Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

உனக்குள் நான்-6

அத்தியாயம் – 6

“ஆறடி உயரம் வளர்ந்த ஆண்மகன்

உள்ளம் ஊமையாய் அழுகுதடி – கண்ணே…!

உன் விலகல் தாங்காமல் – மனம்

தவியாய்த் தவிக்குதடி!

 

அன்று ஞாயிற்றுக்கிழமை… காலை பதினொரு மணி… மதுமதி நீண்ட நாட்களுக்குப் பிறகு ஏதோ பாடலை முணுமுணுத்தபடி புடவையின் மடிப்பை சரி செய்துவிட்டு, ஆளுயரக் கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள். எல்லாம் சரியாக இருந்தாலும் பூ வைக்காதது சிறு குறையாகத் தெரிந்தது. ‘சரி… போகும்பொழுது பார்த்துக் கொள்ளலாம்…’ என்று நினைத்துக் கொண்டு, குழந்தையை வந்து பார்த்தாள். ராதாவிடம் பந்தை வீசி விளையாடிக் கொண்டிருந்தாள் யாழினி.

 

“கிளம்பியாச்சாம்மா..? சார் எத்தனை மணிக்கு வருவாரு?”

 

“பன்னிரெண்டு மணிக்கு வந்து கூட்டிட்டுப் போறேன்னு சொல்லியிருக்காங்க ராதாம்மா…”

 

“சரிம்மா… அதுக்குள்ள நான் பாப்பாவோட துணி ரெண்டு கெடக்கு… அலசி போட்டுடறேன்…”

 

“அதை அப்புறம் பார்த்துக்கலாம்… எனக்கு ரெண்டு முழம் பூ வாங்கிட்டு வந்து குடுங்கம்மா…”

 

“அதுக்கென்னம்மா… இப்போவே வாங்கிட்டு வர்றேன். என்ன பூ வேணும்? மல்லியா முல்லையா?”

 

“மல்லி வாங்கிட்டு வாங்க… இந்தாங்க பணம்…” – மதுமதி கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்ட ராதா சிட்டாகப் பறந்து சென்று பத்து நிமிடத்தில் பூவோடு வீட்டிற்குத் திரும்ப வந்துவிட்டாள்.

 

“அதுக்குள்ள வந்துட்டீங்களா?”

 

“மெயின் ரோட்டுக்குப் போனா பூக்கடை… எவ்வளவு நேரம்மா ஆகப்போகுது… இந்தா… வச்சிக்கோ…”

 

“தேங்க்ஸ் ராதாம்மா…”

 

“இருக்கட்டும்மா… ”

 

மதுமதி மல்லிகைப் பூவைத் தலையில் சூட்டிக் கொண்டாள்.

 

“ரொம்ப அழகா இருக்க மதும்மா… வெளியே போயிட்டு வந்தவுடனே சுத்தி போட்டுடறேன்…”

 

மதுமதி புன்னகையைப் பதிலாகக் கொடுத்துவிட்டு சுவர் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பன்னிரெண்டாகப் பத்து நிமிடம் இருந்தது.

 

“யாழி குட்டி… தர்மா தாத்தாவைப் பார்க்கப் போலாமா? தாத்தா… பாப்பாவைப் பார்க்க வெயிட் பண்ணிட்டு இருக்காங்க… போலாமா..?” என்று கூறியபடி குழந்தைக்கு உணவை ஊட்டிவிட்டு, முகம் துடைத்து… டையாப்பர் போட்டு… உடை மாற்றி அவளைத் தயார் செய்தாள்.

 

மணி பன்னிரெண்டே கால்… முகிலன் வரவில்லை… வாசலையும் கடிகாரத்தையும் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தவள் “ராதாம்மா… ஒரு ஜூஸ் போட்டுக் கொடுங்களேன்…” என்றாள்.

 

“சரிம்மா…” – ஐந்து நிமிடத்தில் ஆரஞ்ச் ஜூஸுடன் வந்து நின்றாள்.

