மயக்கும் மான்விழி-6
4890
0
அத்தியாயம் – 6
“காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?”
“பெரியப்பா… ருத்ரன் நாம நெனச்சதவிடப் பொல்லாதவனா இருக்கான்… எங்க எல்லாருகிட்டேருந்தும் நெலத்தப் புடிங்கிப்புட்டான்… உங்ககிட்டேருந்து எப்படியும்…” அவன் முடிப்பதற்குள் சீறினார் சிதம்பரம்.
“வாயக் கழுவுடா வீணாப் போனவனே… காதலிச்சானாம் காதலு… பெரிய மன்மதராசா இவரு… நீங்கல்லாம் சில்லற பயலுவடா… அதான் அந்தப்பய சாச்சுப்புட்டான்… ஆனா நா சிங்கம்டா… என்னோட ஒவ்வொரு சொத்தும் ஏழு தலைமுறைக்கு ஆராஞ்சு வாங்கினது… ஒரு வில்லங்கமும் இருக்காது… என்ன எவனும் அசைக்க முடியாதுடா…”
“அதுசரி… நானும் என்ன பத்தி அப்புடித்தான் நெனச்சேன்…” மெல்லிய குரலில் சொன்னான் கோபால்.
அவர் கோபப்படாமல் அவனைச் சிந்தனையுடன் பார்த்தான்.
“மொத ரெண்டு பேருகிட்டயும் நெலத்தப் பணயமா வச்சுத்தான் நாலாங்கர நெலத்த எழுதி வாங்கினான். அதுனாலதான் நா என்னோட நெலத்துல இருக்க வில்லங்கத்த எல்லாம் சரி பாத்துக்கிட்டு இருந்தேன்… இவன் என்னடான்னா நெலத்த விட்டுபுட்டு என் காதல்ல கைய வச்சுப்புட்டான்… பயபுள்ள புத்திசாலியாப் பொறந்துட்டான்… நீ பத்தரமா இரு பெரியப்பா….”
“அட… எனக்கு எந்தக் காதலிடா இருக்கா… காலம் போன கடசில காதலா(ம்)… காதலு… எம்மேல கை வைக்க முடியாதுடா கோவாலு…” அவருடைய குரலில் பழைய நம்பிக்கை இல்லை.
‘ம்கும்… பெருசுக்கு மீச நெரச்சுப் போச்சு நெனப்பப் பாரு…’ என்று நினைத்தவன் அவரைச் சீண்டினான்.
“காதலி இல்லன்னா என்ன பெரியப்பா… டவுனுக்கு அடிக்கடிப் போற… செட்டப்பு கிட்டப்புன்னு ஏதும்…!”
“அடிங்க… தறுதலப்பயலே… யாருகிட்ட என்ன பேசுறதுன்னு புத்தி வேண்டாம்…” அவர் தோளில் கிடந்த துண்டை உதறிக்கொண்டு ஆவேசமாகக் கட்டிலிலிருந்து எழுந்தார்.
“அட அதுக்கில்ல பெரியப்பா… எதுக்குக் கோவப்படற…? இப்பெல்லாம் ரகசியமா நடக்குற சங்கதியெல்லாம் பொசுக்குப் பொசுக்குன்னு ஃபோட்டா எடுத்து டிவியில போட்டுபுட்றானுவ… நம்பப் பக்கம் வில்லங்கம் இருந்தா உஷாரா இருக்கணுமுள்ள அதாங் கேட்டே(ன்)…”
அவர் மேல்மூச்சு வாங்கப் பேசினார்…
“அதெல்லாம் ஒரு கருமாதியும் இல்லடா…” என்று ஆரம்பித்தவர் அவனை அசிங்கமாகத் திட்டியதோடு “அந்தப்பயல நா பாத்துக்குறேன்… நீ மொதல்ல இங்கேருந்துப் போயித் தொலடா…” என்று கடுப்படித்து கோபாலை விரட்டிவிட்டார்.
இவர் இங்கு ருத்ரனால் தனக்கு என்ன சிக்கல் வரக்கூடும் என்று யோசிப்பதற்குள் அங்கு ருத்ரன் அவரை எப்படிச் சிக்க வைப்பது என்று முடிவு செய்துவிட்டான்.
# # #
ருத்ரன் அவனுடைய அறையில் என்றும் இல்லாதவிதமாக அன்று சிறிது பரபரப்புடன் அமர்ந்திருந்தான். கைப்பேசி அழைத்தது…. எடுத்துப் பார்த்தான். அவனுடைய நண்பனும் ஒன்றுவிட்ட சகோதரனுமான வைத்திலிங்கம்தான் அழைத்தான்…
“சொல்லு… எல்லாம் ரெடியா…?”
