்லாம் நீ எதுக்குடிப் பாக்குற…?”
“ஆள் நல்லா இருந்தா கண்ணுப் பாக்கத்தான் செய்யும்… அதையெல்லாம் ஏன் எதுக்குன்னு கேள்விக் கேட்டுக்கிட்டு இருப்பியா… போடி…”
“அக்காகிட்டப் பேசுற மாதிரியாடி, பேசுற நீ…?”
“அக்காவா…! நீ என்னோட ஃபிரன்ட் மாதிரி மானு…”
“ஆனா ஃபிரன்ட் இல்ல… அக்காதா(ன்)… ஞாபகம் வச்சுக்க…”
“இதெல்லாம் நீ அவனப்பத்தி என்னுகிட்ட கேக்குறதுக்கு முன்னாடி நெனச்சிருக்கணும்…” என்று காவியா பதில் சொல்லவும் அவர்கள் மெயின் ரோட்டை அடையவும் சரியாக இருந்தது.
இருவரும் முறைப்புடன் தங்களின் சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டுப் பூட்டினார்கள்.
தூரத்தில் பஸ் வந்தது. பேருந்திற்காகக் காத்திருந்த மாணவிகள் அனைவரும் முண்டியடித்துக் கொண்டு ஏறினார்கள். காவியாவும் மான்விழியும் ஏறி சீட்டைப் பிடித்து அமர்ந்துவிட்டாகள். ஜன்னலோரம் அமர்ந்திருந்த காவியா ருத்ரனின் புல்லெட் தங்கள் பேருந்தைக் கடப்பதைக் கவனித்துவிட்டு… நொடி கூடத் தாமதிக்காமல் “மானு… மானு… இங்க பாருடி…” என்று தன்னருகில் அமர்ந்திருந்த சகோதரியை வெளிப்பக்கம் பார்க்கும்படி சொன்னாள்.
“என்னடி…?”
“அவன்…டி…”
எவன் என்கிற விளக்கம் அவளுக்குத் தேவைப்படவில்லை… தன்னையறியாமல் தலையை வெளிப்பக்கம் நீட்டிப் பார்த்தாள். அந்த புல்லெட் பேருந்தைக் கடந்துவிட்டிருந்தது. இவள் இன்னும் நன்றாகத் தலையை வெளிப்பக்கம் நீட்டிப் பார்த்தாள். அவன் முதுகை மட்டும் பார்க்க முடிந்தது. ஆனால் அவன் அவளுடைய முகத்தைக் கண்ணாடி வழியாக நன்றாகப் பார்த்தான்.
‘யார் இந்தச் சின்னப்பொண்ணு… இப்படி வெவரமே இல்லாம தலைய வெளிய நீட்டிகிட்டு இருக்காளே…!’ என்று சட்டென்று எழுந்த பொறுப்புணர்ச்சியில் வண்டியை ஓரம் கட்டிவிட்டு பேருந்தைத் திரும்பிப் பார்த்தான்.
“யாரும்மா… அது… தலைய வெளிய நீட்டுறது… உள்ள வாம்மா…” நடத்துனரின் குரல் அதட்டியதில் அவள் தலையை உள்ளே இழுத்துக் கொண்டாள்.
ருத்ரனின் முகத்தை அவள் பார்க்கவில்லை. அவனும் முன்பு வெளியே நீட்டியிருந்த தலை இப்போது இல்லை என்றதும் வண்டியைக் கிளப்பினான்.
ஒரு நொடி மட்டும் கண்ணாடியில் பார்த்த அந்த முகம்… சிறிதுநேரம் அவன் நினைவில் வந்து கொண்டிருந்தது.
‘இந்த மூஞ்சிய இதுக்கு முன்னாடி பார்த்துருக்கமா…? யாரு வீட்டுப் பொண்ணுன்னு தெரியலையே…! என்ன இருந்தாலும் நம்ம ஊர் பொண்ணுங்க அழகுதா(ன்)ய்யா…’ என்று பொதுப்படையாக நினைத்துவிட்டு வண்டி ஓட்டுவதில் கவனமானான்.
# # #
கடந்த இரண்டு நாட்களாக கோபால் மிகவும் பரபரப்பாக இருந்தான். இரண்டு பேரின் நிலத்தைப் பறித்துவிட்ட ருத்ரன் எந்த நேரமும் தன்னுடைய நிலத்தையும் அபகரிக்கக் கூடும் என்கிற எச்சரிக்கை உணர்வில் தன்னுடைய சொத்தில் உள்ள வில்லங்கங்களை ஒரு வழக்கறிஞரின் உதவியுடன் சரி பார்த்துக் கொண்டிருந்தான். இன்றுதான் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு “அப்பாடா…” என்று அசந்து அமர்ந்தான். ஆனாலும் மனதிற்குள் ஒரு குறுகுறுப்பு இருந்து கொண்டே இருந்தது. நினைத்ததை முடிக்கும் திறமை கொண்ட ருத்ரனைத் தன்னால் அவ்வளவு சுலபமாகத் தோற்கடித்துவிட முடியுமா என்கிற சந்தேகம் அவனை நிம்மதி இழக்கச் செய்துவிட்டது.