 

அதைக் குடித்து முடித்துவிட்டுக் கணவனுக்காகக் காத்திருந்தாள். மேலும் ஒரு மணிநேரமாகியும் அவன் வரவில்லை. ஒரு போன் செய்து அவனுக்கு ஞாபகப்படுத்த வேண்டுமென்று அறிவு சொல்லிக்கொண்டே இருக்கிறது. ஆனால் மனம் ஒத்துழைக்கவில்லை… கைப்பேசியையும், கடிகாரத்தையும் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“மதும்மா… நேரம் ஆச்சுப் பாரு… சாருக்கு வேணுன்னா ஒரு போன் பண்ணிப் பாரேன்…” ராதா யதார்த்தமாகச் சொன்னாள்.

 

மதுமதியால் அவளுக்குப் பதில் சொல்ல முடியவில்லை… “ம்ம்ம்… பண்ணலாம் ராதாம்மா…” என்றபடி ரிமோட்டை எடுத்து டிவியைப் போட்டாள்.

 

திரையில் ஏதோ படம் ஓடிக் கொண்டிருந்தது. அதைப் பார்ப்பது போல் நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தாள்.

 

“நீ மதியம் சாப்பிடாம இருக்கியேம்மா… நான் வேணும்னா ஏதாவது செய்யட்டுமாம்மா..?”

 

“என்ன செய்வீங்க?”

 

“கொஞ்சம் லெமன் சாதம் பண்ணி… ரெண்டு உருளைக்கிழங்கை வறுத்து வைக்கிறேன்…”

 

“சரிம்மா…”

 

“நீ எதுக்கும் ஒரு தடவ சாருக்கு போன் பண்ணி பாரும்மா… வேலை ஞாபகத்துல மறந்திருக்கப் போறாரு…” மீண்டும் ஞாபகப்படுத்தினாள்.

 

ராதா சொல்வது சரிதான் என்றாலும், அவனுக்கு போன் செய்ய வேண்டும் என்று நினைத்தாலே… கடைசியாகத் துடிதுடிக்கும் இதயத்தோடும், நடுங்கும் விரல்களோடும்… தவிப்போடு அவசர அவசரமாக அன்று ஒருநாள் காவல்நிலையத்திலிருந்து அவனுடைய கைப்பேசி எண்ணை அழுத்திவிட்டுக் காத்திருந்தது தானே ஞாபகம் வருகிறது…!

 

அன்று என்ன பாடுபட்டாள்…! மறக்க முடியுமா அந்த நாளை..? அன்று துடித்த துடிப்பையும், தவித்த தவிப்பையும் நினைத்தாலே இன்று கூட மனதிற்குள் எதுவோ பாய்வது போல வலிக்கிறதே…! அன்றைய நாளில் நினைவிலிருந்து வெளியே வர முடியாமல் உள்ளுக்குள் சுருண்டாள்.

 

“நான் மாடிக்குப் போறேன் ராதாம்மா… நீங்க சமையலை முடிச்சிட்டு உங்களுக்குத் தேவையானதை எடுத்துக்கிட்டு கிளம்புங்க… போகும் போது கதவை மூடிட்டுப் போங்க…” என்று சொல்லிவிட்டுத் தூக்கத்திற்கு அழும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு படியேறினாள்.

 

அறைக்குள் சென்று புடவையைக் களைந்துவிட்டு நைட்டிக்கு மாறியவள், குழந்தையைக் கட்டிலில் படுக்க வைத்துவிட்டுத் தானும் அருகில் படுத்துக் கண்மூடினாள். மூடிய விழிகளின் வழியே வழிந்த கண்ணீர் தலையணையை ஈரமாக்கியது.

###

 

வார நாட்களில் கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்பதால் கலைவாணி மற்றும் ரேவதி ஆகிய மாணவிகளின் ப்ராஜெக்ட் தொடர்பான கூடுதல் வேலைகளுக்குச் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நேரம் ஒதுக்கியிருந்தான். அதன்படி முதல் நாள் வகுப்பிற்காக அன்று அந்த மாணவிகளோடு சோதனைக்கூடத்தில் இருந்தான்.