“ரெடிடா…”
“எங்க இருக்க…?”
“காலேஜ் வாசல்ல…”
“சரி… கச்சிதமா முடிச்சிட்டுக் கூப்பிடு…”
“ருத்ரா…”
“சொல்லுடா…”
“நல்லா யோசிச்சிட்டியா…”
“யோசிக்காமதான் உன்ன அனுப்பினேனா…?”
“பொம்புளப் புள்ள சமாச்சாரம்டா…”
“காட்டை வெட்டிச் சாச்சவன்டா நான்… கம்பு பிடுங்கவா பயப்படப் போறேன்… நீ நா சொன்னத மட்டும் செய்யி…”
“சரிடா…”
“வைத்தி…”
“சொல்லுடா…”
“இது என்னோட மானப்பிரச்சன… எந்தத் தப்பும் நடந்துடக் கூடாது…”
“நீ நெனச்சபடி எல்லாம் நடக்கும்… இன்னும் ஒரு மணிநேரத்துலக் கூப்பிட்றேன்…” என்று சொல்லிவிட்டுப் பேச்சை முடித்துக் கொண்டான்.
# # #
“The term Neural Network was traditionally used to refer to a network or circuit of biological neurons. The modern usage of the term, often refers to artificial neural networks, which are composed of artificial neurons or nodes”
சிலும்பல் இல்லாமல் போடப்பட்ட கொண்டையும்… மூக்குக் கண்ணாடியும்… கையில் தடியான புத்தகமுமாக அந்தச் சிறு மேடையில் நின்று கொண்டிருந்த மத்திய வயது பெண்மணி… தன்முன் பெஞ்சில் அமர்ந்து டெஸ்க்கில் கையை ஊன்றி நோட்ஸ் எடுப்பது போல் பாவனைச் செய்து கொண்டு… கண்களைத் திறந்து வைத்துக் கொண்டே உறங்கிக் கொண்டிருந்த மாணவிகளுக்கு நியூரல் நெட்வொர்க்ஸ் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
“வணக்கம் மேடம்…” ஓர் ஆணின் குரல் இடையிட்டது. விரிவுரையாளர் வாசல்பக்கம் திரும்பிப் பார்த்துக் கேட்டார்…
“யார் நீங்க…? என்ன வேணும்…?”
“எம்பேரு பரமன். மான்விழிங்கற பொண்ணு இங்கதானே படிக்குது. அவங்க அப்பா வெளிய வெயிட் பண்ணுறாரு. மான்விழியக் கூட்டிக்கிட்டு வரச் சொன்னாரு…”
“மான்விழி… இவரை உனக்குத் தெரியுமா…? ”
“தெரியும் மேடம்… எங்க ஊர்தான்…” பரமனைத் தன்னுடைய தந்தையுடன் அடிக்கடி பார்த்திருந்த ஞாபகத்தில் மான்விழி சொன்னாள்.
“சரி… போய் என்னன்னு கேட்டுட்டுச் சீக்கிரம் வந்துடு…”
“தேங்க் யு மேடம்…” மான்விழி ஆசிரியைக்கு நன்றி சொல்லிவிட்டு வகுப்பறையிலிருந்து வெளியே வந்தாள்.
“என்ன விஷயம்…? ஏன் அப்பா காலேஜூக்கு வந்திருக்காரு….? எங்க இருக்காரு…?”
“விஷயம் என்னன்னு தெரியலம்மா… காம்பௌண்டுக்கு வெளிய கார்ல காத்துட்டு இருக்காரு…”
“காம்பௌண்டுக்கு வெளியவா…?” அவள் அவனை லேசான சந்தேகத்துடன் பார்த்தாள்.
அவன் அவளுடைய பார்வையை லட்சியம் செய்யாமல் முன்னே நடந்தான். அவனுடைய பதட்டமின்மை அவளுக்குள் முளைவிட்ட சந்தேகத்தை நசுக்கிவிட்டது. அவள் அவனைப் பின் தொடர்ந்து, காத்திருக்கும் காரை அடைந்தாள்.
இவள் அருகில் நெருங்கியதும் பட்டென்று காரின் கதவு திறந்து கொண்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் இருகரங்கள் அவளை உள்ளே இழுத்துக் கொள்ள, கார் புயல்வேகத்தில் புழுதியைக் கிளப்பிக் கொண்டு பறந்தது.
# # #
தன்னுடைய அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த பேரனை குழப்பமாகப் பார்த்தபடி தரையில் கால் நீட்டி அமர்ந்து வெற்றிலையை மடித்து வாய்க்குள் திணித்தபடி கேட்டார் வள்ளி பாட்டி…
“ஏன் ராசா… என்னா இன்னைக்கி எல்லாரையும் வீட்டுலையே புடுச்சு வச்சுட்டு… நீயும் இப்புடி குறுக்கையும் நெடுக்கையும் நட பழவிகிட்டிருக்க….?”