அவன் சிந்தனையில் மூழ்கியிருக்கும் பொழுது மேஜை மீதிருந்த கைப்பேசி அழைத்தது… எழுந்துச் சென்று கைப்பேசியை எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தான். அழைத்தது தீபா… பக்கத்துக் கிராமத்தில் உள்ள மிராசு ஒருவரின் மகள். டவுனில் கல்லூரியில் படிக்கிறாள். இவனுடைய காதலி… மலர்ந்த முகத்துடன் கைப்பேசியை ஆன் செய்து காதில் வைத்து
“சொல்லு தீபா…” என்றான்.
அந்தப் பக்கம் அவளுடைய விசும்பல் சத்தம் கேட்டது…
“ஏய்… என்ன ஆச்சு…. தீபா… தீபா… என்ன… எதுக்கு அழுவுற…?” அவன் பதறினான்.
“அடுத்த வாரம் எனக்குக் கல்யாணம் நிச்சயம் பண்ணப் போறாங்க…” அவள் அழுகையினூடே சொன்னாள்.
“என்னது….!” அவனுடைய உலகமே ஸ்தம்பித்து விட்டது.
அந்தப் பக்கம் அவளுடைய அழுகை அதிகமானது.
“ஏய்… அழுவுறத நிறுத்துடி மொதல்ல… எவன்டி மாப்ள…? ரெண்டு வருஷமா போன்லையே குடும்பம் நடத்திப்புட்டு… இப்ப வந்து எங்காதுல பூ சுத்த பாக்குறியா… உன்ன வெட்டிக் கொன்னேபுடுவே(ன்)…” அவன் ஆத்திரமாகக் கத்தினான்.
“ரொம்பச் சந்தோஷம்… நானும் சாகுறதுக்குத்தான் வழியத் தேடிகிட்டு இருக்கேன்… வாங்க… வந்து வெட்டிக் கொன்னுடுங்க…” அவள் அவனுக்கு மேல் ஆத்திரமாகக் கத்தினாள்.
“நீ எதுக்குடி சாக வழித் தேடுற… நீதான் கல்யாணப் பொண்ணாச்சே… நாந்தான் சாகணும்…”
“கல்யாணப் பொண்ணா…! மண்ணாங்கட்டிப் பொண்ணு… உங்களக் காதலிச்ச பாவத்துக்கு எனக்குக் கல்யாணம் ஒன்னு தான் கேடு…”
“ஏய்… என்னடி வாய் நீளுது… பக்கத்துல இல்லங்குற திமுரா… வந்தேன்… ஒரே அடில பல்ல பேத்துருவே(ன்) ஜாக்கரத…”
“அப்படித்தான் பேசுவேன்… என்னய்யா செய்வ…? காதலிச்சப் பொண்ணு அவசரமா போன் பண்ணினா ஒடனே எடுக்கத் துப்புல்ல… நீ பேசுறியா…?” கிராமத்துப் பெண்ணான தீபா அவனுடைய அதட்டலுக்கு அஞ்சாமல் எகிறினாள்.
“போன எடுக்கலன்னா ஒடனே இன்னொருத்…” அவள் பேசிய பேச்சில் கடுப்பானவன் எதையோ சொல்ல வந்துவிட்டுத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
“என்ன…? என்ன சொல்ல வந்த…? சொல்லிடு… அதையும் கேட்டுத் தொலைக்கிறேன்…” அவள் அழுகையும் ஆத்திரமுமாகக் கேட்க,
“ப்ச்… ஏன்டி இப்புடி உயிரை எடுக்குற…? விஷயத்த மட்டும் பேசித் தொல…” என்று இவனும் எரிச்சலாகக் கத்தினான்.
“ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒருத்தன் வீட்டுக்கு வந்து பொண்ணுக் கேட்டான்… பொண்ணுப் பாக்குறது… ஜாதகம் பாக்குறதுன்னு எந்தச் சம்ரதாயமும் வேண்டாமுன்னு சொல்லிட்டு நேரடியா நிச்சயத்துக்குத் தேதிக் குறிச்சிட்டுப் போய்ட்டான்… உங்ககிட்ட சொல்றதுக்கு போன் பண்ணிக்கிட்டே இருந்தேன்… ரெண்டுநாளா நீங்க ரொம்ம்ம்ம்பப் பிசி… போன எடுக்கவே இல்ல…” அவள் இயந்திரத்தனமாக ஆரம்பித்து நக்கலாக முடித்தாள்.