 

அவன் பொதுவாக மாணவர்களிடம் கொஞ்சம் இடைவெளி விட்டுத்தான் பழகுவான். கண்டிப்பான ஆசானும் கூட. ஆனால் அந்த இரண்டு மாணவிகளிடம் மட்டும் அதிகம் கண்டிப்பு காட்டாமல் நடந்து கொண்டான். முதல் காரணம்… அவர்கள் தங்களுடைய வேலைகளைச் சரியாகச் செய்துவிடக் கூடியவர்கள். இரண்டாவது… இரண்டு மாணவிகளுக்கு மட்டும் சொல்லிக்கொடுக்கும் போது அவனுடைய வேலைபளு குறைவு…

 

ரேவதி நன்றாகப் படிக்கக் கூடிய அமைதியான பெண். ஆனால் கலைவாணி கொஞ்சம் வித்தியாசமானவள். அவள் பார்க்க குழந்தை போல் இருப்பாள். படிப்பில் சுட்டி.. அதைவிடப் பேச்சில் படு சுட்டி… வாயைத் திறந்தால் வடிவேலு வசனங்களாகத்தான் வந்து விழும். சில சமயங்களில் ‘இவளுக்குச் சாதாரணமாகவே பேசத் தெரியாதோ…!’ என்று நினைப்பான் கார்முகிலன்.

 

அன்றும் அப்படித்தான் ரேவதிக்குப் பாடத்தில் ஒரு சந்தேகம் தோன்ற அதை கார்முகிலனிடம் கேட்டாள். அவன் விளக்கம் சொல்லி முடித்த அடுத்த நொடி கலைவாணியிடமிருந்து குரல் வந்தது… “எப்…படித்…தான் கண்டுபுடிக்கிறாய்ங்களோ…!”

 

“எதை..?” – சட்டென்று எழுந்த கோபத்துடன் அவளிடம் திரும்பிக் கேட்டான் முகிலன்.

 

“இந்த மாதிரி குண்டக்கா… மண்டக்கா கேள்விகளைத்தான்…” – தோழியைப் பார்த்துக் கொண்டே பதில் சொன்னாள்.

 

“வாட் இஸ் திஸ் கலைவாணி..? வொர்க் போயிட்டு இருக்கும்போது கொஞ்சம் கூட சீரியஸ்னஸ் இல்லாம..? உங்கிட்டேயிருந்து இந்த மாதிரி பேச்சுக்களை இனி நான் கேட்கக்கூடாது…” – கண்டிப்புடன் கூறினான்.

 

அவனுடைய கோபத்தில் ஒரு நொடி திகைத்தவள் “சாரி சார்…” என்றாள் மெல்லிய குரலில்.

 

பாடம் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது இது போல் அதிகப்பிரசங்கித்தனமாக யாரும் அவனிடம் பேசியதில்லை என்பதால் அவள் மன்னிப்புக் கேட்ட பிறகும் அவனுடைய கோபம் குறையவில்லை. “பிரேக் டைம்…” என்று சொல்லிவிட்டு வெளியேறிவிட்டான்.

 

‘என்ன இந்தப் பெண்… எதையாவது இப்படிப் பேசிக்கொண்டே இருக்கிறாள்…! சொன்னாலும் திருந்தமாட்டேன் என்கிறாளே…!’ யோசனையோடு கேண்டீனில் நுழைந்தவன் டீ குடிக்க நினைத்தான். எட்டு கட்டளைப் பட்டியல் ஞாபகம் வந்துவிட ஒரு கப் பால் வாங்கிக் குடித்துவிட்டு லேபிற்கு வந்தான்.

 

“ஏன்டி இப்படிப் பேசித் தொலைக்கிற? பாரு… சார் கோபமா போய்ட்டார்…” – ரேவதி கடிந்து கொண்டாள்.

 

“அந்த கட்டதுரைக்குக் கட்டம் சரியில்லன்னு நெனக்கிறேன்… இந்த கைப்புள்ளைகிட்ட மோதுறதே வேலையா போச்சு…” என்றாள் சீரியசாக.

 

அவர்களுடைய பேச்சைக் காதில் வாங்கிக்கொண்டே லேபிற்குள் நுழைந்த கார்முகிலன், மானசீகமாகத் தலையிலடித்துக் கொண்டான்.

 

‘திருந்தாத ஜென்மம்…’ – என்று நினைக்கையிலேயே ‘இவளுடைய இயல்பே இதுதான் போல…’ என்கிற எண்ணம் தோன்றி அவனைச் சமாதானம் செய்ய… வகுப்பு மீண்டும் ஆரம்பமானது.