“கொஞ்சநேரம் பேசாம இரு ஆச்சி…”
“அது சரி…”
அவனுடைய கைப்பேசி அழைத்தது.
“ம்கும்…. மனுசாளுகிட்டப் பேசுறியளோ இல்லையோ… இந்த சோப்பு டப்பாவுகிட்ட பேசாம இருக்குறதுல்ல…” என்று பாட்டி அலுத்துக் கொண்டிருக்க ருத்ரன் கைப்பேசியை எடுத்துக் கேட்டான்…
“வைத்தி… என்னாச்சு…?”
“காரியம் முடிஞ்சுது….”
“என்ன பண்றா…?”
“மயக்கத்துல இருக்கா… அரை மணிநேரத்துல ஊருக்குள்ள வந்துடுவோம்…”
“சரி…” கைப்பேசியை அணைத்துவிட்டுப் பாட்டியை நிமிர்ந்துப் பார்த்தான். ஏதோ ஒரு தயக்கம் அவன் கண்களில் தெரிந்தது.
“என்னய்யா…?” பாட்டி ஆதரவாகக் கேட்டார்.
“பெருமாள் கோயிலுக்குக் கெளம்பணும் ஆச்சி…”
பாட்டியின் பார்வை கூர்மையாகியது.
“பெருமாள் கோயிலுக்கா… என்ன ராசு இந்நேரத்துல…?”
“ஆச்சி…”
“சொல்லு ராசா…”
“நான் கல்யாணம் பண்ணிக்கலாமுன்னு இருக்கேன்… ”
“என்னாது…. கல்யாணமா…?” பாட்டிக்கு அதிர்ச்சியில் குரல் உயர்ந்தது.
பொறுமையாகப் பேசி சமாதானம் செய்வதற்கு நேரமில்லை என்பதால்… பாட்டியின் குரலை அடக்கும்விதமாக அவன் அழுத்தத்துடன் பேசினான்.
“ஆச்சி… எந்த விளக்கமும் இப்பக் கேக்காத… இன்னைக்குதான் கல்யாணம்… பொண்ணு கோயிலுக்கு வந்துகிட்டு இருக்கு… அதுக்குள்ள நாம அங்க போகணும்… சீக்கிரம் கீழப் போயி எல்லாரையும் ரெடியாகச் சொல்லு… பத்து நிமிஷத்துல கார் வாசலுக்கு வரும் எல்லாரும் ஏறியாகணும்…” கட்டளையிட்டான்.
“பொண்ணு யாரு…? நம்பச் சாதியா இல்ல வேத்துச் சாதியா…?” பாட்டியின் குரலில் கலக்கம் விரவிக்கிடந்தது.
சட்டெனப் பாட்டியின் முகத்தைத் திரும்பிப் பார்த்தான்.
‘வீட்டுக்குள்ளயே உன்ன வச்சுக்கிட்டு ஊரத் திருத்தணுமுன்னு நா நெனச்சா முடியுமா…!’ என்று நொடியில் எழுந்த எரிச்சலை நேரடியாகக் காட்டமுடியாமல்,
“நம்ம சாதிதான்… நம்ம ஊருதான்… நமக்குப் பொண்ணு எடுக்குற மொறதான்… கவலைப்படாம கெளம்பு…” என்றான் முறைப்புடன் அழுத்தமாக.
அந்தப் பதில் பாட்டியை சாந்தப்படுத்த அவனுடைய முறைப்பை அலட்சியப்படுத்தி “சரிப்பா…” என்று சொல்லிவிட்டு பரபரப்புடன் கீழே சென்றார்.
பேரன் வேற்றுஜாதிப் பெண் யாரையும் குடும்பத்திற்குள் இழுத்துக் கொண்டு வரவில்லை என்பதே போதுமானதாக இருந்தது அந்த மூதாட்டிக்கு.
வீட்டில் அனைவருக்குமே ருத்ரனின் இந்தத் திடீர்க் கல்யாணம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஒவ்வொருவரும் தங்களுக்குள் எதையெதையோ முணுமுணுத்தாலும் ருத்ரன் உறுதியாகச் சொல்லிவிட்டப் பிறகு அவனை எதிர்த்துக் கேட்கத் துணிவின்றிக் கோவிலுக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.
சரியாகப் பத்துநிமிடத்தில் வீட்டுவாசலில் வந்து நின்ற கார் ருத்ரனின் குடும்பத்தினரை ஏற்றிக்கொண்டு ஊர் எல்லையில் இருக்கும் பெருமாள் கோவில் நோக்கிச் சென்றது.
