உனக்குள் நான்-7
4569
0
அத்தியாயம் – 7
தன்னுடைய உரிமைகள் எதையும் தடை சொல்லாமல் அழகாகக் குடும்பம் நடத்தும் மனைவி, தன்னிடம் எந்த உரிமையையும் எடுத்துக்கொள்ளாமல் விட்டேற்றியாக வாழ்வது கார்முகிலனுக்கு வெறுப்பாக இருந்தது. அவளை மாற்றவும் முடியாமல், அவளைப் போல் விட்டேற்றியாக வாழவும் முடியாமல் நட்டாற்றில் தத்தளித்தான்.
நீண்டநேரம் பனிக்காற்றில் பால்கனியில் அமர்ந்து இருட்டை வெறித்துக் கொண்டிருந்தவன் அலைபாயும் மனதை அமைதிபடுத்த முடியாமல் அறைக்குள் வந்தான். மதுமதி குழந்தையை அணைத்துக் கொண்டு சுருண்டு படுத்திருந்தாள்.
பிரச்சனையெல்லாம் முடிந்து சமாதானமாகி வீட்டிற்கு வந்ததிலிருந்தே இப்படித்தான் நத்தை போல் சுருண்டு படுத்துக்கொள்கிறாள். அவளுடைய இந்தப் புதுப் பழக்கம் கூட அவனை வருத்தியது. ‘பாதுகாப்பில்லாமல் உணர்கிறாள்…’ என்று நினைத்தவன் அவளை இறுக்கமாக அணைத்துக்கொண்டு படுத்தான். அவள் கண்விழித்துத் திரும்பிப் பார்த்தாள். விடிவிளக்கின் வெளிச்சத்தில் கணவனின் ஏக்கமான முகம் கண்ணில் பட்டது. இருவர் மனதிலும் ஊடல் நிறைந்திருந்தாலும், அவர்களுடைய கூடலை அது எந்தவிதத்திலும் தடை செய்யவில்லை.
மறுநாள் அதிகாலை கண்விழித்த மதுமதி, இரண்டு பக்கமும் இரு குழந்தைகள் தன்னை அணைத்துக்கொண்டு படுத்திருப்பதை உணர்ந்து மெலிதாகப் புன்னகைப் பூத்தாள். விடுபட்டு எழ முயன்றாள். முடியவில்லை… ‘சிறு குழந்தை விட்டாலும்… வளர்ந்த குழந்தை விடாது போலிருக்கு…!’ என்று நினைத்தபடி நீண்டநேரம் விழித்தே கிடந்தாள்.
பழைய நினைவுகள் அவள் மனதில் நிழலாடின. திருமணம் ஆனதிலிருந்து தினமும் அவள் இடுப்பை வளைத்துக் கொண்டு உறங்குவது தான் அவன் வழக்கம். ‘எப்போவுமே இப்படிப் படுத்தால் தான் இவனுக்குத் தூக்கம் வரும்…’ என்று சிரிப்புடன் நினைத்தவளுக்குத் திடீரென்று அந்த எண்ணம் வந்தது.
‘நம்மைப் பிரிஞ்சு இருந்தபோது கூடத் தூங்கத்தானே செஞ்சிருப்பான்… அப்போ மட்டும் நாம தேவைப்படலையே…!’ சிரித்தபடியிருந்த அவள் முகம் உணர்ச்சிகளைத் தொலைத்துவிட்டு இறுகியது. குழந்தையைத் தள்ளி படுக்க வைத்துவிட்டுத் தன்மீது படர்ந்திருந்த கணவனின் கையை எடுத்து அவன்மீது வைத்துவிட்டு, மெல்ல நகர்ந்து கட்டிலிலிருந்து இறங்கினாள்.
மனதை ஒருவித சோகம் கவ்வியிருந்தாலும் வழக்கம் போல் எழுந்ததும் குளித்துவிட்டுக் கீழே வந்து, சாமி விளைக்கை ஏற்றிவிட்டு… பால் காய்ச்ச அடுப்பை பற்ற வைத்த நேரம்… ராதா அழைப்புமணியை அடித்தாள். மதுமதி பாலை அடுப்பில் வைத்துவிட்டு வந்து கதவைத் திறந்தாள்.