 

பதினொரு மணிவரை லேபில் இருந்துவிட்டு, பன்னிரெண்டு மணிக்கு வீட்டுக்குச் சென்று மதுமதியை அழைத்துக்கொண்டு தேனிக்கு வந்து தர்மராஜைச் சந்திக்க வேண்டும் என்பது தான் அவனுடைய திட்டம். ஆனால் ப்ராஜெக்ட் வேலைகளில் மும்முரமாக மூழ்கிவிட்டவன் நேரத்தை மறந்துவிட்டான்.

 

மாலை மூன்று மணியானதும் மாணவிகளின் முகத்தில் சோர்வு தெரிந்தது…

 

“என்னாச்சு..? திடீர்னு டல்லாயிட்டீங்க ரெண்டு பேரும்..? ஏதாவது டவுட்டா..?”

 

“ஃபுல் டே கிளாஸுன்னு சொல்லியிருந்தா லஞ்ச் பாக்ஸ்சோட வந்திருப்போம்ல சார்…” – ரேவதியை முந்திக் கொண்டு கலைவாணி பதில் சொன்னாள்.

 

அவன் கையைத் திருப்பி மணி பார்த்தான். “மூணு…” – கலைவாணி குரல் கொடுத்தாள். ஒரு நொடி அவளை முறைத்தவன்,

 

“சரி… இந்த மாட்யூலை மட்டும் முடிச்சுட்டுக் கிளம்பலாம்…” என்றான். அவன் முடிப்பதற்குள் “சார்… எனக்கு பேஸ்மெண்ட் மட்…டும் வீக் இல்ல சா…ர்… பில்டிங்கே வீக்கு… தா…ங்க மாட்டேன்…” என்றாள்.

 

அவளைத் திருத்த முடியாமல் அவன் அவளுடைய பேச்சிற்குப் பழகிவிட்டான். அதோடு அவள் சினிமா வசனத்தைச் சொல்லும் விதம்… அவனுடைய கட்டுப்பாட்டையும் மீறி முகத்தில் லேசான புன்னகையைக் கொண்டு வந்தது.

 

“இப்போ தானே பிரேக் விட்டேன்? அதுக்குள்ள உனக்கு என்ன பசி..?” கோபம் இல்லாத குரலில் கேட்டான்.

 

“அது போன மாசம்… இது இந்த மாசம்…”

 

“உதை வாங்க போற… கிளாஸ் ஆரம்பிச்சு ஒரு நாள் கூட முடியல… அதுக்குள்ள ஒரு மாசமாயிடுச்சா? வடிவேலு டயலாக் பேசனுங்கிறதுக்காக எதையாவது உளறாத…” – அவளுக்கு இணையாகத் தானும் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை உணராமல் பேசினான்.

 

“உளறலா…! ஓ கா….ட்…” – தலையில் கை வைத்துக்கொண்டாள்.

 

அவன் வாய்விட்டே சிரித்துவிட்டான். “இருக்கறது நாலு எலும்பு… ஒரு லிட்டர் ரத்தம்… அதைப் போர்த்த ரெண்டு மீட்டர் தோல்… இந்த உடம்புக்குப் பசி வேற… சாப்பாடு வேற… கொடுமடா…”

 

“சார்… எதைப் பத்தி வேணும்னாலும் பேசுங்க… ஆனா என்னோட பர்ஸ்னால்டியைப் பத்தி மட்டும் பேசாதீங்க…”

 

“ஏன்..? பேசுனா என்ன செய்வ?”

 

“பேசிக்கோங்கன்னு விட்டுடுவேன் சார்… இப்போ எங்களை லஞ்சுக்கு விடுங்க சார்…” – சட்டென்று பின்வாங்கினாள்.