இரண்டு நாட்களாகச் சார்பதிவாளர் அலுவலகத்திற்கும் வக்கீல் அலுவலகத்திற்கும் அலைந்துக் கொண்டிருந்ததில் தீபாவின் போனை அலட்சியப்படுத்திவிட்டதை நினைத்து நொந்து கொண்டே கேட்டான்…
“உங்கப்பன் என்ன சொல்றான்…?”
“அந்த ஆள் செம பணக்காரனாம்… அதுனால அப்பாவுக்கு முழுச் சம்மதம்… ”
“உங்கப்பன் சொட்டத்தலையன மட்டும் நேர்ல பாத்தேன்… ஒரே அடில ஆளக் காலி பண்ணிடுவேன்…”
“அவரக் காலி பண்றதெல்லாம் அப்பறம் இருக்கட்டும்… மொதல்ல இந்தக் கல்யாணத்த நிறுத்துற வழியப் பாருங்க…”
“நிச்சயத்துக்குத் தேதி வச்சாச்சுன்னு சொல்ற… இனி யாருக்கிட்ட என்னத்தப் பேசுறது… நீ மொதல்ல அங்கிருந்துக் கெளம்பி வா… இன்னிக்கே நான் உன் கழுத்துல தாலியக் கட்டுறேன்…”
“திருட்டுக் கல்யாணமா…?” ஏளனமாக வந்தது தீபாவின் வார்த்தைகள்.
“வேற என்னதான்டி பண்ணச் சொல்ற…? உங்கப்பன்கிட்ட வந்து பேசவா…?”
“பேசுங்க… ஆனா அப்பாகிட்ட இல்ல… அந்த ஆள்கிட்ட…”
“எந்த ஆள்டி…?”
“அதான்… பொண்ணுக் கேட்டு வந்த ஆள்கிட்ட… உங்க ஊர்தானாம்…”
“எங்க ஊரா…!” உள்ளுக்குள் எதுவோ பிசைந்தது கோபாலுக்கு.
“ஆமா…”
“பேரென்னடி…?” குரலில் படபடப்புடன் கேட்டான்.
“பேரு… ம்ம்ம்… ருத்ரன்னு நெனக்கிறேன்…”
“ருத்ரனா…!!!” அந்த நிமிடம் அவன் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. அவன் மீண்டும் சகஜநிலைக்கு மீள முழுதாக இரண்டு நிமிடம் ஆனது.
“ஏங்க… என்னங்க…. ஹலோ… ஹலோ…!!!” தீபாவின் குரல் அவனுக்குச் சுயநினைவை மீட்டுக் கொடுத்தது.
“சொல்லுடி…”
“என்ன பேச்சையே காணும்…?”
“இங்கதான் இருக்கேன்… ”
“சரி… அந்த ஆள் யாருன்னு உங்களுக்குத் தெரியுமா…? உங்க ஊர்காரர்தான… அவர்கிட்டப் பேசிக் கல்யாணத்த நிறுத்த ஏற்பாடு செய்யுங்க… அந்தக் கல்யாணம் நின்னதும் அப்பாகிட்ட நான் உங்களப் பத்திச் சொல்றேன்… ”
“சரி தீபா…” அவன் சுரத்தின்றிச் சொல்லிவிட்டு போனை வைத்தான்.
அவனால் நம்பவே முடியவில்லை. ருத்ரன் தன்னை எந்தவிதத்திலும் தாக்கிவிடக் கூடாது என்று பலமான முன்னெச்சரிக்கையுடன் இருந்தும்… சற்றும் எதிர்பார்க்காத விதத்தில் அவன் தன்னை அடித்து வீழ்த்திவிட்டானே என்று ஆச்சர்யப்பட்டான். சொல்லப் போனால் கோபாலின் மனம் ருத்ரனுக்கு ரசிகனாகிவிட்டது.
‘கல்லாடம் படித்தவனோடு மல்லாடாதேங்கறதை நிரூபிச்சுட்டானே…! என்னமா பிளான் போடுறான்…!’ என்று மெச்சிக் கொண்டதோடு ருத்ரனைச் சந்திக்கவும் சென்றான். அவனுக்குத் தெரியும்… இவன் அவனிடம் சரண்டராகிவிட்டால் நடக்கவிருக்கும் நிச்சயதார்த்தம் தானாக நின்றுவிடும் என்று.
# # #
“உக்காரு கோபால்… சொல்லு என்ன விஷயமா என்ன பாக்க வந்த?” மாடியிலிருந்து இறங்கி வந்த ருத்ரன் கோபாலிடம் கேட்டான்.