“வாங்க ராதாம்மா… பால் இன்னும் காயச்சல… வாசல் பெருக்கிட்டு வந்துடுங்க… காபி ரெடியாயிடும்… சாப்பிட்டுட்டு மற்ற வேலைகளைப் பார்க்கலாம்…”
“சரிம்மா…” – ராதா போர்டிகோவின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த துடைப்பத்தைக் கையிலெடுத்துக் கொண்டு வாசல்பக்கம் செல்ல… மதுமதி சமையலறைக்குள் நுழைந்து, தேங்காய், பொட்டுக்கடலை, பச்சைமிளகாயுடன் பூண்டையும் உப்பையும் சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து தேங்காய் சட்னியைத் தயார் செய்து தாளித்தாள். பிறகு குழந்தைக்குப் பாலை ஆற்றி, பாட்டிலில் நிரப்பி வைத்துவிட்டு… தனக்கு ஒரு கப் பாலும் ராதாவிற்கு ஒரு கப் காபியும் கலந்தாள். மாடியில் குழந்தை அழும் சத்தம் கேட்டது.
தன்னுடைய பாலை மூடி வைத்துவிட்டு, ராதாவின் காபியை அவரிடம் கொடுத்துவிட்டு பால் பாட்டிலை கையில் எடுத்துக்கொண்டு மாடிக்கு ஓடினாள்.
“ஜ்ஜு… ஜ்ஜு… ஜ்ஜு… ஜிக்கு… ஜிக்கு… ஜிக்கு… பொம்முகுட்டி எதுக்கு அழறாங்க… அம்மாகிட்டப் போகணுமா..?” என்று குழந்தையைச் சமாதானம் செய்து கொண்டிருந்த கார்முகிலன் “மதீ…ஈ…” என்று மனைவியை ஏலம் விட்டான்.
“என்ன… என்ன..? யாழி…குட்டி…. இதோ வந்துட்டே…ன்டா… அம்மா பாருங்க…” என்று குரல் கொடுத்தபடி உள்ளே நுழைந்தவளிடம் பாய்ந்து தாவியது குழந்தை. அவளுடைய துன்பங்களுக்கெல்லாம் ஒரே மருந்து அந்த மழலையாளின் அன்பு தானே…!
தன் குட்டி செல்லத்தைக் கையில் வாங்கிக் கட்டியணைத்து முத்தம் கொடுத்தவள்… கட்டிலில் அமர்ந்து, மடியில் படுக்க வைத்து அவள் பசியை ஆற்றினாள். கையையும் காலையும் உதைத்துக் கொண்டு ஆனந்தமாகப் பால் பாட்டிலை காலி செய்து கொண்டிருக்கும் மகளின் முகத்தை, புன்சிரிப்புடன் ரசித்துக் கொண்டிருந்த மனைவியைப் பார்வையால் பருகினான் கார்முகிலன்.
நேற்று பின்னிரவு கொடுத்த இதமான மனநிலையிலிருந்து வெளிவர முடியாமல் மதுமதிக்கு அருகில் சென்று கட்டிலில் படுத்துக்கொண்டு, ஈரம் சொட்டிக் கொண்டிருந்த அவள் கூந்தல் நுனியைப் பிடித்து மெல்ல இழுத்தான். அதுவரை குழந்தையின் பால்முகத்தில் லயித்திருந்தவளின் மனம், கணவனுடைய செயலால் மெல்ல… இறந்த காலத்திற்குள் நுழைந்தது.
மனைவியின் மனநிலை புரியாமல் புரண்டு ஒருக்களித்துப் படுத்து அவள் கூந்தல் நுனியை எடுத்து அவளுடைய கன்னத்தில் கோலமிட்டபடி காதில் நுழைத்துக் கூச்சப்படுத்த முயன்றான். அப்போதும் அவளிடம் அவன் எதிர்பார்த்த எந்தப் பிரதிபலிப்பும் இல்லை. எண்ணங்கள் கடந்தகாலத்தில் சஞ்சரித்திருக்க, அவள் உடல் தன்னியல்பாய் சிலை போல் இறுகியது.
தன்னுடைய ஆசையான சீண்டல்களுக்கு எந்த எதிர்வினையும் இல்லாமல் பொம்மை போல் அமர்ந்திருப்பவளைக் கண்டு பல்லைக் கடித்தான் கார்முகிலன்.