 

“இங்க பார்… பேசிப் பேசி டைம் வேஸ்ட் பண்ணாத… உன்னால ரேவதிக்கும் லேட்டாகுது… சீக்கிரம் வொர்க்கை முடிச்சிட்டுக் கிளம்பு…”

 

“என்னது… இன்னமும் வொர்க் பண்ணனுமா….! வேண்…டா…ம்… பசிக்….குது… அப்புறம் அழுதுடுவேன்…”

 

“இவ்வளவு ரணகளத்துளையும் உனக்குக் குதூகலம் கேக்குது… ம்ம்ம்..? பசிச்சாலும் சினிமா டியலாக்க மட்டும் விடமாட்டேங்கிற? ரேவதிக்காக இன்னிக்கு விடறேன்… அடுத்த வாரம் சொன்ன வேலையை ஒழுங்கா முடிக்காம டயலாக் பேசிக்கிட்டு இருந்த… லேப்லயே வச்சுப் பூட்டிட்டுப் போய்டுவேன்… கிளம்புங்க…” என்று அதட்டி அவர்களை அனுப்பி வைத்துவிட்டுத் தானும் வீட்டுக்குப் புறப்பட்டான்.

 

சோதனைக்கூடத்திலிருந்து வெளியேறி விட்டாலும் ப்ராஜெக்ட் பற்றிய சிந்தனைகளிலிருந்து வெளியேறாதவனுக்கு, லக்ஷ்மிபுரத்திற்கு வந்து சேரும் வரை மதுமதி தனக்காகக் காத்திருப்பாள் என்கிற நினைவு வரவே இல்லை.

 

அவன் வாசலில் வண்டியை நிறுத்தும் பொழுது கைப்பேசி ஒலித்தது. எடுத்துப் பார்த்தான்… தர்மராஜ் தான் அழைத்தார்.

 

“சொல்லுங்க சார்…”

 

“என்னத்தடா சொல்லணும்? இன்னிக்கு மதுவையும், குழந்தையையும் கூட்டிட்டு வர்றேன்னு சொல்லிட்டு… ஏன்டா வரல?”

 

“ஆஹா… சுத்தமா மறந்துட்டேன் சார்… இப்பதான் லேப்லேருந்து வந்தேன்… ஐயோ… மதியை வேற கிளம்பி இருக்கச் சொல்லிட்டுப் போயிருந்தேன்… அடடா… மதியமே நீங்க ஒரு போன் பண்ணியிருக்கலாம்ல சார்..?”

 

“எனக்கு என்னடா தெரியும்? நீ வருவேன்னு பார்த்துகிட்டே இருந்தேன்… அப்புறம் ஏதோ வேலையா இருக்கற போலிருக்குன்னு நெனச்சு விட்டுட்டேன்…”

 

“சரி சார்… நான் இன்னும் கொஞ்சநேரம் கழிச்சுக் கூப்பிடறேன்…” என்று சொல்லி போனைத் துண்டித்துவிட்டு அழைப்புமணியை அடித்தான். ராதாம்மா தான் கதவைத் திறந்தார்கள்.

 

“மதி எங்க..?” உள்ளே நுழையும்பொழுதே மனைவியைக் கேட்டுக்கொண்டே நுழைந்தான்.

 

“மாடில இருக்கு சார்… என்கிட்டச் சொல்லி பூவெல்லாம் வாங்கிட்டு வரச்சொல்லி வச்சுக்கிட்டு உங்களுக்காக ரொம்ப நேரமா காத்துக்கிட்டு இருந்துச்சு… நீங்க வரலைன்னதும் அதுக்கு முகமே செத்துப் போயிட்டு… சாப்பிட கூட இல்ல…” ராதாவின் குரலில் வருத்தம் இழையோடியது.

 

“ம்ம்ம்… கொஞ்சம் வேலைல பிஸியா இருந்துட்டேன்.”

 

“சரி சார்… வேலையெல்லாம் முடிச்சுட்டேன்… மதும்மா கதவைச் சாத்திட்டுப் போகச் சொன்னிச்சு… எனக்குத்தான் அதைத் தனியா விட்டுட்டுப் போக மனசே வரல… அதான் உங்களுக்காகக் காத்துக்கிட்டிருந்தேன். நான் கெளம்புறேன்…” என்று சொல்லிவிட்டு வெளியேறினாள். முகிலன் கதவை அடைத்துவிட்டு மாடிப்படிகளில் ஏறினான்.