யாருக்குத் திருமணம் என்றே தெரியாமல் ஐயர் திருமண ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார். அந்தப் பக்கம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் கோவிலில் நடக்கும் திருமண ஏற்பாட்டினால் கவரப்பட்டு அந்தப் பக்கமே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். அந்த வழியாகக் கடைக்கு… வயலுக்கு… ஆடுமாடு மேய்க்கச் செல்லும் சில பெரியவர்களும் கோவிலை எட்டிப் பார்த்துவிட்டு ஐயரிடம் விபரம் கேட்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தார்கள்.
பெரியவீட்டின் கார் கோவில் வளாகத்திற்குள் நுழைந்தது. அதைத் தொடர்ந்து ருத்ரன் தன் புல்லட்டில் வந்து இறங்கினான். அங்கிருந்த சிலரின் ஆர்வம் அதிகமானது. கடையாவது… வயலாவது… ஆடு மாடாவது… என்று அனைத்தையும் உதாசினப்படுத்திவிட்டுக் கோவிலில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் அங்கேயே நின்றுவிட்டார்கள்.
பெரியவீட்டு மக்கள் முகத்திலிருந்த இறுக்கம் தூரத்தில் ஆலமரத்தடியிலும்… டிராமா போடும் மேடையிலும்… சத்திரத்தில் நின்றபடிக் கோவிலை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் யாரையும் அவர்களிடம் நெருங்கவிடாமல் தடுத்தது.
சற்றுநேரத்தில் வைத்தியின் கார் வந்து நின்றது. அதிலருந்து வைத்தி, வைத்தியின் தோழன் மற்றும் ஓட்டுனர் மூவரும் இறங்கினார்கள். அவர்களிடம் சென்று ருத்ரன் எதையோ பேசினான். பின் அம்மாவையும் அண்ணியையும் கைகாட்டி அழைத்தான். அவர்கள் காரை நெருங்கியதும் அவர்களிடம் எதையோ சொன்னான். அவர்கள் அதிர்ச்சியுடன் அவனிடம் எதையோ கேட்டார்கள். அவன் சிடுசிடுப்பது போல் அவர்களுக்குப் பதில் சொன்னான். பெண்கள் இருவரும் கப்பென்று வாயை மூடிக் கொண்டார்கள்.
பிறகு மாமியாரும் மருமகளும் ஷாலால் முக்காடு போடப்பட்ட ஒரு பெண்ணை காருக்குள்ளிருந்து கைத்தாங்கலாக இறக்கி மணமகள் அறைக்குள் அழைத்துச் சென்றார்கள்.
தூரத்திலிருந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களின் ஆர்வம் அதிகமானது. கண்களை அகலமாக விரித்து வைத்துக் கொண்டு நடப்பதை இன்னும் தெளிவாக உள்வாங்க முடியுமா என்று முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்களுக்குத் தீனிப்போடுவது போல் மந்திரம் ஓதிக்கொண்டிருந்த ஐயர் சைகை காட்டியதும் ருத்ரன் மணவறையில் வந்தமர்ந்தான். பார்த்துக் கொண்டிருந்தவர்களின் விழிகள் வெளியே வந்து குதித்துவிடும் அளவிற்கு விரிந்தது.
அடுத்தச் சில நிமிடங்களில் லேசாகத் தொங்கிப் போன தலையுடன் மிதமான மணமகள் அலங்காரத்துடன் ஒரு பெண் அழைத்து வரப்பட்டு மணவறையில் அமர வைக்கப்பட்டாள். இப்போது அவளுடைய முகத்தை அனைவருக்கும் பார்க்க முடிந்தது.
“இந்தப் பொண்ணா…!” “மானு….!” “சிதம்பரத்தண்ண பொண்ணு மானு…!” என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அதிர்ந்தார்கள். வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களின் இதயத்துடிப்பு பலநூறு மடங்கு அதிகமாகிவிட்டது. அதில் சிதம்பரத்திற்கு வேண்டிய சிலர் அவருக்குச் செய்திச் சொல்ல தெற்குத்தெருப் பக்கம் ஓடிக் கொண்டிருந்தபோது… இங்கு ருத்ரன் மான்விழியின் கழுத்தில் மங்கலநாணைப் பூட்டிவிட்டான்.
தாலிக் கட்டிமுடித்த அடுத்த நொடியே வைத்தி தங்களுடைய பங்காளிகளுக்கு போனில் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொல்லி பெரியவீட்டில் கூடும்படி சொல்லிவிட்டுக் கோவிலில் இருந்தவர்களைக் கிளப்பி வீட்டிற்கு அழைத்துக் கொண்டு சென்றான்.
Comments are closed here.