‘இதே பொழப்பு தான் இவளுக்கு… சாவி கொடுத்த பொம்மை மாதிரி… ச்சை… ஒண்ணு மனசொத்துச் சந்தோஷமா வாழணும்… இல்ல விலகிப் போய்டணும்… ரெண்டும் இல்லாம இது என்ன தான் வாழ்க்கையோ…’ எரிச்சலோடு முணுமுணுத்தபடி மனைவியை முறைத்துக்கொண்டே டவலை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான். உடலில் தண்ணீர் பட்டதும் மனதில் மூண்டிருந்த எரிச்சல் கூடக் கரைந்தது. குளித்துவிட்டு வெளியே வந்தான். அவனுக்குத் தேவையான பொருட்கள் எல்லாம் மேஜை மீது எடுத்து வைக்கப்பட்டிருந்தன.
‘இதையெல்லாம் கரெக்டா செஞ்சிடுவா…’ என்று நினைத்தவனின் இதழ்களில் மெல்லிய புன்னகை வந்தமர்ந்தது.
மாலை வீட்டிற்கு வரும்பொழுது வழியில் தென்பட்ட பூக்கடையில் நிறுத்தி மல்லிகைப் பூ வாங்கினான். நேற்று ராதாம்மாவிடம் பூ வாங்கி வரச்சொல்லி சூட்டிக் கொண்டாளே…! நாமே வாங்கிச் சென்று கொடுத்தால் சந்தோஷப்படுவாள் என்ற எண்ணத்தில் ஆசையோடு வாங்கிக் கொண்டு வந்தான்.
வீட்டிற்குள் நுழைந்ததும் கையிலிருந்த பூவை அவளிடம் கொடுத்துவிட்டுக் குழந்தையைக் கொஞ்சியபடி மனைவியை நோட்டம் விட்டான். அவள் முகத்தில் சிறு மகிழ்ச்சியின் ரேகையாவது தெரிகிறதா என்று ஆராய்ச்சிக் கண்ணோடு பார்த்தவனுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
இவன் கையிலிருந்து பூவை வாங்கியவள் “ராதாம்மா…” என்று அழைத்தாள்.
ஹாலில் ஒரு பக்கமாக நின்று துணி மடித்துக் கொண்டிருந்த ராதா… அந்த வேலையைப் பாதியிலேயே விட்டுவிட்டு “என்னம்மா..?” என்று மதுமதியின் அருகில் வந்தாள்.
“இந்தாங்க… இந்தப் பூவில் கொஞ்சம் சாமிக்குப் போட்டுட்டு நீங்க கொஞ்சம் வச்சுக்கோங்க… மீதியை ஃபிரிட்ஜ்ல வைங்க… நான் அப்புறம் வச்சுக்கறேன்”
ராதாவின் மனம் பூரித்தது. தன்னை ஒரு வேலைக்காரியாகப் பார்க்காமல் வீட்டு மனுஷியாகவே நடத்தும் இந்தப் பெண் நூறாண்டு தீர்க்க சுமங்கலியாக நலமோடு வாழ வேண்டும் என்று வாழ்த்தியபடி அவள் கொடுத்த பூவை வாங்கிக்கொண்டு பூஜையறைக்குள் சென்றாள்.
கார்முகிலன் மனைவிக்காக ஆசையாக வாங்கிக்கொண்டு வந்த மல்லிகைப்பூ சாமிப்படத்தையும்… ஃபிரிட்ஜையும் அலங்கரித்தது போதாதென்று வேலைக்கார அம்மாவின் கொண்டையையும் அலங்கரித்ததில் முகிலன் வெகுண்டான்.
‘இவ வச்சுக்குவான்னு ஆசையா பூ வாங்கிட்டு வந்தா, அதை வேலைக்கார அம்மா தலையில் வச்சு அழகு பார்க்கறா பாரு… இவளையெல்லாம் என்னதான் செய்றதோ…!’ என்று மானசீகமாகத் தலையிலடித்துக் கொண்டு மாடிக்குச் சென்றான்.