 

குழந்தையை அணைத்தவாறு ஒருக்களித்துக் கண்களை மூடியபடி உறங்குவது போல் படுத்திருந்த மனைவியைக் கண்களால் பருகினான். அவள் வைத்திருந்த பொட்டு, குங்குமம், பூ எதுவுமே கலையவில்லை. அவள் அணிந்திருந்த சின்னச் சின்ன கூடுதல் நகைகள் கழுத்திலும், காதிலும் மிளிர நைட்டியிலும் தேவதை போல் தோற்றமளித்தாள். சிறிதுநேரம் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன் கையிலிருந்த புத்தகத்தையும் வண்டி சாவியையும் மேஜை மீது வைத்துவிட்டு… கைகால் கழுவி உடை மாற்றிக்கொண்டு வந்தான்.

 

மெல்லிய குறட்டையுடன் சின்னதாக வாயைத் திறந்தபடி எச்சில் வழிய உறங்கும் குழந்தையை ஆசையோடு பார்த்தவன்… மகளுக்கு அருகில் அமர்ந்து ‘பொம்முகுட்டி…’ என்றபடி அலுங்காமல் அவளின் குண்டு கன்னத்தில் ஒரு முத்தம் வைத்தான். பிறகு மனைவிக்கும் ஒன்று கெடுக்கும் ஆசையில்… தன் முகத்தைக் குழந்தையைக் கடந்து அவள் பக்கம் நகர்த்தினான்.

 

அதுவரை உறங்குவது போல் கண்களை மூடிப் படுத்திருந்தவள் சட்டென்று கண்விழித்தாள். மிக அருகிலிருந்த முகிலனின் முகத்தைக் கண்டு விழிவிரித்தவள்… பின் ‘என்ன..?’ என்று புருவம் சுருக்கி கண்களால் கேட்டாள்.

 

விரிந்த அவள் விழிகளை ஆசையோடு பார்த்தவன்… சுருங்கும் புருவ மத்தியில் இதழ் பதித்து “சாரி…” என்றான். அவள் பதில் பேசாமல் கண்களை மூடிக்கொண்டாள். அவள் கோபத்தைப் புன்சிரிப்புடன் ரசித்தவன் மூடிய இருவிழிகளிலும் முத்திரையைப் பதித்து மீண்டும் “சாரிடி… வேலைல… மறந்துட்டேன்…” என்றான்.

 

அவனுடைய மென்மையான முத்தத்தில் வெளிப்பட்ட ஆழமான காதலை சிறிதும் உணராமல், இயந்திரம் போல் எழுந்து அமர்ந்து “மதியம் சாப்பிட்டிருக்க மாட்டீங்க… வாங்கச் சாப்பிடலாம்…” என்றாள்.

 

“மதி… உண்மையிலேயே வேலை ஞாபகத்துல மறந்துட்டேன்டி…” – கொஞ்சலாகக் கெஞ்சினான்.

 

அவள் முகத்திலும் குரலிலும் கோபம் என்பது மருந்துக்கும் இல்லை. மிகச் சாதாரணமாக “அதை விடுங்க… வாங்க சாப்பிடலாம்…” என்று சொல்லிவிட்டுக் கட்டிலிலிருந்து எழுந்து கீழே சென்றுவிட்டாள்.

 

மதுமதி மிகவும் பக்குவப்பட்ட பெண்ணைப் போல் நடந்து கொண்டாலும்… அவளுடைய அமைதியைப் பக்குவம் என்று அவன் நினைக்கவில்லை. மனதோடு மனம் கலந்து… உணர்வுகளைப் பகிர்ந்து… ஒருவருக்குள் ஒருவர் கரைந்து… அந்நோன்யமாக வாழாமல்… தாமரை இலை தண்ணீர் போல் ஒட்டாமல் வாழ்கிறாள் என்பதை அவள் இன்னொரு முறை உணர்த்திவிட்டுப் போகிறாள் என்று நினைத்தான்.

 

சுள்ளென்று கோபம் வந்தது… தடதடவென்று படியிறங்கி வந்தான். டைனிங் டேபிளில் தட்டை வைத்துப் பரிமாறிக் கொண்டிருந்தவள், கணவனைக் கண்டதும் “உட்காருங்க…” என்றாள்.

 

“சாப்பிடறதெல்லாம் இருக்கட்டும்… நான் வர்றதுக்கு லேட்டானதும் போன் பண்ணி என்னைக் கூப்பிட வேண்டியது தானே?” – ஆத்திரத்துடன் கேட்டான்.