“என்னைக்குப் பத்தரப்பதிவு வச்சுக்கலாமுன்னு கேக்க வந்தேன்…” அவன் சுற்றி வளைக்காமல்… எந்த விளக்கமும் கேட்காமல் நேரடியாக விஷயத்திற்கு வந்தது ருத்ரனின் முகத்தில் புன்னகையைக் கொண்டு வந்தது.
“வேற எந்த முயற்சியும் பண்ணலையா…? இன்னும் ரெண்டு மூணு நாள் கழிச்சுதான் வருவன்னு நெனச்சேன்… இப்பவே வந்து நிக்கிற…?” என்று கேட்டபடி தேக்குமரத்தால் செய்யப்பட்டு குஷனிடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்தான்.
“தீபாவ வீட்டவிட்டு வான்னா ஒடனே வந்துடுவா… அந்த அளவு எம்மேல உசுர வச்சுருக்கா… ஆனா அம்மா அப்பாவ எதுத்துட்டமேன்னு (எதிர்த்துவிட்டோமே என்று) நிம்மதியா இருக்கமாட்டா… எனக்கு இந்த நெலத்தவிட அவளோட நிம்மதிதான் முக்கியம்… எம் மாமனாரு ஒரு பணத்தாசப் புடிச்ச ஆளு… அவர மாதிரியே நானும் இருக்க முடியுமா…!” ருத்ரனுக்கு எதிரில் அமர்ந்தபடி பதில் சொன்னான். ‘குப்புற விழுந்தாலும் என் மீசையில மண்ணே ஒட்டல பாரு…!’ என்று சொல்வது போல் இருந்தது அவனுடைய பேச்சு.
தீபா தனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வாள். நானும் அவளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதனால் எங்களுடைய காதல் தான் உயர்ந்தது. உன்னுடைய பணம் எங்களுக்குப் பெரிதல்ல என்பதை மறைமுகமாக ரோஷத்துடன் சொன்னான் கோபால்.
அவனுடைய ரோஷமான பேச்சில் தோற்றுவிட்டோம் என்கிற ஆற்றாமையை விடத் தோல்வியை ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிற பிடிவாதம்தான் அதிகமாக இருந்தது. இப்போது ருத்ரன் சிரிப்பை மறைக்கவில்லை. சத்தமாகச் சிரித்துவிட்டான்.
“ஹா… ஹா… ஹா… நல்லது… சரி கோபால்… நாளைக்குப் பத்திரப்பதிவ வச்சுக்கலாம்… நெலத்துக்கு ஈடா பணத்த வாங்கிக்கறியா… இல்ல வேற மாத்து நெலம் எதுவும் வேணுமா…?”
“பணமாவே குடுத்துடுங்க… கல்யாணச் செலவு இருக்கு…”
“சரி வாங்கிக்க… கல்யாணத்துக்கு எனக்குப் பத்திரிக்கக் குடுப்பல்ல…?” பெரிய மீசைக்குள் ஒளித்து வைத்த புன்னகையுடனே கேட்டான்.
“குடுக்காம… உங்களுக்குத்தான் மொத பத்திரிக்க… நா வாரேன்…” என்று சொல்லிவிட்டுக் கிளம்பியவன்… இரண்டடி எடுத்து வைத்துவிட்டு நின்று ருத்ரனைத் திரும்பிப் பார்த்தான்.
‘என்ன…?’ என்று புருவத்தை உயர்த்திக் கண்களால் கேட்டான் ருத்ரன்.
“மொதல்ல தண்ணிவிட வாய்க்கா மட்டுந்தானே கேட்டிங்க… இப்ப என்ன எல்லாருகிட்டேருந்தும் நெலத்த எழுதி வாங்கிக்கறிங்க…?”
“உங்க காரியம் முடிஞ்சோன்ன தண்ணிவிட முடியாதுன்னு பிரச்சனைய மறுபடி கிளப்புனிங்கன்னா என்ன செய்றது… அதான் உஷாரா இருக்கேன்…”
‘எமகாதகன்……’ என்று நினைத்தவன் “ம்ம்ம்… சரி… வாரேன்….” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
3 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
KARTHIGA SELVI says:
The novel MAYAKUM MAANVIZHI IS in COMPLETED story. But it is not yet completed. Can u say the remaining episodes of this novel pls.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
பழைய கதைகள் அனைத்தையும் தினமும் ஒரு அத்தியாயம் என்கிற முறையில் பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறோம். மயக்கும் மான்விழி இதுவரை 5 அத்தியாயங்கள் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை ஆறாம் அத்தியாயம் வரும்…
இதயத்தில் ஒரு யுத்தம் மற்றும் உயிரை தொலைத்தேன் கதைகள் முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டு முடிந்துவிட்டன.
நன்றி…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
KARTHIGA SELVI says:
Where is the next episode of this novel MAYAKUM MAAN VIZHI? Pls.say.