அலுக்காமல் அன்று இரவு வரை தான் வாங்கிக்கொண்டு வந்த பூவை அவள் சூட்டிக் கொள்கிறாளா என்று பார்த்துக்கொண்டே இருந்த கார்முகிலன்… படுக்க வரும்போது கூட அவள் வெறும் தலையோடு வருவதைக் கண்டு சங்கடப்பட்டான். ஆனால் மனம் தளரவில்லை… தினமும் கல்லூரியிலிருந்து வரும் பொழுது பூ வாங்காமல் வரமாட்டான்.
அன்று காலை மதுமதி சமையல் வேலையில் பரபரப்பாக இருந்தாள். அவளைப் பால் கொண்டு வந்து கொடுக்கச் சொல்வதற்குப் பதில் நாமே உள்ளே சென்று வாங்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் சமையலறைக்குள் நுழைந்தான் கார்முகிலன்.
“மதி… ஒரு கப் பால் கொடு…” என்றபடி ஃப்ரிட்ஜைத் திறந்து ஆப்பிள் ஒன்றை எடுத்துப் பாதியாக வெட்டி… குழந்தைக்குக் கொடுப்பதற்காக ஒரு பாதி ஆப்பிளை தோல் சீவியவன், தோலைக் குப்பைக்கூடையில் போடும்பொழுது… அதில் அவன் காதல் குப்பையாகத் தூக்கியெறியப்பட்டிருப்பதைக் கண்டான். நொடியில் அவன் உடல் விறைத்து முகம் இறுகியது…
இருபது ரூபாய்க்கு வாங்கிய பூ தான்… ஆனால் அது பூ மட்டும் இல்லையே…! ஒவ்வொரு நாளும் அவனுடைய அன்பையும் காதலையும் அந்தப் பூவில் கொட்டித்தானே அவளிடம் நீட்டுவான்.
மலராத மொட்டாக… கட்டப்பட்டிருக்கும் மல்லிகையை, வாழையிலையில் மடித்து, பூக்கடைக்காரன் கையிலிருந்து வாங்கும் பொழுது ‘மதி…’ என்று மனதுக்குள் ஒரு சிலிர்ப்போடு முணுமுணுத்துக் கொண்டே வாங்குவானே…! அந்த உணர்வு அவளைத் தீண்டவே இல்லையா…! தீண்டியிருந்தால் எப்படி அவன் வாங்கிக் கொடுத்த பூவைப் பிரித்துக் கூடப் பார்க்காமல் அப்படியே குப்பைக்கூடையில் போட்டிருப்பாள். இதயத்தைக் கையிலெடுத்துப் பிசைவது போல் மனம் வலித்தது.
அசையாமல் சிலை போல் நின்றவனிடம் “இந்தாங்க…” என்று பால் டம்ளரை நீட்டினாள். அவனிடம் பதில் இல்லை… “பால் இந்தாங்க…” என்று மீண்டும் கொடுத்தாள். அவன் பார்வை குப்பைக்கூடையிலிருந்து விலகவில்லை. ‘என்னத்த அப்படிப் பார்க்கிறான்..?’ என்று அவளும் அவன் பார்வை நிலைத்திருந்த இடத்தைப் பார்த்தாள். விஷயம் புரிந்துவிட்டது…
“இப்ச்… முந்தா நேத்து வாங்கிட்டு வந்த பூ…. தலையில வச்சுக்க மறந்துட்டேன்… ஃபிரிட்ஜ்ல இருந்தது வதங்கிப் போச்சு… அதான் தூக்கிப் போட்டுட்டேன்… அதுக்கு ஏன் இப்படி நிக்கறீங்க..? இந்தாங்க பிடிங்க… காலேஜுக்கு டைமாச்சு… சீக்கிரம் குளிக்கப் போங்க…” என்று சாதாரணமாகச் சொல்லியபடி, அவன் கையில் பால் டம்ளரை திணித்துவிட்டு அடுத்த வேலையில் கவனமானாள்.