 

அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். தீர்க்கமான அந்தப் பார்வையை முகிலன் புரிந்து கொள்ளவில்லை.

 

“பாதித் தப்பை நீ பண்ணிட்டு… என்னை என்னவோ கொலைக் குற்றவாளி மாதிரி பார்த்தா என்ன அர்த்தம்? பதில் சொல்லு…” கடுமையாக ஒலித்தது அவன் குரல்.

 

“போன் பண்ணினா மட்டும் உடனே ஓடி வந்துடுவீங்களா..? என்னால உங்களுக்கு போன் பண்ண முடியல… இனியும் பண்ண முடியுமென்று தோணல… இனி இதைப்பற்றி எதுவும் என்கிட்ட கேக்காதீங்க…” உதடு துடிக்கப் படபடவென்று சொல்லிவிட்டு அந்த இடத்திலிருந்து நகர்ந்துவிட்டாள்.

 

அடி…! சரியான அடி கொடுத்துவிட்டுப் போய்விட்டாள். நிலைகுலைந்து போன கார்முகிலன் அப்படியே சேரில் சரிந்து அமர்ந்தான். ‘மறக்கவே போறதில்ல… கடைசிவரைக்கும் இப்படியே தான் இருக்கப் போறா… எப்படி மறப்பா..? மறக்கக்கூடிய காரியத்தையா செஞ்சோம். அழுதாளே…! சொல்றதைக் கேளுங்க மாமான்னு கெஞ்சினாளே…! கேட்டோமா..?’ – வெறும் வார்த்தைகள் கூட இவ்வளவு காயப்படுத்துமா…! கற்சிலை போல் அமர்ந்திருந்தான்.

 

தன் உணர்வுகள் கட்டுக்குள் வந்த பிறகு அரை மணிநேரம் கழித்து டைனிங் ஹால் பக்கம் வந்த மதுமதி, கணவன் அதே இடத்தில் அசையாமல் சிலைபோல் அமர்ந்திருப்பதைக் கண்டு அருகில் வந்தாள். கருமையான முகம் மேலும் கருத்திருக்க… கோவைப்பழம் போல் சிவந்திருந்த கண்களோடு சுவற்றை வெறித்துக் கொண்டிருந்தான். தன்னுடைய வார்த்தை அவனைக் காயப்படுத்திவிட்டது என்பதைப் புரிந்து கொண்டாள்.

 

தரையில் மண்டியிட்டு அமர்ந்து, அவன் கையைப் பிடித்துக்கொண்டு “எதுக்கு உங்களை இவ்வளவு வருத்திக்கறீங்க… மறந்துடுங்க… பழைய மதுமதி செத்துட்டா… இனி அவ இல்ல… இந்தப் புது மதுமதியைப் புரிஞ்சுக்கோங்க… இவளோட தான் இனி உங்க வாழ்க்கை… இந்த வாழ்க்கையில இருக்கிற சந்தோஷத்தை அனுபவிக்க முயற்சி பண்ணுங்க…” அறிவுரை என்கிற பெயரில் அவனுடைய இழப்பை எடுத்துரைத்து, அவன் மனக்காயத்தை இன்னும் குத்திக் கிளப்பிக் கொண்டிருந்தாள்.

 

அதுவரை அவளுக்காக வருத்தப்பட்டுக் கொண்டிருந்தவனின் மனநிலை நொடியில் மாறியது. தன் காலடியில் அமர்ந்து சத்தமில்லாமல் அமைதியாகவே தன்னை வெட்டி சாய்த்துக் கொண்டிருப்பவளை வெறியோடு பார்த்தவன், அவளிடம் சிக்கியிருந்த தன் கையை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு “பொண்ணாடி நீ..? ரா…ட்…சசி..டி…” என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டான்.

 

அவனுடைய துன்பத்தின் அளவு என்னவென்பதை அவள் புரிந்து கொண்டாலும், அவளால் அவனுக்கு ஆதரவாக எதுவும் செய்ய முடியவில்லை. இருவருக்குமே அன்று வருத்தம் மட்டும் தான் மிஞ்சியது.




2 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sasi Rekha says:

    Nice going


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nirmala Sundaram says:

    Nice

You cannot copy content of this page