‘நாம் வாங்கிக் கொடுத்த பூவில் கலந்திருந்த காதலை கொஞ்சமும் உணராமல்… ஏதோ… கத்திரிக்காய், முருங்கைக்காய் வீணாப் போனால் குப்பையில் போடுவது போல் அந்தப் பூவையும் போட்டுவிட்டாளே…! அதாவது பரவாயில்லை… அவளுடைய செயல் நம்மை எந்த அளவு வேதனைப்படுத்துகிறது என்பதைக் கூடப் புரிந்து கொள்ளாமல் எவ்வளவு சாதாரணமாகப் பேசுகிறாள்…! என்ன பெண் இவள்..? உண்மையிலேயே என் மனம் படும்பாடு இவளுக்குப் புரியவில்லையா… அல்லது புரிந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கிறாளா..? எது எப்படி இருந்தாலும்… இவளிடம், இந்தக் குப்பையில் கிடக்கும் மல்லிகைச் சரத்திற்கு என்ன மதிப்போ… அதே மதிப்புத் தான் எனக்கும் என் காதலுக்கும்…’ அவன் மனம் நொந்து போனது. கையிலிருந்த பால் டம்ளரை சமையலறை மேடை மீதே வைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறியவன்… காலை உணவையும் மறுத்துவிட்டுக் கல்லூரிக்குப் புறப்பட்டுச் சென்றான்.
கார்முகிலனுக்கு மனைவியின் மீது அவ்வப்போது கோபம் வந்தாலும் அது உடனே மாறிவிடும். ஆனால் அன்று முழுவதும் அவனுடைய கோபம் தனியவே இல்லை. ‘மதி’ என்று நினைத்தாலே ஆத்திரமாகவும் எரிச்சலாகவும் தான் வந்தது.
என்னதான் கோபம் அவனை ஆட்டிப் படித்தாலும் வழக்கம் போல் பூக்கடையைப் பார்த்ததும் வண்டியை நிறுத்துவிட்டு மல்லிகைப் பூ வாங்கிக்கொண்டு தான் வீட்டிற்கு வந்தான்.
அழைப்புமணியை அடித்துவிட்டு ராதம்மா திறந்துவிடக் கூடாதே என்கிற கவலையோடு காத்திருந்தான். நல்லவேளை மதுமதி தான் கதவைத் திறந்தாள்.
தலைசீவி, பௌடர் போட்டு, பொட்டு வைத்து விபூதி குங்குமத்துடன் பாந்தமாக இருந்தாள். அந்த முகத்தைப் பார்த்ததுமே அவன் மனம் கொஞ்சம் சாந்தப்பட்டது. உள்ளே வந்து கையிலிருந்த பூவை அவளிடம் கொடுத்தான். அவளும் வழக்கம் போல் “ராதாம்மா…” என்றாள்.
“என்னம்மா…” என்று ராதா வந்து நிற்கவும், அவள் கையில் பூவைக் கொடுத்து “ஃபிரிட்ஜ்ல” வச்சிடுங்க” என்றாள்.
அவளுடைய செய்கைகளைக் கடுப்போடு பார்த்துக் கொண்டிருந்தவன், “ராதாம்மா… இங்க வாங்க…” என்று அழைத்தான்.
“என்ன சார்…” சமையலறை வாசல்வரை சென்றுவிட்ட ராதா திரும்ப வந்து கேட்டாள்.
“அந்தப் பூவை இவ கைல கொடுங்க…” பூ கைமாறியது…
“அதை முதல்ல தலையில வச்சுட்டு… அப்புறம் அடுத்த வேலையைப் பாரு…” – கட்டளையிட்டான்.
அவன் பேசிய தோரணை அவளை அசைத்தது. அந்தக் குரலை அவளால் அலட்சியம் செய்ய முடியவில்லை. அழுத்தமான அவனது வார்த்தைகள் அவளை அடக்கியது. பதில் பேசாமல் மொத்த பூவையும் சூட்டிக்கொண்டாள்.
அதன் பிறகுதான் கொதித்துக் கொண்டிருந்த அவன் மனம் ஆறியது… “பால் எடுத்துட்டு மேல வா…” என்று சொல்லிவிட்டு மாடிக்குச் சென்றான்.
ராதாவிற்கு கார்முகிலனின் மனம் புரிந்தது. தினமும் அவன் வாங்கிக்கொண்டு வரும் பூ மதுமதியின் தலையில் குடியேறுவதே இல்லை என்பதைக் கவனித்துக்கொண்டே இருந்தவள் தானே…!
சில சமயம் ‘சுமங்கலிப் பொண்ணு… தலையில கொஞ்சம் பூவை வச்சுக்கோம்மா…’ என்று சொல்லிக் கூடப் பார்த்துவிட்டாள். ஆனால் மதுமதி அவள் வார்த்தையைக் காதில் வாங்கிக் கொள்ளவே மாட்டாள். ஆனால் இப்போது கணவனின் வார்த்தையைக் கேட்டுத்தானே ஆக வேண்டும்… அலட்சியம் செய்ய முடியாதே…! இளையவர்களின் காதல் உணர்வைக் கண்டும் காணாதது போல் ரசித்துக் கொண்டே புன்னகையோடு அடுத்த வேலையைக் கவனிக்கச் சென்றாள்.
குணாவையும் மதுமதியையும் எப்படிச் சந்திக்க வைப்பது என்று புரியாமல் குழம்பியபடி நகத்தைக் கடித்துத் துப்பிக் கொண்டிருந்த ஜீவிதாவிற்குச் சட்டென்று அந்தத் திட்டம் தோன்றியது… ‘கல்பனா கல்யாணம்…!’.
தாமதிக்காமல் கைப்பேசியை எடுத்து தோழியை அழைத்தாள். “ஹலோ…” – மதுமதியின் மெல்லிய குரல்.
“ஹலோ மது…” ஜீவிதாவின் உற்சாகமான குரல்.
“ஜீவி… சொல்லுடி…” தோழியின் குரலைக் கேட்டதும் மதுமதி குரலிலும் மகிழ்ச்சி வந்தது.
“எப்படிடி இருக்க?” ஜீவிதா பாசமாகக் கேட்டாள்.
“நான் நல்லா இருக்கேன்…. நீ எப்படி இருக்க?” என்று இருவரும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டார்கள்.
பிறகு “கல்பனாவோட கல்யாண பத்திரிகை உனக்கு வந்துச்சா?” என்று ஜீவிதா பேச்சை ஆரம்பித்தாள்.
“ம்ம்ம்… வந்ததுடி… உனக்கு..?”
“நேத்துதான் வந்தது… நீ கல்யாணத்துக்கு வருவியா மது?”
“ம்ம்ம்… கண்டிப்பா வர்றேன்டி… நம்ம கல்பனா கல்யாணமாச்சே…” உறுதியாகக் கூறினாள்.
“நான் நம்ம கிளாஸ் ஃப்ரண்ட்ஸ் கூடச் சேர்ந்து போறேன்டி… நீயும் எங்களோட ஜாயின் பண்ணிக்கிறியா… இல்ல….” – முடிக்காமல் இழுத்தாள்.
“இல்லடி… யாழி அப்பாவும் கல்யாணத்துக்கு வருவார்னு நினைக்கிறேன். நான் அவர் கூடவே வந்திடுறேன்… அங்க வந்து மீட் பண்ணலாம்.” என்று மதுமதி கூறியதும் “ஓகே மது… நான் அப்புறம் பேசுறேன்” என்று சொல்லி தோழியின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, குணாவின் எண்ணைத் தட்டினாள்.
“சொல்லு ஜீவி…”
“அண்ணா… மது, கல்பனாவோட கல்யாணத்துக்கு வர்றா… நீங்களும் வந்துடுங்க”
“கல்பனாவா…! யார் அது..?”
“எங்க கிளாஸ் கல்பனாண்ணா… எங்க கூடவே இருப்பாளே… ஹைட்டா இருப்பா… ஞாபகம் இல்ல…”
“ஓ… அந்தப் பெண்ணா…! ஓகே… ஓகே… ஆனா… அந்தப் பெண்ணோட நான் அதிகம் பேசினது இல்லையே…”
“அதனால என்னண்ணா… உங்களுக்குத் தேவை மதுவைப் பார்க்கணும்…. அவ்வளவு தானே… அப்போ… புறப்பட்டு வாங்க… நான் அட்ரஸ் மெயில் பண்றேன்…”
“ஓகேமா… தேங்க்ஸ்…” கைப்பேசி இணைப்புத் துண்டிக்கப்பட்டது. மதுமதியைச் சந்திக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக அழையா விருந்தாளியாக அந்தத் திருமணத்தில் கலந்து கொள்ளத் தயாரானான் குணா.
Comments are closed here.